திண்டுவும் முத்துவும் கைம்மாவுடன் அந்த நாட்டின் எல்லையை அடைந்த போதுதான் அவர்களுக்கு அந்த உண்மை தெரிந்தது. யுரேனசின் அக உலகம் முழுவதும் ஒரே அரசரால் மட்டும் ஆளப்படவில்லை என்பதுதான் அது. பூமியைப் போலவே அங்கும் பல நாடுகள் உள்ளன என்பதை அறிந்து கொண்டார்கள்.
”ஆம். இது அப்படித்தான் இருக்க முடியும்? வேறு எப்படி இருக்க முடியும்?” என்றான் முத்து.
எல்லைப் பகுதியில் மனித நடமாட்டம் எதுவும் இல்லை. உயர்ந்த நீல மரங்கள் அடர்ந்த காடாகவும், மேட்டு நிலமாகவும் இருந்தது.
”ஆனால் கைம்மா…இது நாட்டின் எல்லை எப்படி அறிந்து கொண்டீர்கள்? எந்தவித அறிகுறியும் இங்கு இல்லையே? என்று திண்டு கேட்டான்.
”நமக்கு யுரேனக நகரியில் வகுப்பு எடுக்கப்பட்ட போதும் இங்கு வேறு நாடுகள் இருப்பதாக யாரும் கூறவில்லையே திண்டு” என்றான் முத்து.
கைம்மா பேசாமல் ஏதோ நினைவில் முழ்கியவனாக காட்டைப் பார்த்துக் கொண்டு நின்றான். மேற்கு வானில் அந்தி வெள்ளி தென்பட்ட ஒரு நாளில் பூமியில் தன் கிராமத்தில் இருந்து புறப்பட்டது அவன் நினைவுக்கு வந்தது. அன்று முதன்முதலில் வானில் பறந்தது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது?
”என்ன கைம்மா?” என்று திண்டு கேட்டான்.
”ஒன்றுமில்லை திண்டு. நான் என் கிராமத்தில் இருந்து புறப்பட்ட நாளை நினைத்துக் கொண்டேன்” என்றான். மேலும் ”அன்றிலிருந்து இந்த கணம் வரை இந்த முடிவில்லாத இயற்கை என்னை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது” என்றான். ”சரி நீ என்னவோ கேட்டாயே?”
”இந்த இடத்தில் இருந்து இன்னொரு நாடு துவங்குகிறது என்றீர்களே? எப்படி” என்று கேட்டான் முத்து.
கைம்மா தன் உள்ளங்கையை விரித்துக் காண்பித்தான். அதில் சிறிய வெண்ணிற கல் ஒன்று இருந்தது. ”இது என் கிராமத்தில் இருந்து கொண்டு வந்தது. என்னிடம் எங்கள் காட்டுத் தெய்வத்தின் பூசகர் தந்தார். இதைக் கையில் வைத்திருந்தால் காட்டுத் தெய்வம் தேவையான சமயத்தில் தேவையான விஷயங்களை எனக்கு உணர்த்தி விடும். இந்த இடத்தில் இந்த நாட்டின் எல்லை முடிகிறது என்று எனக்கு உணர்த்தியது காட்டு தெய்வம் தான்” என்றான்.
”ஆச்சரியமாக இருக்கிறது. பூமியின் காட்டுத் தெய்வம் யுரேனசின் அக உலகைப் பற்றி எப்படி கூற முடியும்?” என்று கேட்டான் முத்து.
”பிரபஞ்சத்தில் காடு இருக்கும் இடங்களில் எல்லாம் எங்கள் காட்டுத் தெய்வத்தின் ஆற்றல் செயல்படும்” என்றான் கைம்மா.
”அப்படி என்றால் என்னுடைய அப்பா எங்கு இருக்கிறார் என்று உங்கள் தெய்வத்திடம் கேட்டுச் சொல்ல முடியுமா? அவரும் எங்காவது காட்டில் இருந்தால் தெரிந்துவிடும் அல்லவா? என்றான் முத்து.
”இல்லை முத்து. நான் எதையும் தெய்வத்திடம் கேட்டு பதில் பெற முடியாது. தெய்வமாக எது நமக்குத் தேவையோ அதை உணர்த்தும் என்று மட்டும் தான் பூசகர் என்னிடம் சொன்னார்” என்றான் கைம்மா.
முத்துவின் முகத்தில் தென்பட்ட துயரத்தைக் கண்ட திண்டு பேச்சை மாற்ற விரும்பினான்.
”செவ்வாயில் இறங்க வேண்டி இருந்தது. ஒரு ஆபத்து ஏற்பட்டது என்று சொன்னீர்களே கைம்மா? அதுபற்றி கூறுங்களேன்” என்றான்.
