பாண்டி கண்டது

 

1.நேற்று ஒரு குறும்பயணம் தமிழ் நிலத்தில்.

கேரளத்தில் எவ்வளவோ பரவாயில்லை.அங்கே மெச்சத்தகுந்த விதத்தில் பயணங்கள் அமைகின்றன என்ற அனுபவ மதிப்பீடு.

திருவனந்தபுரத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கிறேன். பாலோடு தாண்டியதும் செல்போனை எடுத்து முகநுாலில் சுண்டுவிரலால் ஈசினேன். ஒரு எழுத்தாளரின் நேரலை என்று கண்டிருந்தது. இயர்போன் கொண்டு சென்றிருக்கவில்லை. சரி இந்த இரைச்சலில் இது பிறரைத் தொந்தரவு செய்யாது என்கிற நம்பிக்கையில் காதருகே வைத்து ஒலிக்க விட்டேன். ஓட்டுநரின் இருக்கையில் இருந்து ஐந்தாறு இருக்கைகள் பின்னால், பன்னிரெண்டாவது இருக்கை என்னுடையது. ஒட்டுநர் தொந்தரவிற்கு உள்ளாகி திரும்பிப் பார்த்தார். வண்டியை வேகம் குறைத்தார். சட்டென்று என்னை அடையாளம் கண்டு கொண்டு ஒலியை அணைக்கும்படி செய்கையில் ஆணையிட்டார். இது நான் வாங்கும் இரண்டாவது பண்பாட்டு குட்டு.

காசர்கோடு வரை ரயிலிலும் பஸ்சிலும் பயணம் செய்திருக்கிறேன். தமிழ் நிலத்தின் ரீல்ஸ் இரைச்சல்களை..ப்பர்ர்ர்…என்று வலிந்து சிரிக்கும் தடித்தன இளிப்பின் இளிவரல்களை நான் எங்குமே கேட்க நேரிட்டதில்லை. கேரளர்களும் செல்போனில்தான் மூழ்கியிருக்கிறார்கள். புத்தகம் வாசிப்பவர்களை எப்போதாவதுதான் நேரில் பார்க்க நேரிடுகிறது. அவர்களும் நாற்பதைத் தாண்டியவர்களாக இருக்கிறார்கள். பிறர் இயர்போன் வைத்து எதையோ கேட்கிறார்கள். அல்லது வெறுமனே தியானச் சிலைகளைப்  போல வெறித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். பேசினாலும் பிறரின் காதுகளுக்கு எட்டிவிடாத ரகசியத்தைப் பேணுகிறார்கள். அது ஒரு பண்பாட்டு மேன்மை.

நேற்றைய பயணத்தில் உணர்ந்த நெருக்கடி ஒலி மாசுவினால். பஸ்சில் ஏறும்போதே முகம்சுளிக்க வைத்தது பஸ் ஓட்டுநரின் தேர்வில் இரைந்து கொண்டிருந்த சினிமாப்பாடல்கள். இருப்பதிலேயே மகா மட்டமான இசை ரசனை உள்ளவர்கள் யார் என்று கேட்டால் ஓட்டுநர்களைத்தான் தயக்கம் இன்றி  சொல்வேன். அதுவும் ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஓட்டுநர் என்றால் சொல்லவே வேண்டாம். இன்னும் எம்.ஜி.ஆரின் சொப்பன ஸ்கலிதங்களில் இருந்தே மீண்டிருக்க மாட்டார்கள். அல்லது எழுபது எண்பதுகளின் பாலியல் ஏக்கங்கள். இடைவெளி விட்டு  இரண்டு பேர் உடன் பயணித்தார்கள். ஒருவர் சொக்கம்பட்டிவரை. மற்றொருவர் சொக்கம்பட்டியில் இருந்து ராஜபாளையம் முடிய. ஏறி வந்து அருகே அமர்ந்த உடன் செல்போனை கையில் எடுத்து ரீல்ஸ்களின் நாராசத்தை அதிக பட்ச இரைச்சலோடு ஒலிக்க விட்டார்கள்.  கையில் ஏந்தியிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு பாய்ந்தோடும் நிலக்காட்சிகளில் லயிப்பை உண்டுபண்ண வேண்டியதாயிற்று. அருகே அமர்ந்திருந்த மற்றொருவர் ஒரு தொழில் அதிபராம். கத்திக் கத்திப் பேசி பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கிக்கொண்டிருந்தார். மொத்த பயணிகளுக்கும் அது எந்தவிதத்தில் பயன்பட்டதோ? தடித்தனத்தின் அதிகபட்ச வெளிப்பாடு அது.

பெரும் கும்பலோடு முண்டியடித்து இருக்கைகளை கைப்பற்ற வேண்டியதில்லை கேரளத்தில். தம்பானுாரில் வண்டி வந்ததும் வாய் கொப்பளிக்கும் ஒலியைப் போன்ற மலையாளத்தில் டிக்கட் ரிசர்வ் செய்துகொள்வதற்கான அறிவிப்பு வந்துவிடும். பத்துரூபாய் கொடுத்தால் முன் பகுதி இருக்கைகளை உறுதி செய்துகொள்ளலாம். அலுவலக நேரத்தில்தான் அங்கே கூட்டம் அதிகம். பிற நாட்களில் சாதாரண நேரங்களில் இருக்கைகள் தாராளமாக கிடைக்கின்றன. இங்கே அதற்கான எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இல்லை. பள்ளி விடுமுறை நாட்களில்  வெளியே செல்லவே அச்சமாக இருக்கிறது. ஒரு முறை இரண்டு குழந்தைகளையும் ஒக்கலில் இடுக்கிக்கொண்டு திருநெல்வேலிக்கு பஸ் ஏறுவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. ஐந்தாறு ஒன் டூ ஒன் களின் பின்னால் வெறி நாயைப்போல ஓடியலைந்தும் முடியவில்லை. “ச்சீ…நீயெல்லாம் மீசை வய்ச்ச ஒரு ஆம்பளயா? என்று இல்லாள் வாய்விட்டே கேட்டுவிட்டாள். குழந்தைகளோடு பயணங்கள் மேற்கொள்ளவாவது ஒரு கார் வாங்க வேண்டும் என்று புத்தியில் உறைத்தது.

கேரள அரசு பஸ்களில் குப்பைக் கூடை என்ற ஒன்றை பின்வாசல் அருகே உள்ள இருக்கையின் கீழ் வைத்திருக்கிறார்கள். இங்கே அப்படி ஒரு அக்கறை எந்தவகைப் பேருந்துகளிலும் இருப்பதில்லை. தம்பானுாரில் காத்திருக்கும் அறை ஒன்று இருக்கிறது. குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறை.  ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு குடிக்கூலி என்று. காத்திருக்கும் நேரத்தை வாசிப்பதற்கோ  வேறு விதமான பணிகளுக்கோ பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒட்டுமொத்த தமிழகத்திலும் இப்படி ஒரு வசதியை நான் கண்டதில்லை. அங்கே பெரும்பாலான கழிவறைகள் குறைந்தபட்ச சுத்தத்தோடு உள்ளன.

சமீபமாக ஒரு மாற்றத்தை உணர்ந்தேன். மடத்தர கடந்ததும் ஒரு வாய்ச்சண்டை. தண்ணியைப் போட்டு ஏறி நின்ற தமிழன் ஒருவர் போலி மலையாளியாக சலம்ப ஆரம்பித்தார். ஓட்டுநர் சொல்லிப்பார்த்தார். அடங்குவதாக இல்லை. வண்டியை நிறுத்தி அம்போ என்று இறக்கி விட்டுவிட்டார். அப்படி நடுவழியில் பயண இடைஞ்சல் செய்யும் குடிகாரர்களை இறக்கிவிடும் சட்டப்பூர்வ வாய்ப்பு அங்கே உள்ளதாம். இங்கே நேற்று வாசலில் நின்ற பயணியை உள்ளே வாருங்கள் டோர் லாக் பண்ணனும் என்று கத்திய நடத்துனரை மயிரே போச்சு என்கிற மனோபாவத்தில் தொங்கிக்கொண்டிருந்தவருக்கு ஐம்பதை ஒட்டிய வயதிருக்கும். கொடும் மீசை. கருகரு நிறம்.புஸ்…புஸ்…என்ற காற்றொலி கேட்டபோதும் கதவுகளைச் சாத்த முடியவில்லை. மடங்கிக்கிடந்த கதவுகளை அடைத்துவிட முடியாதபடி அவர்விரல்களால் இறுக்கிக்கொண்டிருந்தார். பஸ்ஸை நிறுத்தி கூட்டத்தில் நீந்தியடித்து முன்னே வந்து கடும் பிரயத்தனத்திற்கு பிறகே நடத்துனரால் வாசல் கதவுகளை மூடிவிட முடிந்தது.  இடைவழியில் இறங்கி அவர் பஸ் முன்னே நின்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார். தமிழ்நிலத்தில் ஒரு ஆள் என்பது தனியர் கிடையாது. ஒரு இனக்குழு. அவரால் பத்துநிமிடங்களுக்கு பயணப் பதற்றத்தை உண்டு பண்ண முடிந்தது. ஓட்டுநர்களின் பாடும் திண்டாட்டந்தான்.

கேரள ஓட்டுநர்களிடம் நான் கண்ட ஒவ்வாமை ஒன்றுண்டு. அது பிச்சைக்கார மனநிலை. சில்லறைகளை அவர்கள் ஒரு பொருட்டாகவே  மதிப்பதில்லை. எட்டு , ஆறு, நான்கு, இரண்டு என அத்தனை ரூபாய்களையும் திரும்பித் தருவதேயில்லை. கோட்டயத்தில் இருந்து தென்காசிக்கு வந்த பஸ்சின் நடத்துநர் பெண்மணி. அவரும்கூட இதில் விதிவிலக்காக நடந்துகொள்ளவில்லை. எட்டு ரூபாயைக் கேட்டு அவரை அவமதிக்க  வேண்டாம் என்று முணுமுணுத்துக்கொண்டே திரும்பிவிட்டேன்.

2.

 

ஓரிரவில் இரயில் பயணம். பழகிய பாதை. திரும்புவதற்கு வசதியாக ரயில் உண்டு. கோட்டயத்தில் இரவு எட்டுமணிக்கு இரண்டு புரோட்டாவும் ஒரு முட்டைக்கரியும் சாப்பிட்டு ரயில் ஏறினேன். மொத்த கேரளமும் ஓணத்திற்கான முன்னேற்பாடுகளில் இருந்ததால் என்னவோ முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்டமே இல்லை. ஒரு சன்னலோர இருக்கையினை தேர்வு செய்து புக் பிரம்மாவில் வாங்கியிருந்த அரி சங்கரின் கரப்பான் நாவலைப் புரட்டினேன். ஏற்கனவே போகன் சங்கர் பாராட்டியிருந்தார். எதிர்பார்ப்புடன் வாசிக்க ஆரம்பித்தேன். பெங்களுரில் இருந்து திரும்புவதால், அம்மண்ணில் நிகழும் நாவல் கூடுதல் சுவாரசியமாக இருந்தது.. ஒரே அமர்வில் வாசிக்க முடிந்தது. நாவல் பிடித்திருக்கிறது.

ரயில் அல்லது பேருந்து பயணங்களில் பொதுவாக காதுகளை மூடிக்கொள்வது வழக்கம். பாமரர்களின் பாமர ஓலிக்குப்பைகள் சகிக்க முடியாதவை. நாராசம். எட்டுப் பத்து மணிநேரங்கள் என்றாலும் ஒலிப்பான் பொருத்திகளை காதுகளுக்குள் அடைத்து சினிமாப் பாடல்களில் மறைந்துவிடுவது உசிதம். நேற்று ஏனோ வாசிக்க வேண்டும் என்ற ஆசை. கடந்த இரண்டு நாட்களாக புதிதாக எதையும் வாசிக்காத தவிப்பு. கரப்பான் நாவல் கொண்டுள்ள கார்ப்பரேட் புத்தி என்கிற புதிய பேசு பொருளினால் கூடுதல் ஆர்வம். நாவலும் நீரோட்டம் போல உள்ளே இழுத்துக்கொண்டது.

சங்கணாச்சேரியில் ஒரு கும்பல் ஏறியது. ஒட்ட வெட்டிய கிராப்பும், தொளதொள ஜீன்சும் அணிந்த இளந்தாரிகள். பெட்டியை குறுக்கும் நெடுக்கும் அளந்துவிட்டு என்னைச் சுற்றி அமர்ந்தார்கள். கும்பல் மனோநிலைக்கான ஆர்ப்பாட்டமும் ஆராவாரமும். வீம்பிற்காக என் கவனத்தை சேகரித்து வாசித்து வந்தேன்.  அவர்கள் அரைமணி நேரத்தில் சலம்பி முடித்து ஓய்ந்தார்கள். கால்களை எதிர் எதிர் இருக்கைகளில் நீட்டிச் சாய்ந்து செல்போன்களை ஒலிக்க விட்டனர். ரீல்ஸ்கள் ஒளிர்ந்தோடின. ஒரே நேரத்தில் ஒன்பது பைத்தியங்கள் அருகே இருந்து காட்டுக்கத்து கத்தினால் ஏற்படும் உளப் பதற்றமும் உள்முக வெறியும்.  எம்மொழியில் என்றாலும் ரீல்ஸ்களுக்கு ஒரே நோக்கமும் தொனியுந்தான். அவை “என்னைக் கவனி என்னை மட்டுமே கவனி என்னில் ஆழ்ந்துபோ“ என்று நிர்ப்பந்தம் செய்கின்றன. ரீல்ஸ்களில் எண்பது விழுக்காடு பெண்கள் திடுக்கிடும் வண்ணம் உடலின் பாகங்களைக் குலுக்கி நடனமாடுகிறார்கள். பாடல்கள் வெட்டப்பட்டு ஒட்டப்பட்டு செறிவூட்டப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஆடைகள் தேவையற்ற வெண்ணிற உடல்கள் கண்களை ஒட்டி வைக்கின்றன. தொடங்கினால் விட முடிவதில்லை.

கவனம் சிதறியது. எரிச்சலும் ஆத்திரமும் மண்டியது. பொதுவெளி என்பதை எவர் வேண்டுமானாலும் அசுத்தம் செய்யலாம். ஆக்கிரமிக்கலாம். ஐம்புலன்கொண்டு குப்பைகளை அள்ளிவீசலாம்.  நான் தனியன். என்ன செய்துவிடமுடியும் என்னால். இங்கிதம் என்றால் என்ன என்பதை அவர்களுக்கு யார் சொல்லிப்புரியவைப்பது.  கும்பல் இரைச்சலை எனக்கான  சவாலாக எடுத்துக்கொண்டு வாசிப்பதைத் தொடர்ந்தேன். அரை மணி நேரத்தில்  அவர்கள் ஓய்ந்தார்கள். சிலர் துாங்க ஆரம்பிக்க சிலர் கடந்தோடும் நிலக்காட்சிகளில் வெறித்து நின்றார்கள்.

நாவலை முடிக்க பத்துப்பக்கங்கள்தான் இருந்தன.  புத்தகத்தை மூடி வைத்துவிட்டு கொஞ்சம் விச்ராந்தியாக வெளியைப் பார்த்தேன். எதிரில் இருந்து அதுவரை கவனித்திருந்த பெரியவர்- நரைத்த தாடி, ஒற்றைத் தேகம், பதற்றமான கண்கள்,  – என் எதிரில் வந்து அமர்ந்தார். மலையாளத்தில் வேகமாக எதையோ சொன்னார். எனக்கு அது புரியவில்லை.  என் புத்தகத்தைச் சுட்டிக்காட்டி ” அது என்ன?” என்பது  போலக் கேட்டார். நான் அவரைப் புறக்கணித்து வாசிக்க ஆரம்பித்தேன். அவரின் பதற்றம் அதிகரித்தது.   தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும்  மேலாக கவனம் சிதையாமல் வாசிப்பது எதோ ஒரு விதத்தில் அவரைப் பாதித்திருக்கிறது. மொத்தப் பெட்டியிலும் செல்போனைத் துறந்து வாசித்தபடி இருந்த ஒருவனாக அவருக்கு அதிர்ச்சி ஊட்டியிருக்கிறேன். மீண்டும் என் கையில் இருந்த நுாலை இழுத்தார். என் ஒருமுகத்தை கலைத்தார்.  கோபத்தில்  சட்டென்று அவரைப் புறக்கணித்து மீண்டும் புத்தகத்தில் குனிந்தேன்.

“ அது என்ன…பைபிள் தானே..எங்க காமி”. என் தோளைத் தொட்டார்.  நான் எதிர்வினை ஆற்றவில்லை. அவரின் இடையீடு மேலும் வெறி கொள்ளச் செய்தது, மேலும் கவனத்தைச் சேகரித்து பத்து பக்கங்களை வாசிப்பதில் திடம் கொண்டேன். எதிரே ஏதேதோ பேசினார். கேள்விகள் கேட்டார். பதறிப் பதறி அவரின் வார்த்தைகள் காற்றில் கரைந்து போயின. இரண்டு ரயில்வே காவலர்கள் இளைஞர்களில் ஒருவனைப் பிடித்து சோதனை செய்தார்கள். பெரியவர் நைசாக எழுந்து எங்கேயோ  சென்றுவிட்டார்.

செல்போன் வைத்திருக்கும் கைகள் சிரங்கு வந்த கைகள்தான். சந்தேகம் இல்லாமல் வரட் வரட்டென்று சொரிந்து கொள்கிறார்கள். அதில் எனக்கொன்றும் கவலை இல்லை. அருகில் இருப்பனை மனத்தில் கொள்ள மறுக்கிறார்கள் என்பதுதான் என் வருத்தம். ஒலிக்குப்பைகள் வாரி வாரி இறைக்கிறார்கள். கேட்பதற்கு அத்தனை ஆபாசமாக இருக்கிறது. அருவருப்பாக இருக்கிறது. ஆத்திரமாக இருக்கிறது.  கேரளத்தில் கூட இப்படித்தான் இருக்கிறது. யார் என்று பார்த்தால் மறத்தமிழர்கள் அவர்கள்.

வாசிப்பதும் எழுதுவதும் எனக்கான இன்ப ஊற்றுகள். என் பரவசங்களுக்காக மட்டுமே வாசிக்கிறேன். தோன்றுவதை எழுதுகிறேன். அதை என்னிடம் எவரும் மட்டுறுத்த அனுமதியேன்.  என் நேரத்தை எப்படிச் செலவழிக்க வேண்டும் என்பதை முடிவு செய்பவன் நான்தான். பெரு முதலாளிகளோ என் பலவீனங்களோ அல்ல.

வாசிக்க இயலாத பெரும் கும்பலுக்கு எதிரான துவந்த யுத்தம்தான் என்றாலும் விட்டுவிடுவதாக இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *