“எழுதுக அதுவே அதன் ரகசியம்” – சுந்தர ராமசாமி
எழுத்தாளர் ஜெயமோகன் சிங்கப்பூர் மாணவர்களுக்கு இலக்கியம் குறித்த வகுப்பு எடுக்கும் போது எழுதப்பட்ட குறிப்புகளும், அவருக்கும் அவர் வாசகர்களும் இடையே எழுதும் முறை பற்றி நடந்த உரையாடல்களின் தொகுப்பே இந்த நூல். சிறுகதை, கட்டுரை மற்றும் நாவல் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், அதன் கட்டமைப்புகள் மற்றும் எழுதுவதற்கான அடிப்படைகள் கற்றுத் தருகிறது.
“வாழ்வின் ஒரு தருணத்தை அல்லது முரணை சுட்டிக் காட்ட உருவாக்கப்பட கலை வடிவம் தான் சிறுகதை” என ஆசிரியர் சிறுகதையை வரையறுக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சு ஊடகங்களும் அதன் வழியே வாசிப்பும் பெருகிய போது வழக்கமான நீதி கதைகள், உருவக கதைகளின் முடிவுகளும், கருத்துக்களும் எளிதில் ஊகிக்க கூடியதாக சலிப்பை ஏற்படுத்துவதாக மாறிவிட கதையின் ஆர்வத்தை கூட்ட கதையின் இறுதியில் ஒரு திருப்பம் (twist) கொண்டுவரப்பட்டது. துவக்கத்தில் ஆலன் போ, ஓ ஹென்றி போன்றவர்கள் இந்த இறுதி திருப்பத்தை (twist) வாசகர்களைக் கவரும் யுக்தியாக பயன்படுத்தி இருந்தாலும் இதுவே நவீன இலக்கியம் உருவாக அடிப்படையாக அமைந்தது. அதாவது போதனை செய்வதல்ல வாசகனுக்கு உணர்த்துவதும் வாசகன் பங்கேற்பை கூறுவதுமாக அமைந்தது.
ஆனால் சிறுகதைக்கு திட்டவட்டமான வடிவம் இல்லை என்றும், அப்படி திட்டவட்டமான வடிவங்கள் உருவாக்கும் போதெல்லாம் அதை மீறப்படுவதையும் சுட்டிக் காட்டும் அவர், இதுவரை எழுதப்பட்டு வெற்றிபெற்ற சிறுகதைகளில் உள்ள பொது அம்சங்களை கணக்கில் கொண்டு சிறுகதைகளுக்கான தோராயமாக இலக்கணத்தை முன்வைக்கிறார்.
சிறுகதையும், கவிதையும் வாழ்வின் ஒரு துளியை, ஒரு தருணத்தை சொல்லவந்த வடிவம் என்றால் “வாழ்வை தொகுத்துக் காட்டி ஒட்டு மொத்தப் பார்வையை அளிக்க கூடியது நாவல்” என்கிறார். நாவலின் தன்மை, அதன் வடிவங்கள், புராணம் முதல் நவீனத்துவம், பின் நவீனத்துவம் என அது கடந்து வந்த பாதை. நாவல் துவங்குவதில் உள்ள சிக்கல்கள், இடையில் நின்று விட்ட நாவலை எப்படி கையாள்வது என அனைத்தை பற்றியும் விரிவான விளக்கங்களை அளிக்கிறார்.
ஒரு துறையில் சாதிக்க நினைக்கும் ஒருவர், இதுவரை அந்த துறையில் என்னென்ன உச்ங்கள் எட்டுப்பட்டு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் தான் அந்தத் துறைக்கு இனி என்ன தேவை என்பதை யுகிக்க முடியும். புதிதாக சிறுகதையோ நாவலோ எழுத துவங்கும் எழுத்தாளர் இதுவரை இலக்கியத்தில் என்னென்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்ளவது அவசியம். அதற்க்காக தமிழின் முக்கியமான எழுத்தாளர்களை வரிசை படுத்தி அவர்களின் முக்கியமான சிறுகதைகள், முக்கியமான நாவல்கள் அனைத்தும் பரிந்துரைத்துள்ளார். அதை காண்கையில் தமிழ் இலக்கிய தொடாத வடிவங்ளோ, கருவோ இல்லை எனலாம். தமிழ் இலக்கியம் அனைத்து வகையிலும் உலக இலக்கியங்களுக்கு நிகராகவே இருந்து வந்துள்ளது.
புதிதாக எழுதும் எண்ணம் உள்ள நண்பர்களுக்கு இது அவசியமான புத்தகம்.