1.

இதுவரை இல்லாத அளவு அதிக அலைச்சல் கொண்ட பயணம் இது. இருப்பது 4 நாட்கள். இதற்குள் விமானப் பயணம் தவிர்த்து கிட்டத்தட்ட 2000 கி.மீ. தூரம் குஜராத்துக்குள் பிரயாணித்திருக்கிறோம். வழக்கம்போல் நான், கண்ணன் மற்றும் அமர்நாத். ஜனவரி 12ம் தேதி சென்னை புத்தகத் திருவிழாவில் புத்தகங்கள் வாங்கிவிட்டு, இரவு நண்பன் அமர்நாத் அறையில் தங்கினேன். புத்தகங்கள் வாங்க நண்பர் அமர்நாத்தும் கூட வந்திருந்தான். எப்போதுமே புத்தகங்கள் கடைசியில் ஏழையாக உணரவைத்து விடுகின்றன. வாங்க வேண்டியவை ஒருபக்கம் மலைபோல் குவிந்திருக்கிறதென்றால், வாசிக்க வேண்டியவை பக்கம் முடிந்தவரை திரும்பாமல் இருப்பது உசிதம். கண்ணனும் அமர் அறைக்கு இரவு பொதியுடன் வந்துவிட்டான். அதிகாலை 6:30 மணிக்கு விமானம்.
இப்போதெல்லாம் முன்பதிவு செய்வதென்றாலே கை நடுங்க ஆரம்பித்துவிடுகிறது. ஜனவரி 13 பயணத்துக்குப் பதிலாக டிசம்பர் 13க்கு முன்பதிவு செய்து முழுப் பணமும் போய்விட்டது. ஒரு டிக்கெட் நாலாயிரத்து சொச்சம். தேதி மாற்ற கட்டணம் ரூ. 3000. இன்னும் ஏதோ ஒரு கட்டணம் ரூ. 300. கடைசியில் இணையதளத்துக்காரன் இந்தச் சேவையை, அதாவது தேதியை மாற்றித்தரும் வேலையைச் செய்ய எடுத்துக் கொள்வது ரூ. 300. போக அதில் வரி தனி. ஆக மொத்தம் ரூ. 12,000/- கொடுத்து எடுத்த டிக்கெட்டின் தேதி மாற்ற வேண்டுமென்றால், அதே 12,000 திரும்பக் கொடுக்க வேண்டும். அவர்கள் பயண இரத்துக்கோ, தேதி மாற்றலுக்கோ எடுக்கும் கட்டண விபரங்களைப் படிப்பது மிக மிக நாகரீகமாக முட்டாக்***, கேணப்*** என்று திட்டுவதற்குச் சமம்.
குளறுபடியின்றி காலை 9:30க்கு அகமதாபாத் போய் இறங்கினோம். டாக்சிக்காரர்கள் சுற்றிக் கொண்டார்கள். காலைவேளை என்பதால் எங்கும் தங்கும் எண்ணமில்லை. சபர்மதி ஆசிரமம் செல்லவேண்டும். டாக்சிக்காரர் கரிசனத்தோடு வழிநடத்தி, சில ஐடியாக்களும் கொடுத்து, ஆசிரமம் போக ரூ. 400 என்றார். அந்நேரம் ஒரு ஆட்டோக்காரர் 200 ரூ. என்றதும், ஆட்டோவில் ஏறினோம். 8 கி.மீ. தூரம் இருக்கும். ஆசிரமத்தை ஒட்டி சபர்மதி ஆறு ஓடுகிறது. அருமையான இடம். காந்தி இங்கு 15 ஆண்டுகாலம் வாழ்ந்திருக்கிறார். முன்புறம் ஜவஹர்லால் நேருவால் நட்டுவித்த அசோகமரம். கலைக்கூடம். சபர்மதி ஆற்றைப் பார்த்தாற்போல செவ்வக வடிவிலான ஓட்டுவீடு. முன்புறம் இடதுபக்கம் காந்தி வருபவர்களோடு அமர்ந்து பேசும் அறை. அங்கே இராட்டை இருக்கிறது. அந்த அறைக்குப் பின்புறம் காந்தி கஸ்தூரிபா மற்றும் விருந்தினர் அறைகள். நடுவே செவ்வக வடிவில் திறந்த முற்றம். வலதுபுறம் அடுக்களை மற்றும் பண்டக அறை. மிக இதமான ஒரு சூழல் அங்கு நிலவுகிறது. வீடு கட்டினால் இப்படி ஒரு அமைப்பில் தான் கட்டவேண்டும். ஆசிரமத்தைச் சுற்றிலும் அணில்கள் கிளிகளின் ஓசை. அந்த விரிந்த வெளியும் கிளிப் பேச்சும், வாகன மனிதக் குரல்களை முடக்கிவிடுகின்றன.
பசித்தது. ஆட்டோ டிரைவர் பின்னாடியே வந்துகொண்டிருந்தார். (ஆசிரமத்துக்குள் நுழைய கட்டணம் ஏதுமில்லை, யாரும் பரிசோதிக்கவும் இல்லை). இங்கிருந்து பதான் செல்லவேண்டும். 125 கி.மீ. ஆட்டோவிலேயே போய்விடலாம் என்று யோசனை. ஆசிரமத்துக்கு எதிர் சந்தில் பெண்கள் ஒரு ஓட்டல் நடத்திக் கொண்டிருந்தார்கள். டோக்லா மட்டும் இருந்தது. அதற்குமுன் நாங்கள் டோக்லாவைப் பார்த்ததுகூடக் கிடையாது. மஞ்சள்நிறப் பாலாடைக் கட்டிகள் போல இருந்தன. சுவை இட்லியைத் தாளித்தது போல இருந்தது. நிறைய பச்சைமிளகாயை வதக்கி அதோடு சேர்த்துத் தருகிறார்கள். ஆனால் மிளகாய் பஜ்ஜிக்குப் போடும் பெரியமிளகாய் அளவுக்குத்தான் உறைப்பு. ரூ. 2,200க்கு பேசி ஆட்டோவில் ஏறினோம்.

மூன்றுமணிநேரப் பயணப்பொழுதைக் கழிக்க கண்ணனும் அமரும் காந்தியைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள். நான் பேசாமல் இருக்கவும் ஏதோ நான் காந்திக்கு எதிரி என்பதுபோல் வரித்துக்கொண்டு என்னிடம் அவர் புகழ்பாடிக் கொண்டிருந்தார்கள். வேறுவழியில்லாமல் காந்தி ரொம்ப rigid ஆனவர். அழகியல் உணர்வு சுத்தமாய் இல்லாதவர் என்று அவிழ்த்துவிட்டேன். அப்புறம் அங்கிருந்து டால்ஸ்டாய், தஸ்தயோவ்ஸ்கி என்று இலக்கியத்துக்குள் நுழைந்து வந்தோம். ஆட்டோ டிரைவர் பெயர் சதூர். ரொம்ப நல்லபையன். நடுவே ஓரிடத்தில் இறங்கி பழங்கள் வாங்கிக் கொண்டோம். பக்கத்தில் ஒரு சிறிய உணவுவிடுதியில் வாசலில் பெரிய அடுப்பில் அகலக் கல்வைத்து ஒருகையில் துணிப்பொதியை வைத்து இராவி சப்பாத்தி சுட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு சப்பாத்தி 10 ரூ. சும்மா ஒன்று வாங்கிக் கொறித்தோம். சுவையாக இருந்தது. தாபா ரொட்டி.
இங்கே மாதிரிதான் அகமதாபாதைச் சுற்றிலும் மாடுகள் திரிகின்றன. என்னதான் பெரு நகரமாக அது இருந்தாலும், பார்ப்பதற்கு சென்னை போன்றதொரு கடைவீதிகளாய் இருந்தாலும், செல்லும் வழியில் உள்ள ஊர்களும் நவீனச்சாயலைப் பூசியிருந்தாலும் அடிப்படையில் பெரியதொரு வேற்றுமை இருக்கிறது. இங்குமாதிரிதான் வாகனங்கள் விரைகின்றன. ஹாரன் ஒலிக்கிறது. ஆனால் ஏதோ ஒருவகை பதட்டமின்மை எல்லோரிடமும் தெரிகிறது. தொழில் செய்வோர் யாரும் பதட்டத்தில் இல்லை. இந்தப் பயணத்தில் யாரும் ஏமாற்றவில்லை. ஒரு ஆட்டோக்காரர் ஒரு கி.மீ. தூரத்துக்கு 50 ரூ. வாங்கியபோது, எங்களுக்காக நின்று இறங்குமிடம் அதுதானா என்று சரிபார்க்க வைத்து, இடம் சற்றுத் தள்ளி என்று தெரிந்ததும் அங்கு கொண்டுபோய் இறக்கிவிட்டு, பெட்டிகளை இறக்க உதவியும் செய்தார். மக்கள் பிற ஜீவன்களுடன் பரிவுடன் நடந்துகொள்கிறார்கள். அகமதாபாத் நகருக்குள் இருக்கும் சிடி சையது மசூதி (இதைப்பற்றி தனியே விவரிக்க வேண்டும்)-க்கு அருகில் ஒரு ரவுண்டானாவுக்குள் ஏகப்பட்ட சிறுதானியங்களும், காய்கறிகளும் பழங்களையும் கொண்டுவந்து போடுகிறார்கள். ரவுண்டானாவுக்குள் ஆங்காங்கே குழிகளுக்குள் இருந்து எலிகள் வந்து கொறிக்கின்றன. நூற்றுக்கணக்கில் புறாக்கள் இரை எடுக்கின்றன. சிறிதும் பெரிதுமாய் பிளாஸ்டிக் கோப்பைகளில் நீர் வைக்கிறார்கள். புறாக்கள் காக்காய்க் குளியல் போடவும் நீரருந்தவுமாய் இருக்கின்றன. நீர் நிலைகளில் மீன்களுக்கு இரை போடுகிறார்கள். தெருநாய்கள் மனிதர்களைக் குரைத்துப் பார்க்கவில்லை. ஆனாலும் தமிழ்நாட்டைவிட மக்கள் அசுத்தமாகவே நகரை வைத்திருக்கிறார்கள். டெல்லியைப் போலவே எங்கு பார்த்தாலும் புளிச் புளிச். ஆண்கள் எல்லோரின் பற்களும் பழுப்பும் கருப்புமாய் இருக்கின்றன. இரவு 9மணிக்கு ஒருநடை போகையில் சாலையோரம் ஒருவர் மூன்று சிறிய கற்களை வைத்து அதற்குள் பழைய கழிவுத் தாள்கள், பாலிதீன் பைகளைப் போட்டு எரித்து தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தார். மிக முரண்பாடான இருவேறு உலகங்கள் அருகருகே. கார்பரேட்டுகள் வெகுசீக்கிரமே இவர்களது ஜீவநேயத்தை உறிஞ்சி சென்னைவாசிகளைப் போல ஆக்கிவிடும் என்று பேசிக்கொண்டோம்.

