காயாம்பூ  : லாவண்யா சுந்தரராஜன்- வாசக பார்வை

 

 லாவண்யா சுந்தரராஜன் எழுதிய காயாம்பூ எனும் நாவல் பற்றிய முதல் அறிமுகம் வழக்கம் போல் ஜெயமோகன் தளத்தின் வழியாகவே நிகழ்ந்தது. எழுத்தாளர் கமலதேவி வாசகசாலைக்காக நூல் ஆசிரியருடன் நடத்திய உரையாடலுக்கான லிங்க் ஜெ. தளத்தில் கிடைத்தது.

நாவலின் கரு புத்தம் புதிதாகவே இருந்தது.

நான் எப்போதுமே ஒரு நாவலை வாசிக்கும் முன் அந்த ஆசிரியரின் சிறுகதைகளை வாசிப்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருப்பேன்.  ஒரு பேரருவியில் தலை கொடுக்கும் முன் கைகளை நீட்டிக்  குளிருக்கு உடலை பழக்கப்படுத்திக் கொள்வது போல.

லாவண்யாவின் ”முரட்டுப் பச்சை” சிறுகதை தொகுதி வாசித்தேன். பிரமித்தேன் என்று சொன்னால் அது Understatement.

சமீபகால சிறுகதைகள் ஊளைச்சதைப் போட்டு தொப தொப என மேல் மூச்சு. கீழ் மூச்சு வாங்க நடந்து வருவதைப் படித்து நலிந்த மனசை ஆசுவாசப் படுத்திக் கொள்ள ஜெயமோகனையோ, சுந்தரராமசாமியையோ, அசோகமித்திரனையோ அல்லது எஸ்.ராவையோ தேடிப் போக வேண்டியிருக்கிறது. இச்சூழலில் லாவண்யா தன் முரட்டு பச்சையில் என்னை மிகவும் வசீகரித்தார்.

காயாம்பூ அவர் எழுதிய முதல் நாவல். காயாம்பூ என்பது காய்க்கும் முன் உதிரும் மயில் கழுத்து நிறம் கொண்ட ஒரு மலர். பெருமாளுக்கு உகந்த மலர்.

குழந்தை பெற முடியாத ஒரு பெண்ணின், அவரது கணவரின் துயரங்களை, சமுதாயக் கேலிகளை, மருத்துவச்சுரண்டல்களை அவர்களைக் கைவிடும் கடவுள்களைப் பற்றி மிக விரிவாகப் பேசும் நாவல். 

Intrauterine insemination (IUI),  Embryo implantation,  Hysterosalpingography(HSG) Test  என புதிய தகவல்கள் கலந்த கதை. வேண்டுதல்களாலும், பிரார்த்தனைகளாலும், பரிகாரங்களாலும், ஸ்தல புராணங்களாலும், மருத்துவமனைகளாலும்,நவீன, மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளாலும் அலைக்கழிக்கப் படும் ஒரு தம்பதியின் கதை.

ஒரு நல்ல தாம்பத்தியத்தின் உரைகல்லெனப்படுவது அவர் தம் குழந்தைகளே எனும் பொதுப்புத்தியின் கூரியக் கத்திக்கு தம் ரத்தத்தையும், சதையையும் கருமுட்டைகளையும், விந்தையும் கொடுத்தவர்கள் நந்தினியும், துரையும்.

ஆனாலும்…

எவ்வளவுதான் உணர்வுக்குவியலாய்ச் சொன்னாலும் Reporting jounalisam  போன்ற நீட்டி முழக்கி கதை சொல்லும் முறை அந்தக் கால லட்சுமி, அனுராதாரமணன் போன்று வாசிக்கக் கொஞ்சம் தடைகளையும், சலிப்புகளையும் உருவாக்குகிறது. கறாராகச் சொல்ல வேண்டுமென்றால் லாவண்யாவின்  சிறுகதைகளில் நிகழ்ந்த அந்த magic இந்த நாவலில் இல்லை. அந்த Magic Wand நிகழ்த்தும் அதிசயம் தானே ஒரு படைப்பை இலக்கியத்தராமானதாக்குகிறது.

ஒருவரின் ஒரு படைப்பை அவரின் மற்றொரு படைப்புடனோ அல்லது ஒருவரின் படைப்பை மற்றொருவரின் படைப்புடனோ ஒப்பிடுவது என்பது ஒரு வாசகன் தானாக எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் என்றே கொள்ள வேண்டும்.ஏனென்றால் எழுத்தாளன் தொடங்கியதை முடித்து வைப்பவன் வாசகன்தானே. ஏனென்றால் இங்கு வாசகனுக்கு என்று எந்த Consumer Forum இல்லைதானே. Consumerஎன்ற வார்த்தையை நல்ல அர்த்தத்தில் தான் சொல்லியிருக்கிறேன்.

அவரது எழுத்துக்களில் யானையைப் போல நிகழ்ந்த சிறுகதைகளும், பூனையைப் போல நிகழ்ந்த நாவலும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. எனினும் யானையும், பூனையும் அதனதன் அளவில் வசீகரம் தான்.

ஆனால் நாவலின் முடிவு வார்த்தை நாவலின் அத்தனை பலகீனங்களையும்  தாங்கி மேலெழுந்து நின்று தன்னை கம்பீரமாய் நிலைநிறுத்திக் கொள்கிறது.

பொறுப்பு துறப்பு:  இது என் அபிப்ராயம் மட்டுமே. மதிப்புரை என்ற பெயரில் பிறர் வாசிப்பதற்கான மனத்தடையை உருவாக்கும் எண்ணம் ஏதுமில்லை என்பதை இங்கே தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.

                                                           ****************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *