
பெருந்திரளான மனிதர்களின் கூட்டமும் அவர்களின் ஆன்மிகப் பயணங்களும் அதற்குப் பின்னால் இயங்கும் உழைக்கும் எளிய மக்களின் வாழ்வியலையும் துல்லியமாகப் பதிவு செய்யும் படைப்பாக எழுத்தாளர் சஜு எழுதிய ‘தலைப்பாறை’ என்னும் சிறுகதை அமைந்துள்ளது.
சபரிமலைப் பயணத்தின் போது மலையேறும் பக்தர்களின் குழுவொன்றின் அனுபவங்களை மையமாகக் கொண்டு, ஆடம்பரமான பக்திச் சுற்றுலாவிற்கும் அங்கே தன் உடல் வியர்வையைச் சுமந்து உழைக்கும் சாமானியனின் மாண்பிற்கும் இடையிலான இடைவெளியைக் கறாராக அலசுகிறது.
பக்தர்கள் தங்களின் தனிப்பட்ட விரதங்களையும் ஆன்மிகத் தேடல்களையும் முன்னிறுத்தி நடக்கும் அதேவேளையில், மலையின் உச்சியில் பாரத்தைச் சுமந்து சமையல் செய்து, பாத்திரம் கழுவி, தன் வாழ்நாளைத் துறக்கும் மது அண்ணன் போன்ற எளிய மனிதர்களின் உழைப்பு எத்தகையது என்பதை இக்கதை அழுத்தமாகப் பேசுகிறது.
கதையின் தொடக்கம் சபரிமலைப் பயணத்தின் கடினமான பாதையான கரிமலை ஏற்றத்திலிருந்தும் உடன்வருபவர்களின் மாறுபட்ட உடல்நிலைகளிலிருந்தும் தொடங்குகிறது.
கதாசிரியரும் அவனது நண்பர்களும் இருமுடி கட்டிக்கொண்டு மலையேறும்போது, திலீப் அண்ணன், நிஷாந்த் போன்றவர்களின் மெதுவான நடையும் அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயமும் ஒருபுறம் விவரிக்கப் படுகிறது.
பக்தர்கள் அனைவரும் தங்களுது ஆன்மிகக் கடமையையும் விரதத்தையும் பற்றிக் கவலைப்பட்டாலும் உடல் சோர்வும் குளிரும் பசியும் அவர்களை ஆட்கொள்ளும் போது அந்தப் பயணத்தின் கடினத்தன்மை அப்பட்டமாக வெளிப்படுகிறது. மலைப்பாதையில் கொட்டிக் கிடக்கும் யானைச் சாணமும் காட்டுச் சூழலின் பயங்கரமும் மனிதர்களின் சிறுமையையும் இயற்கையின் பிரம்மாண்டத்தையும் உணர்த்துகின்றன.
கதையின் ஆன்மாவாக விளங்குவது கரிமலை உச்சியில் பக்தர்கள் தங்கும் விரிக்கு அருகில் சமையல் செய்து, பாத்திரம் கழுவி, சுமை தூக்கும் ‘மது அண்ணன்’ என்னும் பாத்திரமாகும்.
பக்தர்கள் சென்று அமரும்போது அவர்களுக்குத் தேநீர் வழங்குவதும், புட்டு, தோசை, சாப்பாடு என எல்லாவற்றையும் ஓடிவந்து பரிமாறுவதும் மது அண்ணனின் வழக்கமாக இருக்கிறது. ஆனால், அந்தச் சேவையின் பின்னால் இருக்கும் மனிதனின் உழைப்பு எவ்வளவு கொடூரமானது என்பதை நள்ளிரவில் கதைசொல்லி உணர்கிறான்.
நள்ளிரவில் கழிவறைக்குச் செல்லும் கதைசொல்லி, கழிவுநீர் வழிந்தோடும் பாதையில் வெறும் காலில் குந்தி அமர்ந்து பாத்திரம் கழுவிக்கொண்டிருக்கும் மது அண்ணனைக் காண்கிறான். அடுத்தநாள் அதிகாலையில் மீண்டும் பலத்த சுமை கொண்ட சாக்குப்பையைத் தலையில் சுமந்து கொண்டு மலை ஏறிவரும் அவனது தோற்றம், பக்திச் சுற்றுலாவின் பின்னணியில் எளிய மனிதர்களின் வியர்வையால் கட்டமைக்கப்பட்ட பொருளாதாரச் சுரண்டலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
பக்தர்கள் தங்களின் பாவங்களைப்போக்க ஐயப்பனைத் தேடி மலையேறுகிறார்கள்; ஆனால், உண்மையான துறவறமும் தியாகமும் அங்கே பசியோடும் வலியோடும் உழைக்கும் மது அண்ணனிடம்தான் உள்ளது என்பதைக் கதைசொல்லி தாமதமாகப் புரிந்துகொள்கிறான்.
மலையிறங்கும் போது மது அண்ணனுக்கு ஒரு புதிய வேட்டியைப் பரிசாகக் கொடுத்து அவன் காலில் கைத்தொடும் தருணம், பக்திச் சடங்குகளைவிட மனித மாண்பும் சக மனிதனின் உழைப்பிற்குத் தரும் மரியாதையுமே உயர்ந்தது என்பதை உணர்த்துகிறது.
“மனித உயரம் என்பது பண்பால் வருவதே ஒழிய பணத்தால் இல்லை” என்ற தெளிவோடு கதைசொல்லி மலையிறங்குவது இக்கதையின் உச்சக்கட்டச் செய்தியாகும். பக்தர்கள் மலையிறங்கி பம்பை ஆற்றில் நதியில் அவிழ்த்துப் போடும் கறுப்பு வேட்டிகளின் குவியல், அந்த உழைப்பின் கருமை நிறத்தை நம் கண்முன்னே நிறுத்துகிறது.
சஜுவின் ‘தலைப்பாறை’ சிறுகதை, பக்திச் சுற்றுலாவின் போலித்தனங்களையும் அதன் பின்னணியில் நசுங்கும் எளிய மக்களின் உழைப்பையும் ஆழமாகவும் எதார்த்தமாகவும் பேசும் உன்னத படைப்பாகும். ஆன்மிகத்தின் பெயரால் நடமாடும் பெருந்திரளுக்கு மத்தியில், வியர்வையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழும் சாமானியனின் மனிதத்தன்மையைக் கறாராகவும் நேர்மையாகவும் பதிவு செய்துள்ள இப்படைப்பு, பல்வேறு தளங்களின் வழியே சிந்திக்கத் தூண்டும் ஆவணமாகும்.
மனிதர்களின் ஆன்மிகத் தேடல்களும் பக்திப் பயணங்களும் கோடிக்கணக்கில் மக்களால் கொண்டாடப்படும்போது, அந்தப் பயணங்களின் பசி தீர்க்கவும் சுகம் சேர்க்கவும் தங்கள் உடல் வியர்வையைச் சுமந்து உழைக்கும் எளிய மனிதர்களின் கண்ணீர் எப்போது இந்தச் சமூகத்தின் கண்களுக்குத் தெரியப் போகிறது? இந்த வினா, ஆன்மிகத்தின் பெயரால் இயங்கும் சமூகத்தின் போலித்தனத்தையும் வர்க்க முரண்பாடுகளையும் ஆழமாக அம்பலப்படுத்துகிறது.
இந்தச் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, பக்திப் பயணங்கள் எப்போதுமே இறைவனைத் தேடும் கோடிக்கணக்கான பக்தர்களின் கூட்டமாக மட்டும் இயங்குவதில்லை; அந்தப் பெருந்திரளின் பசியையும் களைப்பையும் போக்குவதற்காகத் தன் வாழ்நாளைச் சுமையாகவும் வியர்வையாகவும் உதிர்த்துக்கொண்டிருக்கும் ‘மது அண்ணன்’ போன்ற எளிய உழைப்பாளிகளின் கண்ணீரை இந்தச் சமூகம் வேண்டுமென்றே பார்க்க மறுக்கிறது என்பதே நிதர்சனமாகும்.
அதற்குக் காரணம், இந்தச் சமூகம் மனிதர்களைவிடச் சடங்குகளையும் ஆன்மிகப் போலித்தனங்களையுமே அதிகமாக நேசிப்பதுதான். அந்த எளியோரின் கண்ணீர் சமூகத்தின் கண்களுக்குத் தெரியவேண்டும் என்றால், மனித மாண்பை மூலதனமாகக் கொண்ட உண்மையான சமத்துவப் பார்வை மனிதர்களின் அகத்தில் மலர வேண்டும் என்பதைத் ‘தலைப்பாறை’ சிறுகதை நமக்கு உணர்த்துகிறது.
– – –