ராணி கி வாவ் (ராணியின் படிக்கிணறு) 11ஆம் நூற்றாண்டில் சோலங்கி அரசவமிசத்தைச் சேர்ந்த இராணி உதயமதியினால் கட்டப்பட்டது. செவ்வகவடிவிலான நீண்ட பல படிநிலைகளைக் கொண்டு இறங்கி கிணற்றில் முடியும் அமைப்பில் உள்ளது. நடுவே ஒவ்வொரு தளத்திலும் வரிசையாய் சிற்பவேலைப்பாடமைந்த தூண்கள். மிக நீண்டு இறங்கிச் செல்லும் படிநிலைகள் பருவகாலங்களில் போதிய அளவு நீர் கிணற்றில் இறங்க உதவுகிறது. மொத்தம் 8 தளங்கள் என்று நினைக்கிறேன். இருபுறங்களிலும் அழகான சிற்பங்கள். கஜூரகோ சிற்பங்களைப் போலவே மணற்கற்களால் செதுக்கப்பட்டவை. பல்வேறு தெய்வங்கள், நாகக் கன்னியர், தேவ மங்கையர், யோகினியர் சிற்பங்கள் காணப்படுகின்றன. 1960வரை பல நூற்றாண்டுகளாகப் புதைந்துபோய், வெள்ளத்தில் மூழ்கிக் கவனிப்பாரற்றுக் கிடந்திருக்கிறது. இப்படி ஒரு அழகுப் புதையல் உள்ளே இருப்பது யாருக்கும் அதுவரை தெரியாது. மூன்றுதளங்கள் வரை மட்டுமே பார்வையிட அனுமதித்தது வருத்தமாய் இருந்தது. கிணறுக்கு மேலே வெளிப்புறத் தடுப்புச்சுவருக்கு மேலே இடுப்புயரத் திண்டில் முன்னோக்கிச் சாய்ந்து காமராவை மட்டும் உட்புறம் காட்டி படம் எடுக்கையில், அதைக் கீழே தவறவிட அத்தனை முயற்சிகளையும் மனம் எடுத்துக்கொண்டது கிளர்ச்சியூட்டக்கூடிய அனுபவம். கிணற்றைச் சுற்றி பக்கவாட்டில் தூண்களுக்கிடையில் இருள் பல நூற்றாண்டுகளாக நிறைந்திருக்கிறது. உள்ளே கருத்த நீர் தேங்கிக் கிடக்கிறது. தண்ணீருக்கு ஏது காலம்.
சாயங்காலம் ஆகிவிட்டது. வெளியே கச்சோரி, தாஹி பாஜி சாப்பிட்டோம். மாடுகள் மேய்ந்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தன. நம்மூர் மாடுகளைவிட இவற்றின் முக அமைப்பு சற்று மாறுபட்டவை. ஹராப்பா நாகரீக முத்திரைகளில் காணப்படும் மாடுகளைப் போன்றவை இவை. பெரிய திமில். கண்களுக்கு மேல் இருபுறமும் பெருத்து நெற்றி முகட்டோடு மடங்கி ஓர் ஆழ்ந்த அமைதியுருவை அவற்றுக்குத் தருகின்றன. திரும்பி வரும்போது மணி ஏழரை. இரவு 9மணிக்கு துவாரகா கிளம்பவேண்டும். ஒரு சின்ன உணவுவிடுதிக்குள் நுழைந்தோம். வெள்ளை நிற சட்டையும் தலைப்பாயும் அணிந்து ஒருவர் கல்லாவுக்குப் பின்புறப் புகைப்படத்தில் இருந்தார். தலைப்பாய்க்கட்டு இறுக்கத்தினாலா, இல்லை அநியாய சோகமா தெரியவில்லை அவர் புருவங்களும் கண்களும் நெறிபட்டு அழப்போகிறவர் போலிருந்தது. அமர் தாபா ரொட்டி கேட்டான். எங்களுக்கு பஜ்ரி ரோட்லாவும், பாய்கன் பர்தாவும். பஜ்ரி ரோட்லா அலு பரோட்டா மாதிரி உருளைக்கிழங்குக்குப் பதில் கேப்பை மாவை அடைத்திருப்பார்கள். (அது கேப்பை என்றுதான் நினைக்கிறேன்). பாய்கன் பர்தா கத்தரிக்காய் தொக்கு. முழுக்கத்தரிக்காயைக் கீறிப்போட்டு கட்டியாய் மசாலா சேர்த்து செய்யப்படுவது. இரண்டுமே பிரமாதமான சுவை. எனக்கு இந்த வதக்கிய மிளகாய் சுவாரசியமாய் இருந்தது. பொதுவாகவே காரம் அதிகம் சேர்த்துக் கொள்பவன் என்பதால் பேச்சுவாக்கில் இரண்டு மூன்று சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அகமதாபாதிலிருந்து துவாரகா 440 கி.மீ. ஓரிரவுப் பயணம். பாவன் டிராவல்ஸில் ஸ்லீப்பர் பஸ் கிடைத்திருந்தது. பாவன் போய் டிக்கெட்டை உறுதிப்படுத்திக்கொண்டு கண்ணனும் நானும் டாய்லெட் போய்விட்டு வந்துவிடலாம் என்று கிளம்பினோம்.

வரும்வழியில் ஒரு பொதுக்கழிப்பறை நவீனமாய் இருந்தது. பார்ப்பதற்கு உள்ளே ஏசிகூட இருக்கும்போலத் தோன்றியது. ஆனால் பூட்டியிருந்தது. இங்கு பெரும்பாலானோர் குஜராத்திதான் பேசுகிறார்கள். ஒரு சிலருக்கு இந்தியும் தெரிகிறது. விசாரித்ததில் இங்கும் அங்கும் அலைந்து எங்குமே டாய்லெட்டைப் பார்க்கமுடியாமல், பதட்டத்தில் உண்மையிலேயே அடிவயிறு கனக்க ஆரம்பித்தது. அரசு ஆசுபத்திரி ஒன்றைப் பார்த்ததும் நிச்சயம் உள்ளே கழிப்பறை இருக்கும் என்று நுழைந்தோம். மூன்றுபேரிடம் கேட்டுவிட்டோம். மூவருமே மூன்றுதிசையைக் காட்டினார்கள். அவசர சிகிட்சை தவிர எல்லாக் கட்டிடங்களுக்குள்ளும் நுழைந்துவிட்டோம். கழிப்பறையைத் தவிர எல்லா அறைகளும் இருந்தன. விளக்குகள் பிரிட்டிஷ் காலத்தில் போடப்பட்டவை போல அந்த காவிச்சுவருக்கும் விளக்கொளிக்கும் பீதியைக் கிளப்பின. அலுத்துப்போய் கண்ணன் தனது வழக்கமான பாணியைச் சொன்னான். அதாவது ஏதாவது கொஞ்சம் பெரிய உணவு விடுதிக்குச் செல்வது, பால் அல்லது ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டு டாய்லெட் போய்விட்டு வருவது. அப்படி ஒரு உணவுவிடுதிக்குள் நுழைந்தோம். ஏழுபேர் எங்களை வரவேற்று உட்கார வழிகாட்டினர். எல்லா மேசைகளிலும் சில்வர் தட்டும் சின்னச்சின்ன கிண்ணங்களுமாய் இருந்தது. ரெகுலர் சாப்பாடு மட்டும்தானாம். அப்போதுதான் சாப்பிட்டுவிட்டு வந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் திரும்பி வந்தோம். அப்போதுதான் கவனித்தேன். பாவன் டிராவல்ஸ் இடதுபுறத்தில் அவர்களுடைய டாய்லெட் இருந்ததை.
அகமதாபாத்தில் ஆறேழுபேர் கொண்ட குடும்பம் ஒன்று ஏறியது. லட்சுமி தெய்வத்தைப் போற்றி ‘ஜெய்’ போட்டார்கள். அவர்களும் துவாரகாதான் வந்தார்கள். அலுப்பின் காரணமாக இரவு நன்றாகத் தூங்கமுடிந்தது. இந்தப் பயணம் முழுக்க அறை ஏதும் எடுக்காமல், ஆறு, கடலில் மட்டும் குளித்து பராரிகளாக அலையலாம் என்றொரு ஆசை இருந்தது. முடியாது. அறை எடுத்தே ஆகவேண்டும். துவாரகா போனதும், பல்துலக்காமல் ஆளுக்கு ஒரு தோசை சாப்பிட்டோம். கேவலமாக இருந்தது. சாதாரண பிளாட்பாரத்தில் தள்ளுவண்டியில் வைத்து சுட்டுக்கொண்டிருந்த கடை தோசைக்கு 60 ரூ. கூகுளில் தேவபூமி என்றொரு விடுதியைப் பார்த்திருந்தேன். கோமதி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் படித்துறையை ஒட்டி அமைந்திருந்தது. நாள்வாடகை 900 என்று போட்டிருந்தது. விடுதியாளர், மூன்றுபேர் என்பதால் 1000 என்றார். நாங்கள் இரவு தங்கப்போவதில்லை, 12 மணி நேரத்தில் காலிசெய்து விடுவோம் என்றதும் 600 சொன்னார். தண்ணீர் அசல் கடல்நீர். எதிர்த்தாற்போல் ஆற்றில் குளித்தோம். கடலோடு கலக்கும் இடமென்பதால் தண்ணீர் உவர்த்துக் கிடந்தது. கெளுத்தி மீன்களைப் போல ஒருவகை, ஆனால் மீசையில்லாமல் நிறைய கரையோரம் காணப்படுகிறது. கரையோரம் கோமதிக்கு இலையில் செய்த தட்டும் பூ, தீபம் வைத்து பெண்கள் விற்கிறார்கள். மீனுக்கு உணவும் விற்கப்படுகின்றன.

வெண்முரசுவில் கிருஷ்ணர் இங்கே தலைநகரை அமைத்ததன் காரணம் கடல்வணிகத்தைப் பிடிக்கும் நோக்கமே என்றொரு கருத்தை ஜெ.மோ. வைத்திருப்பார். கோமதி 960 கி.மீ. நீளமுடையது. அந்தக்காலத்தில் யார் இங்கு ஆட்சியில் இருந்திருந்தாலும் கடல்வணிகம் நிச்சயம் முக்கிய வருவாயாக இருந்திருக்கும். கரைக்கு சற்று தள்ளி துவாரகீசர் கோவில் உள்ளது. கரையோரம் ராமர், கிருஷ்ணர், அவர் நண்பர் சுதமருக்கு கோவில்கள் உள்ளன. ஆற்றுக்குமேல் ஒரு பாலம் இருக்கிறது. கடற்கரையில் கொண்டுபோய் விடும். அந்தப்பக்கம் செல்ல பத்து ரூபாய் டிக்கெட். மதியம் அடைத்துவிட்டு 4மணிக்குத் திறக்கிறார்கள். 4 மணிக்கு டிக்கெட் எடுத்துப் போனோம். கடற்கரையில் வரிசையாய் ஒட்டகங்களை வைத்து ஆட்களை மேலேற்றிக் கொண்டிருந்தார்கள். சும்மா ஒருநடை போய்வர இரண்டுபேருக்கு 100 ரூ. கடற்கரையில் உட்கார்ந்தோம். அரபிக்கடல் விரிந்திருந்தது. கடைசிநேரப் புகைச்சலைக் கொட்டிக்கொண்டிருந்தது சூரியன். இன்னும் கொஞ்ச நேரத்தில் மேற்குக்கரையோர அஸ்தமனத்தைப் பார்க்கலாம். நேரமில்லை என்று கிளம்பினோம். துவாரகீசர் கோவிலுக்குள் செல்பேசி, கேமராக்கள் அனுமதி இல்லை. இலவச பாதுகாப்பகங்கள் இருந்தன. கோவிலின் வெளிப்புறம் புதுப்பித்துக் கட்டப்பட்டிருந்தாலும் உள்ளே நிறைய இடங்களில் அரித்துப் போய் இருந்தது. கிருஷ்ணரின் பேரன் வஜ்ரநாபரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. தொல்லியலாளர்கள் 2200 ஆண்டுகள் பழமையான கோவில் என்கிறார்கள்.
