
நவீனத் தமிழ்ச் சிறுகதை வெளியில் மனநிலைகளின் அலைக்கழிப்புகளையும் பிரபஞ்சவெளிக்கும் மனித மனத்திற்குமான நுட்பமான உறவையும் தன் எழுத்துகளில் அழுத்தமாகப் பதிவு செய்து வருபவர் எழுத்தாளர் ஆத்மார்த்தி.
இவரது படைப்புகளில் வெளிப்படும் புனைவுலகம் வெறும் புறவய யதார்த்தங்களைப் பேசுவதோடு நின்றுவிடுவதில்லை; அது மனிதனின் ஆழத்துயரங்களையும்,அவன் தேடும் பூரணத்துவத்தின் எல்லையற்ற விழைவையும் குறியீடுகளூடே துல்லியமாகத் தொட்டுச் செல்கிறது.
அந்த வகையில், அவர் எழுதிய ‘சித்திரக்காரன் கதை’ என்ற சிறுகதை, தனிமனித வாழ்வியல் சார்ந்த ஆழ்ந்த உளவியல் தத்துவங்களையும் கலையின் மீதான வெறியையும் பிரபஞ்ச இயற்கையுடனான மனிதனின் ஆன்மப் பிணைப்பையும் மிகச்சிறப்பாகப் பேசுகிறது.
இக்கதை எளிய மழைக்காலச் சூழலில் தொடங்குகிறது. நகரின் தெருக்களில் சக மனிதர்களின் நடமாட்டம், முதியவரின் கவனம் சிதறிய சந்திப்பு, மழை பொழியும் தருணங்கள் என யதார்த்தமான ஒரு களத்தோடு கதை விரிகிறது. ஆனால், அந்த மழையின் ஊடே தோன்றும் ஒரு பெண் (மழை தேவதை), கதையின் போக்கை முற்றிலுமாக மாற்றிவிடுகிறது.
“என்னுடன் நடப்பதை நீ நிறுத்தினால் தான் நான் கிளம்ப முடியும்”
என்று தொடங்கும் அந்தப் பெண்ணின் பரிமாணமற்ற உரையாடல், கதைநாயகனை புதிய தேடலுக்குள் தள்ளுகிறது. அவளது முகம் காணத் துடிக்கும் மனிதனின் ஆவல், இறுதியில் அவள் மழையாக மாறுவதோடு நிறைவடைகிறது. இதன் மூலம் புற உலகத் தேடல்களிலிருந்து அக உலகப் படைப்புச் சூழலுக்கு கதைநாயகன் நகர்த்தப்படுகிறான்.
இக்கதையின் மையம் தனிமனிதனின் அக உலகப் போராட்டங்களை மிக நேர்த்தியாகப் பிரதிபலிக்கிறது. நகரத்தின் கூட்ட நெரிசலில் வாழ்ந்தாலும் அவனுக்கு அந்த நகரத்தின் அமானுஷ்யமும் வணிகத்தனமான சூழலும் பிடிக்காமல் போகிறது. எனவே, அவன் அங்கிருந்து விலகி, குறுகலான சிறு தெருக்களையும் தனிமையையும் கொண்ட புதிய ஊரைத் தேர்ந்தெடுக்கிறான்.
மனிதன் தன் படைப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தவும் தன் ஆன்மாவின் உண்மையான குரலைக் கேட்கவும் தனிமை அவசியமாகிறது.
அவன் தீட்டும் சித்திரங்களைச் செல்வந்தர்களும் தனவான்களும் பெரும் விலை கொடுத்து வாங்கத் துடிக்கின்றனர்; அவனுக்குப் புகழும் பொருளும் தேடித் தருகின்றனர். ஆனால், அந்த வணிகமயமான பாராட்டுதல்களும் கூட்ட நெரிசல்களும் அவனது சுயத்தை மூச்சுமுட்டச் செய்கின்றன.
தனவான்களும் கூட்டத்தினரும் மழைக்காலத்தின் தொடக்கத்தால் அவனிடமிருந்து விலகும்போது, அவன் தனித்து விடப்படுகிறான். அந்தத் தனிமை அவனுக்குத் துயரத்தைத் தருவதற்குப் பதிலாக, ஒருவித விடுதலையையும் முழுமையான சித்திரத்தை வரையும் உத்வேகத்தையும் தருகிறது. இது நவீனத் தனிமனிதனின் வாழ்வியலில் கலைக்கும் வணிகத்திற்குமான நிரந்தர முரண்பாட்டைக் காட்டுகிறது.
