ஆனைமலை நாவல் நேர்கோடாக பயணிக்காமல் பல கோணங்களிலும் முன்பின்னாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. 2008ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு பழங்குடியினரின் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்களும், வெளியேற்றமும் நிகழ்ந்ததை பதிவு செய்யும் ஆவணமாக வைப்பதற்கு ஏற்ற நாவல். எங்கோ நாற்காலியில் சொகுசான வீட்டில் வாழ்ந்து கொண்டிருப்போர் ஒன்றுகூடி எடுக்கும் முடிவுகள் மாறுமா? களப்பணியில் ஈடுபட்டு சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து முடிவெடுக்காமல் யாரோ காகிதத்தில் எழுதித் தரும் அறிக்கையை வெளியிட்டு பெருமை கொள்வதை காலம் காலமாக பார்த்து வருகிறோம்.
காடு யாருக்கு சொந்தம் என்ற கேள்வியிலிருந்து இந்நாவல் தொடங்குகிறது. பிரிட்டிஷ் ஆதிக்க காலம் , அதற்கு முன்பு இடம் பெயர்ந்து வாழ முற்பட்ட பழங்குடி மனிதர்கள், தமிழக அரசியல், அதன் மாற்றம் , வேம்பையன்,மூப்பன், காட்டு ராசா,வானம்மாவின் மூலமாக நாவல் விரிந்து பரந்து நிதர்சனமான உண்மையாகி முகத்திலறைகிறது. எழுத்தாளரின் இரண்டாண்டு கால உழைப்பும் முனைப்பும் நாவலின் பல இடங்களில் தெளிவாகத் தெரிகிறது.
காடும் காடு சார்ந்த இடமும் இல்லை என்றால் மழை இல்லை, பூமி இல்லை . மழை பெய்வதற்கு கடல் எவ்வளவு முக்கியமோ காடும் மிக முக்கியம். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஆரம்பித்து வைக்கப் பட்டது இன்றுவரை தொடர்கிறது. வியாபாரம் செய்ய வந்தவர்கள் இங்கு இருக்கும் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக நாட்டைப் பிடித்து சுரண்டி சுரண்டி கொழுத்ததோடு பஞ்சத்தையும் கொடுத்ததை எப்படி மறக்க முடியாதோ, மலைகளின் ராணியை தேயிலை தோட்டங்களாக மாற்றி வியாபாரத் ஸ்தலமாகவும் சுற்றுலாத் ஸ்தலமாகவும் மாற்றியதில் பெரும் பங்குண்டு ஆள வந்தவர்களிலும் ஒரு சிலர் ஹியுகோ வுட் போன்ற நபர்களால் காடும் ஓரளவு காப்பாற்றப்பட்டதை அறிந்து கொள்ள இப்புத்தகம் உதவியது. பர்மாவில் பெருமளவு காடுகளை அழித்ததில் இவர்களின் பங்கும் அளப்பரியது.
காட்டை அழித்து விவசாயம் செய்வது, யானைகளின் சொந்த இடத்தை, உணவுக்கு, தண்ணீருக்கான தடத்தை மறித்து ரிசார்ட்ஸ், பெரிய வீடுகள், நகர் அமைத்தல் ,தங்கும் விடுதி, போன்ற காரியங்கள் வெகு மரியாதையோடு நடப்பதை அறியும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. பழங்குடியினர் .காட்டில் யாருக்கும் தொந்தரவில்லாமல் அவர்களது சொந்த இடத்தில்,வேலையை பார்த்ததோடு காட்டின் உயிரோட்டத்தை அறிந்தும் ஒத்தும் வாழ்ந்தனர். நாகரீகம், நகர்மயம் , என அவர்களை விசித்திர விலங்காக பொருளாதார அடிப்படையில் பார்ப்பது நடைபெறத் தொடங்கியது எப்போது.?
காட்டை பாதுகாக்கும் அதிகாரிகளே அழிக்கவும் துண்டாடவும் செய்தனர். அதிலும் அதிகார அரசியல், பண அரசியல் பழங்குடியினர் வாழ்வை சூறையாடியதுடன் இயற்கையின் அளப்பரிய ஆற்றலை உணர்ந்து கொள்ளும் அறிவையும் இழந்ததுதான் கண்ட பலன். கல்வியறிவு என்ற பெயரில் அவர்களுக்கு படிப்பை கொடுத்து இயற்கையை மறக்கடித்து மனிதனும் காட்டில் வாழ தகுதியானவனே என்ற உண்மையை குழிதோண்டி புதைத்தனர்.