இந்தப் பயணத்தில் விமான டிக்கெட்டுகளையும் கிர் காடு பிரயாணத்தையும் தவிர, குஜராத்தில் சுற்றிப்பார்க்க எதற்குமே டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை. அததை அவ்வப்போது ஏற்பாடு செய்துகொண்டதுதான். துவாரகாவில் இருக்கையில் அன்று மதியமே இரவு சோம்நாத் செல்வதற்கு இரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்துகொண்டோம். அது ஒரு 260 கி.மீ. ஆனால் அதிகாலை 5:30க்குத் தான் போய்ச் சேர்ந்தது. சோம்நாத் கோவிலுக்கு அருகிலேயே ஒரு சிறிய விடுதியில் இடம் கிடைத்தது. வீட்டையே விடுதியாக மாற்றியிருக்கிறார்கள். கடுமையான வாய்க்கால் நாற்றத்தைத் தவிர குறையொன்றும் இல்லை. இந்த ஊரில் ஆங்காங்கே ஆங்கிலம் இந்தியில் கோவில் வரலாற்றை எழுதிவைத்திருக்கிறார்கள். எப்படி, எத்தனைமுறை கோவில் இடிக்கப்பட்டது, எப்போது யாரால் கட்டப்பட்டது என ஆங்காங்கே குஜராத் டூரிஸம் சார்பில் பலகைகள் வைத்திருக்கிறார்கள். குஜராத் முழுக்க வல்லபாய் பட்டேலின் சிலைகள் தட்டுப்படுகின்றன.
12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று இது. கடற்கரையோரம் அமைந்த கோவில். முதன்முறையாக எப்போது கட்டப்பட்டதென்று தெரியவில்லை. மகாபாரதத்தில் இக்கோவிலைப் பற்றி சந்திரன் சிவனை வழிபட்ட தலமாக வருகிறது. பாகவதத்திலும் இந்த நகரில்தான் கிருஷ்ணர் கடைசியில் உயிர் நீத்த இடமாகக் குறிப்பிடப்படுகிறது. இரண்டாம்முறையாக கி.பி. 649ல் யாதவ மன்னர் வல்லபியினால் கட்டப்பட்டது. 725ல் இடிக்கப்பட்டது. 815ல் திரும்பக் கட்டப்பட்டது. 1024ல் கஜினி முகம்மதுவினால் தாக்கி முழுமையாகவே இடிக்கப்பட்டது. கொள்ளையைத் தடுக்க மக்கள் கோவிலைச் சுற்றி நின்றுகொண்டதாகவும், அதில் 50,000 பேர் கொல்லப்பட்டு 20,000 அடிமைகளாக்கப்பட்டனர். நான்காம் முறையாக மாளவ நாட்டு போஜராஜனும், பட்டான் நாட்டு சோலங்கி மன்னரும் 1042ல் மீண்டும் கட்டி எழுப்பினார்கள். அலாவுதின் கில்ஜி 1296ல் திரும்ப இடித்துத் தரைமட்டம் ஆக்கினார். இவரும் 50,000 பேரைக் கொன்று 20,000 பேரை அடிமைகளாக இழுத்துச் சென்றதை நம்பமுடியாவிட்டாலும், ஹாசன் நிஜாமைச் சேர்ந்த தாஜ்-உல்-மாசிர் என்ற வரலாற்று அறிஞர் அப்படித்தான் குறிப்பிடுகிறார். ஐந்தாவது முறையாக 1308ல் மீண்டும் கட்டப்பட, 1375லும் 1451லும் ஜூனாகத் சுல்தான்கள் இடித்துவைத்தார். 1701ல் ஔரங்கசீப்பும் தன் பங்குக்கு இடித்தார். ஆறாம் முறையாக பல அரசர்கள் ஒன்றுசேர்ந்து 1783ல் திரும்பக் கட்டினர். ஏழாவதும் கடைசியுமாய் இப்போதிருக்கும் வடிவில் 1951ல் வல்லபாய் பட்டேலின் முன்னெடுப்பில் கட்டிமுடிக்கப்பட்டது.

எனக்கு பழமையான கோவில்களின் மீது ஓர் ஈர்ப்பு உண்டு. அது வரலாற்றுக்குள் நுழைவதுபோல், விளக்கிச் சொல்லமுடியாத பிணைப்பைத் தரும் அனுபவமாய் இருக்கும். சோம்நாத் கோவில் முழுக்கவே புதிதாகக் கட்டப்பட்டது என்பதால் அந்த இடத்தின் வரலாற்றை மட்டும் கொண்டு பார்க்கையில் வேறொரு உணர்வுக்கு ஆட்பட்டேன். கோவிலின் முகப்பில் தோரணவாயில் உச்சியில் சிவனின் நடனச் சிற்பம் ஒன்று உள்ளது. அது ஒரு சுயம்பின் பரமபோதை. தான் என்பது மட்டுமேயானதொரு நிலையை அழகாய் அந்த நடனம் பிரதிபலிக்கிறது. இங்கும் கேமரா அனுமதி இல்லை. கோவிலுக்கு மேற்கே சுற்றுச்சுவரையொட்டி நீண்ட கடற்கரை. அங்கு வெகுநேரம் நின்றிருந்தோம். ஒவ்வொரு கடலுக்கும் ஒரு குணாம்சம் உண்டு. கணம்தோறும் கோடானுகோடிக் குமிழ்கள் உடைந்து, சோம்நாத் அலைகள் முணுமுணுத்தபடி இருக்கின்றன.
