ஜெயமோகன் பல்வேறு காலகட்டங்களில் சந்தித்த ஆளுமைகள் குறித்த நினைவுக் குறிப்புகள் அடங்கிய கட்டுரை தொகுப்பு இந்நூல். இதில் வரும் அனைவரும் ஏதோ ஒருவகையில் லட்சியவாதத்தின் அம்சத்தை தன்னகத்தே கொண்டவர்கள். அதனாலேயே அனைவரும் முக்கியமானவர்கள். ஒரு சமூகம் தன் நினைவில் என்றும் சுமந்து கொள்ள வேண்டியவர்கள்.
ஒவ்வொரு கட்டுரையிலும் ஆசிரியர் சந்தித்த அந்த நபரின் வாழ்க்கையிலிருந்து அவரது ஆளுமையை எந்தவித விதந்தோதல்களும் இல்லாமல் அப்பட்டமாக முன்வைக்கிறார்.
எழுத்தாளர்கள், கவிஞர்கள், மார்க்ஸியர்கள், காந்தியவாதிகள், அரசியல்வாதிகள் என அனைத்து தளத்தில் இயங்கிய மனிதர்கள் வருகிறார்கள்.
இதில் வரும் அனைவரின் வாழ்க்கையுமே சராசரி மனிதர்களின் வாழ்வைவிட தீவிரமானது, பிரச்சனைகள் நிரம்பியது. ஆனால் அவர்கள் அதை மீறியே தங்கள் லட்சிய பாதைகளில் பயணித்திருக்கிறார்கள். ஒரு வகையில் லட்சிய பாதை என்பதே முள் மண்டிய புதர்மேல் நடப்பது போலதான், அதை எவ்வித கசப்பும், வெறுப்பும் இன்றி கடந்தவர்களே இந்த மனிதர்கள் அனைவரும். அதனால்தான் அவர்களை வரலாறும் பதிவு செய்துவைத்து கொள்கிறது.
தலைவர்களை புகழ்மாலைகளால் மட்டுமே பேச அனுமதித்த நம் சமூக மனநிலைக்கு எதிரான கட்டுரைகளும் கூட இவைகள். ஒவ்வொரு மனிதரும் அவரது ஆளுமையின் நிறைகுறைகளுடன் மட்டுமே பதிவு செய்யபட்டுள்ளனர். அதன் வழியே வாழ்க்கை எனும் பெரும்போக்கை நம்மால் உணரமுடிகிறது. அதற்கு எந்த தர்க ஒழுங்கும் இல்லை. ஆனால் அது சிலரை மட்டும் வரலாற்றில் நிலைநிறுத்த பிரயத்தனப்படுகிறது. அதனால் அவர்களுக்கு சில கூடுதல் பொறுப்பையும், சுமையையும் அளிக்கிறது. ஒரு வகையில் தன்னை எரித்து வெளிச்சத்தை அளிக்கும் மெழுகுவர்த்தியை போன்றவர்கள் இதில் வரும் பலர். அந்த வெளிச்சத்தின் சுடரை என்றும் அணையவிடாமல் தனது கட்டுரைகளின் வழியே நின்றெரியச் செய்திருக்கிருக்கிறார் ஆசிரியர்.