யாக்கை நாவலை ஆசிரியர் கே.ஜே. அசோக்குமார் எழுதியுள்ளார். இந்நாவலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. யாக்கை என்றால் உயிர் கொண்ட உடலின் நிலை. இந்நாவல் மனிதனின் அகம் கொண்ட தேடலை பிரதானமாக விவாதிக்கிறது.காதல் மற்றும் காமம் தாண்டிய இன்பத்தை கண்டடைய வழிவகுக்கிறது.
ஒருவனுக்கு எல்லாம் அந்தந்த வயதில் இயல்பாக நடக்க வேண்டியது நடந்து முடிகிறது பின்பு ஒரு வெற்றிடம் வருகிறது. அதனை எதை கொண்டு நிரப்புவது. மரணத்தை எதிர் கொள்வது மற்றும் உடல் ஆன்மா அவற்றின் விடுதலை பற்றி கேள்வி எழுப்புகிறது. ஒவ்வொரு மரணம் மிக அருகில் ஏற்படும் போது நமக்கு ஏற்படும் எண்ணங்கள் என்னவாக உள்ளது.
நாம் ஆன்மீகத்தால் அடைவது என்ன? உடலின் வேட்கை முடிவில்லாத சாலை போன்று
மேலும் கீழும் உயர்ந்தும் தாழ்ந்தும் சில இடங்களில் கடினமாகவும் லேசாகவும்
செல்கிறது. கதை பின்னும் முன்னும் சைக்கிள் பெடல் போடுவது போன்று நகர்கிறது
அவ்வப்பொழுது நடுவில் நின்று நமக்கு வெளிச்சம் தருகிறது.
கதை பத்மாவின் உடல் நிலை சீராக இல்லாத சூழலிருந்து ஆரம்பிக்கிறது. அவளுடைய
மகள்கள் மற்றும் அக்கா உறுதுணையாக இருக்கிறார்கள். எல்லா சொந்தங்களும் இந்த
சமநிலை மாற்றத்தால் வருத்த படுகிறார்கள்.
நமக்கு ஏற்கனவே ஏற்பட்ட மருத்துவமனைஅனுபவங்கள் நல்லவையோ அல்லது மிக வருத்தம் தருபவையோ வந்து போகிறது.
சுப்பு என்கிற சுப்பிரமணி படிப்பு முடித்ததும் வேலை தேடி நகரத்திற்கு வருகிறான்.
பசியுடன் சொற்ப வேலை செய்து வாழ்க்கையை ஓட்டுகிறான். நிலைமை கொஞ்சம்
மாறுகிறது. அவனுக்கு தகுந்த கணிப்பொறி தொடர்பான வேலை கிடைக்கிறது.
கொஞ்சம் பசியிலிருந்து விடுதலை கிடைக்கிறது. சட்டென்று பெய்யும் மழை போல்
வாழ்க்கையில் காதல் நுழைகிறது. பத்மா அவனுடன் வேலை பார்க்கிறாள்.
சிலசந்திப்புகளில் வேலை நிமித்தமாக உரையாடுவது பின்பு மொட்டு துளிர்த்து புது மலராக மலர்கிறது காதல். பத்மா தெளிவாக காதலை வீட்டில் கூறி எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கிறாள். சுப்பு வீட்டில் கொஞ்சம் தயங்கி நின்று விட பின்பு கல்யாணம் முடிவாகி சிறப்பாக நடைபெறுகிறது.
காதலை காமம் வென்று கொண்டிருக்கிறது. நாட்கள் செல்ல ஏனோ ஒரு சிறு விலகல்
ஏற்படுகிறது. அவரவர் நிலையை அப்படியே ஏற்று கொள்ள முடியாமல் எதிர் வினைகள்
தோன்றும் போது வாழ்க்கையில் சிக்கல் ஏற்படுகிறது. கதையின் இடையே சுப்புவின்
இளமை காலங்கள். அவனுக்கும் அவன் அப்பாவிற்கும் உள்ள உறவு நிலைகள்.
அவனுடைய அப்பாவின் ஆசை அவன் ஒரு மிருதங்க வித்வான் ஆவது. அது தொடர்பாக
வீட்டை விட்டு ஓடி பின்பு மாட்டி கொள்வது என்று நாவல் செல்கிறது.
பத்மாவிற்கும் சுப்புவிற்கும் குழந்தைகள் பிறந்தவுடன் பத்மாவின் செயல்களில் மாற்றம் ஏற்படுகிறது. சுப்புவின் எல்லா செயல்களும் அவளுக்கு ஏற்புடையதாக இல்லை.
அதனால் ஒரு கட்டத்தில் சுப்பு எடுக்கும் நிலையில் நாவல் வேறு ஒரு தளத்திற்கு
செல்கிறது.
சுப்புவிற்கும் ரேஷ்மிக்கும் இடையில் ஏற்படும் பழக்கம் சிக்கல் ஆனதா. நாவலில்
திருநங்கைகளின் வாழ்க்கை பாடுகளை பற்றி விவரிக்கிறது. சாமியப்பாவின் உடல்
மற்றும் மனம் சார்ந்த போராட்டங்கள்.
ஆன்மீக தேடலில் சுப்புவும் சாமியப்பாவும் நீண்ட காலத்திற்கு பிறகு சந்திக்கிறார்கள்.
இரண்டு முறை சந்திப்பு நிகழ்கிறது. சுப்பு அவனுக்கான கேள்விகளை அவனே தெரிந்து
கொள்கிறான் மற்றும் சந்திக்கும் மனிதர்கள் மூலமும் விடை தேடி கொள்கிறான்.
ரேஷ்மியை மீண்டும் சந்திக்கும் போது அது ஏன் திருமணத்தில் முடிந்து பின்பு ஒரு விபத்து போல உடைகிறது. இரண்டு மரணங்கள் வருகிறது அவைகள் சொல்வது மரணம் இயல்பானது. நல்லதோ கெட்டதோ. சாமியப்பாவின் மகன் தன் அப்பாவிடம் இருந்து தான் எல்லாவற்றையும் பெற்று கொள்கிறான் சிந்தனை உட்பட. அவனுக்கு எந்த வித புகாரும் இல்லை. தன் தந்தையின் இறுதி காலங்களில் அவருக்கு துணையாக
இருக்கிறான். சாமியப்பாவின் மரணம் சுப்பு விற்கு மன மாற்றம் ஏற்பட்டதா இல்லை
பத்மாவின் உடல் நிலை காரணமாக அவளை மீண்டும் சந்திக்கிறானா. நாவலின் இறுதி
கட்டங்கள் மிகவும் உணர்வு கொந்தளிப்பாக நகர்கிறது. அதாவது மனதிற்கு மிகவும்
நெருக்கமாக உள்ளது. நாவல் முடிந்து மீண்டும் வாழ்க்கை பற்றிய விவாதங்கள் வருகிறது மிகவும் சிறப்பான பக்கங்கள். மொத்தத்தில் நாவல் எனக்கு என்ன கொடுத்தது என்றால் பயணத்தின் உள்ளே மனம் எடுத்து கொள்ளும் மாற்றங்கள் , வாழ்க்கையில் பனி படர்ந்த திரை சூரிய ஒளியில் மெல்ல விலகி காட்டும் சித்திரம் போன்று நாம் பார்க்கும் பார்வையில் ஏற்படும் தெளிவு கிடைக்கிறது.
இந்நாவல் உடல், மனம், ஆன்மீகம், அக விடுதலை இவைகள் சார்ந்த விவாதங்களுக்கு
வழி செய்கிறது. முக்கியமாக நம் சிந்தனையை தூண்டுகிறது. நாம் வாசித்த பல
நாவல்களில் ஒரு சில நாவல்கள் நம் மனதில் முக்கிய இடம் பெற்று விடுகிறது. அந்த
வரிசையில் இதுவும் இந்த ஆண்டின் சிறந்த நாவல்களில் முக்கியமான ஒன்று.