க.நா.சு. என்றழைக்கப்படுகின்ற க.நா.சுப்பிரமணியன் (கந்தாடை நாராயணசுவாமி சுப்பிரமணியன்) எழுதியுள்ள தமிழ்ச்சிறுகதைகள் சிலவற்றை (24 கதைகள்) மறைந்த எழுத்தாளர் சா.கந்தசாமி “க.நா.சுப்ரமண்யனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்” எனும் தலைப்பிட்டு சாகித்திய அகாதெமி நிறுவனத்துக்காகத் தொகுத்துள்ளார். இது 2012 ஆம் ஆண்டே நிகழ்ந்து விட்டிருக்கிறது. ஆனால் தமிழிலக்கியச் சூழலின் வழக்கமே, ஒன்றைக்குறித்துக் காலம் தாழ்த்திப் பேசுவதுதான். இதற்கு நான் மட்டும் விதிவிலக்காக முடியுமா என்ன? புத்தகம் என் கைக்கு வந்து சில ஆண்டுகள் கடந்து விட்டன. அப்போதே வாசித்து எல்லாக் கதைகளிலும் அடிக்கோடுகளிட்டு வைத்திருந்தேன். இப்போதுதான் அந்த அடிக்கோடுகள் பாவ விமோசனம் பெறுகின்றன.
இலக்கியம் குறித்த தனது கறாரான அபிப்பிராயங்களுக்காகப் பெரிதும் “கவனம்” பெற்றவர் க.நா.சு. “இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்” என்று நுால் எழுதியவர். இதற்காக அவருக்கு சாகித்திய அகாதெமி விருது அங்கீகாரமும் கிடைத்தது. இலக்கியம் குறித்த அபிப்பிராயமென்றால் எப்படி? க.நா.சு.வை ஒரு வலதுசாரியென்றும், சி.ஐ.ஏ. உளவாளி என்றெல்லாம் விமர்சித்த இலக்கியவாதிகளே கூட, தன் எழுத்தைப் பற்றி விமர்சனமாகக் கூட க.நா.சு. எங்காவது ஒரு மூலையில் எழுதியிருக்க மாட்டாரா என்று ஏங்குகின்ற அளவுக்கான அபிப்பிராயம். க.நா.சு.வைக் குறித்து ஒரு மலையாள எழுத்தாளர் எழுதியதைக் கவிஞர் சுகுமாரன் தனது கட்டுரை ஒன்றில் இப்படிக் குறிப்பிட்டிருப்பார்.
“எங்கே தரமில்லாத இலக்கியம் இருக்குமோ
அங்கே விமர்சன வாளுடன் க.நா.சு. பிரசன்னமாவார்”
இப்படித் தனது கருத்து அபிப்பிராயங்களுக்காகப் பேர் பெற்ற க.நா.சு, தனக்குக் கிடைத்த அந்த அடையாளத்தைக் குறித்துப் பெரிதாக எதுவும் பொருட்படுத்திக் கொண்டதில்லை என்பது ஆச்சரியத்துக்குரிய விஷயம்.
அவர் தன் காலமெல்லாம் தன்னை ஒரு படைப்பிலக்கிய கர்த்தா என்றெண்ணித் தீவிரமாகச் செயல்பட்டவர். 30 நாவல்களுக்குப் பக்கம் எழுதியிருப்பார். சிறுகதைகள் என்ற பார்த்தால், 100 கதைகளாவது இருக்கும். க.நா.சு. எழுதியுள்ள நாவல்களில் – ஒரு நாள், பொய்த்தேவு, அசுரகணம், வாழ்ந்தவர் கெட்டால், பித்தப்பூ போன்ற ஐந்தாறு நாவல்கள் முக்கியமானவை என்பது என் கருத்து. அவருடைய சிறுகதைகளைக் குறித்துத் தன்னுடைய முன்னுரையில் சா.கந்தசாமி இப்படிக் குறிப்பிடுகிறார்-
“க.நா.சு.வின் கதைகள் கலவரம், பரபரப்பு,கிளுகிளுப்பு ஊட்டுகின்றவை அல்ல. அவை பூரண அழகும், அமைதியும், அடக்கமும் கொண்டவை. குடும்பம் சார்ந்தவை. பாட்டி, தாய், தந்தை, மகன், மனைவி, நண்பர்கள், சொந்த ஊர் என்று ஒரு வட்டத்திற்குள் புனையப்பட்டவை. ஆனால் அவை மனித இனம் முழுவதையும் சொல்வது போல, சொல்லாமல் விடுவனவற்றையும் சொல்கின்றன.”