அவர்களின் ஓட்டுரிமை மட்டும் வேண்டும். வாழ்வை காட்டில் வாழ முடியாத படி செய்யவும் முயன்று வெற்றியும் கண்டனர். பெரும்பாலான பழங்குடியினரை நகர வாழ்க்கைக்கு பழக்கி இன்று அவர்களது மரபு சார்ந்த அறிவற்றவர்களாக, திருடர்களாக, கூலியாட்களாக வாழ வைத்ததை சுட்டிகாட்டும் நாவல். இளன் மூலம் பிரிட்டிஷாரில் நல்லவர்கள் உண்டு, கிருஷ்ணனை போல நயவஞ்சக கொடூரமானவர்களும் உண்டு, அவர்களால் காட்டை எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவும் நமக்கு நாமே ஆப்புத் திட்டமென்பதை உணர்த்தும் பல உன்னத தருணங்களை கொண்டது இந்நாவல்.
ஏனோ நாவல் மாந்தர்களில் மூப்பன், காட்டுராசா ஹியூகோ வுட் . இளன், பூனாச்சி, வானம்மா, வேங்கையன் . இவர்களைத் தவிர மற்றவர்கள் மனதில் நிற்கவில்லை. மைய கருத்தான பழங்குடியினரை காட்டிலிருந்து விரட்டிவிடும் நோக்கத்தை வலியுறுத்தும் காரணிகளை வெகு நுட்பமாகக் கையாண்டு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.
நாவலில் பல இடங்களில் நிறைய பறவைகளை பற்றிய வர்ணனைகள் நேரில் பார்ப்பது போல வர்ணித்திருப்பதும் நிறைவை தந்தது.
அகிலா போன்ற பொதுநல ஆர்வலர்கள் சில நேரம் தவறாக புரிந்து கொண்டு பழங்குடி சமூகத்துக்கு தொண்டு செய்வதாக துன்பம் விளைவிப்பதும் உண்டு.
கதைக் களன் இரண்டு நூற்றாண்டு காலவரிசையில் முன்பின்னாக சொல்லப்பட்டாலும் காமராசர் மூலம் ஆழியாறு பரம்பிக்குளம். அணை கட்டும் பணி நடக்கும் காலத்தை கண்முன் கொண்டு வந்து பழங்குடியினர் வாழ்விடமான அவ்விடத்தை விட்டு கட்டாயமாக வெளியேற்றுவதும் காட்டிற்குள் நாடோடிகளாக பருவமாற்றத்திற்கேற்ப வசிப்பவர்களை ஒரே இடத்தில் தங்க வைத்து அணை கட்டும் பணிக்கு அமர்த்தி சுரண்டுவதும் நடந்ததை விரிவாக எழுதியிருக்கிறார்.
பழங்குடியினருக்கு அடிப்படை மருத்துவம் , போக்குவரத்து , நிரந்தர கட்டுமான வீடு போன்ற நகர நெருக்கடிக்கு பழக்கப்பட்டும் வன இலாகா உருவாகி காடுகளில் பிரிட்டிஷாரினாலும் அரசாலும் கட்டப்பட அலுவலகங்களாலும் இரண்டாக பிரித்து மேல் கீழ் பாகுபாடு உருவாகி மரபு தொடர்ச்சி துண்டாடப்பட்டு நகர வாழ்வும் கிட்டாமல் காட்டில் வாழும் வாய்ப்பும் பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்க வேண்டி வந்ததை பழனிச்சாமியின் கதறல் காதில் நீங்காமல் ஒலிக்கிறது.
காட்டில் பெண்கள் வயதுக்கு வருவதையும் மாதவிலக்கு நாட்களில் தனியிடத்தில் தங்கும் வசதியும், திருமண சடங்குகளும், பெண்ணுக்கு பிடித்த ஆண்களை தேர்ந்தெடுக்கும் உரிமையும், வனதேவதையை வணங்கும் முறைகளையும் விழா எடுப்பதையும் அதன் காலங்களையும் பதிவு செய்திருப்பது அவரின் கூர்ந்த கவனிப்பின் நுட்பத்தை காட்டுகிறது.
மொழியும்,நடையும் நாவலின் தன்மையை, கருத்தையும் பாதிக்காதவண்ணம் சொல்லியிருப்பது எழுத்தாற்றலின் பக்குவத்தை காட்டுகிறது.
மலை மீதிருந்து சின்னானின் மனைவி தாமரை பிரசவ வலி வந்தவுடன் மூங்கிலில் தொட்டில் கட்டித் தூக்கி கீழே உள்ள மருத்துவமனைக்கு போவதற்குள்ளாக தாயும் சேயும் இறப்பது , சுந்தரி அடர் மழையில் மரங்கள் வீழ்ந்து கால்கள் சிக்கி தண்ணீரின் வரத்து அதிகமாகி வெள்ளத்தால் சுந்தரியும் வயிற்றிலேயே குழந்தையும் மூச்சுத் திணறி இறப்பது. இளன், கிருஷ்ணன் , எதிரெதிர் துருவங்கள் போல அதிகாரிகள், குழியில் விழுந்த யானைக் குட்டியை காட்டு ராசா மூப்பன் குழுவினர் காப்பாற்ற குட்டியின் தாயும் அவைகோளடிணைந்த இருயானைகளும் நன்றி சொல்லிவிட்டு போவது,பதியில் (காட்டில் குடியிருப்பில்) அழிவு ஏற்பட்டது மனித செய்கையினால் என்ற உண்மை, வனச்சரகர் கிருஷ்ணன் புலியின் தலையில்லாமல் அழுகிய நிலையில் உடல் கிடைத்து அதை செய்தது காட்டிலிருப்போர் என அவர்களை திட்டமிட்டு அடித்து துன்புறுத்துவது, காட்டிலிருப்போரை காப்பாற்ற இளன் தனியே செயல்பட்டு குற்றவாளிகளை சரணடையச் செய்வது, குடியிருப்பு அழிந்ததின் இறுதியில் காட்டு வாழ்க்கையை புறந்தள்ளி நகர வாழ்க்கைக்கு புறப்படும் போது பழனிச்சாமி நகர வாழ்வில் இணைய முடியாமல், ஏமாற்றப் பட்டதால் காட்டு வாழ்க்கை வாழ அதே நேரத்தில் வருவது , திரைப்பட துணுக்குகளாக தெரிவது பெரிய உறுத்தல்.
காடெங்கும் பசுங் குருதி வழிந்திருந்தது
செங்கொடி தாங்கி சமூக ஆர்வலராகவும் மூப்பன், காட்டுராசா அவர்களை சாா்ந்தோருக்காகவும் காட்டை அழிப்பதற்கு எதிராகவும் போராடும் பரமசிவம் போன்ற உண்மையான தொண்டர்களை இனம் காட்டி உதவி செய்ய ஆட்களுமிருக்கிறார்கள் என நிருபித்துள்ளார்.
வனப்பகுதியில் நீண்ட தரமான சாலை அமைத்ததால் அதிவேகமாக போகும் வாகனங்களால், அவ்வழியே பயணிக்கும் பயணிகள் கொடுத்த , தூக்கி எறிந்த உணவுப்பண்டங்களை சாப்பிட்ட வனவிலங்குகள் (குரங்குகள்) உணவுக்காக அச்சாலையை கடக்கும் போது அடிபட்டு ஊனமாவது, இறப்பது இரண்டும் நடக்கிறது. பொதுமக்கள் இது போன்ற நிகழ்வுகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை விலங்குகள் இறப்பது பொருட்டாகவே தோன்றாததில் வியப்பில்லை. காடுகள் அவர்களைப் பொறுத்தவரை பொழுதுபோக்கும் இடமாக பதிய வைக்கபட்டிருக்கிறது.
உயிர்ச் சுழற்சியில் காடும் காட்டை சார்ந்த விலங்குகளும் அதனோடு இணைந்து வாழும் மனிதர்களும் முக்கியம் என உணரவைப்பதில் இந்நாவல் வெற்றி பெற்றுள்ளது