நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 74.அக நுண்வெளிகள் (சி. சரவணகார்த்திகேயனின் ‘நுண்’ சிறுகதையை முன்வைத்து…)

 

சமகால மனிதர்களின் அக உலகத் தத்தளிப்புகளையும் அன்றாட எளிய வாழ்க்கையின் சிறிய இடைவெளிகளில் ஒளிந்திருக்கும் பெரும் முரண்களையும் துல்லியமாகப் பதிவுசெய்துவரும் எழுத்தாளர்களில் சி. சரவணகார்த்திகேயன் முக்கியமானவர். 

சி. சரவணகார்த்திகேயனின் ‘நுண்’ சிறுகதை, தனிமனித வாழ்வியலின் பத்து வெவ்வேறு முகங்களை, பத்துக் குறுங்கதைகளின் ஊடாகச் சிறந்த முறையில் செதுக்கியுள்ள நவீன இலக்கியப் பிரதியாகும்.

இந்தச் சிறுகதை, பத்துப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் முற்றிலும் வேறுபட்ட மனிதர்களின் வாழ்க்கைப் புதிர்களையும் எதிர்பாராத திருப்பங்களையும் மனத்தின் நுண்மையான அசைவுகளையும் ஆராய்கிறது. கதையின் முதல் பகுதி அலுவலகக் கொண்டாட்டத்தில் மீதியான ‘பீட்ஸா’வை வீட்டுக்குக் கொண்டுவரும் கடைநிலை ஊழியரின் குடும்பச் சூழலைச் சித்தரிக்கிறது. ‘பீட்ஸா’வின் அந்த இரண்டரைத் துண்டுகளை மூன்றாகப் பங்கிட முடியாத அவனது மனைவியின் தத்தளிப்பு, வறுமை நிலையில் வாழும் எளிய மக்களின் சமரச வாழ்வை வெளிப்படுத்துகிறது.‘இரட்டைக் குழந்தைகளில் ஒன்று இறந்து பிறந்திருக்கலாம்’ என்று ஒருகணம் தோன்றி திடுக்கிடும் அந்தத் தாயின் மனம், வறுமைக்கும் பற்றாக்குறைக்கும் நடுவில் தன் குழந்தைகளை வளர்க்கும் போராட்டத்தின் உளவியல் சிதைவை உணர்த்துகிறது.

இரண்டாவது பகுதியில், பழைய புத்தகக் கடையில் வாங்கிய ‘க்ரைம்’ நாவலின் கடைசிப் பக்கம் காணாமல் போனதற்காக எழுத்தாளரையே தேடிச் செல்லும் வாசகரின் வெறித்தனமான தேடல், மனிதர்களின் முழுமையடையாத ஆசைகளின் குறியீடாகும். எழுத்தாளருக்கே தன் கதை மறந்துவிட்ட நிலையில், தன் வாழ்க்கையோடு தொடர்புடைய அந்த முடிவைத்தானே எழுத முடிவெடுக்கும் மனிதன், தன் கற்பனையின் வழியே உலகை நிறைக்க முற்படுகிறான்.

மூன்றாவது பகுதியில், அடுக்கக ‘வாட்ஸ்அப்’ குழுவில் காணாமல் போன ஐந்நூறு ரூபாய் நோட்டைக் கேட்கும் நபர்களின் வழியே, மனிதர்களின் பேராசையும் அவநம்பிக்கையும் எப்படிக் கோலோச்சுகின்றன என்பதை ஆசிரியர் சாட்டையால் அடிப்பது போல வெளிப்படுத்துகிறார்.

நான்காவது பகுதி புராணக் கதையான காகத்தின் வடைத் திருட்டை நவீன யதார்த்தத்தோடு இணைத்து, மனிதர்களின் ஏமாற்று வேலைகளையும் பகிரங்கப்படுத்துகிறது.