ஏற்கெனவே விடுதியில் ஒரு காருக்கு சொல்லிவைத்திருந்தோம். கிர் காடுகள் செல்லவேண்டும். கிர் காட்டுக்குள் செல்ல திறந்தவெளி ஜீப்புகள் உண்டு. சோம்நாதிலிருந்து 52 கி.மீ. 2000 ரூபாய் சொன்னார்கள். காட்டுக்குள் சுற்றிப்பார்க்கவும் சேர்த்து என்று புரிந்திருந்தோம். கிளம்பும்போதுதான் தெரிந்தது அங்கு கொண்டுபோய் விட்டுத் திரும்பக் கூட்டிவரத்தான் 2000. காட்டுக்குள் செல்லும் ஜீப்புக்கே 2100 ஆகும். 1200க்கு ஆட்டோ பிடித்தோம். பாரா சௌ. எங்களுக்குக் குழப்பம். எங்கே கடைசியில் சண்டையாகி விடுமோ என்று. ஆட்டோக்காரர் இறங்கி அவரிடமிருந்த ரூபாய்களை எண்ணி 1200 எடுத்து, இதுதான் கட்டணம் என்று சைகையில் காட்டினார். அதென்னவோ ஆட்டோ பயணம்தான் சவுகரியமாக இருக்கிறது. பேசிக்கொண்டே, மூன்றுபக்கமும் பார்த்தபடி செல்லலாம். நடுநடுவே நிறுத்தச்சொல்லி புகைப்படம் எடுக்கலாம். ஏதாவது கடையில் சாப்பிடலாம். இதையெல்லாம்விட காரோட்டியைவிட ஆட்டோக்காரர் பேசுவதற்கு ஆர்வம் காட்டுவார்.
கிர் காட்டுக்குள் செல்ல இணையத்தில் முன்பதிவு செய்யவேண்டும். காலை 6-9, மாலை 3-6 என்ற இரண்டு நேரங்கள் உண்டு. ஜீப்புக்கு 1700 ரூ. கேமராவுக்கு 200. வழிகாட்டிக்கு 400. மொத்தம் 2300. தினேஷ் என்பவர் வண்டி ஓட்டினார். சங்கர் என்பவர் கைடாக வந்தார். ஐயோ ஐயோ இவனுகளுக்கு இந்தி தெரியாதாமே என்று அடித்துக் கொண்டார்கள். சங்கருக்கு ஆங்கிலம் தோடா தோடா மாலும். 3 மணிக்கு காட்டுக்குள் பயணப்பட்டோம். புள்ளி மான்கள், சாம்பர் மான்கள் தட்டுப்பட்டன. ஓரிடத்தில் மரப்பொந்தில் ஆந்தை தியானத்தில் இருந்தது. கழுகு பார்த்தோம். பொதுவாகவே நகரங்கள் உட்பட லங்கூர் குரங்குகள் அதிகம் தென்படுகின்றன. அதிர்ஷ்டமிருந்தால் சிங்கத்தைப் பார்க்கலாம் என்றார்கள். காட்டுக்குள் கம்லேஷ்வர் அணைக்கட்டு இருக்கிறது. ஆங்காங்கே விலங்குகளுக்கு நீர் நிலைகளை ஏற்படுத்தி அவ்வப்போது நீர் நிரப்புகிறார்கள். காட்டுக்குள் ஆறும் ஓடுகிறது. வண்டிப்பாதையின் இருபுறமும் பாதுகாப்புக்காக எரித்திருக்கிறார்கள். விலங்குகள் இதைத்தாண்டி வர அஞ்சும் போலும். ரொம்ப நேரம் கழித்து ஒரு சிங்கத்தைப் பார்த்தோம். அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. இதற்குள் வேறு இரண்டு ஜீப்புகளும் வந்துவிட்டன. கைடுகள் எங்களை கேமராக்களை அணைக்கச் சொல்லிவிட்டு, ஒரு விலங்கின் சப்தம் எழுப்பினர். அது எழுந்திருப்பதாகக் காணோம். இலேசாய் சீண்டினர். அது எழுந்து பார்த்துவிட்டு ‘உங்களுக்கு இதே சோலியாப் போச்சுடா’ என்று திரும்பப் படுத்துக் கொண்டது. அடுத்ததாய் தூரத்தில் ஒரு சிங்கம் படுத்தபடி பார்த்துக் கொண்டிருந்தது. அதுவும் படமெடுக்குமுன் தலையைக் கவிழ்ந்துகொண்டது. கடைசியாய் எதிர்பாராதபடி 15 அடி தூரத்தில் ஓர் ஆண்சிங்கம் அமர்ந்திருந்ததைப் பார்த்தோம். அட்டகாசமாய் இருந்தது. அதை மட்டும் 10 புகைப்படங்கள் எடுத்தேன். பார்க்கப் பார்க்க கம்பீரம் மிளிரும் முகம். காற்றில் பிடரி மயிர் மெலிதாய் அசைய, மெல்லிய வெளிச்சத்தில் செந்நிறத்தில் ஒளிர்ந்தன. கோடிழுத்து வரைந்ததுபோல் முகம். அதன் கூர்மையான கண்களையும் நாசியையும் பார்க்கையில் தெய்வாம்சம் மிளிர்ந்தது.

வன இலாகா அலுவலகத்தை ஒட்டி இருந்த துணிக்கடையில் கறுப்பு நிற டீஷர்ட் பையனுக்கு வாங்கினேன். அதில் சிங்க முகம் வரையப்பட்டிருக்கிறது. இருளில் ஒளிரக் கூடியது. இரவு சோம்நாத்திலிருந்து பஸ் பிடித்து அகமதாபாத் பயணப்பட்டோம். 410 கி.மீ. இந்தப் பயணத்தில் ஓர் இரவுகூட விடுதியில் தங்கவில்லை.
காலையில் அகமதாபாத் வந்ததும் பேரூந்து நிலையத்துக்கு 1 கி.மீ. தூரத்தில் செரீனா என்ற விடுதியில் அறை எடுத்தோம். 6 மணி. நகரம் இன்னும் விழிப்படையவில்லை. துவாரகாவிலும் அகமதாபாதிலும் ஏகப்பட்ட இடங்களில் இந்த மூன்று நாட்களில் பட்டம்விட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கமுடிந்தது. அகமதாபாதில் ஏகப்பட்ட இடங்களில் நூற்றுக்கணக்கில் பட்டங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். முதல்நாள் அங்கு வந்தபோது ஒரு சிறுபையன் கீழே விழுந்த பட்டத்தை எடுத்துக்கொண்டு ஓடினான். 60 வயதுப் பெரியவர் ஒருவர் அவனை சத்தம்போட்டுக் கூப்பிட்டார். அவனிடமிருந்து பட்டத்தை வாங்கிவிட்டு அவனை விரட்டிவிட்டார். அது ஊதாவும் வெள்ளையும் கொண்டிருந்தது. ஆங்காங்கே சில படங்கள் வரையப்பட்டிருந்தன. அவர் அதன் ஓரங்களை நீவிவிட்டார். தூசியை ஊதினார். சாலையோர பெஞ்சில் அமர்ந்துகொண்டு பட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். ஆங்கிலச் செய்தித்தாளில் பட்டக் கயிறு அறுத்து ஒருவர் இறந்ததாகவும் 96பேர் காயமுற்றதாகவும் செய்தி பார்த்தேன்.
விடுதிக்கு சற்று தூரத்தில் சிடி சையது மசூதி இருக்கிறது. இது 1573ல் சிடி சையதுவினால் கட்டப்பட்டது. ஏமன் நாட்டிலிருந்து வந்த அபிசீனியரான அவர், 45 சிற்பிகளுடன் இந்த மசூதியை அமைத்தார். இதன் ஜன்னல்கள் மிக நுட்பமாய் பெருமரத்தைப் போல கல்லில் செதுக்கப்பட்டது. தூர இருந்து பார்க்க பின்புலம் தெளிவாக இருக்க ஒரு கோட்டோவியம் போலிருக்கும். அருகில் செல்லச்செல்ல நிழல் பூத்து நிற்கும். இந்த மசூதி சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சிக்கு இருப்பதோடு, இஸ்லாமியர்கள் வந்து தொழும் இடமாகவும் உள்ளது. முன்புறம் அகன்ற நீர்த்தொட்டியில் புறாக்கள் நீரருந்திக் கொண்டும், குளியல் போட்டபடியும் இருந்தன. மசூதியை ஒட்டிய பூங்காவிலும் ஆங்காங்கே நீரும் தானியங்களும் வைத்திருக்கிறார்கள். இன்னும் நடந்துசென்றோம். ஒரு சிறிய கடையில் பதநீர் போன்ற பானத்தை பிளாஸ்டிக் கப்பில் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். நீரா பானமாம். 10 ரூ. அதிகளவு தண்ணீர் சேர்த்த பதநீரைப் போல சுவை இருந்தது. ஈச்சமரத்தில் இருந்து எடுக்கிறார்கள் போலும்.

அடுத்ததாக லோதலுக்குச் செல்லவேண்டும். அகமதாபாதிலிருந்து 80 கி.மீ. சபர்மதியிலிருந்து ராணி கி வாவ் கூட்டிச்சென்ற ஆட்டோ டிரைவர் சதூருக்கு போன் செய்து வரச்சொன்னோம். அதற்குள் குளித்துவிட்டு விடுதிக்கு அருகில் உள்ள லக்கி உணவகத்தில் சாப்பிட்டோம். இந்தப் பயணத்திலேயே சுவையான உணவு இங்குதான் கிடைத்தது. இது ஒரு வித்தியாசமான உணவகம். உணவகத்துக்குள் ஒரு மரம் இருக்கிறது. அதற்கு இடம்விட்டுக் கட்டியிருக்கிறார்கள். இதுவாவது பரவாயில்லை. உள்ளே 20க்குக் குறையாமல் (அவ்வளவுதான் எண்ணமுடிந்தது) சமாதிகள் இருக்கின்றன. நியாயமான விலை. சாப்பிட்டு முடிக்கவும் சதூர் வரவும் சரியாக இருந்தது. லோதல் கிளம்பினோம்.
1920_-21ஆம் ஆண்டில் பண்டிட் தயாராம் சஹானி, ஹரப்பா என்ற இடத்தில் மேற்கொண்ட அகழாய்வில் முதன் முதலாக இந்த நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது. தொல்பொருள் ஆய்வுகளில் எந்த இடத்தில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்படுகிறதோ, அந்த இடத்தின் பெயராலேயே அந்த அகழாய்வுக்குப் பெயரிடும் வழக்கத்தைப் பின்பற்றி, இந்த நாகரிகத்திற்கு ஹரப்பா நாகரிகம் என்று பெயரிடப்பட்டது. இந்த நாகரிகம் சிந்து நதியைச் சுற்றி நிலவி வந்திருந்தது என அடையாளம் காணப்பட்டது. லோதல், அகமதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஹரப்பா நாகரிகத்து துறைமுக நகரமாகும். தொடக்ககால ஹரப்பா நாகரிக மக்கள் இந்த இடத்தில் வாழ்ந்தனர் என்பதை அந்த இடத்தின் அகழாய்வு காட்டுகிறது. மற்ற ஹரப்பா நாகரிக நகரங்களின் திட்டங்களிலிருந்து லோதல் நகரத் திட்டம் மாறுபட்டதாக இருப்பதாகும். முதல் நிலையில் அது களிமண் கரையால் பாதுகாக்கப்பட்ட ஒரு சிறு கிராமமாக இருந்தது. ஆனால் அதன் மக்கள் குடியிருப்பு வெள்ளத்தால் அழிக்கப்பட்டுவிட்டது. அதனால், இரண்டாவது நிலையில் இந்நகரம் உருவாக்கப்படும் போது, உட்புற அரண் மற்றும் வெளிநகரம் உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கி.மு. 1900இல் இந்தக் குடியிருப்பு முழுமையாக வெள்ளத்தால் அழிக்கப்பட்டுவிட்டது. கிளிஞ்சல் வெட்டுபவர்கள், தந்தப் பொருள்கள் செதுக்குபவர்கள், உலோகப் பொருள்கள் தயாரிக்கும் கொல்லர்கள் தொழிற்சாலைப் பகுதிகளில் வாழ்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகரம் முழுவதுமே 13 மீட்டர் அகலம் கொண்ட மண் மற்றும் செங்கற்கள் கொண்ட சுவரால் சூழப்பட்டிருந்தது.
மிகச் சிறிய அளவிலான ரத்ன மணிகளுக்குப் புகழ் பெற்றது லோதல். அழகு நிறைந்த, சிறுசிறு மணிகள் கொண்ட, ஈடு இணையற்ற தங்க நெக்லஸ்களும் அங்கு செய்யப்பட்டன. கிளிஞ்சல்கள், களிமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட நகைகளும் அகழாய்வின்போது அடையாளம் காணப்பட்டன. தாமிர கருமாரப் பணியும், பானை தயாரிப்பும் வெளிநகரத்தில் உயர்ந்த ஓரளவில் முன்னேற்றம் அடைந்திருந்தன. லோதலில் அகழாய்வு செய்யப்பட்ட 14 சவக்குழிகளும், அவற்றில் மூன்றைத் தவிர மற்றவை, நீண்டசதுர வடிவம் கொண்ட தனிநபரின் சவக் குழிகளாகவே இருந்தன.
மற்ற மூன்று மட்டும் Double burial எனப்படும் இரண்டு நபர்களைச் சேர்த்து அடக்கம் செய்யப்பட்ட சவக்குழிகளாக இருந்தன. இவ்வாறு இரண்டு நபர் சவக்குழிகளில் இருவரும் கட்டித் தழுவிய நிலையில் எலும்புக் கூடுகள் இருந்தன. (நன்றி: https://thamizhoviy.blogspot.com/2015/11/blog-post_16.html)

முதலில் அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்த்தோம். விதவிதமான பாசிகள், எடைக் கற்கள், கத்திகள், அம்புகள், களிமண் வளையல்கள், ஓவியம் தீட்டப்பட்ட பானைகள் இப்படி நிறைய காணப்படுகின்றன. பாசி மணிகள் செந்நிற கற்களைச் செதுக்கி நடுவே துளையிட்டு உருவாக்கியிருக்கிறார்கள். இதில் கருப்பு வெள்ளை நிற கற்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். கண்ணாடிக் கூண்டுக்குள் கட்டித் தழுவிய நிலையில் இரண்டு எலும்புக்கூடுகள் இருந்தன. மயிர்க்கூச்செரிந்தது. 5000 ஆண்டுகளுக்கு முன் இருந்த என் மூதாதை.
பின் அகழாய்வு செய்த இடங்களைப் பார்க்கச் சென்றோம். மண்ணில் கால்வைக்கவே ஒருமாதிரி இருந்தது. துறைமுகத்துக்கருகில் மண்ணைக் கையில் அள்ளி அலாவிக் கொண்டிருந்தோம். துறைமுகப்பகுதிக்கு மேலிருந்த கரையோரம் சில ஓட்டுச் சில்லுகள் கிடந்தன. எடுத்துக் கொண்டேன். ஒரு கல் கிடந்தது. அதன் அளவுக்குப் பொருந்தாமல் இலேசாக இருந்தது. அதையும் எடுத்துக் கொண்டேன். இதில் சோகம் என்னவென்றால், துவாரகா கடற்கரையில் ஒரு வெள்ளை நிற பாசிக்கல்லும், லோதலில் இரண்டு பளபளப்பான கருங்கற்களும் கிடைத்தது. விமானத்தில் ஏறும்போது நடந்த குளறுபடியில் காவலர்கள் பிடுங்கிக் கொண்டார்கள்.
லோதலிலிருந்து திரும்பி வந்து அறையைக் காலிசெய்துவிட்டு விமான நிலையத்துக்குச் சென்றோம். இரவு 11:15க்குக் கிளம்பி 1:45க்கு சென்னை வந்தோம். அமர்நாத் அறையிலேயே 5 மணிவரை தூங்கிவிட்டு 6மணிக்கு தனியார் பேருந்தில் ஊருக்கு நானும் அமரும் கிளம்பினோம். பேரூந்தில் மொத்தமே 7பேர்தான் இருந்தோம். பயணத்தின் இடையிடையே வாசிக்க கிண்டிலில் தஸ்தயேவ்ஸ்கியின் Double வைத்திருந்தேன். பாதி வந்திருக்கிறேன். சுபம்.