”ஆம். அது ஒரு எதிர்பாராத நிகழ்வு. செவ்வாயில் இறங்கும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் செவ்வாயின் அருகே கடந்து சென்ற போது ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத விசை என்னை அதை நோக்கி இழுத்தது. குதிரையால் பறக்க முடியாமல் கீழ் நோக்கி சரிந்து சென்றது. அது விடாமல் எதிர்விசை செலுத்தி பறக்க முயன்றபோதும் அதனால் இயலவில்லை”
”செந்நிற மலர்கள் நிறைந்த சிறு செடிகள் நிறைந்த ஒரு சமவெளியில் தரை இறங்க நேர்ந்தது. நான் குதிரையை விட்டு இறங்கி சிறிது தூரம் சென்றேன்”
”மலர்களா? செவ்வாயில் உயிர்கள், மரம் செடி கொடிகள் எல்லாம் இருக்கின்றனவா?” என்று திண்டு கேட்டான்.
”இருக்கின்றன. ஆனால் அவை மனிதர்களின் கண்களுக்கு தெரியும் படி இல்லை. அவை என்னுடைய கண்களுக்கு மட்டுமே தென்பட்டன என்று பிறகு அறிந்து கொண்டேன்”
திண்டுவும் முத்துவும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
”செவ்வாயின் வானில் சூரியன் மறையும் நேரம். மெதுவாக வீசிக் கொண்டிருந்த காற்றில் மலர்வெளி முழுவதும் அலையாடிக் கொண்டிருந்தது. தொலைவின் தென்பட்ட பாறை ஒன்று உருண்டு வருவது போலத் தோன்றியது. நான் சுற்றிலும் பார்த்தேன். வேறுவேறு இடங்களில் இருந்து மேலும் சில பாறைகள் என்னை நோக்கி உருண்டு வந்தன. துவக்கத்தில் மெதுவாக வருவது போலத் தோன்றிய பாறைகள் பின் வேகமாக உருண்டு வந்தன. செம்மலர் செடிகள் அந்த பாறைகளால் நசுக்கபட்டு அந்த மலர்களின் சாறு துளிகளாக தெறிக்கத் துவங்கியது. நான்கு புறம் இருந்தும் அவை என் மீது ரத்தத்துளிகளைப் போல விழுந்தன.
என் மீது முதலில் மோதிய பாறையால் நான் நிலை குலைந்தேன். ஆனால் நான் இயந்திர உடையில் இருந்ததால் உயிர் தப்பினேன். அந்த பாறையின் அடியில் சிக்கிவிடக் கூடாது என்று செடிகளுக்கு இடையே உருண்டு எழுந்து தப்பினேன். மேலும் பாறைகள் வரவே செடிகளுக்கு இடையே புகுந்து ஓடினேன்.
நான்கு பெரிய பாறைகள் நான்கு பக்கமிருந்தும் என் மீது மோத வேகமாக வந்தன. அவ்வளவுதான் இத்தோடு என் கதை முடிந்தது என்று நினைத்தேன். அந்த கணத்தில் என் குதிரை பறந்து வந்து தன் வலது சிறகால் என்னைத் தூக்கிக் கொண்டு மேலே பறந்தது”
”சிறகால் தூக்கியதா?” முத்து வியப்புடன் வாய் திறந்தான்.
”ஆம். அதன் சிறகுகள் யானையின் துதிக்கை போல செயல்படக் கூடியவை”
”பிறகு?”
”பாறைகள் நான்கும் அதிவேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதியதால் சிதறித் தெறித்தன. பெரும் புழுதிச் சுவர் போல மண் உயர்ந்து எழுந்தது. வானில் மின்னல்கள் வெட்டத் தொடங்கின. உருண்டு வந்த மற்ற பாறைகளை மின்னல் கீற்றுகள் தாக்கத் தொடங்கின. அப்படி தாக்கப்பட்ட பாறைகள் ஓலமிட்டு உருண்டு சென்று ஒரு பெரிய பள்ளத்தில் விழுந்தன”
”பாறைகள் ஓலமிட்டனவா?” என்றான் திண்டு.
”ஆம். அது எனக்கும் மிகவும் வியப்பாக இருந்தது” என்றான் கைம்மா.
”பாறைகளுக்கு உயிர் இல்லையே?” என்றான் முத்து.
”அப்படி நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பிரபஞ்சத்தில் உயிர் இல்லாத பொருட்கள் என்று எதுவுமே இல்லை” என்றான் கைம்மா.
மேலும் தொடர்ந்தான். ”குதிரை என்னைக் கீழே விடவில்லை. அது சுற்றிலும் சற்று நேரம் பறந்துவிட்டு அருகே இருந்த ஒரு குன்றின் மீது சென்று என்னை இறக்கியது. காற்றும் புழுதியும் ஓய்ந்தன. வானில் மின்னல்கள் நின்றது. வானிலிருந்து முக்கோணமான ஒரு ஒளி வடிவம் எங்களை நோக்கி வந்தது. அதுவும் தாக்கத்தான் வருகிறது என்று நினைத்தேன். அப்போது முக்கோண ஒளியிலிருந்து குரல் வந்தது
”அஞ்ச வேண்டாம். உன்னைக் காப்பாற்றவே செய்தேன். இந்த பாறைகள் மீது மின்னல்களை செலுத்தியது நான் தான்” என்றது அது.
