
நமது மொழியில் அதிகமாகக் கையாளப்படும் இலக்கிய வடிவமாகத் திகழ்வது கவிதையே என்ற போதிலும் அது குறித்த மதிப்பீடுகள், விவாதங்கள், உரையாடல்கள் என்று பார்த்தால், மிகக் குறைவான பதிவுகளே காணக் கிடைக்கின்றன. அவ்வகையில் விக்ரமாதித்யன் எழுதியுள்ள ‘தமிழ்க்கவிதை மரபும் நவீனமும்’ என்ற இத்தொகை நூல், ஒரு அவசியமான வரவு எனலாம். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கவிதை எழுதி வரும் விக்ரமாதித்யன், தமிழில் பரவலான வாசக கவனத்தைப் பெற்றவர். எளிய பதப் பிரயோகங்களும் மொழித் திருகல்களற்ற நேரடியான நடையும், உள்ளார்ந்த சப்த நயமும் கொண்ட அவருடைய கவிதை வரிகளினால் வசீகரிக்கப்படாத இளம் வாசகர்கள், கவிஞர்கள் குறைவு. அவர் சங்க காலம் தொடங்கி இன்று வரையிலுமான தமிழ்க் கவிதைகள் குறித்து அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
கவிதையைப் பற்றி இவர் கொண்டிருக்கும் நம்பிக்கைகள், கருத்துகள் வரையறைகள் ஆகியவற்றைப் பற்றி, சிறிதும் பெரிதுமான இந்தக் கட்டுரைகளின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இன்று எழுத வருகிற ஒரு இளங்கவிஞனுக்கு நம் மொழியின் மரபு இலக்கியங்களுடன் பரிச்சயம் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தும் விக்ரமாதித்யன், சங்கக் கவிதைகள் முழுவதும், காவியத்தில் கம்ப ராமாயணம், பக்தி இலக்கியங்களில் ஆண்டாள் முழுக்க, ஆழ்வார்கள், நாயன்மார்களில் முடிந்த அளவு, காப்பியங்களில் சிலம்பும் மேகலையும், சிற்றிலக்கியங்களில் குறவஞ்சியும் பள்ளும் தனிப் பாடல்களில் அவ்வையார், காளமேகம் முதலியவற்றை குறைந்தபட்சம் வாசித்தறிவது அவசியம் என்கிறார்.
இவற்றுள் தமிழ்க்கவிதை மரபின் உச்சம் சங்கக் கவிதைகளே என்று குறிப்பிடும் விக்ரமாதித்யன், அவற்றின் தொடர்ச்சியாகவே அதே எளிமையோடும் நேரடித் தன்மையோடும் இன்றைய நவீன கவிதைகள் எடுதப்பட வேண்டும் என்று கூறுகிறார். தமிழின் மற்ற எந்தக் காலகட்ட கவிதைகளைக் காட்டிலும் குறிப்பமைதியும் படிம அடர்த்தியும் உவமை உருவக அணிகளும் கொண்டவை சங்கக் கவிதைகள். அந்தக் கவிதைகளை எளிமையானவை என்று எவ்விதம் விக்ரமாதித்யன் கூறுகிறார் என்பது விளங்கவில்லை. தவிரவும் இன்றைக்கு எழுதப்பட வேண்டிய கவிதைகள் என்பதற்கு அவர் கற்பிக்கும் இலக்கணம். எளிய சொற்கள், வித்தைகளற்ற, தத்துவ விசாரங் கள் தொனிக்காத, நேரடித்தன்மை கொண்ட வரிகள், அறிவின் சுமை ஏதுமின்றி மண்ணிலிருந்தும் மனசிலிருந்தும் முகிழ்ப் பவை போன்றன. விக்ரமாதித்யனும் மொழிநடையில் அவரை அடியொற்றி வரும் சிலரும் எழுதுகிற, ஒரு குறிப்பிட்ட வடிவிலமைந்த கவிதைகளே இந்த வரையறைக்குள் பொருந்துவன. தமிழின் குறிப்பிடத்தகுந்த கவிஞர்களிலொருவர் விக்ரமாதித்யன். ஆனால், அவர் எழுதும் வகையிலமைந்தவை மட்டுமே நல்ல கவிதைகள் என்பதாக தொனிக்கும் இந்தக் கருத்து ஏற்புடையதன்று. ஏனெனில், ஒரு மொழியின் கவிதைகளுக்கு இயல்பாகவே பல முகங்களும் பல குரல்களும் பல தொனிகளும் உண்டு.
இந்தக் கட்டுரைகளின் வாயிலாக, தன்னுடைய ரசனையை அளவீடாகக் கொண்டு இவர் முன்வைத்துச் செல்லும் கருத்துக்களில் வெளிப்படுவது அவருடைய சொந்த நம்பிக்கைகளும் அதன் வழிப்பட்ட அவரது முடிவுகளும் மட்டுமே. இவற்றில் சிலவற்றிற்கு தர்க்கரீதியான எந்தவித காரணங்களும் தரப்படவில்லை என்பதால், இந்த நூலில் அவர் முன்வைக்கும் சில கருத்துக்கள் ஒன்றிற்கொன்று முரண்பாடாக அமைந்துள்ளன. உதாரணமாக, தமிழ்க் கவிதைப் பண்புகள் பற்றிப் பேச வருமிடத்தில் எளிய மனிதர்களின் எளிய வாழ்வை எடுத்துப் பேசும் கவிதைகள் இயல்பாகவே தளத்திலேயே இருக்க முடியும். உள்ளபடியே சங்கம்தான் கவிதை இயல்பில், பண்பில் சரியானது. கவிதை ஒருக்காலும் பதார்த்தத்தை மீறிப் போய்விடலாகாது என்பதில் சங்கப் புலவர்கள் கவனம் கொண்டிருந்திருக்கிறார்கள் (பக்கம் 51-53) என்று யதார்த்தத்தினை வலியுறுத்திப் பேசுகிற விக்ரமாதித்யன் அடுத்து வரும் கட்டுரையில் மாயத்தன்மை உள்ள கவிதைகளே உயர்ந்தது என்று வாதாடவும் செய்கிறார். கவிதை என்பது, மொழியில் கட்டப்படுகிற மாயம். மொழியில் மாயத்தை உண்டு பண்ணத் தெரியாதவன் ஒருபோதும் சிறந்த கவிஞனாக மாட்டான் (பக்கம் 58-60) என்கிறார். யதார்த்தம், மாயம் என்பதற்கு அவர் கற்பிக்கிற மரபான அர்த்தங்களை, நவீன இலக்கிய விமர்சன சொல்லாடல்கள் எண்பதுகளிலேயே கடந்து வந்துவிட்டன.
அவ்வப்போது எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்குகையில், இதுபோன்று முரண்படத் தொனிக்கும் கருத்துகளையும் கூறியதையே கூறும் கூற்றுகளையும் தவிர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இந்தக் கட்டுரைகளில் வெளிப்படும் முக்கியமான தன்மையாக இளங்கவிஞர்கள் மீது இவர் கொண்டிருக்கும் கவனமும் கரிசனமும் இந்த நூல் நெடுகிலும் வெளிப்படுவதைச் சொல்லலாம். சாத்தியமான இடங்களிலெல்லாம் ஏதேனும் ஒரு இளம் கவிஞனின் பெயரையோ கவிதை வரிகளையோ குறிப்பிட இவர் தயங்குவதில்லை. நம் காலத்து பாரதி என்று லஷ்மி மணிவண்ணனைக் குறிப்பிடுவது போன்ற சில தருணங்களில் இப்பரிவு தர்க்கமேதுமற்ற வெற்றுப் புகழ்ச்சியாகவே எஞ்சிவிடுகிறது. என்றாலும், முழுநேரக் கவிஞனொருவனின் கவிதை பற்றிய எண்ண விசாரங்கள் என்ற வகையில் கவிதை வாசகர்களின் கவனத்திற்குரியது இந்த நூல்.
நன்றி – க.மோகனரங்கன்

