தமிழ்க் கவிஞர்களிலேயே அழகானவர் விக்ரமாதித்யன். அவர் சிரிக்கையில் முகமே மலர்ந்து நிற்கும். அவரது தாடிக்குள் தான் இதன் இரகசியம் புதைந்திருக்கிறது என்று நினைக்கிறேன். விக்ரமாதித்யன் அண்ணாச்சியுடன் நிழற்தாங்கல் அறக்கட்டளைக்காக கலந்துரையாடல் திருநெல்வேலியில் நடந்தபோதுதான் நெருங்கிப் பழக வாய்ப்புக் கிடைத்தது. கிட்டத்தட்ட அரைநாள் அவருடன் இருந்தேன். அப்போது கேள்விகளாகக் கேட்டுக்கொண்டிருந்த என்னிடம் அண்ணாச்சி,
“எலேய்..தர்த்கத்துக்குள்ள போகாதடா, அப்புறம் கவிதையே எழுத வராது”
“வராட்டிப் போகுது, விமர்சனம் பண்ணிட்டுப் போறேன்” என்றேன். எந்நேரத்தில் அப்படிச் சொன்னேனோ, இப்போது அண்ணாச்சியின் தொகுப்புக்கு விமர்சனம் செய்ய இங்கு நின்று கொண்டிருக்கிறேன். அண்ணாச்சியின் இந்தக் கவிதை வாசிக்கையில் அதில் “புத்தியை வருத்திக்கொள்ளாதவன் பூடகமானவன் மாதிரிதான் படுவான்” என்ற வரியைத் தாண்ட முடியாமல் நெடுநேரம் மனம் நின்றுவிட்டது. ஒரு வகை கழிவிரக்கம். தனிமையுணர்வு. புத்தியை வருத்திக்கொள்வதினால்தானே இத்தனையும். சரஸ்வதி தேவியிடம் வரம் கேட்பதாய் இருந்தாலும் புத்தியை வருத்திக் கொள்ளாதிருக்கும் வரத்தைக் கேட்பதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.
வடக்கேயும் தெற்கேயும்
அலைந்து திரியும் நாடோடிக் கவிஞன் ஒருவன்
நினைவில் வைத்திருக்க முடியாது எல்லோரையும்
எல்லாவற்றையும்
மறந்துபோய்விடுவதும் நிகழக்கூடியதுதான்
எத்தனை பேரை
சந்தித்திருப்பான்
எவ்வளவு விஷயங்களை
பார்த்திருப்பான்
அடையாளம் கண்டுகொள்ளவில்லையென்று
வருத்தப்படக் கூடாது
பழகியதெல்லாம் பொய்யாய்த் தானென்று
முடிவுகட்டிவிடக் கூடாது
நன்றியில்லையென
குறை கூறலாகாது
ஞாபகம் கொண்டிருக்கவில்லையென
புகார் பேசலாகாது
போதம் கடந்தவன்
புதிர்போலத்தான் தெரிவான்
புத்தியை வருத்திக் கொள்ளாதவன்
பூடகமானவன் மாதிரிதான் படுவான்
கூடக்குறைய இருப்பவனை
குறும்பலா நாதரும் கூத்தரும்தாம் புரிந்து கொள்ள முடியும்.
அண்ணாச்சியுடனான உரையாடலில் அவர் சொன்னார், “உணர்ச்சிகள் எல்லோருக்கும்தான் இருக்கிறது. எல்லோருக்கும்தான் வலிக்கிறது. எல்லோரிடமும் காமமும், காதலும் உண்டு. மொழியில் யார் பிடிக்கிறாரோ, அவர்தான் கவிஞர். மொழிதான் முக்கியம்” என்றார். எனக்கு இதில் மாற்றுக் கருத்து உண்டு. சொல்லப்போனால், இந்தக் கருத்துக்கு நேரெதிராய் நிற்கிறேன். மனிதர்களில் பெருவாரியானோர் வௌகீகவாதிகளே. எல்லோருக்கும் ஆழமான உணர்வுகள் அமைந்தாலும், தன்னிலிருந்து விலகி நின்று பார்க்கும் பார்வை, திகைப்பு, தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொள்ளுதல், தன் உணர்வுகளைப் பின் தொடர்தல், உள்ளுக்கும், புற உலகுக்குமான இடைவெளியை அறிதல் என்ற போராட்டமெல்லாம் இருப்பதில்லை. அது வெகு சிலருக்கான போராட்டம். எழுத்து வெளிப்படுவதே, இத்தகைய மனம் கொண்டவரிடமிருந்துதான். இத்தகைய மனம் கொண்டவரிடமிருந்து அதன் அழுத்தத்திலிருந்து சுய அனுபவத்திலிருந்து வார்த்தைகள் மேல் வருகின்றன. அதில்தான் உண்மையான அழகிருக்கும். எந்த மொழியாய் இருந்தாலும் கவிதை எழுதுபவருக்கு இதுவே முதல் உணர்வும், தான் என்பதனை ஒட்டுமொத்த உலகுடனும் பொருத்திப் பார்ப்பதும், அதன் உரசலும்தான் முதல்.
ஆனால் அண்ணாச்சி மொழிக்குள் இயங்குபவர். அவரிடம் வெளிப்படுவது மொழிப்பித்து. அந்தப் பித்துநிலை அபூர்வமானது. அவரது எல்லாக் கவிதைகளிலும் இதைக்க கண்டுணர முடியும்.
சிமிட்டி
சிமிட்ச்சிமிட்டித்தான் பேசுவாள்
சிமிட்டி
சிமிட்டி
சிமிட்டிச் சிமிட்டித்தான் சிரிப்பாள்
சிமிட்டிச் சிமிட்டித்தான்
பார்ப்பாள் சிமிட்டி
சிமிட்டி கேட்பதும்
சிமிட்டிச் சிமிட்டிததான்
நடக்கும்போதும் சிமிட்டி
சிமிட்டாமல் இராள்
மற்றதிலெல்லாம்
சிமிட்டி எப்படியோ
இந்தக் கவிதையில் பெரிதாய் உட்பொருள் என எதுவுமில்லை. ஒரு குழந்தை கிலுகிலுப்பையை கையில் வைத்துக்கொண்டு அப்படியும் இப்படியும் ஆட்டுவதுபோல சிமிட்டி என்ற வார்த்தை கவிதையில் புரள்வதைக் காணலாம். இதைத்தான் மொழிப்பித்து என்கிறேன். அண்ணாச்சி இந்தத் தொகுப்பில் சொல்லின் காதலன் என்றொரு கவிதை எழுதியிருக்கிறார். அவரைச் சொல்லின் காமுகர் என்றே சொல்வேன் அல்லது கவிதையின் காமுகர். அவரால் கவிதை எழுதாமல் இருக்க முடியாது. மொழியைத் தொடர்ந்து தழுவிக் கொள்ளாமல் ஒருநாளும் அவர் துயின்றதில்லை என்றுதான் தோன்றுகிறது.
சொல்லின் தோற்றம்
பச்சைமரகதம்
மரகதப்பச்சை
சிவப்புரத்தம்
ரத்தச்சிவப்பு
கருமேகம்
மேகக்கருப்பு
சொல்லின் தோற்றத்தை
சொல்லிக்கொண்டேயிருக்கலாம்.
இந்தக் கவிதையும் அவரது மொழிப் பித்தின் வெளிப்பாடே. சொற்களின் ஓசையின், அவற்றின் புணர்வின் மீது ஒரு குழந்தையைப் போல ஏற்படும் இந்த இலயிப்பு ஆச்சரியமூட்டுவது.
அண்ணாச்சியின் கவிதைகளில் மூன்று அம்சங்களைப் பொதுவாகக் காணலாம்.
- எளிமை
- மொழிப்பித்து
- இருமை.
இவை போக வடிவ ரீதியாக சீட்டுக்களை வைத்து வீடமைப்பது போல கவிதை வடிவத்தை அமைப்பார். இந்த வகையில் கடைசி வரியானது முத்தாய்ப்பாய் ஒரு தரிசனம் போல அமைவது. இவற்றை விரிவாகப் பார்க்கலாம்.
நாம் “எளிமை” என்னும் சொல்லை பிரத்யேகமான அர்த்தத்தில் பயன்படுத்துகிறோம். அதாவது பகட்டு என்பதற்கு எதிர்ச்சொல்லாக, வலிந்து செய்யப்படும் ஒரு விசயமாக. எளிமை என்பது இயல்பு. எளிமை என்பது இந்த அறையில் இப்போது நீக்கமற நிறைந்திருக்கும் காற்றைப் போன்றது. தன்னுணர்வின்றி நம் சுவாசமாக எப்படிப் போய் வருகிறதோ அத்தகைய தன்மையுடைது. அண்ணாச்சியின் கவிதை நடை இத்தகையது. எந்த அகச்சிடுக்கும் சொற்களில் வெளிப்படாத வண்ணம் அவரது எளிமையான சொற்களின் வடிவம் இரு்ககிறது.
எல்லாம் புரிகிறது
“இ”யைப் பார்த்து
“ரா” வழிவதைக் கண்டிருக்கிறான்
“தி”யைக் கண்டு
“அ” வழிவதைப் பார்த்திருக்கிறான்
விரட்டி விரட்டி
விழத்தட்டியவர்களையும் அறிவான்
இடங்கல் மடங்கலாக
மாட்டிக் கொண்டவர்களையும் தெரியும்.
உள்ளிருக்கையில்
வெளிப்பூட்டுப் போட்ட கதையெல்லாம் உண்டு
பழிமுடித்தவர்கள் பலியானவர்களும்
பழக்கம்தான்
அந்த நாளில்
அபத்தமாகப்பட்டது
இந்த வயதில்
எல்லாம் புரிகிறது
இந்தக் கவிதை ரொம்பவே எளிமையானதுதான் இல்லையா? வாலிபச் சேட்டைகளைப் பற்றிச் சொல்கிறது. சரி, கடைசி வரிகள் ஏன் இப்படி “அந்த நாளில் அபத்தமாகப் பட்டது? வாலிப வயதில் ஒரு இளைஞனுக்கு இந்த விசயங்கள் எப்படி அபத்தமாகப் படும்? அந்த வயதில் ஆன்மிக நாட்டத்தில் இருந்தானா? அந்த வயது என்பது எந்த வயது? ஒரு வேளை சிறு வயதிலா? சிறுவயதில் அப்படித் தோன்றினால், பிஞ்சில் பழுத்தவனின் மனதைப் பற்றிச் சொல்கிறதா? “இந்த வயதில் எல்லாம் புரிகிறது“ இது எந்த வயது?
பண்டார சந்நிதிக்கு இல்லை
கொண்டாட்டமும் கேளிக்கையும்
மனமே
மிகைதான்
உணர்வே
பகைதான்
வானைத் தொடுவதுபோல
வளர்ந்து நிற்கும் தேக்கு
பூமிக்குள்
புதையுண்டு கிடக்கும் மஞ்சள்
–
நீண்ட நெடுங்காலமாகிறது
நுரை ததும்பும்
தனிப் பதநீர் குடித்து
–
முல்லைமொக்குகள் பார்த்து
கொள்ளையற்ற காலம்
திரட்டுப்பால் தின்று
எத்தனையோ வருஷம்
–
அறமென்கிறார்கள்
விழுமியமென்கிறார்கள்
உதிரிகளை விளிம்புநிலையினரை
கட்டிலேயே சேர்ப்பதில்லை
நின்றுகொண்டேயிருக்கும் அம்மனிடம்
நிரம்பநேரம் முறையிடலாகுமோ
அமர்ந்த நிலையிலேயே அருள்பாலிக்கிறார்கள்
லலிதாம்பிகையும் காமாட்சியும் காளிகாம்பாளும்
–
கல்லால மரநிழலின் கீழமர்ந்து
மௌனோபதேசமும் செய்கிறான்
காலைத் துாக்கி நின்று
ஊர்த்துவதாண்டவமுமம் ஆடுகிறான்
இவனை
எப்படிப் புரிந்து கொள்வது
–
பகுத்தறிவு
பொதுப்புத்தி
தர்க்கம்
தத்துவம்
சித்தாந்தம்
வேதாந்தம்
என்றேனும் கேள்விப்பட்டிருப்பார்களா
அன்றாடங் காய்ச்சிகள்
இந்தக் கவிதையின் முதல் வரி, மனமே மிகைதான். இதை வாசித்ததிலிருந்து பல நாட்கள் விடாமல் உள்ளுக்குள் ஒலித்தபடி இருந்தது. என்ன ஒரு அழகு. மனமே மிகைதான். எத்தனையோ ஞானிகள் திரும்பத் திருப்பச் சொன்னதுதான். ஒரு கவிஞன் சொல்கையில் அது எவ்வளவு அழகாய் இருக்கிறது. இது ஒரு தரிசனம். இந்த வரியைக் கண்டடைய ஒருவருக்கு 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கிறது. ஓங்கியுயர்நத பெருமரம் கனிந்து தந்த பழம். அவ்வாறே, “உணர்வே பகைதான்”. இதையெல்லாம் சொற்களில் விளக்கக் கூடாது. மந்திரம் போல இவை வாசித்து உணர்ந்து அனுபவிக்க வேண்டும்.
மேலேயுள்ள கவிதையில் நாம் பார்க்கலாம். மனதில் ஆரம்பித்து புறவெளிக்கு வந்து அரசியல் பேசி முடிகிறது. அண்ணாச்சியின் கவிதைகளில் இந்தப் பண்மை நிறைய இடங்களில் காண முடிகிறது.
அண்ணாச்சி இரண்டிரண்டு வரிகளாக நடையை அமைக்கையில் அது ஒரு சிலம்பாட்டம் போல. மொழிப்பித்து நன்கு வெளிப்படுவதாக அமைந்திருக்கிறது. மேலும் இத்தகைய கவிதைகளில் இருமை நன்கு துலங்குகிறது. இத்தகைய கவிதைகளில் மொழியும் இருமையும் முயங்கி வெளிப்படுகின்றன
ஈரடியாய்
நிச்சயப்படுத்தி
சொல்லமுடியவில்லை எதையும்
நிச்சயித்து
இருக்க இயலவில்லை எதிலும்
நடக்கும்போதுான் நடக்கும் எந்த ஒன்றுமென
சும்மா இருப்பதும் உண்டு
சும்மா இருந்தால் எப்படியென
முயற்சி செய்வதும் உண்டு
கொஞ்ச காலத்துக்காவது குடிக்கக் கூடாதென்று
வைராக்கியமாகவும் இருப்பதுதான்
இதென்ன அயர்வூட்டும் (ஒரே போல) நாள்களென்று
விரதம் முறிக்கிறதும் சம்பவிப்பதுதான்
பணத்துக்காக அலையக் கூடாதென
மாசக்கணக்காக வீட்டிலேயே தங்கியிருப்பதும் நடக்கும்
என்ன இது தரித்திரமென்று (சலித்துப்போய்)
வேட்டைக்குக் கிளம்பிப் போவதும் நிகழும்
வலிந்து கவிதை செய்ய வேண்டாமென்று
விட்டுவிடுவதும் உள்ளதுதான்
அதெப்படி வாணாளை வீணாளாக்குவதென்று
சரக்கடித்துவிட்டேனும் எழுத முனையாமலுமில்லை
ஜோதிடரத்னா டாக்டர் நெல்லை வசந்தனிடம் கேட்டு
“பால்பாயசத்தைப் பார்த்து
கர்ம வினையைப் போக்கிவிடலாமே யெனவும் படும்
வேண்டியதில்லை
ஸ்ரீரமண மகரிஷிபோல
அனுபவித்தே கழித்துவிடலாமே யெனவும் தோன்றும்
இருமையைக் கண்டுணர்ந்த நாள்முதலாய்
இப்படித்தான் எல்லாமே
இது ஒருவகையான சுய விமர்சனக் கவிதை. இங்கிட்டும் அங்கிட்டுமாக அலைக்கழிவதைச் சொல்கிறது. இருமையைக் கண்டுணர்தல் என்பது ஒரு தரிசனமாகச் சொல்லப்படுகிறது. மனதின் நிலையாமை இந்தக் கவிதையில் கூட அகத்தில் தொடங்கி புறம் நோக்கிய நகர்வைக் காணமுடியும். பிரான்சிஸ் கிருபா கூட சொல்லியிருப்பார். இங்கு ஊற்றுப் போல சொற்கள் பெருகிவருகையில் ஏன் நவீன கவிஞர்கள் கட்டாந்தரையைப் போய்த் தோண்டுகிறார்கள் என்ற ரீதியில். சொற்கள் எல்லாம் புறத்தில் இருக்கின்றன. அகம் நோக்கி நகரும்தோறும் சொற்களுக்கடங்காத சித்திரங்கள், பிம்பங்கள், உணர்வுகளாக உள்ளன. நவீன கவிஞர்களின் சிக்கல் இதுதான். மேலும் மேலும் அகத்தை நோக்கிச் செல்லச் செல்ல வரிகள் புரிபடாமல் போய்விடுகின்றன. அண்ணாச்சியின் கவிதைகளில் எங்கும் அத்தகைய முடிச்சுகளை நாம் பார்க்க முடியாது, ஒரு சரிநிலையில் அகமும் புறமும் இணைந்து இயங்குவதால். சொற்கள் இலயத்தோடு, தடையின்றி வருகின்றன.
இந்த இருமைத் தன்மைக்கு இன்னொரு உதாரணமும் பார்த்துவிடலாம்.
பார்த்துக்கொண்டிருக்கையிலேயே
சப்தம்
நிசப்தமாகிறது
சராசரி
சித்தனாகிறான்
அருவி
ஆறாகிறது
கன்னிப்பெண்
குடும்ப விளக்காகிறாள்
தவழ்ந்து கொண்டிருந்த குழந்தை
எழுந்து நடக்கிறது
ஆளுங்கட்சி
எதிர்கட்சியாகிறது
திரையரங்கு
திருமணக்கூடமாகிறது
கல்வி
வியாபாரமாகிறது
இலக்கியம்
சந்தைப்படுத்தப்படுகிறது
இருக்கட்டும்
இருக்கட்டும்
பார்த்துக்கொண்டிருக்கையிலேயே
இந்தக் கவிதையும் இருமைத் தன்மைக்கு நல்லதொரு உதாரணம். நாம் முன்னரே பார்த்ததுபோல் அகத்தில் ஆரம்பித்து அப்படியே நகர்ந்து நகர்ந்து புறம் சார்ந்து பேசுகிறார். கடைசிவரி ஒரு வெடிப்பைப் போல திறக்கவில்லை. அது வெறுமனே தொடங்கிய இடத்தில் இருந்ததுபோல முடிகிறது. எத்தனையோ கோயில்கள், ஆள்கள் வந்து போய்க் கொண்டிருப்பவை, கைவிடப்பட்டவை எல்லாவற்றினுள்ளும் கருவறையில் கடவுள்தான். அப்போதிருந்து இப்போதுவரை அவர் செய்வதும் இதுதான். பார்த்துக்கொண்டிருப்பது.
அடுத்ததாக சீட்டுக்களை வைத்து வீடு கட்டுவது போன்ற கவிதை வடிவம். இதை இன்னொருவகையில் சொல்லலாம். ஒரு வீட்டின் கதவைத் தொடர்ந்து ஒரேமாதிரியாக “டொக் டொக்” என்று தட்டுவது. கடைசியில் கதவு படீரென்று திறக்கிறது. சமயங்களில் இந்தத் தட்டல்கள் வித்தியாசப்படும் அதாவது தட்டுவதற்குப் பதிலாக கதவைத் தள்ளுதல் (கதவைத் தட்டக் கையெடுத்தவுடன் கதவு படீரெனத் திறப்பதை ஹைகூ என்று நாம் சொல்லலாம்) இந்த வடிவத்தில் ஒரு சிக்கல் என்னவென்றால் இந்த “டொக் டொக்” என்ற சப்தம் ஒரு தடவை தட்டியாயிற்று எதற்குத் திரும்பத் திரும்ப? ஆனால் இரண்டாவது மூன்றாவது தட்டல்களை எடுத்துவிட்டால் கடைசிவரியின் அழுத்தம் குறைந்துவிடும். அது கவிதை வடிவைச் சிதைத்துவிடும். ஒவ்வொரு தட்டலுமே கடைசி வரிக்கு அழுத்தம் கொடுப்பதற்காகத்தான்.
பராமரிப்பு பணிகள்தாம்
நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன
குளிப்பது
சாப்பிடுவது துாங்குவது
உலகியல் வாழ்க்கைக்காக
ஓயாமல் ஒழியாமல் பிரயாசைப்படுவது
தலைமுறை தழைத்திருக்க
காலமெல்லாம் பணி்செய்வது
நாளும் கோளும் பார்த்து
பரிகாரம் செய்துகொண்டிருப்பது
நலம் விசாரிப்பது
நல்லது பொல்லதுக்குச் சென்றுவருவது
இவ்விதமாகவே கழிகிறது
இந்த வாழ்க்கை
இந்தக்கவிதையில் எந்த வரியையும் நீக்க முடியாது. கடைசி வரியைத் தவிர. அத்தனையும் ஒரேவிதமாக ஒரே விஷயத்தில் பல கூறுகளைச் சொல்லி வந்தாலும் எல்லா வரிகளும் தேவையாய் இருக்கிறது, எந்தளவு இது சரியாக அமைகிறதோ அது கடைசிவரிக்கான அனுபவத்துக்குத் தயார்படுத்துகிறது. இதே பாணியில் இன்னொரு கவிதையைப் பார்ப்போம்.
என்ன பாடு படுத்துகிறது.
பக்கத்துப் படுக்கை
காலியாகக் கிடந்தது
என்ன செய்தோம்
பக்கத்துப் படுக்கை
காலியாகக் கிடக்கிறது
என்ன செய்வோம்
பக்கத்துப் படுக்கை
காலியாகவே கிடக்கும்
என்ன செய்ய
என்னபாடு படுத்துகிறது
இந்தப் பக்கத்துப் படுக்கை
இது வாசித்தவுடன் ஒரு புன்னகையை வரவைக்கிறது. ஒரே விஷசயம்தான். காலத்தை மாற்றிப் போடுவதன் மூலம் அதன் அர்த்தம் எத்தனை விதமாக மாறிவிடுகிறது. ஒவ்வொரு பத்தியும் எத்தனை சாத்தியங்களுடன் இருக்கிறது. மூன்று பத்திகள் கிட்டத்தட்ட ஒரே மாரிதியாய். ஆனால் முழுக்கவும் வேறு வேறானதாய்.
அண்ணாச்சியின் கவிதைகளில் விமர்சிக்க நிறைய இருக்கத்தான் செய்கிறது. பிரச்சினை என்னவென்றால் அவை என்னென்னவென்று அவருக்கே தெரிந்திருப்பதுதான். தெரிந்தே ஒருவர் செய்கையில் தனியே விமர்சிக்க என்ன இருக்கிறது? உதாரணத்திற்கு, இந்தத் தொகுப்பில் கவிஞர்கள், பாடலாசிரியர்களைப் பாராட்டிக் கூட கவிதைகள் இருக்கின்றன. “காலாதீதம்“ என்ற சொல்லை ந.பிச்சமூர்த்திதான் முதலில் உபயோகித்தார். பிரமிள் இலலை என்று வாதித்து நிறுவும் ஒரு பத்தியைக்கூட கவிதையாகச் சொல்லியிருக்கிறார் எனவே இங்கு விமர்சனம் என்ற பெயரில் இவற்றில் எதையும் சொல்வது அர்த்தமற்றதாகவே படுகிறது.
அவருடைய சுய விமர்சன கவிதையொன்று,
ஜீவநதியொப்ப
ஜீவநதியொப்ப
எந்நாளும்
வற்றாதே இருப்பதில்லை கவித்துவம்
(நதி மூலம்
ஓர் அதிசயம்)
சுனையன்ன
எப்போதும்
சுரப்பதாய் அமைவதில்லை
(சுனை
ஒரு அற்புதம்)
பத்து வருஷம்
சிகரம்போல
இன்னொரு பத்துவருஷம்
சமவெளி மாதிரி
கூடிப்போனால்
இருபத்தைந்து முப்பதாண்டுகள்
(செய்திறம் கொண்டு
சிலகாலம்)
பிறகு பிறகு
செய்யுள்தான்
(வாசகன்
கண்டுபிடித்துவிடுவான்
நீர்த்துப் போய்விட்டது)
காலத்துக்கும் கவித்துவமுள்ள கவிஞன்
பூமியிலேயே பிறந்ததில்லை
அபூர்வமான எதுவம்
ஆயுசுக்கும் கூட வருவதில்லை.
நன்றி
கவிஞர் பாலா கருப்பசாமி