இவை அல்லாமல் க.நா.சு. தன்னுடைய பூரணமான இலக்கிய வாழ்க்கையில் செய்து விட்டுச் சென்றிருக்கின்ற மகத்தான பணி, மொழிபெயர்ப்புகள். அவரைப்பற்றி இதுவரை எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் அவருடைய மொழிபெயர்ப்புப் பணி குறித்து எவரும் குறிப்பிடாமல் விட்டதில்லை. தமிழில் இன்றுள்ள மொழி பெயர்ப்பாளர்கள் எவரும் செய்திராத அசுர சாதனை இது. க.நா.சு, வரிக்கு வரி- வார்த்தைக்கு வார்த்தை என்று- சக்கையாக மொழிபெயர்க்கும் தொழில் முறை மொழி பெயர்ப்பாளர் அல்ல. மூலப்பிரதியைப் படித்து மனத்தில் இருத்திக்கொண்டு தன்னுடைய பாணியில் அதை மறு ஆக்கம் செய்வதுதான் அவர் கடைப்பிடித்த முறை. பாரபாஸ், மதகுரு, நிலவளம், விலங்குப் பண்ணை போன்ற அவருடைய முதுக்கியமான மொழி பெயர்ப்புகளின் ஆங்கிலப் பிரதிகளை நான் பார்த்தவரை விரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை எனும் முறையை அவர் பின்பற்றியதாகத் தெரியவில்லை. உலக இலக்கிய மறு ஆக்கப் பணிகளில் நோபல் பரிசு வென்ற நாவல்களாகத் தேடித்தேடி அவர் மொழியாக்கம் செய்ததற்கு ஒரு உள்நோக்கம்- இருந்ததைப் பற்றி தஞ்சை பிரகாஷ் என்னிடம் சொல்லியிருக்கிறார். எப்படி என்றால், “நோபல் பரிசு பெற்ற நாவல்களாகக் குறிவைத்து அவர் மொழி பெயர்க்கக் காரணம், இதைப் பார்த்தாவது தமிழ் எழுத்தாளனுக்கு நோபல் பரிசு குறித்த கனவு வராதா என்பதுதான்.”
க.நா.சு. இப்படி யோசித்துத்தான் அந்த நாவல்களை எல்லாம் மொழிபெயர்த்தாரா அல்லது க.நா.சு. மீது தனக்கு உள்ள பிரேமையால் ப்ரகாஷ் இப்படிப் புனைந்து சொன்னாரா என்றும் கூட நான் யோசித்திருக்கிறேன். எப்படியிருந்தாலும் க.நா.சு.வின் அந்தப்பணி போற்றுதலுக்குரியது. அன்பு வழி (பாரபாஸ்) நாவலை எல்லாம் நான் இதுவரை நுாறு முறையாவது வாசித்திருப்பேன். அந்நாவலில் கூறப்பட்ட சம்பவங்கள் யாவும் என்னுள் அன்றாடம் காட்சிகளாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. பைபிளில் ஒரே ஒரு இடத்தில் இடம்பெறும் பாரபாஸ் என்கிற வழிப்பறிக் கொள்ளையனை பெர்லாகர் க்விஸ்ட் தன் புனைவின் வலிமையுடன் ஒரு நாயகனாக உருமாற்றிய அற்புதம், உலக இலக்கியத்தில் நிகழ்ந்த ஓர் அதிசயச் செயல்.
கவிதைகளையும், நாடகங்களையும் கூட க.நா.சு. விட்டு வைக்கவில்லை. மயன் என்று தனக்கு ஒரு புனைபெயர் சூட்டிக்கொண்டு கவிதைகளை எழுதித் தள்ளினார். அந்தக் கவிதைகள் தோற்றத்துக்கு எளியவை. ஆனால் அவை கவிதைகள். கவிஞர் சுகுமாரன், க.நா.சு.வின் கவிதைகளில் தென்படும் இருண்மையைக் குறித்து ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் என்க்கு ஏன் அவை எளிய தோற்றம் தந்தன என்பது புரியவில்லை. ஒருவேளை நான் அதுவரை வாசித்திருந்த க.நா.சு.வின் கவிதைகள் அப்படியானவையோ என்று நினைத்துக் கொண்டேன். கி.வா.ஜ.வைப் பற்றி க.நா.சு. எழுதிய ஒரு கவிதையைப் படித்து ரொம்ப நாள் சிரித்துக் கொண்டிருந்தேன். கி.வா.ஜ. தனக்கு “ரத்னா கபே”வையும் அங்கு கிடைக்கின்ற சுவையான தோசையையும் அறிமுகப்படுத்தினார். மற்றபடி அவருடைய இலக்கியத் தகுதியைப் பற்றி எல்லாம் சொல்ல எதுவுமில்லை என்று அந்தக் கவிதையில் க.நா.சு. எழுதியிருப்பார். இதைப் படித்தால் சிரிப்பு வருமா வராதா?
தம்பி அழிசி சீனிவாசன் பதிப்பில் விக்ரம் தொகுத்த எமன் (தொகுக்கப்படாத படைப்புகள் க.நா.சுப்ரமண்யம்) படித்தபோதுதான் க.நா.சு.வின் கவிதை முகம் எனக்கு முழுமையாகத் துலங்கியது. க.நா.சு. கண்டிப்பாக ஒரு கவிஞரும்தான் என்பதை நிறுவிய தொகுப்பு அது. கவிதையில் பகடி செய்வதை அன்றே முயன்று பார்த்திருப்பார். “பலரும் தேவை” என்று அவருடைய எள்ளல்- கண்டிப்பாக அது எள்ளல் மட்டுமே அல்ல, நிதர்சனமும் கூட. அந்தக் கவிதையை இந்த இடத்தில் காட்டுவது தவிர்க்க இயலாதது.
“அறிமுகம் செய்து வைக்க
ஒருவர் வேண்டும்
அறிமுகமான பின் துாக்கிவிட
இரண்டாவது ஒருவர் வேண்டும்
நிலைத்து நிற்க வைத்த
இடத்தில் நிற்க முடியாமல்
தள்ளாடினால்
துாக்கிவைக்க
நால்வர் வேண்டும்
நுால்கள் எழுதினால்
அவற்றைப் படிக்கப்
பல்லாயிரம் வேண்டும்
நாடகம் போட்டால்
அதைப் பார்க்க
பார்த்துக் கை கொட்ட
ஒரு இலட்சம் பேர் வேண்டும்
உலகில் நீ மட்டும்
இருந்தால் போதாது
பலரும் தேவையாக இருக்கிறது
க.நா.சு.வைப் போன்ற ஒரு முழுமையான இலக்கிய ஆளுமையின் ஒரு துறை சார்ந்த (சிறுகதைகள்) அனுபவத்தை எழுதும்போது, அவருடைய பன்முகத் திறமை குறித்த ஒரு சிறிய குறுக்கு வெட்டுச் சித்திரத்தையாவது நாம் காட்ட வேண்டும், என்பதாலேயே சிறுகதைகளைப் பற்றி எழுத வந்த நான் அவருடைய விமர்சனப் பாணி, நாவல், மொழிபெயர்ப்புகள், கவிதை என சிலவற்றைக் கோடிட்டுக் காட்டினேன்.
