
நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் என்றென்றைக்கும் தவிர்க்க இயலாத, அதே சமயம் தொடர்ந்து விவாதங்களுக்கு உள்ளாகி வரும் மாபெரும் ஆளுமை சுந்தர ராமசாமி. தமிழிலக்கிய வாசகர்களிலும் சரி, விமர்சகர்களிலும் சரி, பாதிப்பேர் அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்; மீதிப்பேரோ அவரது இலக்கியக் கோட்பாடுகளையும் அணுகுமுறைகளையும் கடுமையாகச் சபித்தும் விமர்சித்தும் வருகிறார்கள். ஆனால், இந்த முரண்பாடான எதிர்வினைகளே சுந்தர ராமசாமியின் இலக்கியச் சிறப்பிற்குச் சான்றாக அமைகின்றன.
தாம் வாழ்ந்து, இயங்கிக் கொண்டிருந்த காலத்திலும் சரி, அவர் மறைந்து அவரது படைப்புகள் மட்டுமே விழித்திருந்து நம்மோடு உரையாடிக் கொண்டிருக்கும் இக்காலத்திலும் சரி, அவர் மீதான நேர்மறை விமர்சனங்களைவிட, எதிர்மறை விமர்சனங்களாலேயே அவர் மீண்டும் மீண்டும் உயர்த்தப்பட்டு வருகிறார் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
ஒரு படைப்பாளுமை முழுமையான வீச்சைக் கொண்டிருக்கும் போதுதான் இத்தகைய நிகழ்வுகள் சாத்தியமாகின்றன. அதற்குக் காரணம், சுந்தர ராமசாமியின் படைப்புகள் வெறும் தட்டையான வாசிப்புக்கு உட்படுபவை அல்ல. அவை எல்லா வகையான புகழ்ச்சிகளுக்கும் கடுமையான கண்டனங்களுக்கும் தர்க்கங்களுக்கும் ஏன் அவதூறுகளுக்கும்கூட இடங்கொடுக்கும் வகையில் வியக்கத்தக்க ‘விரிவும் ஆழமும்’ கொண்டு அமைந்திருக்கின்றன.
சிறுகதை என்ற இலக்கிய வடிவம் குறித்து மிகத் தெளிவான, கறாரான கோட்பாடுகளைச் சுந்தர ராமசாமி தன் வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்தார். ஒரு சிறுகதை எப்படித் தொடங்க வேண்டும், அதன் மையச் சரடு எப்படி வளர வேண்டும், அதன் முடிச்சு எப்படி அவிழ்க்கப்பட வேண்டும் அல்லது திறந்த நிலையில் விடப்பட வேண்டும் என்பதில் அவர் மிகக் கவனமாக இருந்தார். வடிவப் பிசகோ, தேவையற்ற சொல் நீட்சியோ, தளர்வோ அவரது எந்தவொரு சிறுகதையிலும் எவரும் எளிதில் கண்டுவிட முடியாது. அந்த அளவிற்குச் சிற்பியைப் போலச் செதுக்கப்பட்ட மொழி அவருடையது.
ஆனால், இந்த வடிவ நேர்த்தியே தற்கால விமர்சகர்களுக்கும் பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்களுக்கும் அவரைக் குறைத்து மதிப்பிடுவதற்கான ஓர் ஆயுதமாக மாறிப்போனது விந்தைதான். ‘சுந்தர ராமசாமி ஒரு நவீனப் படைப்பாளி அல்லர், அவர் மரபான வடிவச் சிறைக்குள் சிக்கிக் கொண்டவர்’ என்று கூறி அவரைப் புறந்தள்ளுவதற்கு இந்த வடிவக் கறார்த்தன்மையையே அவர்கள் காரணமாக்குகிறார்கள்.
