ஜெயமோகன் & கோ குழாமுடன் ராஜஸ்தான் மற்றும் குஜராத் பாலை நிலங்களில் மேற்கொண்ட ஆறு நாள் பயணத்தின் நினைவலைகள் தன்னை கனவிலும் துரத்தியதால் பயணம் முடிந்து மூன்று மாதம் கழித்து தன்னுடைய நினைவிலிருந்து செல்வேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட பயணநூல் இது.
நூல் அழகாக வடிவமைக்கப் பட்டுள்ளது. அட்டைப் படம் அழகு. ஒரு பயணத்திற்கும், சுற்றுலாவுக்குமான வேறுபாட்டை இந்த பயணத்தில், பயணத்திற்கு முன்பாக ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட ஆராய்ச்சிப் பணிகளிலிருந்தே கண்டுகொள்ள முடிகிறது. ஒவ்வொருவருக்கும் போகும் இடம், மக்கள், இசை, தொல்லியல், வரலாறு, சிற்பங்கள் என பயணிக்கும் நிலத்தின் பண்பாடு சார்ந்த தகவல்களை படித்துவிட்டு வர ஆணையிடப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலாவிற்கு முன்பு நாம் செய்வது இரண்டு விசயங்கள் மட்டுமே. தங்குமிடத்தையும், சாப்பாட்டையும் ஏற்பாடு செய்து கொள்வது. அதன்பின்பு ரோபோட் போல அங்கே சுற்றுலா தளங்களில் உள்ள சம்பிரதாயமான காணிடங்களுக்குச் சென்று கூட்ட நெரிசலில் நின்று செல்பி எடுத்துக் கொள்வது அல்லது கூச்சலிட்டுவிட்டு அப்படியே வீடு திரும்பிவிடுவது.
சுற்றுலா செல்பவர்களின் அரட்டை என்பது அவர்கள் வீட்டில் அடிக்கும் அதே சினிமா, அரசியல், உணவு இவை குறித்தவையாக மட்டுமே இருக்கும். மாறாக சிறந்த பயணிகள் ஒரு நிலத்தின், பண்பாட்டின் அனைத்து பரிமாணங்களையும் தெரிந்து கொண்டு, அங்கே அவர்கள் காணும் அனைத்துடனும் ஆழமாக உரையாடுகிறார்கள். புதிதாக அகத்திலும், புறத்திலும் ஒரு திறப்பு நடந்து கொண்டே இருக்கிறது.
குடும்பச் சுற்றுலாவில் ஆண்கள் தண்ணி அடித்து ஆட்டம் போடுவார்கள், பெண்கள் அங்கேயும் தங்கள் குழந்தைகளை பராமரிக்கும் பணிகளிலேயே அமிழ்ந்து போவார்கள். சுற்றுலா செல்பவர்கள் ப்ரிட்ச்சில் வைத்த ஆப்பிள் போல கிளம்பும் போது அவர்களின் மனமும், உடலும் எப்படி இருந்ததோ அப்படியே திரும்பி வருவார்கள்.
நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் பயணம் என்பது நமது அன்றாடத்தின் சுழலை விட்டு வெளியேறி புதிதாக ஒன்றை தேடிச் செல்வது. அங்கேயும் அரட்டை, கும்மாளம், பெருஞ்சிரிப்பு, விருந்து, என அனைத்தும் உள்ளது. சுற்றுலாவை விட பல மடங்கு மேலாகவும், தரமாகவும் உள்ளது . அதே சமயம் பல அறிவார்ந்த தளங்களைப் பற்றிய பரிமாற்றங்கள், கண்டடைதல்கள் நிகழ்கின்றன. அனைத்திற்கும் மேலாக முத்தாய்ப்பாக ஒவ்வொரு பயணத்திலும் சில கணங்களேனும் தானழியும் நிலை கைகூடும். இயற்கைகாட்சியின் முன், மாமலையின் மேல், மாபெரும் கலைச் செல்வத்தின் முன் நிற்கும் போதெல்லாம் அது நிகழும். இங்கே செல்வேந்திரனின் குறிப்புகள் அவர்களது அறிவாடல்கள், சிரிப்பலைகள், சாகசங்கள், விளையாட்டுகள், கிண்டல்கள் என அனைத்தையும் குறிப்பிடும் போதே அவர் சூரிய அஸ்தமனத்தை காணும்போதும், ரிசார்ட்டில் இரவில் வானைப் பார்த்து அமர்ந்திருக்கும் போதும் அவர் அடைந்த அந்த நெகிழ்ச்சி, கண்கலங்கி நெஞ்சழுத்தும் மனநிலை என்பது இங்கே நம்மை ஆயிரம் கரங்களால் அழுத்திக்கொண்டிருக்கும் ஒன்று சட்டென்று இல்லாமலாகி நம் மூலத்தை சில கணங்களேனும் ஸ்பரிசித்துவிடும் வாய்ப்பு அமைந்துவிடுகிறது என்பதை காட்டுகிறது . ஒரு பயணிக்கு கைகூடும் அற்புதமான அனுபவம். அதை இந்த பயண குறிப்புகளில் கண்டுகொண்ட தருணம் இந்த நூல் தமிழின் முக்கியமான பயண நூல் என்பதை உணர்ந்து கொண்டேன். ஆனால் சுற்றுலாக்களில் இதுபோன்ற அனுபவம் நடக்க வாய்ப்பே இல்லை.
பயணம் எப்படி சுற்றுலாவிலிருந்து மாறுபடுகிறது என்பதையும். பின்னதைவிட முன்னது எப்படி பலமடங்கு சந்தோஷமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டவே இவற்றைக் கூறினேன்.
செல்வேந்திரனின் கச்சிதமான, எளிமையான மொழி இந்த நூலை ஒரே அமர்வில் வாசித்து முடிக்க வைக்கிறது. அவர் சென்ற இடங்கள், கண்ட சிற்பங்கள், பார்த்த விலங்குகள், பறவைகள், என அனைத்தைப் பற்றிய வரலாறு மற்றும் பண்பாட்டு தகவல்களுடன் விளக்குகிறார். நமது நாட்டின் தேசிய பறவையாக அறிவிக்க இருந்த ‘கான மயில்’ எப்படி அதன் ஆங்கிலப் பெயர் ‘Great Indian Bustard’ என்பது தவறாக உச்சரிக்கப்பட்டால் சரிவராது என்பதற்காக மயிலை ‘Peacock’ ஐ தேசிய பறவையானது. ராணி கி வாவ் மற்றும் அடலெஜ் கிணறுகளின் கலைசிறப்பு மற்றும் அவை கட்டப்பட்டதன் வரலாற்றுப் பின்னணி. சூரிய கோவிலின் கட்டிட மற்றும் சிற்ப வேலைப்பாடு. பாலை நிலத்தின் தனித்தனமை மற்றும் இயற்கை அழகு. பலவகை மான்கள், சுராசிக் பார்க் எழும்புகளின் மியூசியம், சபர்மதியில் அவர்கள் அடையும் உணர்வுநிலை என பல தகவல்களால் வாசிப்பின் சுவாரஸ்யம் கூடிக்கொண்டே செல்கிறது.
அதேபோல் தான் பயணம் செய்யும் நிலத்தின் அரசியலையும், அரசாங்க நிர்வாகத்தையும் நேரடி அனுபவத்தின் மூலமும், அங்குள்ள மக்களிடம் பேசி தெரிந்து கொள்வதன் மூலமும் நேர்மையாக பதிவு செய்துள்ளார். குஜராத்தின் வளர்ச்சி என்பது எனக்கெல்லாம் ஒரு ‘மித்’ போலவே இருந்து வந்தது. ஆனால் இந்த நூலின் வழியே அது பற்றிய உண்மை ஓரளவு துலங்கி வந்தது. ஒரு செய்தி ஊடகம், அரசியல் பேச்சாளர் மூலம் அறிய நேரும் தகவல்களை விட ஒரு பயணியின் நேரடி அனுபவத்தின் வழியே நாம் ஒரு இடத்தை பற்றிய நடுநிலையான உண்மையை தெரிந்து கொள்ள முடியும் என்பதை பல பயணக்கட்டுரைகள் எனக்கு தெளிவு படுத்தியுள்ளன. அதில் இந்த நூலும் ஒன்று. (ஹிமாலயம், நூறு நிலங்களின் மலை போன்ற பயண நூல்களே என்னை காஷ்மீர் பற்றி ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உருவாக்கி வைத்திருந்த ‘மித்’ களிலிருந்து வெளிக்கொண்டு வந்தன).
மேலதிகமாக ஜெ-யின் உடன் பயணி எழுதிய பயண கட்டுரையை படித்தது அவரது பயண கட்டுரைகளில் துலங்காத சில பயண மனநிலைகளையும், நடைமுறைகளையும் தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த கட்டுரைகளில் தெரியும் செல்வாவின் லௌகீக கவனம் என்பது உடன் பயணிகள் யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக ஜெ-விற்கு. செல்வாவின் அந்த கவனம் எனக்கு ரசிக்கும் படியாகவே இருந்தது. செல்வாவின் இந்த தன்மையே அவரது எழுத்துக்களை சாதாரண வாசகர்களிடமும், பல தரப்பட்ட மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வல்லமையை பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன்.
மொத்தத்தில் இந்த பயண நூலை ஒருவர் பயணம் மேற்கொள்வதற்கான அடிப்படை தயாரிப்புகளையும், மனநிலைகளையும் கட்டமைக்க உதவும் கையேடாகவும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் இந்த புத்தகத்தை இன்றைய யுவன், யுவதிகளுக்கான சிறந்த பரிசு பொருள் பட்டியலில் சேர்த்துகொள்ள வேண்டும்.