இந்த 24 கதைகளை வைத்துப் பார்க்கும் போது க.நா.சு. சுயசரிதைத் தன்மை கொண்ட கதைகளையே பெரும்பாலும் எழுதியிருக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது. ஆனால் இக்கதைகள் ஒட்டுமொத்த மனித குல வாழ்க்கைக்கும் பொருந்திப்போவதாக இருக்கிறது. லௌகீக வாழ்க்கையில் பேரனுபவம் பெற்ற சுந்தாப்பாட்டி பெரும்பாலான கதைகளில் இடம்பெறுகிறார். க.நா.சு.வின் மனைவி ராஜி வருகிறார். அநேகம் கதைகளை க.நா.சு.வே தன்னனுபவம் போல சொல்லிச் செல்கிறார். இவற்றில் புனைவு எது, நிஜம் எது என நம்மால் பிரித்துப் பார்க்க இயலவில்லை. ஆனால் “காவேரி மடத்துக்கிழவர்” போன்ற கதைகளில் புனைவு தொழிற்பட்டிருக்கிறது. “முதற் சுடர்” என்கிற கதையைக் கவிதை போன்ற மொழிநடையில் எழுதியிருக்கிறார். எல்லாக் கதைகளிலும் ஆசிரியரும் அவருடைய அறிவுஜீவித் தன்மையும் வெளிப்பட்டபடியே இருப்பதைக் காண்கிறோம். சிறுகதைக்கான வடிவம் குறித்துக் கவலைப்படாமல் சர்வ சுதந்திரத்துடன் எழுதிப்பட்டிருப்பதால் இக்கதைகளின் மேல் வாசகனுக்கு இயல்பாகவே ஒருவித நம்பகத்தன்மை ஏற்பட்டு விடுகிறது.
“பெண் மணம்” என்று முதல் கதை. “படிக்கப் படிக்க ஆண்களுக்கு அறிவு அதிகமாகிறது. படிக்கப் படிக்கப் பெண்களுக்கு அன்பு அதிகமாகிறது” என்று சுந்தாப் பாட்டி விடுகதை மாதிரி ஏதோ சொல்கிறாள். அதெப்படி என்று க.நா.சு.கேட்கிறார். சுந்தாப்பாட்டி அதற்கு விளக்கம் சொல்கிறாள். பெண்களுக்குப் பரிந்துபேசும் சுந்தாப்பாட்டியின் கதாபாத்திரவார்ப்பில் ஒரு முதிர்ந்த ஞானிக்குரிய தோற்றம் கிடைக்கிறது. லட்சிய மாட்டுப் பெண் (அதாங்க, மருமகள்) குறித்து அவள் சொல்கிறாள்,
“மகாபாரதம், ராமாயணம் போன்ற நுால்களை வாசிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் போதிய எழுத்து வாசனை, நமது நாட்டுச் சரித்திரங்கள், புராணங்கள் இவற்றைப் படித்திருக்க வேண்டும். சங்கீதமும் கொஞ்சம் வேண்டும். குரல் நன்றாகயிராவிட்டாலும் பாதகமில்லை. ராஜபாவங்கள் தெரிந்திருந்தால் போதும். பூத்தொடுப்பது, கோலம் போடுவது போன்ற அலங்காரமான விஷயங்களும் தெரிய வேண்டும். எல்லாவற்றையும் விட தெய்வ பக்தி மிகவும் அவசியம். பாட்டு,கோலம், அலங்காரம் எல்லாம் தெய்வத்தை ஒட்டிப் படிந்திருந்தால் தான் உண்மையிலேயே அழகுள்ளவையாக இருக்க முடியும். தெய்வத்துக்கு அடுத்தபடியாக பெண் என்றால் கணவனிடமும் வீட்டுக் காரியங்களிலும் ஈடுபாடு இருக்க வேண்டும்.“
இதற்கு சுந்தாப்பாட்டியின் மாட்டுப்பெண் (அதாங்க, மருமகள்) சொல்கிறாள். ”எனக்கில்லாத குணங்களை எல்லாம் அடுக்கிக்கொண்டே போனால் லட்சிய மாட்டுப்பெண் சிருஷ்டியாகி விடுகிறாள்”. பிறகு கதை வெகு நாட்களுக்கு முன் அந்த ஊரில் வாழ்ந்த சுப்பாதீட்சிதருக்குப் போய்விடுகிறது.
நமது குழந்தைப் பருவமும் இப்போதுள்ள ஆண் பருவமும் கிட்டத்தட்ட வேறுவேறு ஜென்மங்கள்- என்று “முதல் கதை” என்னும் கதைகயில் க.நா.சு. கூறுகிறார். இதைப் படித்ததும் எனக்கு மனம் என்னவோ போலாகிவிட்டது.“அப்படித்தான் இருக்குமோ” என்று யோசித்துக்கொண்டே இருந்த எனக்கு, இந்த மாதிரி ஒரு சொற்றொடரை இதுவரை மௌனியோ, நகுலனோ, லா.ச.ரா.வோ கூட சொன்னதில்லையே என்று ஆச்சரியப்பட்டேன். அந்த “முதல் கதை” க.நா.சு., தன்னுடைய முதல் கதையை எழுதிக் காண்பித்து, அம்மாவிடம் முதுகில் அடிவாங்கிய கதை.
“ஒரு கடிதம்” என்கிற கதையில் ஒரு குடும்பப் பெண் தன்னுடைய தோழிக்குக் கடிதம் எழுதுகிறாள். அக்கடிதத்தில் இரண்டு வரிகள், மணமான நம்முடைய பெண்களின் அக மன ஓட்டத்தைச் சொல்கிற மாதிரி அமைந்துவிட்டிருந்தது.
“நாமாகத் தேடிக் காதலிப்பதாக எண்ணி வரிக்கும் புருஷனுக்கும் , நம் பெற்றோராலோ பிறராலோ நம்மேல் சுமத்தப்படும் புருஷனுக்கும் அவ்வளவாக விசேஷமான வித்தியாசம் இல்லை”
அதே கடிதத்தில் இன்னும் சில வரிகள். அதுவும் கூட பெண் ஜென்மங்களின் பரிதாபத்தைத்தான் சுட்டுகின்றன.
“உன்னையும் என்னையும் நம் சகோதரிகள் லட்சிய வாதிகள், குடும்பத்துக்கு லாயக்கற்றவர்கள் என்று கேலி செய்வார்களே ஞாபகம் இருக்கிறதா உனக்கு?
“லட்சியங்களை எல்லாந்தான் கட்டிப் பரண்மேல் வைத்தாகிவிட்டதே. வரிந்து கட்டிக்கொண்டு அடுப்பண்டை நிற்கிறோமே இப்பொழுது” என்று நீ கேட்கலாம். உண்மைதான்”
பாதஸரம் கதையில் க.நா.சு. தன் மனைவி,குழந்தையுடன் சிதம்பரத்திலிருந்து மாயவரத்துக்கு ரயிலில் பயணிக்கிறார். ரயிலில் ஒரு செல்வந்தரைப் பார்க்கிறார். “அவர் அணிந்திருந்தது என்னவோ கதர்ச்சட்டை, ஆனால் பொத்தான்கள் எல்லாம் தங்கத்தில்”- என்று ஒரு வரியில் அந்த செல்வந்தரின் குணாதிசயத்தைச் சித்தரித்து விடுகிறார். ஒரு கல்லுாரி மாணவியும் ரயிலுக்குள் பிரசன்னமாகிறார். செல்வந்தருக்கும் கல்லுாரி மாணவிக்கும் உரையாடல் ஏற்படுகிறது. இப்போது, அந்த செல்வந்தரின் பெயர் நாராயணசாமி செட்டியார் என்று க.நா.சு. அறிந்து கொள்கிறார். வட்டாரத்தில் ரொம்பப் பிரபலமானவரும் கூட. அவரைப் பற்றிய க.நா.சு.வின் விமர்சனம் அடுத்து வருகிறது.
“உண்மையிலேயே நாராயண செட்டியார் பெரிய மனிதர்தான். நவ கோடியில்லாவிட்டாலும் நல்ல சொத்துள்ளவர். கலையிலும் நல்ல ஈடுபாடுள்ளவர். கலையைவிட அதிகமாகக் கலைஞர்களிடம் ஈடுபாடுள்ளவர். கலைஞர்களிலும்,பெண் கலைஞர்களிடத்து நிரம்ப அன்புள்ளவர் என்பது அவரைப் பற்றிய பிரசித்தமான ரசகியம்”
க.நா.சு.வுக்கு மட்டுமல்ல பொதுவாக எல்லோருக்குமே திரைப்பட நடிகைகள் மீதுள்ள அபிப்பிராயம் ஒன்றுபோலத்தான். ஆனால் க.நா.சு.வுக்கு கல்லுாரி மாணவிகள் மீதும் கூட ஒருவித ஒவ்வாமை, கசப்பு இருந்திருக்கிறது. இந்தக் கதையின் ஓரிடத்தில் அவர் இப்படி எழுதுகிறார்.
“காலேஜில் படிக்கிற தேவிகளுக்கும், சினிமாவில் நடிக்கிற லட்சுமிகளுக்கும் கடவுள் ஏன்தான்- தனியாக, பிரத்தியேகமாக ஒரு பொய்க்குரல் அளித்திருக்கிறாரோ”
இப்போது கல்லுாரி மாணவி சீட்டில் சாய்ந்து கொண்டு கால்மேல் (தன்னுடைய கால்மேல்தான்) கால் போட்டுக்கொண்டு உட்கார்கிறாள். அவள் காலில் பாதஸரம் (கொலுசு) அணிந்திருப்பது அப்போது எல்லோருடைய பார்வைக்கும் படுகிறது. உடனே க.நா.சு.வின் மனைவிக்கு அது குறித்த ஒவ்வாமை வெளிப்படுகிறது.
“இத்தனை அலங்காரத்துக்கும் மேலே காலிலே பாதஸரம் போட்டின்டிருக்காளே. அழகாத்தான் இருக்கு. எந்த நாகரிகத்திலே சேர்த்தியாம் அது?”
உடனே க.நா.சு.வின் மகள் இதற்கொரு எதிர்வினை புரிகிறாள்.