இன்றைய நவீன, பின்நவீனப் படைப்பாக்க முயற்சிகளின் ஆதார சுருதியாக ‘வடிவச் சிதைவு’ (Deconstruction) மற்றும் ‘வடிவ மறுப்பு’ ஆகியவையே முன்னிறுத்தப் படுகின்றன. கதையின் தொடக்கமும் முடிவும் சிதறடிக்கப்படுவதே நவீனத்துவம் என்ற மாயை நிலவுகிறது. ஆனால், அடிப்படையில் ‘வடிவச் சிதைவு’ என்பது ஒரு வகையான இலக்கிய உத்தி மட்டுமே. உத்தியை மட்டுமே நம்பி எழுதப்படும் எந்தவொரு படைப்பும் எந்தக் காலத்திலும் நிலைத்து நின்றதற்கான முன்மாதிரிகள் உலக இலக்கியத்திலோ, தமிழ்ப் படைப்புலகிலோ இல்லை.
சுந்தர ராமசாமி சிறுகதையின் செவ்வியல் வடிவத்தைப் பேணிப் பாதுகாப்பவர். அதேவேளையில், அந்தச் செவ்வியல் வடிவத்திற்குள்ளாகவே நவீன வாழ்வின் வீழ்ச்சிகளையும், மனச் சிக்கல்களையும், கலை நுட்பத்தையும் மிகச் சாமர்த்தியமாகப் பொதித்து வைத்துப் பாதுகாப்பவர். ஒரு வாசகன் அந்த வடிவத்தைத் தாண்டி உள்ளே நுழையும் போதுதான் அங்குப் புதைந்திருக்கும் கலை நுட்பத்தின் தரிசனம் அவனுக்குக் கிடைக்கிறது. சுந்தர ராமசாமியின் படைப்பாளுமையின் முழுவீச்சும் அவரது வாழ்நாள் உழைப்பும் அக்கலை நுட்பத்தை ஒவ்வொரு சொல்லிலும் உற்பத்தி செய்வதிலேயே குவிந்திருந்தது எனலாம்.
சுந்தர ராமசாமியின் ஆகச்சிறந்த கதைகளில் ஒன்றான ‘சன்னல்’ சிறுகதை, அவரது கலை நுட்பத்திற்கு மிகச் சிறந்ததோர் உதாரணமாகும். 1958-ஆம் ஆண்டு, இலக்கிய வரலாற்றில் தனிமுத்திரை பதித்த ‘சரஸ்வதி’ இதழில் இக்கதை வெளியானது. இக்கதையின் மையக் கருப்பொருள் மிகவும் விசித்திரமானது, வலிகள் நிறைந்தது. கை, கால்கள் செயல்படாமல், உடல் அசைவற்று, செவியும் விழியும் மட்டுமே இயங்கக்கூடிய துயரமான நிலையில், பல மாதங்களாகப் படுத்த படுக்கையாகக் கிடக்கும் ஒருவரின் மனவோட்டத்தை, தவிப்பை, அவதானிப்புகளைப் பிரதானமாகக் கொண்டு இக்கதை பின்னப்பட்டுள்ளது.
இக்கதையில் வரும் நோயாளராகப் படைப்பாளரான சுந்தர ராமசாமியே உருமாறி நிற்கிறார். முதல் நபரின் கூற்றாகவே, ‘நான்’ என்ற தன்மையிலேயே கதை விரிந்து செல்கிறது. உடல் முடங்கிய நிலையில், படுக்கையில் கிடக்கும் ஒருவரின் விழிகளில்படும் மிகச் சாதாரணக் காட்சிகளும் செவிகளில் விழும் சின்னஞ்சிறு ஒலிகளுமே கதையின் நகர்வுக்குப் பெரும் உந்துசக்தியாகத் துணை நிற்கின்றன.
ஒரு கட்டத்தில், அக்காட்சிகளிலும் ஒலிகளிலும் வெளிப்படும் நேர்த்தியும் துல்லியமும், ‘இது ஒருவேளை சுந்தர ராமசாமியின் சொந்த அனுபவமாகவே இருக்குமோ?’ என்று வாசகர்களை எண்ணத் தூண்டுகிறது. அந்த அளவிற்குப் புனைவுக்கும் நிஜத்திற்குமான கோட்டை அவர் அழித்து விடுகிறார். ‘ஒரு வாசகரைத் தன் எழுத்தின் நம்பகத்தன்மைக்குள் முழுமையாக ஆழ்த்திவிடுவது’ என்பது படைப்பாளருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியல்லவா?
சிறுகதையின் முதல் வரி என்பது வாசகனைக் கதைக்குள் இழுத்துப் போடும் ஒரு தூண்டில். “நான் படுத்திருந்த கட்டில், சன்னல் அருகே கிடந்தது” என்பதுதான் ‘சன்னல்’ கதையின் முதல்வரி. மிகவும் சாதாரணமான ஒரு வரியாகத் தோன்றும் இதில்தான் கதையின் மொத்த முடிவும் ஆன்மாவும் அடங்கியிருக்கிறது.
இதே வரி கதையின் இடைப் பகுதியிலும் மீண்டும் அழுத்தம் கொடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நோயாளருக்கு உலகத்தைக் காட்டும் ஒரே திரையாக இருக்கும் அந்தச் சன்னலின் அருகில் போடப்பட்டுள்ள கட்டில், அங்கு இல்லாமல் அறையின் வேறு இருட்டு மூலைக்கு, சன்னல் பார்வையில்லாத இடத்திற்கு மாற்றப்படுவதே இக்கதையின் மைய முடிச்சு. தன்னுயிரினும் மேலாக நேசித்த அந்தச் சன்னல் பார்வையைத் தொலைக்கும் வலியே கதையின் உச்சம். அந்த முடிச்சையும் வரப்போகும் பேரிழப்பையும் கதையின் முதல் வரியிலேயே படைப்பாளர் மிக நுட்பமாகக் குறிப்பாக உணர்த்தி விடுகிறார்.
இக்கதையைப் படித்துக் கொண்டு செல்லும் வாசகருக்குப் பல்வேறு கேள்விகள் மனத்தில் எழுவது இயல்பு. அவ்வாறு கேள்விகளை எழுப்பச் செய்து, அந்தத் தேடலின் வழியே வாசகரைக் கதைக்குள் பயணிக்கச் செய்யும் நோக்கத்துடனேயே சுந்தர ராமசாமி கதையின் பல்வேறு இடங்களில் குறிப்புகளையும் (Clues), குறியீடுகளையும் (Symbols) ஆங்காங்கே தூவிச் சென்றுள்ளார்.
வாசகர் மனத்தில் எழும் முதல் இயல்பான கேள்வி: ‘இந்த நோயாளர் எத்தனை நாள்களாக இப்படிப் படுத்த படுக்கையாக முடங்கிக் கிடக்கிறார்?’ என்பதுதான். இக்கேள்விக்கான விடையினைப் படைப்பாளர் மிகச் சாமர்த்தியமாக முதல் பத்தியிலேயே, “இவ்வளவு நீண்ட நாட்கள் கட்டிலோடு கட்டிலாய்க் கிடக்க நேருமென்று எண்ணவேயில்லை. ஐந்தாறு மாதங்களாகி விட்டன. இல்லை இன்னும் அதிகமாகவே இருக்கும். என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது” என்று ஒரு நோயாளரின் சலிப்போடும், கால உணர்வு மழுங்கிப்போன குழப்பத்தோடும் தருகிறார்.
ஆனால், வாசகனுக்கான உண்மையான விடை அடுத்த சில பத்திகளில் வேறு ஒரு காட்சி வழியே துல்லியமாக உணர்த்தப்படுகிறது. “என் கண்களுக்கு ரோடு தெரியாது. ஆனால், மின்சாரத் தூண்களின் தலையும் தலையோடு ஓடும் கம்பிகளும் தெரியும். நான் படுக்கையில் விழுந்த புதிதில் கவனித்திருக்கிறேன். முன்னை விடவும் கம்பிகள் மிகவும் தொய்ந்து போய்விட்டன. எப்பொழுது கம்பியை இழுத்துக்கட்ட ஆட்கள் வருவார்கள்? என்று எண்ணினேன். பின்னாள் ஒரு சமயம் பார்த்த பொழுது பழையபடி விறைப்பாக இருந்தது” என்று நோயாளர் கூறுகிறார். இது சாதாரணக் காட்சியன்று. அறிவியல் நுட்பம் கலந்த காலக் குறியீடு.
வெயில் காலத்தில் (கோடையில்) மின் கம்பிகள் விரிவடைந்து தொய்ந்து காணப்படுவதும், பனிக் காலத்தில் (குளிர்காலத்தில்) அவை சுருங்கி விறைப்பாக மாறுவதும் இயற்பியல் விதி. மின்சார வாரிய ஊழியர்கள் குளிர்காலத்தில் மின் கம்பிகளைத் தளர்த்திக் கட்டுவதும் கோடைக்காலத்தில் இறுக்கிக் கட்டுவதும் நடைமுறையில் உள்ள ஒன்று. “தொய்ந்து போய்விட்டன… மீண்டும் விறைப்பாக இருந்தன” என்ற கூற்றின் வழியாக, நோயாளர் கோடை மற்றும் குளிர் என இரண்டு பெரிய பருவ காலங்களைக் கடந்து படுக்கையிலேயே இருக்கிறார் என்பதனை மிக நுட்பமாக வாசகரால் கணித்துவிட முடிகிறது.
இது தவிர, காலத்தைக் குறிக்க இயற்கையின் சுழற்சியைக் காட்டும் மற்றொரு குறிப்பும் கதையில் ஆழமாகப் பதிவாகியுள்ளது. “சில சமயம் எதிர்வீட்டு வாழைத் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பேன். நான் படுக்கையில் விழுந்த அன்று தான் கன்றுகள் நட்டார்கள். அவை, என் கண் முன்னே வளர்ந்தன. வளர்ந்து பெரிதாயின.. பின்னாளில் குலை தள்ளிற்று” என்று நோயாளர் விவரிக்கிறார்.
வாழைக்கன்று நடப்பட்டு, அது முழுமையாக வளர்ந்து குலை தள்ளுவதற்கு ஏறத்தாழ பத்து முதல் பன்னிரண்டு மாதங்கள் ஆகும். ஆக, இந்தத் தன்னிலை விளக்கத்தின் வழியாகவும் நோயாளரின் படுக்கை காலம் கிட்டத்தட்ட ஓராண்டை நெருங்குகிறது என்பதை எண்களைப் பயன்படுத்தாமலேயே படைப்பாளர் உணர்த்தி விடுகிறார். இதுவே சுந்தர ராமசாமியின் ‘காட்டுதல்’ (Show, don’t tell) உத்தியின் உச்சம்.
வாசகருக்கு எழக்கூடிய இரண்டாவது முக்கியமான கேள்வி: ‘இந்த நோயாளரின் வயது என்ன? இவன் சிறுவனா, இளைஞனா அல்லது முதியவரா?’ என்பதாக இருக்கும். இதற்கான விடை கதையில் எங்கும் நேரடியாகச் சொல்லப்படவில்லை; மாறாக, மிகவும் பூடகமாக ஓர் உளவியல் குறியீடாகச் சொல்லப் பெற்றுள்ளது.
நோயாளர் தனது சன்னல் வழியே காணும் ஒரு காட்சியை விவரிக்கிறார்: “அய்யரின் வீட்டுக் கூரையில் ஒரு பக்கம் மட்டும் தெரியும். அங்குச் சில சமயம் காக்காய்க் கூட்டம் கூடிவிடும். காக்காய்ப் பள்ளிக்கூடம் போலிருக்கிறது. சற்றுப் பெரிய, காக்கை ஜாதியிலும் கருப்பாக, ஒரு காக்காய் கூட்டத்தில் தனித்துத் தெரியும்படி உட்கார்ந்து கொண்டிருக்கும். அவர் தான் ‘ஹெட்மாஸ்டராக’ இருக்க வேண்டும். நான் பார்த்துக் கொண்டிருக்கிற பொழுதே, அந்தப் பெரிய காக்காய், ஒரு சிறு காக்கையை அலகால் கொத்திற்று. வீட்டுப்பாடம் செய்யாவிட்டால் அவ்வளவுதான்!”
ஒரு மனிதனின் ஆழ்மனம் எதைச் சார்ந்து இயங்குகிறதோ, அதுவே அவன் காணும் புற உலகக் காட்சிகளிலும் பிரதிபலிக்கும். பறவைகளின் இயல்பான செயலைக்கூட, பள்ளி, தலைமையாசிரியர், வீட்டுப்பாடம், தண்டனை என்ற வட்டத்திற்குள் வைத்துப் பார்க்கும் அந்த நோயாளரின் மனவோட்டக் கூற்றின் வழியாக, அவன் நிச்சயமாக உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவன் என்பதையும் அவனது பள்ளிப்பருவம் இந்த நோயின் காரணமாக முடங்கிப் போயிருக்கிறது என்பதையும் நாம் ஆழ்ந்து உணர முடிகிறது.
இறுதியாக வாசகருக்கு எழக்கூடிய மிக முக்கியமான மூன்றாவது கேள்வி: ‘சுந்தர ராமசாமி இந்தக் கதைக்கு ஏன் ‘சன்னல்’ என்று ஒற்றைச் சொல்லில் தலைப்பிட்டார்?’ என்பது. இத்தகைய கேள்வி, கதையின் மேற்பரப்பை மட்டும் வாசித்துச் செல்பவர்களுக்குத் தோன்றாது; கதையைக் கூர்ந்து, நுட்பமாக அதன் ஆன்மாவோடு ஒன்றி வாசிக்கும் வாசகருக்கு மட்டுமே எழச் சாத்தியம்.
கதையின் பின்பாதி முழுவதும், நோயாளரான அந்தச் சிறுவன் தனது சன்னல் வழியாகக் கண்டு, கேட்டு உணரும் உலகத்தின் சம்பவங்களும், நிகழ்வுகளுமே நிறைந்துள்ளன. ஆச்சரியப்படும் விதமாக, சன்னல் பற்றிய நேரடி அறிமுகமே பாதிக் கதை கடந்த பிறகே இடம் பெறுகிறது. கதையின் உச்சகட்டமாக, சன்னல் அருகில் இருந்த நோயாளரின் கட்டில் வேறு இடத்திற்கு அகற்றப்படுகிறது. உலகை அவனுக்குக் காட்டிக் கொண்டிருந்த ஒரே திரை மூடப்படுகிறது. படுக்கை மாற்றப்பட்டதும், அதனைப் புறக்கணித்துவிட்டு, எப்படியாவது மீண்டும் அதே சன்னல் அருகில் தனது படுக்கையை அமைத்துக் கொள்ள நோயாளரின் தவிப்பும் வலியும் போராட்டமும் கதையின் இறுதிப் பகுதியை ஆக்கிரமிக்கின்றன. நோயாளருக்குத் தன் உடலை அரித்துக் கொண்டிருக்கும் நோய் தரும் வலியைவிட, தமக்கு உற்ற தோழனாக இருந்த அந்தச் சன்னலை இழப்பதனால் வரும் வலியே மிக அதிகமானதாகவும் நிவர்த்தி செய்ய இயலாத பேரிழப்பாகவும் மாறுகிறது.
கதையில் ‘சன்னல்’ என்பது உயிரற்ற ஒரு மரச்சட்டமாகவோ, சுவரில் உள்ள ஒரு துவாரமாகவோ இல்லை. அது உயிருள்ள கதைமாந்தராகவே (Character) உருமாறி நிற்கிறது. அதனால்தான் சுந்தர ராமசாமி இக்கதைக்குச் ‘சன்னல்’ என்று பெயர் வைத்தாரா? என்றால், அது மட்டுமே காரணமன்று. இங்குச் ‘சன்னல்’ என்பது ஒரு மாபெரும் குறியீடு (Metaphor). சன்னல் வழியேதான் வெளிச்சமும் காற்றும் காட்சிகளும் உள்ளே வருகின்றன. மனிதன் தன் கண்கள் வழியாகப் புற உலகக் காட்சிகளைக் கண்டு அகத்தில் சேமிப்பது போல, வீட்டிற்குள்ளிருந்து வெளியில் நடைபெறும் பிரபஞ்சக் காட்சிகளைக் காண உதவுவது சன்னல். ஒரு வகையில் சன்னல் என்பது, அந்த வீட்டிற்குக் கண்கள் போன்றது. அது வான்நோக்கித் திறந்த வாசல். அது வானின் வாசல்.
உடல் முழுதும் அசைவற்று, வலியால் பேசக்கூட இயலாமல் இருண்ட படுக்கையில் முடங்கிக் கிடக்கும் அந்த நோயாளர், தனது கண்களால் மட்டுமே இந்தச் சன்னல் வழியே உலகுடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ளார். அவனது இருப்பை, உயிர்ப்பை உறுதி செய்வது அந்தச் சன்னல் மட்டுமே என்பதைப் படைப்பாளர் பல இடங்களில் குறிப்பாகவும் நேரடியாகவும் சொல்லிச் சென்றுள்ளார். கதையின் இறுதியில், நோயாளரிடமிருந்து அந்தச் சன்னல் பறிக்கப்படும்போது, ஒரு மனிதனிடமிருந்து அவனது கண்களே பிடுங்கப்பட்டதைப் போன்ற இருள் சூழ்கிறது. அவனுக்கும், அவன் நேசித்த இந்த உயிருள்ள உலகுக்குமான ஆத்மார்த்தமான தொப்புள்கொடி உறவு நிரந்தரமாகத் துண்டிக்கப்படுவதாகவே வாசகருக்கு நெஞ்சை உலுக்கும் வகையில் உணர்த்தப் பெற்றுள்ளது. இந்த ஒட்டுமொத்தத் தவிப்பையும் வாழ்வின் மீதான பற்றையும் பிரிவின் பெருவலியையும் ஒற்றைச் சொல்லில் தாங்கி நிற்பதால்தான் இக்கதைக்குச் சுந்தர ராமசாமி ‘சன்னல்’ என்ற ஆழமான தலைப்பினைச் சூட்டியுள்ளார்.
சுந்தர ராமசாமி தன் சமகால எழுத்தாளர்களிலிருந்து வேறுபட்டு நிற்கும் இடம் இதுதான். அவர் தனது கதைகளில் வார்த்தைகளை வீணடிப்பதில்லை; வரிகள் தோறும் நுட்பங்களைத் தோண்டிப் புதைத்துச் சென்றுள்ளார். வாசகரின் வாசிப்பு அனுபவத்தின் ஆழத்திற்கும் திறனுக்கும் அவனது தேடலுக்கும் ஏற்ப, அந்த நுட்பங்கள் ‘மேஜிக்’ போலத் தங்களைத் தாங்களே மெல்ல மெல்ல வெளிப்படுத்திக் கொள்கின்றன. ‘சன்னல்’ சிறுகதை, தமிழ் இலக்கியத்தில் வடிவ நேர்த்தியும் கலை நுட்பமும் கைக்கோத்து நடக்கும் காலப்பெட்டகம்.
– – –
