“சென்னையில் இருந்து என்ன செய்யப் போறே? இலக்கியம் பேசிக்கிட்டு இங்க ஒரு காரியமும் ஆகாது. ஒழுங்கா கிராமத்திற்குப் போய் பிழைக்கிற வழியைப் பாருப்பா” அழுத்தமான குரலில் அறிவுறுத்திக்கொண்டிருந்தார் விக்ரமாதித்யன். அவரது கை அனிச்சையாகத் தாடி நுனியை வருடிக்கொண்டிருந்தது. எதிரே இருபது வயது மதிக்கத் தக்க இளைஞன். எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. கவிஞர் விக்ரமாதித்யனா இப்படி பேசுகிறார் என்று. நீண்ட அறிவுரைக்குப் பிறகு என்னைப் பார்த்து “போகலாமா?” என்றார். நடக்க ஆரம்பித்தோம். “என்ன நம்பி, பயங்கர அட்வைஸ்” என்றேன். “பின்னே நாமளே மெட்ராஸ் வந்து படாத பாடு பட்டுக்கிட்டு இருக்கோம். இதுல இவனுக வேற…நாலைந்து கவிதைகள் எழுதிட்டு இலக்கியம் பண்றேன்னு அலையுறது தேவையா?” என்றார். “நீங்க மட்டும் போதுங்றீங்களா?” “பின்ன…” சொல்லிவிட்டு நடுரோட்டில் நின்று சத்தமாகச் சிரித்தார்.
“நம்பி” என அவரது நண்பர்களால் அழைக்கப்படும் விக்ரமாதித்யனின் பூர்வதேய நாமம் நம்பிராஜன். திருநெல்வேலிக்காரர். யோசித்துப் பார்க்கையில், நான் இலக்கிய உலகிற்குள் நுழையுறப்ப எனக்கு மிகவும் நெருக்கமான சிநேகிதர்களில் நம்பியும் ஒருவர்.
எழுபதுகளின் இறுதியில் “விழிகள்” என்ற சிறுபத்திரிகையில்தான் முதல்முதலாக நம்பியின் கவிதையைப் படித்தேன். அவரது கவிதை வரிகள் அன்றையச் சூழலில் மாறுபட்டுத் தோன்றின. சி.மணி, எஸ்.வைத்தீஸ்வரன், நாரணோ ஜெயராமன் போன்றோரின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தபோது “கரடி சைக்கிள் விடும்போது நாம் வாழ்க்கையை அர்த்தப் படுத்த முடியாதா…மலையேறும் வாழ்க்கையில் மகோன்னதம் தேடி என்ன பயன்?” நம்பி கவிதை வழியே முன்வைத்த கேள்விகள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. கவிதை என்பது “துாய உருப்பளிங்கு” என்ற பிம்பத்தைச் சிதைத்துப் புதிய தளத்திற்கு இட்டுச்சென்ற நம்பியின் கவிதை வரிகள். தொடர்ந்து பல்வேறு சிறுபத்திரிகைளில் வெளியான நம்பியின் கவிதைகள், அவரைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தின. ஒருநாள் காலகட்டத்தில் சமயநல்லுாரிலுள்ள எனது வீட்டிற்கு முன்னர் கையில் டிரங் பெட்டியுடன் பேண்ட்- சட்டை அணிந்த ஒல்லியானவர் நிற்பதைப் பார்த்தேன். பரஸ்பரம் அறிமுகமாகிக் கொண்டோம். அப்பொழுது தொடங்கிய நம்பியுடனான பேச்சு, இன்னும் தொடர்கின்றது.
நம்பி செல்லுமிடமெல்லாம் சில விஷயங்கள் பரவிக்கொண்டேயிருக்கும். அவர் சமீபத்தில் படித்த அற்புதமான புத்தகங்களைப் பற்றிய அபிப்ராயங்களைச் சொல்வார். மொழிபெயர்ப்பு வழியாக உலக இலக்கியத்தை வாசிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த எனக்கு நம்பியின் பேச்சு கொண்டாட்டமானது. ஜோதி நிலையம் வெளியிட்ட மொழிபெயர்ப்புப் புத்தகங்களைச் சிலாகிப்பார். இயல்பில் அவர் ஒரு தேர்ந்த வாசகர் பலரும் தாம் படித்த புத்தகங்களைப் பற்றிக் கருத்து கூறத் தயங்கும்போது. நம்பி துணிந்து அபிப்ராயங்களைக் கூறுவார். இருநுாறு மைல்கள் பயணம் செய்து கருத்தரங்கில் கலந்துகொள்ளும் சில நண்பர்கள் தேநீரும் மேரி பிஸ்கட்டும் சாப்பிட மட்டும் வாயைத் திறக்கும் சூழலில் நம்பியின் கருத்துகள் எனக்கு முக்கியமானவையாகத் தோன்றும். வங்கமொழி நாவலான அதீன் பந்தோபாத்யா எழுதிய “நீலகண்ட பறைவையைத் தேடி“ நாவலைத் தாண்டி தமிழில் ஒரு படைப்புகூட இல்லை என்று சவாலாகச் சொல்வார். அவருக்கு ஒரு படைப்பு பிடித்துவிட்டால் அதைக் கொண்டாடிவிடுவார். அதுதான் நம்பி.
நம்பியின் இன்னொரு முக்கியமான குணாம்சம், ஒத்த குணமுள்ள நண்பர்களை அறிமுகப்படுத்துவார். “உங்க ஊருக்குப் பக்கத்துலதான்…இருக்கார். அவரைப் போய்ப் பாருங்கள். அருமையான மனுஷர்” என்பார். அவரது சிபாரிசு, எனது சிறுபத்திரிகை நண்பர்கள் வட்டத்தை விரிவுபடுத்த உதவியதுண்டு. நம்பி நண்பர்களை இணைக்கும் பாலமாக இருந்தார்.
நம்பி பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றினார். அவர் நினைத்திருந்தால் ஏதாவது ஒரு பத்திரிகை அல்லது அலுவலகத்தில் நிரந்தரமாகப் பணியாற்றி இருக்கலாம். அவருக்குத் தொடர்ந்து தினமும் வேலைக்குச் செல்வதில் அலுப்பு. அலுவலகங்களில் பணியாற்றும் படைப்பாளிகளைப் பார்த்து “பகுதிநேர எழுத்தாளர்கள்” என்று கேலி செய்வார். மேலும் பகுதி நேர எழுத்தாளர்களால் ஒன்றும் புடுங்க முடியாது என்று சவால் விடுப்பார். நான் எரிச்சலுடன் சொல்லுவேன், “நம்பி..யாருக்குத்தான் வேலை பார்க்க ஆசை. வேறுவழி? மாதச் சம்பளக்காரங்க ஆதரவிலதான் உங்களுக்கு இப்ப குவார்டர் கிடைச்சிருக்கு. இதில எங்களையே திட்டுறீங்களே”என்று. அவருக்குள் அசைக்க முடியாத நம்பிக்கை “எழுத்தாளன் என்றாலே முழுநேரக் கலைஞன்” என்று. அவர் பத்தொன்பதாம் நுாற்றாண்டில் பிறந்திருக்க வேண்டிய புலவர். நிலப்பிரபு, ஜமீன்தாரின் ஆதரவில் செய்யுள் இயற்றிக் கொண்டு சுதந்திரமாகத் திரிந்துகொண்டிருக்க வேண்டிய, ”பாணர்” மரபில் வந்த கவிஞர்.
நம்பி வேலைக்குச் செல்லுவதில் ஆர்வம் காட்டுவதில்லையே தவிர, சிறுபத்திரிகை சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தர முயலுவார். வேலை பெற்றிடச் செய்ய வேண்டிய வழிமுறைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் விளக்குவார். அவரது பொறுப்புணர்ச்சி எனக்கு வியப்பைத் தரும். 1981 ஆம் ஆ்ணடு சூலை மாதத்தில் எனக்கு வேலை வாங்கித் தருவதற்காக தாய் பத்திரிகை அலுவலகத்திறகுக் கூட்டிச் சென்றார். அப்பொழுது பத்திரிகை ஆசிரியரான வலம்புரி ஜானிடம் பவ்யமாக நடந்துகொண்டது எனக்கு இப்பவும் நினைவிருக்கிறது.
நான் திருவனந்தபுரத்தில் தங்கியிருந்தபோது நம்பி என்னுடன் சில நாட்கள் தங்கினார். இருவரும் நீல.பத்மநாபனைப் பார்க்கப் போனோம். நீல.பத்மநாபனைச் சந்தித்தவுடன் என்ன பேசுவது என்று யாருக்கும் புலப்படவில்லை. ஒருவிதமாக இறுக்கம். நம்பிதான் தொடங்கினார், “ஆபிஸ் விட்டுவந்துசாயங்காலம் என்ன பண்ணுவீங்க?”
நீல.பத்மநாபன் சொன்னார். “அறு மணிக்கு இங்கிலிஷ் நியூஸ். ஆறு பதினைந்துக்கு மலையாள நியூஸ். ஆறு முப்பதுக்குத் தமிழ் நியூஸ் கேட்பன்”
நம்பி குறுக்கிட்டார். “மூணு நியூஸ்லயும் ஒரே செய்தியைத்தானே சொல்லுவான்” சூழல் மீண்டும் இறுக்கமானது. பிறகு நீல.பத்மநாபன் தன்னைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். எதிரில் இருந்த இரண்டு நபர்களின் மனநிலையை அவர் கணக்கில் எடுத்துக்கொள்ளாத வழவழப்பான பேச்சு. இருவரும் களைப்புடன் அவரது வீட்டை விட்டு வெளியே வந்தோம். சிகரெட்டைப் பற்ற வைத்து புகையை ஊதிய நம்பி, “இப்ப உடனே மலை ஏறணும். இல்லாட்டி நொம்பலம் தாங்காது” என்றார். இரவு போதமற்றுப் போனது என்று சொல்லவும் வேண்டுமா?“
இயல்பிலே யாரையும் நம்பி விடுகிற குணமுடையவர் நம்பி. சிலர் அவரை நேரில் பார்க்கையில், “அவர் தமிழின் முக்கியமான கவிஞர்” என்பதுபோல பேசுவார்கள். அவர் இல்லாதபோது எதிர்மறையான அபிப்ராயங்களை முன் வைப்பார்கள். இத்தகைய நண்பர்களைப் பற்றி அவரிடம் சொல்வேன். ஆனால் அவர் “அவனை விட்றேன்ம்பா…அவன் சொல்றது எனக்கு முக்கியம்பா..உனக்கும் அவனுக்கும் personal click” என்பார். “இல்லை நம்பி ..நீங்க சொல்றது தப்பு” என்று எவ்வளவுதான் காரண காரியத்துடன் விளக்கினாலும் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார். ஒருவர் மீதான எண்ணங்களை அவர் அவ்வளவு எளிதில் மாற்றிக்கொஉ ஒள்ள மாட்டார்.
நம்பிக்குப் பார்ப்பனர் சாதியைச் சார்ந்த எழுத்தாளர்கள் மீது எப்பவும் எரிச்சல். பேச்சுப் போக்கில் “பார்ப்பான்“ என்று கோபமாகத் திட்டுவார். அதற்கான காரணங்கள் என்னவென்று ஸ்துாலமாகத் தெரியவில்லை. சிலரைப் பிடிக்கவில்லையென்றால் சாதி அடிப்படையில் விமர்சிப்பது எதற்கு என்பது புரியாத விஷயம். அவருக்கு எப்படித்தான் எழுத்தாளர்களின் சாதி தெரியுமோ தெரியாது. எப்படியோ எல்லோரின் சாதியையும் தெரிந்து வைத்திருப்பார். அவருக்குப் பிடிக்காத எழுத்தாளரின் மீது சாதியைச் சொல்லி ஏவுகணைகளை ஏவிவிடுவார். சில அப்பாவிகள் பேச முடியாமல் மௌனமாக உறைந்து போவார்கள். நான் இது குறித்துப் பல தடகைள் அவரிடம் விவாதித்து இருக்கிறேன். “நம்பி உங்ககிட்ட முழுக்கப் பிள்ளைமார்த்தனமிருக்கு. அதுவும் திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்ன்னா சொல்லவே வேணாம். பார்ப்பானை விடச் சாதி ஆசாரம் பார்க்கிற ஆளுகளாச்சே…நீங்க ரெண்டு துண்டு சிக்கன் சாப்பிட்டிருக்கீங்களா..நீங்க திட்டுகிற ஆளுக பார்ப்பானர் இளைஞர்கள் எல்லாம் மட்டன் பிரியாணியை வெளுத்துக் கட்டுகிறார்கள. உங்களுக்கு அவியல், தாமிரபரணி தண்ணீர்தான் முக்கியம்” என்பேன். அவர் புருவங்களை உயர்த்தி “ச்..உன்கிட்ட பேசக் கூடாது“ என்று பேச்சினைத் திசை திருப்பிவிடுவார். சைவப் பிள்ளைமார் பற்றிய நம்பியின் சாதியப் பார்வை, சீரழிந்திடும் வாழ்க்கைப் போக்கில் அவரது இருப்பையும் அடையாளத்தினையும் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சி என்றே தோன்றுகிறது.
எண்பதுகளின் நடுவில் நான் சென்னையில் தங்கியிருந்தபோது சில இரவுகளை நான், நம்பி, துரை, விமாலாதித்த மாமல்லன் சேர்ந்து கொண்டாடியிருக்கிறோம். இரவு எட்டு மணிக்குப் பாண்டி பஜாரில் ஏதாவது ஒரு பாரில் தொடங்கும் பேச்சு, விடி விடிய சென்னையிலுள்ள தெருக்களில் விரியும். சங்கரரின் அத்வைதம், ஜே.ஜே.சில குறிப்புகள். ஸெல்மா லாகர் லெவ்வின் மதகுரு. வண்ணநிலவன்….எப்படி வேண்டுமானாலும் உரையாடல் தொடரும். ஏதாவது முரண்பாடாகச் சொன்னால், நம்பி கையை உதறிக்கொண்டு நடு ரோட்டில் நின்று புருவத்தினை உயர்த்துவார். அவருக்குப் பிடித்த விஷயமெனில் அவர் தேய்ந்துபோன பற்களின் வழியே “ஹா..ஹாவென உற்சாகத்துடன் சிரித்தவாறு நடுரோட்டில் நின்றுவிடுவார். “நம்பி நடங்க“ என்று நாம்தான் சொல்ல வேண்டும். திடீரென அவர் “துரை தாளும் பேனாவும் வேணும்” என்பார். ஏதாவது கடையில் காலி சிகரெட் பெட்டியை வாங்கிக் கிழித்து உள் பகுதியைத் தயாராக வைத்துக்கொண்டவுடன் அவர் கவிதை வரிகளைச் சொல்லத் தொடங்குவார். துரை ரொம்பப் பொறுப்புடன் எழுதிக்கொளவார்.இப்படிப் பல கவிதைகள் போதையின் உச்சத்தில் உருவாகியிருக்கின்றன.
சென்னையில் இருந்தபோது மாதந்தோறும் கே.வி.ராமசாமி என்ற இலக்கிய நண்பரின் வீட்டில் கூட்டம் நடைபெறும். அவர் அஞ்சல் நிலைய அதிகாரி. பழகுவதற்கு அருமையான மனிதர். வயது விதியாசமின்றி எல்லோருடனும் பழகுவார். ஏதாவது ஒரு புத்தகத்தினைப் படித்துவிட்டு, அவரது வீட்டில் கூடிக் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வோம். ஒருமுறை பூமணியின் “வெக்கை” நாவல் கூட்டத்திற்கு வண்ணநிலவன், மாமல்லன், நம்பி, துரை…இன்னும் பலர் வந்திருந்தனர். நானும் போனேன். நம்பிக்கு அந்த நாவல் சுத்தமாகப் பிடிக்கவில்லை. விவாதத்தின்போது உணர்ச்சி வயப்பட்ட நம்பி “பார்ப்பனிய எழுத்தாளர்கள் தமிழைச் சீரழிக்கின்றனர் என்று பேசினார். உடன் வண்ணநிலவன் குறுக்கிட்டு, “நம்பி மடத்தனமாகப் பேசாதீங்க..இலக்கியத்தைச் சாதியரீதியில் பார்க்கிறது ரொம்ப தப்பு” என்றார். நம்பி, “இல்லே ராமச்சந்திரன்..” என்று பேச முயன்றார். ஆனால் அவரோ, ”சும்மா இருங்க நம்பி” என்று அவரைப் பேசவிடாமல் அடக்கிவிட்டார். நம்பி “சரி..சரி” என்பதுபோல தலையை ஆட்டிவிட்டு அமர்ந்துகொண்டார். உண்மையில் நம்பி எதையம் ஏற்றுக்கொள்ளவில்லை.
நம்பி பல்வேறு ஊர்களுக்குச் செல்லும்போது, அவருக்கு மார்க்சிஸ்ட் நண்பர்கள் பல்வேறு வழிகளில் உதவியிருக்கின்றனர். ஆனால் மார்க்சியத் தத்துவத்தையும் அரசியலையும் கேலியாகப் பேசுவார். அவர் ஒரு நாவல் எழுதவிருப்பதாகவும் அதில் “கள்ள மார்க்சிஸ்ட்கள்“ என்று தனி அத்யாயத்தில் விரிவாக எழுதப் போவதாகவும் கிண்டல் செய்வார். பல இலக்கிய நண்பர்கள் நம்பியைப் பார்த்தபோது எரிச்சல் பட்டு ஒதுங்கியபோது. அவரைப் பொருளியல் ரீதியில் ஆதரித்தவர்களில் மார்ச்சிஸ்டுகள் நிரம்ப உண்டு.
தெண்ணுாறுகளின் இறுதியில் நம்பியின் ஸ்தானம் வேறுவகையாக மாறியது. இளம் கவிஞர்கள் அவரைச் செல்லமாக “அண்ணாச்சி“ என்று அழைக்கத் தொடங்கினார்கள் இவரும் இளம் கவிஞர்களுடன் நட்பைப் போற்றினார். மெல்லச் சிறுகதைகளும் எழுதத் தொடங்கினார். யதார்த்தத் தளத்தில் வெளியான அவரது சிறுகதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரால் நாவல் கூட எழுதியிருக்க முடியும். அதற்கான மொழி வளம் அவருக்குண்டு. ஏனோ மீண்டும் கவிஞர் என்ற கூட்டிற்குள் முடங்கிக்கொணடார். வளர்ந்து வரும் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகள் அவருக்குப் பிடித்துவிட்டால் போதும், கொண்டாடத் தொடங்கிவிடுவார். யவனிகா ஸ்ரீராம், பாலைநிலவன், கைலாஷ் சிவன்.. என்று பட்டியலிட ஆரம்பித்தார். இளம் கவிஞர்களை அவர் உற்சாகப்படுத்தும் விதம் உண்மையில் மேன்மையானது.
நம்பியைப் பற்றிப் பொதுவான குற்றச்சாட்டு நம்பி போதையுடன் கூட்டங்களுக்கு வந்து “கலாட்டா“ செய்கிறார் என்று. அவர் எல்லா கூட்டங்களுக்கும் அப்படிச் செல்வதில்லை. சிலர் ஏற்ப்பாடு செய்கின்ற கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்துவதற்காகவே திட்டமிட்டுச் செல்கின்றார் என்று எனக்குத் தோன்றுகிறது. சில வேளைகளில் இலக்கிய மேளாக்களில் நண்பர்களின் உற்சாகத்துடன் கரைந்து தன்னை மறந்த நிலைக்குப் போய்விடுவார். ஏதோ சிறு பத்திரிகைக்காரர்கள் என்றாலே பாரில் வசிப்பது போன்ற பிரமை பலருக்கு உள்ளது. தமிழகமெங்கும் பரவியுள்ள ஆயிரக்கணக்கான பார்களில் சிறுபத்திரிகைக்கார்கள் மட்டும்தான் வாடிக்கையாளர்களா?
நம்பிக்குத் தான் ஒரு major poet, பாரதிக்குப் பிந்திய கவிஞர்களில் முதன்மையானவர் என்று ஆழ் மனதில் நம்பிக்கை உண்டு. இது குறித்துக் கடுமையாக நானும் அவரும் வாதித்திருக்கிறோம். நவீன உலகில் கவிதையின் இடமே கேள்விக்குள்ளாகும்போது கவிஞன் மட்டும் பண்டைய அர்த்தத்தில் வாழ்ந்திட இயலுமா? அவரது கவிதைகள் பற்றிய அபிப்ராயங்களை குறிப்பாக ஒரே மாதிரி எழுதிக் குவிப்பதைப் பற்றி விமர்சித்திருக்கிறேன். அது அவருக்கு நிரம்ப எரிச்சலுாட்டும் என்பது எனக்கு நன்கு தெரியும்.
ஒரு காலகட்டத்தில் நக்கீரன் கோபால் முயற்சியினால் சிகிச்சைக்குப் பிறகு முழுக்க மாற்றமடைந்து புதிய மனிதராக மாறினார். திடீரென மீண்டும் தொடங்கிவிட்டார். நம்பியிடம் தோழமையுடன் காரணத்தைக் கேட்டேன். “தெளிவாக, ஒழுங்குடன் இருந்தால் கவிதை எழுத முடியலை…அதான் மீண்டும் ஆரம்பிச்சிட்னே்” என்றார். என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. கர்ணனுக்குக் கவச குண்டலம் மாதிரி நம்பிக்கு கவிதை எழுதுவது. அது இல்லாவிடில் அவரது வாழ்க்கை அர்த்தமிழந்து விடும். சங்க இலக்கிய மரபில் கவிஞனாகவே வாழ விரும்பிடும் நம்பியைத் தடுத்திரும் பொருளியல் சூழலினை எப்படிப் பார்ப்பது? இன்னும் சொல்லப்போனால் சித்தர் மரபில் வந்தவராக நம்பியின் வாழ்க்கையையும் கவிதைகளையும் அடையாளம் காணவியலும். இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியத் தமிழ்க் கவிதை மரபில் நம்பிக்கெனத் தனித்த இடமுண்டு. தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது குறித்து நன்கு அறிந்திருந்தும், கவிஞராக வாழ்ந்திடுவதற்காக அவர் தரும் விலை அதிகம்.
நன்றி-
ந.முருகேசபாண்டியன்