மறுநாள் காலை நடைக்குப் பிறகு விடுதியில் காலையுணவு எடுத்துக்கொண்டு போதிகயாவுக்குக் கிளம்பினோம். போதிகயாவுக்கு நேரடியாகப் பேரூந்துகள் இல்லை. கயா சென்று அங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள போதிகயாவுக்கு ஆட்டோவில் செல்ல வேண்டும். இரண்டையும் ஃபால்கு நதி பிரிக்கிறது. முன்பு நிரஞ்சனா என்று அழைக்கப்பட்டு வந்த இந்த நதியில் புத்தர் நீராடிவிட்டுத்தான் போதி மரத்தடியில் அமர்வாராம். சிகேஷ்ராம் வந்து எங்கள் சுமைகளை ஆட்டோவில் ஏற்றினார். பேரூந்து நிலையத்தில் தனியார் பேரூந்து ஒன்று கிளம்பி கொண்டிருந்தது. அவர்கள் பரபரப்பாக சுமையைத் தூக்கிக் கொண்டு ஓட நாங்கள் பின்னாலேயே ஓடினோம். சிகேஷ்ராமைக் கட்டியணைத்து நன்றி சொன்னேன். கண்ணன் நேற்று கொடுக்க மறந்த 200 ரூபாயையும் சேர்த்து சிகேஷ்ராமிடம் கொடுத்தான். போதிகயாவுக்கு 73 கி.மீ. டிக்கெட் 150 ரூ. காலையிலேயே விடுதியில் அறை முன்பதிவு செய்திருந்தேன். புத்தகயா கோவிலில் இருந்து அரை கி.மீ. தூரம்தான். வாடகையும் 600 ரூ. எப்படியும் சுமாராகத்தான் இருக்குமென்று தெரியும், குறைந்தது விபச்சாரம் நடக்காத விடுதியாக இருக்கும் என்ற நம்பிக்கை.

கயாவில் இருந்து புத்தகயா சென்றோம். ஃபால்கு நதியில் ஆங்காங்கே தண்ணீர்த் திட்டுகள் மட்டும் தெரிந்தன. இந்த நதி இப்படித்தான் ஆண்டின் பெரும்பகுதி கிடக்குமாம். தோண்டிப் பார்த்தால் அடியில் நன்னீர் ஓடிக் கொண்டிருக்குமாம். இதனால் இந்த நதிக்கு அந்தர்வாஹினி என்றொரு பெயருண்டு. விடுதியில் அறை காலியில்லை போல. அப்புறம் எப்படி முன்பதிவு செய்தார்கள் என்று தெரியவில்லை. எதிர்த்தாற்போல ஈயாடிக் கொண்டிருந்த இன்னொரு விடுதியில் அறை ஒதுக்கினார்கள். ரொம்ப எளிமையான அறை. தனித்தனியக இரண்டு படுக்கைகள். ஒரு சிறிய இழுப்பறை. கழிப்பறை.

விடுதியிலிருந்து வெளியேறி சிறிது தூரம் நடந்து இடப்புறம் திரும்பினால் பிரதான வீதி. அதிலிருந்து கொஞ்ச தூரத்தில் கோவில். பிரதான வீதியில் எக்கச்சக்கமான கடைகள். புத்த விக்கிரகங்கள், பாசிகள், கையில் அணியும் மணி வளையங்கள், பைகள், துணிகள். ஒரு கடையில் அடர் செம்பழுப்பில் கை மணிவளையம் பார்த்தேன். கடைக்காரர் அதை எடைபோட்டுப் பார்த்து விலை 1500 என்றார். அது அம்பர் என்றார். எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. பக்கத்துக் கடையிலும் அது இருந்தது. அவர் 2000 ரூபாய் என்றார். இதை எப்படியாவது வாங்கியே தீருவது என்று முடிவு செய்துகொண்டேன். கடைகளைப் பராக்குப் பார்த்தபடி கோவிலுக்குச் சென்றோம். கோவிலுக்குச் செல்லும் வழியில் ஒரு சிறிய அருங்காட்சியகம் உள்ளது. இங்கே அவ்வளவாக ஒன்றும் அகழாய்வுப் பொருட்கள் இல்லை. எனக்கு பாட்னா அருங்காட்சியகத்தைத் தவறவிட்டதுதான் வருத்தமாக இருந்தது. அங்கே 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லாகிப்போன மரம் உள்ளது. இது உலகின் நீளமான கல்மரம். போக, இங்கு புத்தரின் அஸ்தி இருப்பதாகவும் கேள்விப்பட்டிருந்தேன்.
ஒரு கடை நன்றாக ஓடினால் அதே வியாபாரத்தை அதற்குப் பக்கத்தில் ஆரம்பிப்பார்கள். அதேபோல போதி கோவிலுக்குள் திரும்பும் வளைவுக்குள் நுழைந்ததும் இடதுபுறம் ஒரு மசூதி, வலதுபுறம் இந்துக் கடவுளுக்கான கோவில் என களேபரமாக இருந்தது. இந்தச் சுற்றுலாவில் சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களைத் தவிர மேற்கு நாட்டினர் யாரையும் பார்க்கவில்லை. கோவிலைச் சுற்றிலும் ஆங்காங்கே பந்தலமைத்து சிறப்பு தியான அமர்வுகள் நடந்து கொண்டிருந்தன. பல பிக்குகள் ஒரு மேசையைப் போட்டு குறிசொல்வதுபோல உட்கார்ந்து முன்னால் ஏடு விரித்து மந்திரம் செபித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் தாராளமாகக் காசு புரள்வது தெரிந்தது. உள்ளே கைபேசி கொண்டு செல்ல அனுமதி இல்லை.
கோவில் கோபுரம் 180 அடி உயரம். கி.மு. 3ஆம் நூற்றாண்டில் அசோகர் ஒரு சிறிய மண்டபத்தை இங்கு எழுப்பினார். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் குப்தர்கள் இப்போது காணக்கூடிய பிரமிடு போன்ற உச்சிக் கோபுரம் எழுப்பினர். பர்மா தேசத்தினர் 11ஆம் நூற்றாண்டில் இதில் பழுதுபார்ப்புப் பணியை மேற்கொண்டனர். பினர் மண்மூடிக் கிடந்த கோவிலை 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானியர்கள்தான் அகழாய்வு செய்து கண்டெடுத்து புதுப்பித்தனர். கோவிலுக்குள் பத்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் புத்தர் சிலை உள்ளது. காவி வர்ண ஒற்றையாடை. வெளிர் சிவப்பு மேனி. கீழே நோக்கும் நீல விழிகள். கருவறையில் இப்படியொரு நவீன சிற்பம் சற்று ஏமாற்றமாக இருந்தது. நல்ல கூட்டமிருந்தாலும் யாரும் தரிசிக்க விடாமல் விரட்டிக்கொண்டு இல்லை. புத்தர் சந்நிதியில் தலையை வைத்து வணங்கிச் சென்றனர். நான் கதவோரமாய் சில நிமிடங்கள் கண்மூடி நின்றேன்.
வெளியே கருவறைக்குப் பின்புறம் போதிமரம். இந்த அரசமரத்தின் பெயர் பொன்னரசு என்று முன்பு ஒருவர் கூறியிருக்கிறார். இங்கே இராஜவல்லிபுரத்தில் மரச்சித்தர் என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் ஒருவரிடம் அந்த மரக்கன்று இருந்தது. எங்காவது ஓரிலையாவது விழுந்துகிடக்காதா என்று தேடினேன். கோவிலைச் சுத்தமாகக் கூட்டிப் பெருக்கி வைத்திருக்கிறார்கள். எங்கும் தட்டுப்படவில்லை. தூரத்தில் ஓரிலை கிடைத்தது. அதை கண்ணனின் பைக்குள் வைத்திருந்தேன். கடைசிவரை என் கைக்கு வரவில்லை. அதை வைத்திருக்கிறானோ, இல்லையோ.
வெளியே ஒரு உணவகத்தில் பஃபே உணவு 100 ரூ. என்று கூவி அழைப்பதைக் கண்டு உள்ளே சென்றோம். தந்தூரி ரொட்டி, கீரை, காலிஃபிளவர், ஃபிங்கர் சிப்ஸ், பருப்பு, சோறு, அப்பளம், வதக்கிய மிளகாய், ஊறுகாய், நூடுல்ஸ் இருந்தன. அன்லிமிடெட். சாப்பிட்டுவிட்டு பிராக்போதி, சுஜாதாகர் செல்லக் கிளம்பினோம்.
புத்தர் ஞானமடைவதற்குமுன்பு மகாகலா மலை என்றும் பிராக்போதி என்றும் அழைக்கப்படும் மலையில் உள்ள ஒரு குகையில் சமண முறைப்படி மிகக் கடுமையாக உடலை வருத்தி ஆறு ஆண்டுகள் தவம் செய்து வந்தார். பின்னர் மத்யமமே உகந்தது என உணர்ந்து மலை இறங்கி வருகையில் பக்கத்து ஊர் கிராமத்தலைவரின் மகளான சுஜாதா என்ற சிறுமி அவருக்கு பால்சோறு அளித்தாள். அங்கு சிலகாலம் தங்கியிருந்தபின் ஃபால்கு நதியைக் கடந்து போதிமரத்தடிக்குச் சென்றடைந்தார். பிராக்போதியிலிருந்து போதிகயாவுக்கு 20 கி.மீ. பிராக் என்றால் ஞானமடைவதற்குமுன் என்று பொருள்.
கான் என்ற பெயர் கொண்ட ஆட்டோ டிரைவர் வண்டியில் ஏறிக் கொண்டோம். நகரத்தைத் தாண்டி கிராமப்பகுதிக்குள் நுழைந்ததும் வேறொரு உலகத்துக்குள் நுழைந்ததுபோல் இருந்தது. 90% வீடுகள் காரைப்பூச்சுடன் மேலே சாணம்பூசி இருந்தன. எல்லா வீடுகளிலும் ஆடு, மாடு, கோழி என வளர்க்கின்றனர். பீகாரில் பெரும்பாலான மக்கள் விறகடுப்புதான் பயன்படுத்துகின்றனர். எரிப்பதற்கு பெரும்பாலும் வறட்டிதான். 2000 ஆண்டுகளாகவே இந்தப் பகுதி அப்படியேதான் காலத்தில் உறைந்து கிடக்கிறதுபோலும். எனக்கு அது ஒரு கனவுபோலிருந்தது. அந்தக் கிராமத்தில் ஒன்றில் வாழ்ந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று தோன்றியது. நவீன வாழ்க்கைக்கு சில விசயங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதை விட்டுவிட்டால், இதுவொன்றும் சிரமமல்ல. புத்தன் கால்கள் ஞானத்துக்காக எத்தனை தூரம் பயணித்திருக்கின்றன. நாம் இதற்கே யோசிக்கிறோம்.


பிராக்போதி மலையேற ரோப்கார் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அங்கே சில இளைஞர்கள் தூக்கிச் செல்ல டோலி வைத்திருக்கிறார்கள். ஏறினாலோ ஏறுங்கள் என்று பின்னாலேயே வந்தனர். அதில் ஓர் இளைஞன் ‘அங்கிள், அங்கிள்’ என்று வேறு அழைத்து கோபத்தைக் கிளப்பினான். வழியெங்கும் பிச்சைக்காரர்கள், அங்கச்சவாலுடையோர். வெளிநாட்டு பக்தர்கள் தானமிடுவதற்காக 100 ரூ, 200 ரூ. என சில்லறை பாக்கெட்டுகள், பிஸ்கெட்டு பாக்கெட்டுகளை இங்கிருக்கும் கடைகளில் விற்கின்றனர். மலையேறி குகையை வந்தடைந்தோம். ஏதோவொரு ஆசிய நாட்டினர் குழு அங்கே அமைதியாகத் தியானித்துக் கொண்டிருந்தனர். மிகச் சிறிய குகை. உள்ளே அடர் கருப்பு. எலும்பும் தோலுமான பத்மாசனமிட்ட புத்த சிலை உள்ளே இருக்கிறது. ஒரு சாமானியன் அறுவைச் சிகிட்சையாளனாவதைப் போன்றது பௌத்த வழி. பற்றுகளை ஈவிரக்கமின்றி அறுத்தெறிவதற்கு அத்தகு மனோதிடமும், கூர்மையான கத்தியும் தேவையாகிறது.