”நீங்கள் யார்?” என்று கேட்டேன்.
”அதை பிறகு அறிந்து கொள்வாய். இப்போது உடனே புறப்படு. மீண்டும் ஆபத்தில் சிக்குவதற்குள் தொலைதூரம் சென்று விடு” என்றது.
நான் குதிரையில் மீண்டும் வானில் பறந்தேன். செவ்வாயின் காற்று மண்டலத்தைக் கடந்து விண்வெளியில் தூரம் செல்லும் வரை அந்த முக்கோண ஒளி துணையாக உடன் வந்தது. பிறகு மறைந்து விட்டது” என்று நிறுத்தினான் கைம்மா.
———
”கவிதைக்கு சொற்கள் ஒன்றும் அத்தியாவசிய தேவை அல்ல” என்றார் கனசேகரன்.
”ஆமாம். இப்படி மண்டை காயும் வெய்யில் செல்லும் போது உங்களுக்கு உளறத் தோன்றுவது இயல்பு தான்” என்றார் தினசேகரன்.
”மூடரே. நான் ஒன்றும் உளறவில்லை. உண்மையைத் தான் சொல்கிறேன்” என்றார் கனசேகரன்.
”உளறல் இல்லாமல் வேறு என்ன? சொற்கள் இல்லாமல் எப்படி கவிதை இருக்க முடியும்? என்று கேட்டார் தினசேகரன்.
”முடியும் அய்யா. கவிதை என்பது சொற்களை சார்ந்து இருப்பது அல்ல. உமக்கு விளக்குகிறேன். வாரும்”
இருவரும் ஒரு வேப்ப மரத்தின் அடியில் சென்று தம் குதிரைகளில் இருந்து இறங்கினார்கள்.
”அதோ பாரும்” கனசேகரன் எதிரே இருந்த மஞ்சள் மலர்கள் நிறைந்த ஒரு மரத்தை சுட்டிக் காண்பித்தார். ”அந்த அழகிய மஞ்சள் மலர்களைப் பாரும்”
”அழகிய மஞ்சள் மலர்கள். ஆம்..அதற்கென்ன?” என்றார் தினசேகரன்.
”அந்த அழகிய மலர்களைக் காணும்போது இப்போது என் உள்ளத்தில் ஒரு உணர்வு தோன்றுகிறது” என்றார் கனசேகரன்.
”சரி”
”அந்த மலர்களை நன்கு பாரும்”
”ம்…பார்த்துவிட்டேன். அதனால் என்ன?”
”இப்போது. என் முகத்தைப் பாரும்”
”ம்….உங்கள் முகத்தில் என்ன?”
”பேசாமல் சற்று நேரம் பாரும் அய்யா”
கனசேகரன் புன்முறுவலுடன் நின்று கொண்டிருந்தார். தினசேகரன் கனசேகரனின் முகத்தை சற்று நேரம் உற்றுப் பார்த்தார்.
”இப்போது புரிந்ததா?” என்று கேட்டார் கனசேகரன்.
”என்ன அய்யா சொல்கிறீர்?” என்றார் தினசேகரன்.
”மூடரே. உமக்குப் புரியவில்லை. அந்த அழகிய மஞ்சள் மலர்களைக் கண்டபோது கவிஞனான எனது முகத்தில் தோன்றிய உணர்வை நீர் சரியாக கவனிக்கவில்லை. அப்படி கவனித்திருந்தால் கவிதையை உணர்திருப்பீர். கவிதைக்கு சொற்கள் தேவையில்லை என்று ஏன் சொன்னேன் என்று உமக்குப் புரிந்திருக்கும்” என்றார் கனசேகரன்.
”எதையாவது வாய்க்கு வந்ததை உளற வேண்டியது. பிறகு அதற்கு முட்டாள்தனமாக விளக்கம் தர முயற்சிக்க வேண்டியது. உமக்கு இதே வேலையாகப் போய் விட்டது” என்றார் தினசேகரன்.
”சரி விடும். நான் சொன்னதைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு உமக்கு அறிவில்லை” என்றார் கனசேகர்.
அவர்கள் இருவரும் நின்றிருந்த வேப்ப மரத்தின் மேலிருந்து ஒரு கயிறு கீழே வந்து கனசேகரனின் கழுத்தைச் சுற்றிக் கொண்டது.
”அய்யோ தினசேகரா என்னைக் காப்பாற்று” அவர் அலறினார். கயிறு அவரை மேலே இழுக்கத் துவங்கியது.
தினசேகரன் தன் குறுவாளை எடுத்துக் கொண்டு கயிற்றை வெட்டப் பாய்ந்தார்.
(மேலும்)