“நான் கூடப் போட்டிண்டிருக்கேனே காலில் கொலுசு”
செல்வந்தரிடம் கல்லுாரி மாணவி, தான் தஞ்சாவூர் வரை செல்வதைக் கூறுகிறாள். பிறகு, தஞ்சாவூர் வந்தால் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைக்கிறாள். செல்வந்தரும் வருவதாக ஒப்புக்கொள்கிறார். இது எல்லாமே க.நா.சு.வுக்கு ஒவ்வாமையாக இருக்க, கதையின் முடிவில் அவர் தன் மனைவியிடம் கூறுகிறார். “அதென்னவோ ராஜி, நம் பாப்பாவைப் படிக்க வைக்கப்படாதுன்னுதான் எனக்குத் தோணறது”
“வாழ்க்கைப் பந்தயத்தில்” கதையில் இரண்டு நண்பர்கள், ராஜாவும் சிவசங்கரனும். இளம்பிராயம் முதல் இருவரும் ஒன்றாகப் படித்து வளர்கிறார்கள். பெரியவர்களானதும் இருவருமே சுயேச்சையான வாழ்வை விரும்பினார்கள். சிவசங்கரன் சிறுதொழில் செய்யப்போக, ராஜா எழுத்தாளன் ஆனான். ராஜா வேறு யாருமல்ல க.நா.சு. என்றே புரிந்து கொள்கிறோம். நீண்ட இடைவெளியின் பிறகு நண்பர்கள் சந்திக்க நேர்கிறது. சிவசங்கரன் தொழிலதிபராகி காரில் வருகிறான். ராஜாவின் நிலையை சொல்லத் தேவையில்லை. இருவருக்கிடையில் அப்போது நடைபெறும் உரையாடலின் போது, சிவசங்கரன் ராஜாவிடம் ஒரு பத்திரிகையின் பெயரைச் சொல்லி, “அந்தப் பத்திரிகையில் உன் கதை ஒன்றைப் படித்தேன். உன் கதை அந்தப் பத்திரிகையில் வெளிவந்திந்த மற்ற விஷயங்களுடன் பொருந்தவில்லை”
ராஜா இதைக் கேட்டு சிரிக்கிறான். அந்தச் சிரிப்பு துக்கம் நிறைந்த சிரிப்பாகத் தோன்றியது சிவசங்கரனுக்கு. அப்போது ராஜா கூறுகிறான்.
“நானே வாழ்க்கையில் அவ்வளவாக மற்ற மனிதர்களுடன் பொருந்தாத மனிதனாகிவிட்டேன். என்னுடைய வாழ்வில் நான் பொருந்தாதவன். என் எழுத்தும் என் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக அமைந்திருக்கிறது”
இவ்வளவுதானா க.நா.சு.வின் கதைகள்? என்றால், இல்லை. இதற்கு மேலும் இருக்கிறது. காவேரி மடத்துக் கிழவர், அழகி, முதற்சுடர், அலமேலு போன்ற கதைகளை அவர் வித்தியாசமாக அணுகியிருக்கிறார். ஆனாலும் நவீன தமிழ்ச் சிறுகதையாசிரியர்களுக்கும் க.நா.சு.வின் கதை கூறல் முறைக்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறது. அவர்களுக்கு லபித்த கிராப்ட் (Craft) க.நா.சு.வுக்கு வாய்க்கவில்லை. அல்லது க.நா.சு. அதைப் பொருட்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. நுட்பமான உரையாடல்கள், சூழல் விவரணைகள் இவை குறித்த கவலையின்றித் தன்னிச்சையாகச் சொல்லப்பட்டுள்ள கதைகள் இவை. நாஞ்சில் நாடன் குறிப்பிடுவது மாதிரி- எங்கேயும் ஒரு மரம் செடிகொடி மலரைக் காணோம். பட்சிகள் பறக்கக் காணோம்.
இக்கதைகளைத் தொகுத்து எட்டுப் பக்கங்களுக்கு முன்னுரையும் எழுதியிருக்கிற சா.கந்தசாமி, நவீனத் தமிழ்ச் சிறுகதையாசிரியர்களில் முக்கியமானவர். கதையற்ற கதை எழுதவேண்டும் என்னும் கோட்பாடுள்ளவர், அவர் .க.நா.சு.கதைகளைப் பற்றி ஒன்று சொல்கிறார். “க.நா.சுப்ரமண்யன் சிறுகதைகள் குடும்பம் என்கின்ற ஓர் அமைப்பின் மீது வைக்கப்பட்ட புதுமலர்“.
ஒரு முன்னோடியின் கதைகள் குறித்து அடுத்த தலைமுறையைச் சேர்ந்த மற்றொரு முன்னோடி தெரிவிக்கின்ற கருத்தை நாம் ஏற்றுக்கொள்கின்ற அதே நேரத்தில், தமிழ்ச்சிறுகதையின் சருமம் மாறி 35 ஆண்டுகளாகின்றன என்கிற பிரக்ஞையும் கொண்டிருக்கிறோம் என்பதுதான்.