டபேதார் பலவேசம் அண்ணனைப் பற்றி திடீரென்று நினைவு வந்தது. அவருடன் பத்தாண்டுப் பழக்கம். அவர் டபேதார் என்பதால் பரமசிவன் கழுத்தில் வாழும் பாம்பு படிமத்திற்குப் பொருத்தமானவர். சில மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார். நான் பணி மாறுதல் பெற்று சொந்த மாவட்டம் வந்த பின்னர் அவருடன் தொடர்பு விட்டுப்போயிற்று. அதன்பின்னரும் சில போது என் அலுவலகத்திற்கு பணி நிமித்தம் வந்து போயிருக்கிறார். அதே வெடிச்சிரிப்பு பேச்சும், எனக்கு நல்லுபதேசம் செய்தலும் நிகழ்ந்தது,
நிலக்கிழார். அவர் பணியில் சேர்ந்து உண்டாக்கியது. அவற்றின் ஐந்தொகை ஒரு டபேதாருக்கு கிடைக்கும் சம்பளத்தைவிட பன்மடங்கு அதிகம். தீபாவளி பொங்கல் போன்ற திருவிழா நாட்களில் அவருக்கு எங்கிருந்தெல்லாமோ தேடித்தேடி அன்பளிப்புகள் வரும். அவர் இறந்த செய்தியே சில நாட்கள் கழித்துதான் தெரிய வந்தது. அவரின் பதினெட்டு வயது மகன் தற்கொலை செய்து கொண்டபோது சுடுகாடு வரை சென்று ஆறுதல் சொல்லித் திரும்பினேன். “மகனை இழந்தாருக்கு மாற்று இல்“ என்றே அன்றெல்லாம் எண்ணிக்கொண்டேன். இரண்டு மகள்களின் அப்பன் என்றான பின்னர் அவர் அடைந்திருக்கக்கூடிய வலிகளை இன்று அனுபவப்படுகிறேன். ஒருமுறை கன்னியாகுமரிக்கு அவரை அழைத்துச் சென்று, அறை எடுத்து தங்கி குடித்து உருண்டிருக்கிறோம். அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் மேலும் நெருக்கமானார். என் நலம் விரும்பி..
அப்போது வட்டத்தின் தலைநகர் ஒன்றின் குறுவட்ட அலுவலராக பணியாற்றி வந்தேன். என் வட்ட அதிகாரிக்கு அவர் டபேதார். டபேதார்தானே என்று கொஞ்சம் கண்டு கொள்ளாமல் அஜாக்கிரதையாக இருந்துவிட்டேன். அரசாங்க ஈப்பில் களப்பணி முடிந்து திரும்பும் போதெல்லாம் அதிகாரியின் பின் இருக்கையில் கோப்புகளை குழந்தைகளைப் போல மார்போடு அணைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் அவர் ஒரு குறிப்பிட்ட பேக்கரி அருகே வரும்போது “ஐயா..டீ..குடிச்சிட்டு போவமே..இங்க இஞ்சி டீ அருமையா இருக்கும்” என்பார் மிகுந்த கனிவோடு. அதிகாரி உடனே வண்டியை நிறுத்தச் சொல்லி ஆணையிடுவார். முதல் முறை அப்படி நிகழ்ந்த போது எனக்கு வில்லங்கமாகத் தோன்றவில்லை.. டீ என்றால் டீயோடு முடிவதில்லை. பக்கவாத்தியங்களின் விலை எகிறிக்குதிக்கும். வறுத்த முந்திரி, பாதாம் என்பவை அவ்வளவு சல்லிசான சமாச்சாரங்கள் அல்லவே? ஒருமுறை டீ குடித்து முடிக்க இருநுாறு ரூபாய்க்கு மேல் ஆகிவிடும். அந்தப் பேக்கரி இருக்கும் பாதையை கடக்க நேரிட்ட ஒவ்வொரு முறையும் இஞ்சி டீக்காக ஈப்பு நிற்க நேரிட்ட போதுதான் எனக்குத் திக்கென்றது. மற்ற கடைகளில் ஐம்பது ரூபாயோடு முடியக்கூடிய காரியம் அது.நான் கஸ்பா அலுவலர். வட்ட அதிகாரிக்கு வலதுகை போன்றவன்.
பலவேசம் அண்ணனிடமே கெஞ்சிக் கேட்டேன்.
“அண்ணே…அந்த பேக்கரியில டீக் குடிக்கறதப் பத்திக் கொஞ்சம் யோசிக்கக் கூடாதா…செலவு அத்துக்கிட்டு போகுதுண்ணே..பாத்துச் செய்யிணே”
“ஐயா.. இத முதல்லயே என்கிட்ட சொல்லனும்லா..சரி விடுங்க.. சரி பண்ணிப்போடலாம்.. என்றார். நானும் கண்ணீர் மல்க உடனே முதல் மாதத் தொகையை எடுத்துக் கொடுத்தேன். அன்றோடு அந்த விதத்தில் எனக்கு ஏற்பட இருந்த செலவுகள் நின்றது. அதிகாரியே விரும்பி அக்கடைக்கு வண்டியை விடச் சொன்னால் கூட அதற்கு தகுந்த மாற்று அபிப்ராயத்தைச் சொல்லி காப்பாற்றி வந்தார் பலவேசம் அண்ணன். அல்லது அந்த பேக்கரி வருவதற்கு முன்பாகவே ஒரு சாதாரணக் கடையைச் சுட்டிக்காட்டி “இங்க டீ நல்லாருக்கும். சொந்த பசுமாட்டுப்பால்“ என்றெல்லாம் அளந்துவிடுவார். ஆபத்பாந்தவன் என்றால் அவர்தான்.
சகல திறன்களும் கொண்டவர் அவர். பெரிய தொழில் அதிபராக எழுந்து வருவார் என்று நம்பினேன். மச்சினன் பெயரில் லாரிகள் வாங்கினார். பணி ஓய்விற்கு சில ஆண்டுகளே இருந்தன.ஒரு நபரைப் பார்த்ததும் அவர் குறித்த அத்தனையையும் துல்லியமாக கணித்து விடுவார். சாதியை கண்டறிவதில் கூர்நோக்குள்ளவர். அலுவலகங்களில் சாதி என்பது லேசுப்பட்ட காரியம் அல்ல. ஒவ்வொரு சாதிக்கென்றும் தனித்தனியான பிரபஞ்சங்களும், விண்மீன் மண்டலங்களும், சூரியக் குடும்பங்களும் உண்டு. அவரிடம் என்னைக் கவர்ந்த அம்சம் அவரின் பேச்சில் பொங்கிப் பிரவகிக்கும் நகைச்சுவை உணர்வு. அவரைச் சந்திக்க நேரிட்ட போதெல்லாம் வெடிச்சிரிப்பு எழாமல் விலகி வந்ததில்லை. பொதுவாக டபேதார் போன்ற குற்றேவல் பதவியில் நீண்ட நாள்கள் வாழ நேரிட்டால் அதிகார பீடங்களை நோக்கி ஏளனம் செய்யும் சாமர்த்தியம் இயல்பாகவே தோன்றிவிடும் போலும். மாவட்டத்தின் உச்ச பட்ச அதிகாரியில் இருந்து கடை நிலை ஊழியர் வரை அவர் நன்கு அறிவார். அதிகார படிநிலைப் பாவனைகளை மிகத் தேர்ந்த நடிகனுக்குரிய லாவகத்தோடு பூசிக்கொள்வார். ஒவ்வொருவர் குறித்தும் அவருக்கென்று தனித்த அபிப்ராயங்கள் உண்டு. என்னைப் பிள்ளைப்பூச்சி என்பார். என் துறைக்கே லாயக்கில்லாத குணநலன்கள் உள்ளவன்,என்னால் பொருளியல் ரீதியாக பெரிய வெற்றிகள் அடைய முடியாது என்பார். அவரின் கணிப்புகள் அனைத்தும் மிகச்சரியாகவே இருந்துள்ளது.
என்னைக் கண்காணிக்கும் உயரதிகாரியின் டபேதாராக அவர் இருந்த போதுதான் நேரடித் தொடர்பு ஏற்பட்டது. அலுவலகத்திற்குள் ஊழியராக இருப்பதற்கும் களப்பணி ஊழியராக வெளியே இருப்பதற்கும் சிறிய அளவில் வேறுபாடு உண்டு. களப்பணி என்பது ஒருவிதத்தில் சுதந்திரம் அளிப்பது. உயரதிகாரிகள் ஆய்வு செய்ய வரும்போது உடன் இருந்து உபசரித்து திருப்பி அனுப்பும் வரை பொறுப்புகள் கொண்டது. சப்ளை அண்ட் சர்வீஸ் என்பார்கள். விருந்தினர் உபசரிப்பு என்பது அதன் நாகரீகச் சொற்கள். ஒரு அக்வா பீனா தண்ணீர் பாட்டில்காக –கின்லே கிடைத்ததை அதிகாரி ஏற்றுக்கொள்ளவில்லை- ஒரு நகரம் முழுக்க அலைந்து கடைசியில் கிடைக்காமல், திட்டு வாங்கிய அனுபவங்கள் மிகச் சாதாரணம். அதிகாரத்தின் கூர் நகங்களுக்கு மெல்லிய மனங்கள் என்றால் கூடுதல் மகிழ்ச்சி.
பலவேசத்தைப் போன்ற ஒருவர் டபேதாராக இருப்பதில் பல அனுகூலங்கள் உண்டு. அவரின் அதிகாரி அவருக்கு கடவுள்தான். அவருக்காக சகலத்தையும் உண்டாக்கித் தருவார். அதிகாரியோடு சேர்ந்து பயணிக்க நேரிட்ட சில நாட்களுக்குள் அதிகாரிக்குத் தகுந்தாற்போல் தன்னுடைய செயல்களை மாற்றிக்கொள்வார். அதிகாரி எவ்வழியோ அவ்வழியே தனது ராஜபாட்டை என்பார். அந்த அதிகாரி மாறுதல் பெற்றோ அல்லது பணி ஓய்வு பெற்றோ அதிகார அடுக்கில் இருந்து விலகி விட்டார் என்பது தெரிந்த பின்னர் அவரைக் குறித்த கடும் விமர்சனங்களை நெருங்கிய நட்பு வட்டாரத்தில் நினைவு கூர்வார். அத்தனையும் நெஞ்சு வெடிக்கும் கருப்புப் பகடிகள். கதறிச் சிரித்துக் கண்ணீர் வடியாமல் அவரை விட்டு ஒருநாளும் சென்றதில்லை. அவற்றை ஒலிப்பதிவு செய்திருந்தால் இன்று மிகச்சிறந்த பகடிக்குறிப்புகள்.
டபேதார்களின் உலகத்தை வைத்து ஒரு நாவலே எழுதலாம். எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. டபேதார்கள் அறியும் உலகம் நம்மால் ஒருபோதும் அறிந்து கொள்ள முடியாத ஏழாம் உலகம். அடைப்பக்காரர்களுக்கே சாத்தியமான உளக்காட்சிகள்.
ஒரு டபேதார் குடித்து விட்டால் கலகக் காரர் ஆகிவிடுவார். வசை மாரி பொழிவார். மற்றொருவரின் கலகச் செயல் வேறுமாதிரியானது. அந்த அதிகாரியைக் கண்டு மாவட்டமே நடுங்கியது. அசாத்தியமான நேர்மையானவர். அசாத்திய நேர்மையும் ஒருவித பாசிசமாக அமையும் சாத்தியம் கொண்டது. அவர் தன்தைத்தவிர பிற அனைவரும் மோசடிப்பேர்வழிகள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். வார்த்தைகளால் வதைப்பதில் மகா நிபுணர். அறையின் முன்னர் பலர் காத்திருப்பார்கள். உள்ளே அழைப்பான் ஒலிக்கும். நாம் நினைப்போம் டபேதார் உடனே உள்ளே பாய்ந்து ஓடுவார் என்று. ஆனால் அவர் காலிங்பெல் ஒலித்ததும் மிக சாவகாசமாக எழுந்து நிற்பார். இடுப்பில் பேண்டை உலுக்கி மேலேற்றிக்கொள்வார். சுற்றி இருப்பவர்களை ஒரு கணம் உற்று நோக்குவார். கதவின் அருகில் நின்று ஒரு சில கணங்கள் தாமதிப்பார். பின்னர் வேகத்தோடு கதவைத்திறந்து உள்ளே செல்வார். அதிகாரி அழைத்த நேரத்திற்கும் அவர் உள்ளே செல்லும் நேரத்திற்கும் இடையில் நீண்ட நேரம் ஆகியிருக்கும். அது ஒருவிதமான கலகச் செயல்.
வேறு ஒருவருக்கு அதிகாரிகள் என்போர் காக்கும் தெய்வங்கள். ஒருபோதும் ஒருநாளும் அவர்களைக் கடிந்து ஒரு சொல் சொல்வதில்லை. மனதிற்குள்ளே திட்டித் தீர்த்திருக்கலாம். வேதனையில் வெந்திருக்கலாம். எவ்வளவு கொடுமையானவர் என்றாலும் வெளியே அவரைக்குறித்து எதிர்மறைக் கருத்துக்களைச் சொல்லமாட்டார். காற்றிற்கும் காதுகள் உண்டு என்பது அவரின் பாலபாடம். அது அவருக்கு பல விதங்களில் பயன்பட்டது. அவரை அவர் விரும்பிய பணியிடங்களில் நிலை நிறுத்தியிருந்தது. தரப்படும் பணி மாறுதலை மிக எளிதாக முறியடிக்கும் மருந்தாக உதவியது. ஒரு செல்போன் அழைப்பின் மூலம் தன்னை சாம்பவனாகக் காட்டிக்கொள்ள முடிந்தது. போட்டுக்கொடுத்தல் என்கிற உபத் திறனும் அவருக்கு இருந்ததால் அவரைக்கண்டு சக ஊழியர்கள் அஞ்சி நடுங்குவார்கள். அவர் நினைத்தால் ஒரு மொட்டக் கடிதம் போதும். அவரின் உடல் மொழியில் அன்பும் பணிவும் சேர்ந்து உச்சப்பட்சமாக வெளிப்படும். சொற்களில் தீந்தேன். நறும்புனல். பரிவாரத் தெய்வங்களுக்கு செய்ய வேண்டிய கொடைகளைச் செய்யத்தவறினால் சம்ஹாரி.
பலவேசம் அண்ணன் தற்கொலை செய்துகொண்டதுதான் என்னை வியப்பில் ஆழ்த்தியது. லௌகீக உலகில் வெற்றி பெறுவதற்கான அத்தனைத் தகுதிகளும் உடையவர். மனித மனங்களை நன்கு அறிந்தவர், அதிகார மையங்களின் புதிர் உலகத்தில் புழங்கிய நீண்டகால அனுபவம் கொண்டவர். எப்படி இந்த முடிவினை எடுத்தார். நண்பர்களிடம் கேட்டேன். கடன் தொல்லை என்றார்கள். நிச்சயமாக இருக்காது. பணம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. வேறு சில இருந்திருக்கலாம். பதின்வயது மகனை இழந்த பின்னர் அவரிடம் ஒரு சோர்வு வந்து ஒட்டிக்கொண்டதைப் பார்த்திருக்கிறேன். மனித மனங்களின் விகாசமும் இண்டு இடுக்குகளும் நம் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டவை. ஒருவர் இல்லாத போது அவரிடம் காணப்பட்ட அபூர்வத்திறன்களுக்கும் அர்த்தமே இல்லாமல் ஆகிவிடுகிறது. இன்று அவரைப் பற்றி நினைக்கும்போது அவர் அளித்துச்சென்ற மகிழ்ச்சிக் கணங்கள் மட்டுமே கண் முன்னால் நிற்கின்றன. அவரைக் கடிந்து, அல்லற்பட்ட போது வீசிய சாபச் சொற்கள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
எத்தனை இருந்தாலும் ஒருவர் உயிரோடு இருப்பது மிக முக்கியம் தானே?
2.
பாவப்பட்ட ஜீவன்கள் என்றால் எழுத்தாளர்களைத்தான் முதலில் சொல்ல வேண்டும். ஒருவர் சிறந்த எழுத்தாளர் ஆவது என்பது நீண்டகால தொடர் உழைப்பைக் கோருவது. முதலில் அவர் நல்ல வாசகராக இருக்க வேண்டும். வரலாறு, பண்பாடு, இலக்கிய மரபு, பிற கலைகள் சார்ந்த தனித்து அவதானிப்புகள் கொண்டிருக்க வேண்டும். தமிழ்ச் சூழலில் எழுத்தை நம்பி உயிர் வாழ முடியாது என்று தெரிந்த பின்னரும் சமரசம் செய்து கொள்ளாமல் எழுத்திற்கு வாழ்நாட்களை அர்ப்பணிக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது. வரவேற்பற்றத் தன்மை. என்ன எழுதினாலும் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கும். தமிழில் புதிதாக ஒரு நுால் வெளிவந்தால் கிடைக்கும் எதிர்வினைகள் சோர்வடையச் செய்யும்.
எழுதுவதை விடுங்கள். வாசகனாக இருப்பதிலேயே பல சவால்கள் உள்ளன. நீண்ட கால வாசகர்கள் என்போர் மிக அரிதானவர்கள். தொடர்ந்து இருபது முப்பதாண்டுகள் இடைவிடாமல் வாசித்துக் கொண்டிருப்பவர்களை தனித்த அபூர்வமான உயிரினங்கள் என்று சந்தேகமின்றி வரையறை செய்துவிடலாம். ஏனெனில் தமிழிச் சூழல் அவ்விதமானது. குடும்ப அமைப்பும், எதிர்கொள்ளும சமூகக் கட்டுமானமும் வாசிப்பதற்கு மிகுந்த எதிர்ப்பை வழங்கக் கூடியவை. குடும்பம் பிள்ளைகள் என்றானபின் கலை இலக்கியத்தில் ஈடுபடுவதற்கு போதிய நேரமும் பணமும் கிடைப்பதில்லை. அன்றாடத்தின் பிக்கல் பிடுங்கல்கள் ஒரு வாசகனை இல்லாமல் செய்துவிடுகின்றன. நல்ல வாசகன் இச்சவால்களைத் தாண்டிவரும் திறன் கொண்டிருப்பவன்.
எண்பதுகள் தொண்ணுாறுகளைப் போல இன்று புத்தகங்கள் கிடைப்பதில் சிரமங்கள் இல்லை. நினைத்த மாத்திரத்தில் நினைத்த புத்தகங்களை உலகின் எந்த மூலையில் இருந்தும் ஆன்லைன் மூலமாக வாங்கும் வசதிகள் உள்ளன. மென் பிரதிகள் மிக எளிதாக விலையின்றி கிடைக்கின்றன. பி.டி.எப்.காப்பிகள் மலையாக குவிந்திருக்கின்றன. யூ ட்யுப்பில் எழுத்தாளர்கள் பேச்சுகளும் எழுத்தாளர்களைப் பற்றிய பேச்சுக்களும் ஆயிரக்கணக்கில் உள்ளன. விக்கிபீடியா போன்றவை ஒரு எழுத்தாளரைப் பற்றிய அடிப்படைத்தகவல்களை உடனே வழங்குகின்றன.
இத்தனை இருந்தும் வாசி்ப்பின் வளர்ச்சியை முடக்கிப்போட ஆயிரத்தெட்டு காரணங்கள் உள்ளன. சமூக ஊடகப்பெருக்கம், வணிக ஊடகங்களின் திட்டமிட்ட காயடிப்பு எனச் சிலவற்றை உடனே சொல்லலாம்.இவை எல்லாவற்றுடன் கூடுதலாக ஒன்றையும் யோசிக்கத் தோன்றுகிறது. அது தீவிர வாசகனாக வாழ்வதில் உள்ள சவால்களில் பிரதானமானது.
ஜெயமோகனின் ஏழாம் உலகில் கதாநாயகனான பண்டாரம் தன் மகளுக்கு ஏற்பட்ட கொடுமையைக் கண்டு “நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன்?” என்று கேட்பதைப் போன்றது. தன் தொழில் அது எதுவாக இருந்தாலும் அதில் உள்ள அற மீறல்களோ, மனிதக் கீழ்மைகளோ அவர்களின் கண்களுக்குத் தென்படுவதே இல்லை. தொழில்னா அதெல்லாம் இருக்கும் என்று சமாதானப் பட்டுக்கொள்வார்கள்.
ஒரு தீவிர வாசகனுக்கு ஏற்படும் அறச்சிக்கல்கள் மிக முக்கியமான தடை. வாசிப்பதன் மூலம் புற உலக வெற்றிகள் அத்தனை முக்கியம் அல்ல என்பதை ஒருவர் இயல்பாக வந்தடையத்தான் வேண்டும். சாதாரணமாக இன்று பொருள் சேர்ப்பது என்பதே அறமீறலை அன்றாடம் செய்தாக வேண்டியதையும் சேர்த்தே இருக்கிறது. சமூக நீதிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணிக்கும் ஒருவர் சக மனிதனை நேரடித் தொடர்பு கொள்ளும்போது எதிர்கொள்ளும் பாவனைகள் அதிர்ச்சி அளிக்கக் கூடியவை. வாடகை வீட்டின் சொந்தக்காரராகவோ, மளிகைக்கடை ஓனராகவோ,வாழைப்பழங்கள் விற்கும் பெட்டிக்கடைக்காரராகவோ, பேருந்தில் ஒரே சீட்டில் பயணம் செய்ய நேரிட்ட பயணியாகவோ சக மனிதன் நடந்துகொள்ளும் விதம் எதிர்மறை எண்ணங்களை வலுப்படுத்தும் சாத்தியங்களையே கொண்டிருக்கிறது.
தீவிர வாசிப்பு ஒருவரை அறத்தின் பக்கம் நிறகச் செய்கிறது. அறமீறலைக் கைக்கொள்வது குறித்து எச்சரிக்கிறது. இன்றோ பொருள் சேர்ப்பதன் அடிப்படையாக அறமீறல் தவிர்க்க இயலாத இடத்தில் இருக்கிறது. ஏமாற்றும், வஞ்சகமும் சாமர்த்தியங்கள் என்று வரவேற்கப்படுகின்றன. தீவிர வாசகன் அவை குறித்த போதங்களால் தடுமாற்றம் அடைகிறான். எப்படியும் பொருள்சேர்த்தாக வேண்டும் என்பதற்காக சமரசங்கள் செய்துகொள்கிறான். அவன்கொள்ளும் சமரசங்கள் அவனை ஆன்மீகமாக அழுகச் செய்கின்றன. அந்த அழுகல் நீடித்து அவன் தன்னைப்போலவே உலகமும் என்று நம்ப ஆரம்பிக்கிறான்.
அதன் காரணமாக பெரும்பாலானவர்களைப் போல வாழ்ந்து விட விரும்புகிறான். வாசிப்பை கைவிட முடிவு எடுக்கிறான். ஆரம்ப வாசகன் எனில் வாசிப்பதன் பயனின்மையை உடனே உணர்ந்து கொள்கிறான். சுற்றத்தாரின் புருவத்துாக்கலுக்கு வாசிப்பு பெரும் தடையாக இருக்கிறது. பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்கிற எச்சரிக்கையை வந்தடைகிறான்.
வாசிப்புப் பழக்கம் குழந்தையைப் போன்றது. ஒரு பெற்றோருக்குரிய கடமையோடு அதை வளர்த்தெடுக்க வேண்டும். குழந்தைகள் குழந்தைகளாக இருக்கும்போது கிடைக்கும் பரவசத் தருணங்களே இறுதிப் பரிசு. அவர்கள் வளர்ந்து சுயநலமிகளாக பெற்றோர்களை உண்டு செரித்து தனித்துப் பறந்து போவார்கள். அதுதான் விதி. இச்சூழலில் பலவற்றை இழக்க நேரிடுகிறது. அவற்றில் மிகவும் எளிதாக இருப்பது வாசிப்பைக் கைவிடுதல். ஆனால் கைவிடுவதைப் போல வாசிப்பைக் கைக்கொள்ளுதல் எளிதான ஒன்றல்ல. நீண்ட கால வாசகராக இருப்பதன் லாபங்கள் அதிகம். அதை நீண்ட கால வாசகர் அல்லாத ஒருவர் தெரிந்துகொள்ளும் வாய்ப்பே இல்லை.