ஐந்தாவது பகுதியில் திருமணத்திற்குத் தயாராகும் பெண்ணொருத்தி, தன் கடந்த காலக் காதல் மற்றும் கலவி அனுபவங்களால் முதலிரவில் கன்னித்தன்மை குறித்து அஞ்சி, அதை மறைக்க நாடகமாடும் தத்தளிப்பு நவீன பெண்களின் உடலியல் மற்றும் உளவியல் சுதந்திரப் போராட்டத்தின் வெளிப்பாடாகும்.

ஆறாவது பகுதியில், சீரியல் மாமியாராக இருக்க மாட்டேன் என்று சபதமிட்ட தாய், தன் மகன் தன் மனைவியின் பக்கம் சாய்ந்ததும் அடைந்த காழ்ப்புணர்ச்சியும் துரோக உணர்வும் குடும்ப உறவுகளின் அதிகார அரசியலை அம்பலப்படுத்துகிறது.

ஏழாவது பகுதியில் இயல்பாக முறிந்த காதலின் திருமணத்திற்குச் சென்றுவிட்டு, அங்கே அவள் தன்னை சாதாரண பழைய அலுவலக சக ஊழியராக அறிமுகப்படுத்தியதும் ஆத்திரமடைந்து மேடையிலேயே தன் ஆடைகளைக் கழற்றத் துடிக்கும் ஆணின் அகவன்மம், ஆணின் அகந்தைக் காயத்தின் வெளிப்பாடாகும்.

எட்டாவது பகுதியில் முன்னாள் காதலியின் பெயரைக் குத்தியிருந்த ‘டாட்டூ’வை அழிக்க முடியாததால், தன் வருங்கால மனைவியிடம் உண்மையைச் சொல்லி, அவளது ‘சிகரெட்’டால் சுடப்பட்ட வடுவையும் தன் காதலாக ஏற்றுக்கொள்ளும் தருணம் மனித மனத்தின் ஆழமான மன்னிப்பைப் பேசுகிறது.

ஒன்பதாவது பகுதியில் தற்கொலைக்குத் தயாராகும் இளைஞன், தனக்குத் பிடித்த படத்தின் ‘அப்டேட்’ நாளைக்கு வருவதற்காகத் தன் தற்கொலையை ஒத்திவைப்பதில் உள்ள நகைச்சுவை கலந்த சோகம், இன்றைய இளைய தலைமுறையின் வெற்றுப் போலித்தனத்தையும் வாழ்வின் பிடிப்பின்மையையும் கறாராக விமர்சிக்கிறது.

பத்தாவது பகுதியில் மகளின் ‘லெஸ்பியன்’ காதலை எதிர்த்துத் திருமணம் செய்துவைக்கும் தந்தை, அந்தப் பெண் தன் பத்தாம் வகுப்புத் தோல்விக்கு அவர்தான் காரணம் என்று கூறிப் பழிவாங்கும் முடிவில் கதையின் உச்சம் அடைகிறது.

மனிதர்களின் அகத்தில் புதைந்து கிடக்கும் சுயநலம், வஞ்சம், குற்றவுணர்ச்சி, ஏக்கம் மற்றும் எதார்த்தத்தின் கொடூரம் ஆகியவற்றை இந்த நுண்ணிய கதைகள் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. வாழ்க்கையின் எத்தனையோ முரண்களுக்கு நடுவில் நாம் தேடும் சிறிய நிம்மதி என்பது, எந்தக் கணத்திலும் உடைந்துபோகக் கூடிய நுண்ணிய கண்ணாடிப் பாத்திரத்தையே ஒத்திருக்கிறது!

இந்தப் பத்து நுண்கதைகளும் சேர்ந்து ஒரே சிறுகதையாகி, தனிமனிதனின் வாழ்வியல் சிதைவுகளை நுண்ணோக்கியின் வழியே பார்ப்பது போன்ற அனுபவத்தை வாசகருக்கு அளிக்கின்றன.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *