அம்மா இரண்டு முறை தற்கொலைக்கு முயன்று தோற்றாள். அச்சம்பவங்களை அவளே என்னிடம் சொல்லியிருக்கிறாள். முதல் முயற்சி அப்பா தற்கொலை செய்து கொண்ட பதினாறு நாள் விசேசம் கழித்து.
தெற்கு வடக்காக கிடந்த இரண்டரைச் செண்டு மனையில் பாதி குடிசை. முற்றத்தில் தொழுவு. அதன் வடக்கே முக்கால் செண்டில் திண்ணை. மீதி நடைபாதை. தெருவோடு பின் வீட்டைச் சேர்க்கும் தொண்டு. அப்பாவிற்கு திருமணம் ஆனதும் திண்ணையை அறையாக மாற்றினார்கள். மண் சுவர் எழுப்பி பனையோலை கூரை வேய்ந்தார்கள். ஆளுயுர குடிசை. இரண்டு நபர்கள் தாராளமாக படுக்கலாம். உள்ளேயே ஓரடி உயரம் உள்ள ஒரு திண்டு. அதன் வடக்கு மூலையில் இரண்டு அடுப்புகள். வீட்டின் வாசல் வடக்குப் பார்த்தது. அஞ்சடிச்சான் முக்கில் இருந்து வடக்கே முதல் தெரு.
அம்மா அந்த வீட்டில்தான் தங்க வேண்டியிருந்தது. பதினாறுக்கு சாமி கும்பிட்ட சாயந்திரமே அம்மாவின் முகம் இறுக்கம் கொண்டு உறைந்தது. உறவினர்கள் எவரும் அம்மாவை ஆதரிக்கவில்லை. ஆறுதல் சொல்லித்தேற்றவில்லை. ”உன் வாய்த்துடுக்கினால்தான் அவன் தற்கொலை செய்து கொண்டான்” என இடித்துரைத்தார்கள்.
அப்பா வழியில் அம்மாவை கொலைகாரி என்றே திட்டினார்கள். அப்பாவின் இரு அக்காக்களும் அதன் பின்னர் அம்மாவோடு நல்லுறவே வைத்துக்கொள்ளவில்லை. முத்தம்மாள் பாட்டி சாகும்வரை அம்மாவை கரித்துக்கொட்டிக்கொண்டு திரிந்தாள். எதிர் எதிராக குடியிருந்தாலும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் ஏறிட்டுப் பார்ப்பதில்லை.
சாவில் போய் முடியும் என்று அம்மாவே எதிர்பார்த்திருக்கவில்லை. அம்மாவிடம் முரட்டுப்பிடிவாதம் உண்டு. வீம்பும் ஆங்காரமும் அதிகம். அவை அவள் குடும்பப் பாரம்பரியத்தில் இருந்து பெற்றுக்கொண்ட சம்பத்து. நடுத்தர நகரம் ஒன்றில் பிறந்து வளர்ந்து, பழைய பத்துவரைப் படித்து, பட்டிக்காட்டுக்கு வாக்கப்பட்டு வந்தவள் அவள். அவளுக்குச் சமமாக படித்தவர்கள் அன்று தெருவிற்குள் ஒரு சில பெண்கள்தான் இருந்தனர்.
புளியங்குடிக்கும் அவளால் திரும்ப முடியவில்லை. வீட்டில் சித்தி திருமணத்திற்கு காத்திருந்தாள். குடும்பத்தின் பொருளாதார நிலையோ தரந்தாழ்ந்து போய்க்கொண்டிருந்தது. கடுவா மாமன் வீட்டை உடைத்து ஒவ்வொன்றாக விற்றுத் தின்று கொண்டிருந்தான். தாத்தா ஐந்தருவி சங்கராஸ்மரத்தில் சேர்ந்து தீட்சை பெற்று “சம்சார சன்னியாசியாக“ தான் உண்டு தன் ஜோலி உண்டு என மாறியிருந்தார். அவர் தொட்டெதெல்லாம் மண்ணாயிற்று. காந்தி பஜாரில் ஜவுளிக்கடை இருந்தது. சொந்தமாக பத்துக் கைத்தறிகள் போட்டு சேலைகள் நெய்தார். அடர் பச்சைவர்ண கிளி ஒன்று துண்டு மரக்கிளைமேல் ஒய்யாராமாக அமர்ந்திருக்கும் ஜவுளிக்கடை ஸ்டிக்கரை ரெம்ப நாள் சேமித்து வைத்திருந்தேன். மாமா கஞ்சாப் போதைக்கு அடிமையாகி கட்டமண்ணாகப் போக ஆரம்பித்தார். பின்னர் பெரிய குடும்பம் என்ற பெருமை இடிந்து விழத்தொடங்கியது.
மதியம் மூன்று மணி இருக்கும். அம்மா அழுது ஓய்ந்திருந்தாள். இரண்டு நாட்களாக அவளால் துாங்கவே முடியவில்லை. கண்களை மூடினால் அப்பாவின் முகம் பேசிச்சிரிக்க ஆரம்பித்தது, அப்பாவின் ஓட்டப்பல் ஊடாக தெறிக்கும் எச்சில்கள் கூட தன் மேல் விழுந்ததாக அம்மா கூறினாள்.ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் வீட்டில் இருந்தன. புளியங்குடி பாட்டி வாங்கிக்கொடுத்திருந்தாள். கோடிச்சேலைகள் மட்டுமே பதினெட்டு எண்ணம். இரண்டு கைக்குழந்தைகள் மீதான பரிதாபத்தில் விசேச மொய்ப்பணமும் கணிசமாக சேர்ந்திருந்தது. அவற்றைக் கொண்டு ஆறு மாதங்களை ஓட்டிவிடலாம். ஆனால் அதற்கு பின்னர்? எதிர்காலம் கண்முன்னே பூதாகரமாகத் தோன்றி பயம் காட்டியது. இரண்டு குழந்தைகளை பேண வேண்டும். படிக்க வைத்து ஆளாக்க வேண்டும். அம்மா கைத்தொழில்கள் எதையும் கற்றுக்கொண்டதும் இல்லை. புளியங்குடியில் இருந்தது வரை வீட்டுத் தறிகளுக்கு தார் சுற்றிக் கொடுத்திருக்கிறாள். பத்து பெயிலானதும் தார் ராட்டு முன் தவம் கிடப்பதே அன்றாட வேலை என்றாயிற்று. வீட்டில் மூன்று குமருகள். ஒரே அமர்வில் பத்து கழிகளை கண்டுகளாக சுற்றிவிட்டே எழுந்திருப்பாள். எந்த வேலையிலும் அம்மாவிற்கு ஒரு லயிப்பும் ஈடுபாடும் உண்டு.
இராயகிரி இன்றும் கூட விவசாயத்தை நம்பி உள்ள ஊர்தான். கைத்தறிகளும் அவை அழிந்த பின்னர் பீடி சுற்றுதலும் பிரதான தொழில்களாக உருவெடுத்தன.
தெருத் தலைமாட்டில் கருப்பசாமிக் கோவில். அதிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் கிழக்குப் பக்கம் மாடசாமி பீடம். மாடசாமி கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த கூட்டுறவு சொசைட்டிக்கு தார்ச் சுற்றப் போகும் ஒரு வாய்ப்புதான் அவளுக்கு. வேறு வழியே இல்லை. அன்றெல்லாம் நாள் முழுக்க தார்ச்சுற்றினால் பத்து முதல் இருபது ரூபாய் வரை கூலிகிடைக்கும். அதுவும் வாரக்கூலி. ஆண்டுமுழுக்க தறி நெசவிற்கும் உத்தரவாதம் கிடையாது. மாதத்தில் பாதிநாட்கள் வேலை இல்லாமல் வயல் வேலைகளுக்கு ஆள்கூலியாகப் போக வேண்டி நேரிடும்.
நான்கு வயதில் நானும் ஒன்றரை வயதில் என் தங்கையும். மூன்று வயிறுகள். தங்கை அமுல்பேபி என்று பெயர் எடுத்திருந்தாள். கன்னங்களும், கைகளும், தொடைகளும், தொப்பையும் தளும்பும் பிஞ்சு. தங்கையை இடுப்பில் வைத்து, என்னை வலது கையில் பிடித்துக்கொண்டாள். தெருவில் பாதிப்பேர் வயல் வேலைக்குச் சென்றிருந்தார்கள். மீதிப்பேர் செட்டில் தறி நெய்யவும் தார் சுற்றவும் போயிருந்தார்கள். மதிய நேரத்தெரு ஆளரவமற்று சோர்ந்து கிடந்தது. குருநாத பிள்ளை வீட்டுத் திண்ணையில் அமர்ந்து வெற்றிலைப் போட்டுக்கொண்டிருந்தார். மொட்டை வெய்யில்தான். கருப்பசாமி கோவிலின் வட திசையில் வயலுக்குள் செல்லும் ஒற்றையடிப் பாதை. வயலை ஒட்டி வடக்காக சென்றால் தறிச்செட்டிற்கு சென்றுவிடலாம். முக்கால்வாசித் தொலைவில் பாதை தெற்கே பிரியும். உள்ளே சென்றால் மஞ்சணத்தி மரத்தின் நிழலில் ஒரு பாழுங்கிணறு. பாதிக்கிணற்றில் கரிய நீர் ஒளிர்ந்து கிடந்தது. அதன் முன்னே இருந்த வயலில் பருத்தியோ, தக்காளியோ பயிரிடுவார்கள். நெல் குறைவாகவும், கரும்பு மிகுதியும் பயிராகும் பூமி. அறுவடைக்குப் பின்னர் பெரும்பாலும் தரிசாகக் கிடக்கும். கிணற்றைச் சுற்றி உடைமுள் அடர்வு. ஆள் புழக்கம் இல்லாத பொட்டல். ஆடு மாடு மேய்க்க வரும் சிறுவர்கள் கூட அந்தக் கிணற்றின் பக்கம் போவதில்லை. அக்கிணற்றில் விழுந்து செத்தவர்களைப் பற்றிய பேய்க்கதைகள் ஏற்கனவே ஊருக்குள் பிரபலம். வெள்ளி செவ்வாய்களில் யாரும் அந்த கிணற்றுப் பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை. அதன் கரையில் கொஞ்சம் தள்ளி நின்ற பனையில் இருந்து விழுந்த பழங்களை எடுக்கச் சென்று அதிகாலை இருளில் பனம் பழம் போல கருத்து உருண்டு கிடந்த பேய் வெள்ளை ஒளிப்பாய்ச்சலாக வான் நோக்கி பாய்ந்ததை அருகே பார்த்த அதிர்ச்சியில் உயிர் நீத்த கருப்பாயி அத்தையின் கதை பாலபாடம்.
அம்மா நிலை குத்திய பார்வையோடு, என்னை தரதரவென்று இழுத்துக்கொண்டு கிணற்றை அடைந்து விட்டாள். பச்சைப்பாம்பொன்றை கடைசிக்கணத்தில் முகத்திற்கு எதிரே கண்டு மோதிக் கொள்வதில் இருந்து தப்பினாள். கிணற்றைச் சுற்றி செடிகள் வளர்ந்து மண்டியிருந்தன. உடைமுள் அப்பியிருந்தது. கரட்டாண்டிகள் கிளையிடுக்குகளில் நின்று செவிள் சிவக்க தலையாட்டிப் பார்த்தன. நீர் இறைக்கும் துலா மேடைக்கு வந்தாள். கண்ணாடி சாராயக்குப்பிகள் உடைந்து கூர் முனை ஒளிர சிதறிக் கிடந்தன. வயலுக்குள் திரும்பிய போதே இழுத்து வந்திருந்த என்னைத் துாக்கி வலது புற இடுப்பில் வைத்துக் கொண்டாள். மிக அருகில் தறிகள் ஓடும் கடபடா ஒலிகள். ஊடுபாவுக்குள் நாடாக்கள் பாய்ந்தோடும் சப்தங்கள். குதிப்பதற்கு முன்னர் உள்ளே எட்டிப்பார்த்தாள். கிணற்றிற்குள் வரிசையாக படிகள் அமைக்கப்படவில்லை. கால்களை அகட்டிவைத்து இறங்குவதற்கு வாகான ஒற்றைக் கல் நீட்சிகள் மட்டுமே. அதிலும் கீழே உள்ள இரண்டு கற்கள் பாதி உடைந்துபோய் இருந்தன. கருமை படிந்த நீரில் ஊர்க்குப்பை. இரண்டு தலையணைகள், ஒரு கிழிந்த கோரைப் பாய், சிவப்புச் சேலை ஒன்று. ரப்பர் செருப்புகள், வேண்டாத பிளாஷ்டிக் பொருட்கள். சுவரை ஒட்டி தண்ணீர் பாம்பு ஒன்று ஒய்வில் இருந்தது. சட்டென்று அம்மாவை ஈர்த்தவை. ஊதிப்பெருத்த வெள்ளை நாய்க்குட்டிகளின் அசைவு. பிறந்து சில நாட்களே ஆகியிருந்த குட்டிகள் அவை. கிணற்று நீரில் செத்து மிதந்து கொண்டிருந்தன. அக்குட்டிகளின் அகோரம் அம்மாவை ஒரு கணம் திகைக்கச் செய்தது. இரண்டு பக்கமும் இடுக்கியிருந்த மக்களை நினைத்துப் பார்த்தாள். தானும் தன் குழந்தைகளும் நாளை இப்படித்தான் குப்பைபோடு குப்பையாக மிதக்கப் போகிறோமா? அவள் கண்முன் காட்சிகள் உருப்பெற்றன. அவளுக்குள் அதுவரை மண்டியிருந்த வெறுப்பும் கையறுநிலையும் கரைந்தது தாய்மை ஊற்றெடுத்துப் பெருகியது. பிள்ளைகளை இறுக்கி அணைத்துக் கொண்டு விறுவிறுவென வீட்டிற்குத் திரும்பினாள். வீடு வரும்வரை இருவரையும் தரையில் இறக்கிவிடவில்லை.
அந்த கிணற்றில்தான் சமீபத்தில் என் அக்கா ஒருத்தி விழுந்து தற்கொலை செய்து கொண்டாள் . சொந்த ஊரில் வாழவிடாமல் எங்களை ஊர்க்கூட்டம் கூட்டி ஊரை விட்டு விரட்டியதனால் நான் பேசாமல் உறவினைத் துண்டித்துக்கொண்ட அக்கா அவள்.