Detective fiction எனும் வகையிலான கதைகளுக்கு இன்றும் நல்ல கிராக்கி மக்களிடம் உண்டு. கொலையும் கொள்ளையும் செய்யாமல் மிகச் சாதாரணமான பழகிய வாழ்க்கையை வாழும் நமக்கு இம்மாதிரியான சுவாரஸியமான கதைகளே ஆச்சரியப்படுவதற்கான கணங்களை அளிக்கின்றன (கவிதை வாசிப்பவர்கள் நீங்கலாக). இன்றும் மக்கள் ராஜேஷ்குமாரையும் சுஜாதாவையும் பட்டுக்கோட்டை பிரபாகரையும் வாசித்துக் கொண்டிருப்பதன் பின்ணனி இதுவே.
துப்பறியும் கதை பைபிள் காலத்திலேயே (சூசன்னாவும் மூத்தோர்களும்) துவங்கி விட்டதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். எட்கர் ஆலன் போவிலிருந்து சத்யஜித் ரே வரையிலும் பலர் இந்த துப்பறியும் கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். இருந்தும் நமக்கு வெகு பரிச்சயமான நபர்கள் என்றால் ஜேம்ஸ்பாண்டும் ஷெர்லாக் ஹோல்ம்ஸுமே. இவர்கள் இருவரும் கற்பனை கதாபாத்திரங்களென்றாலும் மனித மூளையால் அடையக்கூடிய ஒரு சாத்தியத்தை அடைந்தவர்களே. துப்பறியும் சாம்புவும் கணேஷ் வசந்த்தும் அவ்வாறே எனினும் கூர்மையான பகுத்தறிவும் சமயோசிதமும் அமைந்த எவரும் துப்பறிவாளராகிவிட இயலாது. இவற்றை மீறிய ஒன்றான உள்ளுணர்வின் தூண்டுதலே ஒருவனை துப்பறிவாளனாக்குகிறது.
பத்துலட்சம் காலடிகள் தொகுப்பில் வெளிப்படும் ஒளெசேப்பச்சனையும் ரோஸாரியோவையும் வைத்துக் கொண்டு எக்கச்சக்க கதைகளை ஜெ.வால் எழுதவியலும். மேலும் இவை திரைப்படமாக எடுப்பதற்கு ஏற்ற கதைகளாகவும் இருக்கிறது. அரட்டையடிப்பதையே ஒரு கதை சொல்லும் முறையாக ஜெ. உருவாக்கி விட்டிருக்கிறார். முன்பே இதை புனைவுக்களியாட்டு தொகுப்பில் கண்டிருந்தாலும், ஒளசேப்பச்சனுடன் அரட்டையடிப்பதென்பது வரலாற்றையும் பண்பாட்டையும் குற்றத்தின் கண்களைக் கொண்டு பார்ப்பது போன்றது. இருந்தும் இக்கதைகளை வெறுமனே துப்பறியும் சாகசம் கொண்ட கதைகள் என்று மட்டுமே வகைப்படுத்திவிட முடியாது.
வேரில் திகழ்வது, கைமுக்கு போன்ற கதைகள் சிறு சம்பவங்கள் வழியாக ஒரு வரலாற்றை குறுக்கு வெட்டாக கூறிச் செல்கிறது. சீரான தகவல்கள் அவற்றை ஒருங்கிணைக்கும் தர்க்கத்துடன் கூடிய சமயோசித புத்தி பிறகு உள்ளுணர்வு இவையே ஒளசேப்பச்சனின் கருவிகள்.
ஆனாலும் அவர் எப்போழுது அவர் எதிர் பார்த்திராத மறு பக்கத்தையே ஒவ்வொரு முறையும் சென்றடைகிறார். சாதாரணமான குற்றச் சம்பவம் என எண்ணும் பொழுது அது நிகழ்வதற்கான நிகழ்தகவின் துவக்கம் வரலாற்றின் ஏதோ ஒரு மூலையில் நடைபெற்றிருக்கும் புள்ளிகளை இணைத்துக் கொண்டு ஒளசேப்பச்சனின் உள்ளுணர்வு சென்றடையும் இடத்தில் வாசகர்களாகிய நாம் எதிர்பார்த்துக் காத்திருந்த திருப்பமானது அமர்ந்திருக்கும். பத்துலட்சம் காலடிகள், மேம்போக்காக வாசிப்பவர்களுக்கு வெறுமனே பொழுதுபோக்கு கதைகளாக தோற்றமளிக்கும், ஆனால் பிற துப்பறியும் கதைகளைப் போலல்லாது இத்தொகுப்பு இயல்பிலேயே அறத்தை பேசுகிறது. கூர்மையான வாசிப்பினால் இதன் அனைத்து கதைகளிலும் உறைந்துள்ள அதன் முகத்தைக் காணமுடியும்.
- கதாநாயகி – ஜெயமோகன்
கதாநாயகி பெருந்தொற்றுக்காலத்தில் தினமொரு அத்தியாயமாக இணையத்தில் எழுதப்பட்டவை. வீட்டில் முடங்கியிருந்த பொழுது இந்நாவலின் துவக்கம் எனக்கு பல இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியதால் நான் தொடர்ச்சியாக வாசிக்காமல் நிறுத்திக் கொண்டிருந்தேன். ஒரு முழுநாவலாக இதை இப்பொழுது வாசிக்கையில்தான் இதன் வடிவம் பற்றிய போதம் கிடைக்கிறது.
எழுதுகையில் ஜெ.விற்கும் இதன் வடிவம் பற்றிய பிரக்ஞை இருந்திருக்கவில்லை என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். ஒவ்வொரு அத்தியாயமும் மிக சுவாரசியமாக ஒரு சிலிர்ப்பான அனுபவத்தை அளித்து, அடுத்தது என்ன என்ற பதட்டத்தையும் தொற்ற வைக்கிறது. வாசகனை விட ஆசிரியனே இந்நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் பதட்டம் கண்டிருப்பான் எனத் தோன்றியது.
கதாநாயகி ஒரு பேய்க்கதை, கொஞ்சம் வித்தியாசமாக புத்தகத்திற்குளிருந்து எழுந்து நிகழ்காலத்தில் அமையும் ஒரு பேய். இந்நாவலின் அமைப்பே அதன் சிக்கலான கதைக்குள் கதை எனும் நெஸ்டட் ஸ்டோரி (Nested Story) வகையிலான கூறுமுறைதான். மகா பாரதத்திலிருந்தே இவ்வகையான கதைகளை நாம் அறிந்திருந்தாலும் கதாநாயகி நாவலில் ஃபேன்னி பர்னியை வாசிப்பவனையும் கதைக்குள் கொண்டு சென்று விடுகிறது என்பதுதான், கதைக்குள் இருப்பவன் சொல்லும் கதையில் இன்னொரு கதை வரலாம். ஆனால் வாசிப்பவனே கதைக்குள் ஒரு கதையாக வருவது தான் கதாநாயகி அளிக்கும் திருப்பம்.
மெய்யன்பிள்ளை திருவிதாங்கூர் அருகே கோதையாற்றின் காணிகளுக்கு பாடம் எடுக்க ச்செல்லுமிடத்தில் அக்கரை பங்களாவில் தங்குகிறான். அங்கு இரகசியமாக ஒளித்து வைக்கப்பட்ட ஃபேன்னி பர்னியின் நாவலை கண்டெடுத்து வாசிக்கத் துவங்குகிறான். நாவலில் உள்ள கதாபாத்திரங்கள் அனைத்தும் உருப்பெற்று நிகழ்காலத்தில் அவனைச்சுற்றி அலையத் துவங்குகின்றன. இவ்வாறு நாவல் துவங்குகிறது. ஆயிரத்தி எழுநூறுகளில் எழுதப்பட்ட ”Evelina: Or the History of a Young Lady’s Entranceinto the World” எனும் இறுகிய ஆங்கிலத்திலமைந்த நாவல் கடிதங்களா உரையாடலா இல்லை அனுபவமா என பிரித்தறிய முடியாத சிக்கலானஅமைப்புடன் இருக்கிறது.
கெளரவத்திற்காக தன் தந்தையால் கொல்லப்பட்ட விர்ஜீனியா எனும் கிரேக்கத் தொன்மக் கதாபாத்திரம், பெண் எனும் அடையாளத்திலிருந்து தன்னை விடுதலை செய்து கொண்ட எழுத்தாளர் ஃபேன்னி பர்னி, அடக்குமுறைக்குள்ளாகும் ஈவ்லினா எனும் புனைவுக் கதாநாயகி மற்றும் இவர்கள் அனைவருக்காகவும் பழிவாங்கும் ஹெலனா எனும் வாசகி ஒருவருக்குள் ஒருவர் என அடுக்கடுக்காக பிணைக்கப் பட்டிருக்கின்றனர். பழி வாங்கும் பேய்க்கதைதான் என்றாலும் கதாநாயகி வாசகனையும் பேயாக மாற்றி ஹெலனாவின் இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவிதாங்கூருக்குள் கொண்டு சென்று விடுகிறது.
மெய்யன்பிள்ளைக்கு ஹெலனா பேயாக தெரிவது போல ஹெலனாவிற்கு மெய்யன்பிள்ளை உருவெளித்தோற்றமாக தெரிகிறான். கோதையாற்றின் காணிக் குழந்தைகளுக்கு பாடம் எடுக்குமொரு நிகழ் கால உலகம் மெய்யன்பிள்ளைக்கு இருக்கிறது. எழுத்துக்களை அக்குழந்தைகள் கற்றுக்கொள்வதை உணர்ச்சி வசத்துடன் அவன் நோக்குவதும் தன்னைவிட வயதில் மூத்த துப்பனுக்கு எழுத்துக்கள் மூலமாக ஒரு புதிய உலகம் விரிவதும், கோரனுக் “எ” என்ற எழுத்தின் மூலம் அவனது தெய்வம் பிரதிஷ்டை செய்யப்படுவதுமாக மொழியின் பிரம்மாண்டத்தை நாவல் நெடுக உணர முடிகிறது.
இயல்பாகவே வாசகன் எப்புனைவை வாசிக்கும் பொழுதும் தன்னிச்சையாகவே மையக் கதாபாத்திரத்தோடு தன்னை பொருத்திப் பார்த்து கொள்வது நிகழ்வதுவே, ஆனால் மெய்யன்பிள்ளை அக்கதாபாத்திரத்தின் உரையாடல்களை தானே உருவாக்கிக் கொண்டிருப்பதும் புலியினால் உண்ணப்பட்ட கர்னல் சாப்மான் மற்றும் தற்கொலை(அல்லது கொலை)யுண்ட காப்டன் மெக்கின்ஸியை காண்பதும் அவனது உளச்சிதைவிற்கு ஒரு வடிவத்தை உண்டு பண்ணுவதாக இருக்கிறது.
வாசிக்க வாசிக்க கதாபாத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து கொண்டு அடையாளம் காண முடியாதபடி அனைவரின் அகமும் ஒன்று போலவே மாறிக் கொண்டிருப்பதை உணரவியன்றது. விர்ஜீனியாவும் ஹெலெனாவும் வேறுவேறு ஆட்களல்ல என்பதை அவள் புலியை நோக்கி கர்னலை உதைத்து விட்டு ஓடும்பொழுது உறுதிப்படுத்திக் கொண்டேன். ஹெலனாவிற்கு பின் என்ன நடந்தது என்று அங்கு வாழும் மக்கள் எவரும் தெரியவில்லை, அவள் மாயமாய் மறைந்து விட்டதாய் எஞ்சிய ஞாபகங்களில் இருந்து கூறப்பட்டாலும் மெய்யன்பிள்ளைக்கு நாவலில் அவள் பைத்தியம் பிடித்து துறைமுகத்தில் அலைந்து கொண்டிருப்பதாக விவரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
திருவிதாங்கூர் காட்டில் நடந்த சம்பவங்கள் இந்தியாவிற்கு ஒருபோதும் வந்திராத ஒருவரால் அதுவும் இச்சம்பவங்கள் நடக்கும் முன்னரே வெளியிடப்பட்டு மூன்று பதிப்பு கண்ட புத்தகத்தில் எப்படிஎழுதப்பட்டிருக்கிறது என கதாநாயகி புனைவின் உச்ச தருணத்தை நெருங்குகிறது.உடலுக்கு நோய் ஏற்படும் பொழுது அதை உண்டாக்கும் ஃபாரின் பாடிகளை எதிர்ப்பதற்கு உடலே ஆண்ட்டிபாடிகளை உற்பத்தி செய்துபோரிடத் துவங்கும் அதன் வெளிப்பாடுகளையே நாம் நோய் என உணர்கிறோம்.
உடலைக்காக்க இத்தகைய இயக்கத்தை உடல் உண்டாக்கியிருப்பதைப்போல, மனதை அதன் சிதைவிலிருந்து மீட்க அதை புறவுலகத்தை நோக்கி திருப்புகிறது; மனச்சிதைவின் அறிகுறி தென்படத் துவங்கியதும் புறவுலத்தை அழுந்தப் பற்றிக் கொள்கிறது இதுவே மெய்யன்பிள்ளையின் நிலை என ஆசிரியர் இறுதியில் விவரித்தாலும் சில கேள்விகள் விடையளிக்கப்படாமலேயே உள்ளது. மெய்யன்பிள்ளையும் இஞ்சினியரும் புத்தகத்தை வாசித்ததாலேயே ஹெலனாவைக் கண்டார்கள், எழுத்தறியாத கோரனுக்கும் அந்த வெள்ளைக்காரி காட்சியளித்தது எப்படி, உண்மையில் இக்கதையைக் கூறுபவன் மெய்யன்பிள்ளை என்பதால் தனக்கு ஏற்பட்டது மனச்சிதைவுதானே தவிர அமானுஷ்யமாக அக்கரை பங்களாவில் ஏதுமில்லை என நம்பவிரும்பும் ஒருவனாகவே என் கண்ணுக்கு தெரிகிறான். நமக்கு உண்மை தெரியவேண்டுமெனில் நாமும் அக்கரைப் பங்களாவில் மெய்யன் பிள்ளை சைன்போர்டு ட்ராயரில் ஒளித்துவைத்த ஃபேன்னி பர்னியை எழுப்பவேண்டும் போலிருக்கிறது!!!!கதாநாயகி, உறக்கத்தை கலைக்கும் இரவு!!!