குகையருகில் சற்றுநேரம் அமைதியாக அமர்ந்திருந்தோம். பின்னர் சுஜாதாகர் சென்றோம். நேரம் 5:20. ஐந்துமணிக்கெல்லாம் பூட்டிவிடுவார்களாம். அதனால் வெளியிலிருந்து மட்டும் பார்த்துவிட்டுக் கிளம்பினோம். இங்கு சீக்கிரமே இருட்டிவிடுகிறது.

இங்கே ஒவ்வொரு நாட்டினரும் ஒரு தனிச் சந்தை வைத்திருக்கின்றனர். திபெத்திய அகதிகள் ஸ்வெட்டர், ஜாக்கெட், மஃப்ளர் போன்றவற்றுக்கென ஒரு மார்க்கெட் வைத்திருக்கிறார்கள். பேரம் கிடையாதாம். காட்மண்டு சந்தை என்று ஒரு கூடாரம் இருந்தது. உள்ளே பாசி மணிகள் விற்றுக் கொண்டிருந்தார்கள். இந்த அம்பர் கை வளையம் சொல்லியிருந்தேனில்லையா, அது எந்தக் கடையிலும் அதன்பிறகு பார்க்கமுடியவில்லை. இங்கே தேடியதில் ஒரேயொருவர் வைத்திருந்தார். 500 ரூ. சொன்னார். 400க்குப் பேசி வாங்கிவிட்டேன்.

அதற்குப் பின்புற வழியில் இறங்கினால் ஏதோ சீனா அல்லது தாய்லாந்தின் பஜாருக்குள் நுழைந்ததுபோல் இருந்தது. வரிசையாக தாய்லாந்து, திபெத், காட்மண்டு, ஜப்பான் உணவகங்கள். எல்லாக் கடைகளும் பழையபாணியில் வெளிர்மஞ்சள் விளக்கொளியில் ஒரு கனவுத்தோற்றத்தை எழுப்பின. தாய்லாந்து உணவத்துள் நுழைந்தோம். நான் சாதமும் வேகவைத்த சிக்கனும் அடுமனையில் இட்ட சிக்கனும் வாங்கினேன். தொட்டுக்கொள்ள சாஸ் போல ஒன்று கொடுத்தார்கள். கூடவே காய்கறித் துண்டுகள் போட்ட கொதிநீர். நன்றாக இருந்தது. கண்ணன் ஒரு நூடுல்ஸ் சூப் வாங்கினான். சாப்பிட்டுவிட்டு விடுதிக்கு நடந்து சென்றோம்.



மறுநாள் காலையில் ஒரு நடை சென்றுவந்து தேநீர் அருந்தினோம். பிறகு அருங்காட்சியகம் சென்றோம். அங்கே பெரிதாக ஒன்றுமில்லை. எங்களுக்கு 9 மணிக்கு விமானம் என்பதால் 6 மணிக்கு விமானநிலையத்தில் இருக்கவேண்டுமென்று திட்டம். இந்த முறை இரயிலில் எங்கும் செல்லவில்லை என்பதால் பாட்னாவுக்கு இரயிலில் செல்ல நினைத்தோம்.

எல்லாப் பெட்டிகளிலும் அடைத்து வைத்ததுபோல் ஆட்கள் குவிந்திருந்தனர். கொஞ்சம் இடம் கிடைத்த பெட்டிக்குள் ஏறிக்கொண்டோம். ஒரு பெரியவர் எங்களிடம் பேச்சுக்கொடுத்தார். இன்னொருவர் அருகில் வந்து அமரச் சொல்லி இடம் கொடுத்தார். பீகார் மக்கள் உண்மையாகவே இனிமையானவர்கள். முகம் சுளிக்கும்படியோ, முகம் சுளிக்கும் ஒருவரையோ நாங்கள் இந்தப் பயணத்தில் பார்க்கவில்லை. இங்கே 2016 முதல் மதுவிலக்கு அமலில் உள்ளது. பாட்னா செல்லும்வரை கூட்டம் குறையவே இல்லை. இன்னும் நேரம் இருந்ததால் அருகில் லாஸா மார்க்கெட் சென்றோம். அங்கே நான் பையனுக்கு ஒரு ஜாக்கெட் வாங்கினேன். இங்கேயும் பேரம் இல்லை என்று போட்டிருந்தார்கள். ஆனால் 400 ரூ. விலையைக் குறைத்துக் கேட்டோம், கொடுத்துவிட்டார்கள். அடுத்து ஒரு டாக்சி பிடித்து விமானநிலையம் வந்து சேர்ந்தோம். எங்கள் இருவருக்கும் ஹைதராபாத் வரை ஒரே விமானம். அப்புறம் கண்ணனுக்கு காலை ஆறுமணிக்கு சென்னைக்கு விமானம். எனக்கு மதுரைக்கு 8 மணிக்கு. விமானச்சீட்டுகளுக்குத்தான் இந்தப் பயணத்தில் அதிகப்பணம் செலவானது. எனக்கு மதுரையிலிருந்து கிளம்பி, திரும்பிவர 22 ஆயிரம். அங்கே ஓராளுக்கு ஆன செலவு 10 ஆயிரம். மொத்தம் 32 ஆயிரம். ஷாப்பிங் செலவு தனி. இன்டிகோ பிரச்சினை இல்லாதிருந்திருந்தால் 15 ஆயிரத்துக்குள் (மதுரை) முடிந்திருக்கும்.
இவ்வாறாக பயணம் முடிந்து இன்று காலை மதுரை விமானநிலையம் வந்துசேர்ந்தேன். டாக்சி வேண்டுமா என்று ஆளாளுக்குக் கேட்க, ஒருவரிடம் மண்டேலா செல்ல (மண்டேலா என்றுகூட தலைப்பு வைக்கலாம்) எவ்வளவு என்று கேட்க அவர் 250 என்றார். அதிகம் என்றேன். சார் கொண்டுவந்து விட 200. கூட்டிச் செல்ல 250. இதுதான் ஸ்டேண்டர்டு ரேட். நீங்க எங்க வேணா கேளுங்க என்றார். நான் நடையைக் கட்டினேன் கட்டினேன், பார்த்தால் ஒரு நாதியில்லை. நான் மட்டும் நடந்து வந்துகொண்டிருந்தேன். தேவையின்றி நேரத்தை வீணடித்ததற்காக என்னை நானே நொந்துகொண்டபோது ஒரு டாக்சிக்காரர் எங்கண்ணே போணும் என்று கேட்கவும் மண்டேலா என்றேன். வாங்கண்ணே ஆட்டோ ரேட்தான், 150 ரூபாய் என்றார். என் சமயோசிதப் புத்தியை மெச்சிக் கொண்டேன்.
ஆட்டோக்காரர்கள் கஞ்சா அடித்துவிட்டு வண்டி ஓட்டுவதால் வரும் பிரச்சினைகளை, சில நாட்களுக்குமுன் விமானநிலையத்துக்கு அருகில் ஆட்டோக்காரர்களுக்கிடையில் நடந்த சண்டையில் ஒருவர் கொலையுண்டது பற்றி அவர் புலம்பிக்கொண்டு வந்தார். மண்டேலாவில் இறங்கியதுமே நாகர்கோவில் செல்லும் பேரூந்து வந்தது. என்னிடம் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருந்தன. இந்த நாகர்கோவில்காரர்கள் ஒரு தினுசானவர்கள். சதுரமாக இருந்தாலும் வட்டமாக வளைத்துக்கொடு என்று அடம்பிடிப்பார்கள். ஜிபே இருக்கிறதா என்றதும் பவ்யமாக ஸ்கேனரைக் காட்டினார். நெல்லைக்கு எடுத்துக் கொண்டேன். பெருவாரி நாகர்கோவில் ஓட்டுநர்களைப் போல வண்டி பிச்சாய்ப் பறந்தது. ஆஹா, சீக்கிரம் வீட்டுக்குச் சென்றுவிடலாம், நிறைய வேலைகள் பாக்கியிருக்கிறது. முடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
வண்டியில் அத்தனை ஆட்கள் இல்லை. ஆள் ஏற்றுவதைப் பற்றி அவர்கள் அலட்டிக் கொண்டதாகவும் தெரியவில்லை. அதற்குள் கயத்தார் டோல்கேட் வந்துவிட்டது. அதைத் தாண்டி ஒரு மோட்டலில் பேரூந்தை நிறுத்தினார்கள். நான் எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. சிறிதே சிறிது சிறுநீர் கழித்துவிட்டு மோட்டலில் ஒரு டீ வடை டோக்கன் வாங்கினேன். வடையும் டீயும் பாதியில் இருக்கும்போது திரும்பிப் பார்த்தால் ஓட்டுநரும் நடத்துநரும் ஏறிவிட்டார்கள். டீயை அப்படியே வைத்துவிட்டு வடையைக் குப்பைக்கூடையில் போட்டுவிட்டு விரைந்தேன். அதற்குள் வண்டி நகர்ந்துவிட்டது. அண்ணேய், ண்ணேய் என்று கத்தினேன். கடைசி இருக்கையில் இளையராஜா பாட்டைக் கேட்கவிடாமல் சத்தமாய் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த பெண்பிள்ளை திரும்பிப் பார்த்தாள். சைகையில் அவளிடம் வண்டியை நிறுத்தச் சொல்லுமாறு கூறியபடி ஓடினேன், ஓடினேன், ஓடிக்கொண்டே இருந்தேன். அவள் முகத்தை உள்ளே இழுத்துக் கொண்டாள். திரும்ப ஐந்து நொடிகள் கழித்துத் திரும்பவும் பார்த்தாள். திரும்பவும் திரும்பிக் கொண்டாள். ஒரு கணம் வண்டி நிற்கிறதா, செல்கிறதா என்று குழப்பம். பசி மயக்கமாக இருக்க வேண்டும். வண்டி போயே போய்விட்டது. அதில்தான் என் டிராலி பேக், பை இருந்தது. அதில் வீட்டுச் சாவி இருந்தது.
சத்தியமாய்ச் சொல்கிறேன், பேரூந்து நின்று ஐந்து நிமிடம்தான் ஆகியிருக்கும். நான் பதட்டத்தோடு மோட்டலில் நின்றுகொண்டிருந்த திருநெல்வேலி பேரூந்தில் ஏறினேன். உள்ளே பார்த்தால் முழுக்கவே காவல்துறை சீருடையில் பயிற்சியில் இருக்கும் இளவட்டங்கள். இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த ஓட்டுநரும் நடத்துநரும் அவரைத் திட்டினார்கள். கிறுக்குக் கூ$, தலைய எண்ண வேண்டாமா. இப்படியா வண்டிய எடுப்பான். ஓட்டுநர் வண்டி எண்ணைக் கவனித்திருந்தார். எனக்குத்தான் அந்தக்கூறு கிடையாது. பெயர், எண்கள் என் மனதிலும் தங்குவதில்லை. (போன பதிவில் அந்த ஆட்டோ பையனின் பெயரை சேகர் என்றேனில்லையா, அது கிடையாது. ஏதோ ஒரு பெயர் சொன்னான். மறந்துவிட்டது.) டிக்கெட்டுக்கு பணம் கொடுக்க வந்தேன். ஓட்டுநர் மறுத்துவிட்டார். அது காவல்துறையினருக்கு ஏதோ ஒப்பந்த அடிப்படையில் ஓடுகிறதாம், வாங்க முடியாது. பாவப்பட்டு ஏற்றிக்கொண்டதாகச் சொன்னார்.
அவர் என் டிக்கெட்டை வாங்கிச் சோதித்து எந்தக் கோட்டத்தைச் சேர்ந்த வண்டி என்று பார்த்து நெல்லை புதிய பேரூந்து நிறுத்தத்தில் ஏஜெண்டுக்கு போன் போட்டு வண்டியில் என் சுமைகளை வாங்கி வைக்குமாறு சொன்னார். அந்த ஏஜெண்ட் திரும்பக் கூப்பிடுவதாகச் சொல்லி வைத்தார். பேரூந்தில் இருந்த போலீஸ்காரர்கள் என்னிடம் எங்கே வசிக்கிறேன், எங்கே சென்று வருகிறேன், எப்படி நடந்தது என்று டிசைன் டிசைனாகக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் சொன்னார், நாறப் பயலுவ, எங்க தெருல ஒருத்தன் இருக்கான் பாத்துக்கங்க. பெண்டாட்டி புருசன் ரெண்டேருக்கும் நாரோயிலு. நாங்க ஏரியா நலச் சங்கத்துல கூட்டம் போட்டா வர்றதில்ல. துட்டும் குடுக்கதில்ல. கேட்டா ஒருநா சொல்லுகான், நாங்க நாரோயில்காரங்க. புளுத்தி. சவத்துமூதி தெருவுல தண்ணிக்குழாய் பதிக்கேம்ட்டு தோண்டிப் போட்டாங்க. அவன் வீட்டோரக் குழிய மட்டும் மூடாம நராச்சி விட்டுட்டாங்க. எங்கட்டதான் வந்து நின்னான். மொதல்ல காசக் கட்டுலன்னு சொல்லிட்டோம். இருக்கவன எல்லாம் கேணக் கூ$னு நினைச்சுட்டு இருக்கானுவ.
இன்னொரு காவலாளி, அடுத்தாளைப் பத்தி யோசிக்கவே மாட்டானுவ. இவன் டீயக் குடிச்சா போதுமா. வண்டில உள்ளவங்கள பொறுப்பாக் கொண்டு போறதுக்குத்தானே கண்டக்டர். என்ன மூதி வேல பாக்கான். இப்படியாக என் மனம் ஒருபுறம் சாந்தியடைந்து கொண்டிருந்தாலும் மறுபுறம் பதட்டமாக இருந்தது. புதிய பேரூந்து நிறுத்தத்தில் பிடிக்க முடியாவிட்டால் நாகர்கோவில் போகவேண்டும். ஒருநாள் முழுக்க வீணாகிவிடும். அந்த ஏஜெண்டுக்கு நடத்துநர் விளித்தார். அவர் கூட்டமாக இருப்பதால் தன்னால் நகரமுடியவில்லை என்று சொல்லிவிட்டார். இந்த வண்டி ஓட்டுநர் இதற்குமுன் டவுண்பஸ் ஓட்டியிருப்பார்போல. கூனாமூனா என்று ஓட்டிக் கொண்டிருந்தார். பயிற்சி காவலர்களை ஏஆர் லைனில் இறக்க வேண்டியிருப்பதால் என்னை வண்ணார்பேட்டையில் இறக்கிவிட்டார்கள். அங்கிருந்து புதிய பேரூந்து நிலையத்துக்கு இன்னொரு பேரூந்தில் ஏறினேன். நடத்துநரிடம் என் போன் நம்பர் தந்திருந்தேன். அவர் கூப்பிட்டு என் சுமைகளை வாங்கி வைத்திருப்பதாகவும் பு.பே.நி. போய் வாங்கிக்கொள்ளும்படி கூறினார். பு.பே.நி. உள்ளே நுழைந்ததும் சார் என்று அந்த நாகர்கோவில் வண்டி நடத்துநர் கூப்பிடுவது கேட்டது. வண்டி புதிய பேரூந்து நிலையத்திலேயேதான் நிறுத்தியிருந்தார்கள். உங்களுக்காகத்தான் சார் காத்துட்டு இருக்கோம். பாருங்க வண்டியக்கூட ஆஃப் பண்ணிட்டோம். நான் உங்க பேக்கு பை எல்லாம் திறந்து…உங்க போன் நம்பர் இல்லை. இல்லைனா கூப்பிட்டிருப்பேன். முதல்ல போன் நம்பரை எழுதி பேக்ல ஒட்டுங்க. நான், என்ன சார் அஞ்சு நிமிசம்கூட நிக்காம நீங்கவாட்டுக்கு வண்டிய எடுக்கீங்க? அப்படியே எடுத்தாலும் எல்லாரும் ஏறியாச்சான்னு சரிபார்க்க வேண்டாமா? சார் திருச்சில இருந்து நிக்காம வந்துட்டுருக்கோம், என்ன செய்ய என்றார். அதற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. நான் இறங்கியதும் திரும்பவும் சொன்னார், உங்க புக்கை எல்லாம் எடுத்து தேடிப் பார்த்தேன், போன் நம்பர் இல்லை. முதல்ல நம்பரை எழுதி வைங்க.
(நிறைவு)