‘கலைஞன்’ என்பவன் யதார்த்தத்தின் நகலை உருவாக்குபவன் அல்லன்; பிரபஞ்சத்தின் அதிர்வுகளைத் தன் தூரிகையால் ஈர்ப்பவன். கதையில் வரும் சித்திரக்காரன், தான் வரையும் எந்தவொரு சித்திரத்தையும் தனக்கென வைத்துக் கொள்வதில்லை.
“அவனால் சித்திரத்தைத் தீட்டிவிட முடியாதெனும் எண்ணத்தின் ஆழத்தில் கலைந்து பறந்தன காகிதப்பிரதிகள்”
என்ற வரி, கலைஞனின் உச்சபட்ச நிறைவின்மையைக் காட்டுகிறது.
அவனால் மழையின் முழுமையான தேகக்குறிப்புகளை, அதன் ஈரத்தை, அதன் ஆன்மாவைச் சாதாரண காகிதங்களில் வடிக்க முடியவில்லை. உலகத்து மனிதர்களின் பாராட்டுகளும் பணமும் அவனுக்குத் தற்காலிகத் திருப்தியைத் தந்தாலும் ஆன்மாவை உலுக்கும் உன்னத அழகியலை அவனால் தொட இயலவில்லை. அங்கேதான் மழையின் தேவதை அவனுக்கு வழிகாட்டுகிறாள் –
“மழையின் தேகத்தை மழையில் தான் வரையமுடியும். மழையில் வரைவதற்கான வர்ணங்கள் வேறு.”
கதையின் முடிவு மிக ஆழமான தத்துவார்த்தக் குறியீட்டைக் கொண்டுள்ளது. சாதாரண மனிதனாக, வர்ணங்களைக் கொண்டு காகிதங்களில் மட்டும் சித்திரம் தீட்டிக் கொண்டிருந்தவன், இயற்கையின் பிரம்மாண்டமான சக்தியுடன் இரண்டறக் கலக்கிறான்.
மழை தேவதை தன் வலக்கரத்தால் அவளது வலக்கரத்தைப் பற்றி, தன் மறைத்து வைக்கப்பட்ட இறக்கைகளை விரித்து, மழையின் விழுதுகளைப் பற்றியவாறு மேலேறிச் செல்லும் தருணம் மரணத்தின் குறியீடாகவும் இருக்கலாம் அல்லது கலையின் உச்சபட்ச பரிபூரண நிலையை (Transcendence) அடைவதன் குறியீடாகவும் இருக்கலாம். அவன் சாதாரண உலகத்துத் தாள்களில் சித்திரம் தீட்டுவதை விட்டுவிட்டு, மழையோடு மழையாகக் கலந்து பிரபஞ்சத்தின் சித்திரமாகவே மாறிவிடுகிறான்.
எழுத்தாளர் ஆத்மார்த்தி தனது ‘சித்திரக்காரன் கதை’ மூலமாக மனிதனின் அழியாத அழகியல் தாகத்தையும் சமூகத்தின் வணிகக் கூட்டங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் ஆன்மாவின் துடிப்பையும் மிகச் செறிவான மொழிநடையிலும் குறியீடுகளிலும் வெளிப்படுத்தியுள்ளார்.
‘மனித வாழ்வியல்’ என்பது வெறும் வயிறோடும் பொருளோடும் நின்றுவிடுவதன்று; அது பிரபஞ்சத்தின் மர்மங்களோடு தன்னை இணைத்துக் கொள்ளும் தொடர் பயணம் என்பதை இக்கதை அழுத்தமாக உணர்த்துகிறது. தமிழ் நவீனச் சிறுகதை வெளியில் தனிமனிதனின் அகத் தவிப்புகளுக்குக் கிடைத்துள்ள மிக முக்கியமான கலை ஆவணமாக இக்கதை காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.
இந்தச் சிறுகதையை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் தனது வாழ்வியலின் ஓட்டத்தில் எங்கே தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறான், எங்கே கலையின் தூய்மையைத் தொலைத்திருக்கிறான் என்ற சுயபரிசோதனைக்கு இக்கதை வழிவகுக்கிறது.
– – –
