
கவிஞர் எழுத்தாளர் ச.ஆனந்தகுமார் அவர்களின், “நினைவு யாழ்” சிறுகதைத் தொகுப்பு வாசித்தேன்.
கவிஞர் லார்க் பாஸ்கரின் சிறப்பான அட்டைப் பட வடிவமைப்பு. வேரல் பதிப்பக வெளியீடு.
எழுத்தாளர் என்.சிரீராமின் சிறப்பான அணிந்துரையுடன், 17 சிறுகதைகள் கொண்ட ஒரு தொகுப்பு.
சில பக்கங்களுடன் சொல்லப்பட்டுள்ள, எளிமையான நடையில், வெகுஜன வாசிப்புக்கு அருகிலுள்ள சிறுகதைகள்.
சில கதைகளில், பிரபல துப்பறியும் கதைகளின் சாயல்(குற்றம் 2.0, வதம்).
நகரம் சார்ந்த வாழ்வியலை பிரதிபலிக்கும் கதைகள்.
சுருதி பேதம் – திருமணமான ஒரு பெண், தனக்கு சரிவராத வாழ்க்கையிலிருந்து மிகத் துணிவாக வெளிவரும் கதை. பெண்ணின் பார்வையில், கதை சொல்லலில் சிறப்பாக வந்துள்ளது.
நினைவு யாழ் – யாழில் மீட்டப்படும் பழைய நினைவுகள். தேவதையாக ஆராதித்தவளை, அப்படியே வேறு தோற்றத்தில் பார்ப்பது எவ்வளவு பெரிய அதிர்ச்சி. அவள் மீண்டும் பக்கத்தில் வந்தாலும், புதைக்கப்பட்ட சில உண்மைகள், அவளை தள்ளிப் போக வைக்கும் காலத்தின் கோலம். இப்படியெல்லாம் நடப்பதற்கான சாத்தியங்கள் இவ்வாழ்வில் இல்லையென மறுக்க முடியாது. ஆனாலும் அவன் மனைவியின் வார்த்தைகளும், அவன் தனது அப்பாவைத் திட்டும் வார்த்தைகளும் கதைக்கு ஒரு நாடகத்தன்மையை கொடுக்கிறது.
கருணை – தெரிந்தே செய்த ஒரு சிறிய தவறால், குமாரின் தந்தையை, தெய்வம் நின்று கொன்று விட்டதா? அதனால் தான், அப்படி ஒரு இறப்பா? ஆனால் இறக்கும் தருவாயில் தனது தவறை உணர்ந்து வருந்துபவருக்கு, தண்டனை சற்றே அதிகம் தான். அப்படியெனில் தொழிலாகச் செய்பவர்களின் கதியென்ன?
மற்றும் ஒரு கோணத்தில், அஃறிணைக்கு அழுத பிள்ளைகள், வளர்ந்த பிறகு, தங்களின் தந்தையிடம் கருணையின்றி நடப்பது எவ்வளவு சுயநலம்?
இவ்விரண்டையும் முடிச்சிட்டு இருப்பது வித்தியாசமான ஒரு பார்வை. வாசகனிடம் கேள்விகளை எழுப்பியதில் கதைசொல்லிக்கு வெற்றி.
தண்டனை – பிரச்சினையிலிருக்கும் சபேசன் தப்பிக்க ஒரு தவறைச் செய்கிறான். குற்றவுணர்ச்சியுடன் தாத்தாவைப் பார்க்கையில், அவனை மன்னித்த பிறகு இறந்து விடுகிறார். மன்னிப்பே மிகப் பெரிய தண்டனை என்பதே கதை. நெகிழ்வு.
காத்திருப்பு – மனைவியை இழந்து தனிமையில் வாழும் வயதான ஒருவரின் கதை.தனிமையின் தவிப்பை நாமும் உணர முடிகிறது. மனைவியுடனும் குழந்தைகளுடனும் அவர் நினைவோட்டமாக வரும் தீபாவளி, சிறப்பு. இறுதியில் அவர் எடுத்து வளர்த்த, தம்பியின் மகனும், அவரைக் கைவிடுவது கொடுமை. நெகிழ்வு.
நிறம் மாறும் முகங்கள் – நம் ஒவ்வொருவருக்கும், யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு ரகசியம் இருக்குமல்லவா? அதுதான் கதை. மஹா, தனது பெயருக்கு காரணமானவரை சந்திப்பது , சற்று நாடகத்தனமாக இருப்பினும், நடப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.
உடைந்து போகும் பிம்பங்கள் – ஆதிரையைப் போல எத்தனையோ பெண்கள் சினிமாவில் இருக்கலாம். கனவுகள் எல்லாமே கைகூடும் என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை. நிச்சயமாக வளரும் சூழ்நிலையின் பாதிப்பு இருக்கிறது. சோகம்.
சிறப்பான வாசிப்பு அனுபவம்.
