நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 76.நச்சுச் சூழல்  (உமா மகேஸ்வரியின் ‘ அரளிவனம்’ சிறுகதையை முன்வைத்து…)

நுட்பமான உளவியல் வெளிப்பாடுகளாலும் நிலக்காட்சிகளை மனித மனத்துடன் இணைத்து எழுதும் கவித்துவ நடையாலும் பிற எழுத்தாளர்களிலிருந்து தனித்து நிற்பவர் எழுத்தாளர் உமா மகேஸ்வரி.

அவரது ‘அரளிவனம்’ என்ற சிறுகதை முக்கியமானது. தண்டுவடப் பாதிப்பால் படுக்கையில் முடங்கிப்போன கணவனும் அவனது உடல்ரீதியான அவஸ்தைகளையும் தாண்டி அவனால் தினசரி உளவியல் ரீதியாக வதைக்கப்படும் இளம் மனைவியான வான்மதியின் வாழ்க்கையையும் மையமாகக் கொண்டு இச்சிறுகதை விரிகிறது. 

ஆண் மையச் சமூகத்தின் அதிகாரப் பதற்றங்கள், நோய்மை வெளிப்படுத்தும் வன்முறை, அதன் உச்சத்தில் பெண் மனத்துக்குள் உருவாகும் தற்காப்பு மற்றும் தற்கொலை விழைவு ஆகியவற்றைச் தனிமனித வாழ்வியல் தளத்திலிருந்து வெளிப்படுத்துகிறது இந்தச் சிறுகதை.

கதையின் தொடக்கத்திலேயே ஆசிரியர் வாசகரை ஒருவித அமுக்கமான மனநிலைக்குள் அழைத்துச் செல்கிறார். தென்னந்தோப்பில் நடந்த ஒரு விபத்தில் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, கால்கள் இயங்க மறுத்து, படுக்கையிலேயே முடங்கிப் போகிறான் மாணிக்கவேல். 

இத்தகைய கடுமையான ‘உடல் முடக்கம்’ என்பது ஒரு மனிதனின் சுயமரியாதையையும் அகந்த்தையையும் ஒரே நொடியில் சிதைத்துவிடுகிறது. அவனால் தன் சொந்தக் தேவைகளுக்கே மற்றவர்களை (செல்லய்யா போன்றோரை) நம்பியிருக்க வேண்டிய சூழல். இந்தத் தாழ்வுணர்ச்சியும் கோபமும் அவனுக்கு அருகில் இருக்கும் வான்மதியின் மீது வன்முறையாகப் பீறிடுகிறது.

மாணிக்கவேல் படுக்கையில் கிடக்கிறான்; ஆனால் அவனது நாவிலும் சொற்களிலும் பழைய அதிகாரத்தின் நச்சுத் தன்மை குறையவில்லை. வான்மதி உணவு பரிமாறும்போது, அல்லது தன் மீதான எளிய கவனிப்பை வெளிப்படுத்தும்போதுகூட அவனால் அதனைச் சகித்துக்கொள்ள முடிவதில்லை.

“புருஷன் இங்க அசைய மாட்டாமக் கெடக்கும்போது வட பாயாசத்தோடு விருந்தா கேக்குது ஒனக்கு? நீயெல்லாம் ஒரு பொம்பள… த்தூ…”

என்று அவன் காறி உமிழ்வது வெறும் உடல்சார்ந்த வன்முறை அன்று; அது தன் பலவீனத்தை மறைத்துக்கொள்ளத் துடிக்கும் ஆண்மையின் அவநம்பிக்கை வெளிப்பாடு. 

வான்மதியின் மீது அவன் சுமத்தும் சந்தேகங்களும் ‘அடுத்தவனைத் தேடலாம்’ என்ற ஏளனமான சொற்களும் அவனது உளவியல் சிதைவின் உச்சத்தைக் காட்டுகின்றன. நோய்மை ஒரு மனிதனைப் பரிதாபத்திற்கு உரியவனாக்குவதற்குப் பதிலாக, அவனைச் சுற்றியிருப்பவர்களை வதைக்கும் நச்சுப் பொருளாக மாற்றுவதை மாணிக்கவேல் கதைப்பாத்திரம் வெளிப்படுத்துகிறது.

வான்மதியின் வாழ்வு அமைதியான வதைக்கூடமாக மாறுகிறது. கணவனின் சுடுசொற்களைக் கேட்டு அடுப்படி மூலையில் முடங்கி விம்முவது, இரவில் ஜன்னலோரத்தில் நின்று பனியை உற்றுநோக்குவது என அவளது அகஉலகம் கடுமையான அலைக்கழிப்புகளுக்கு ஆளாகிறது.

“என் மேலயும் தப்புதானே… நான்தானே பாத்துக்கணும்?” என்ற அவளது உளக்குமுறல், பாரம்பரிய சமூகக் கட்டமைப்புகள் ஒரு பெண்ணின் மீது திணிக்கும் குற்ற உணர்வின் வெளிப்பாடு. 

கணவன் தன்னை எவ்வளவுதான் அவமதித்தாலும் அவனுக்குப் பிடித்தமான நாட்டுக் கோழிக் குழம்பு, லேகியங்கள் எனப் பார்த்துப் பார்த்துச் சமைப்பதும், அவன் தன்மீது வட்டில்களையும் டம்ளர்களையும் எறிந்தாலும் மீண்டும் அவனுக்குச் சேவை செய்வதும் அவளது சுயத்தை முற்றிலும் அழித்து விடுகிறது.

அவளது தந்தை வந்து ஆறுதல் கூற முயன்றாலும் அந்தச் சூழல் அவளுக்கு எந்தவித விடுதலையையும் தருவதில்லை. அங்கேயே இருந்து வைத்தியம் செய்வது சௌரியமாக இருக்கும் என்ற தந்தையின் பார்வை, பெண்ணின் சொந்த விருப்பங்களையும் மனவேதனையையும் முற்றிலுமாகப் புறக்கணிக்கும் சமூக மனநிலையைப் பிரதிபலிக்கிறது.

வான்மதிக்கு வெளியே செல்வதற்கான வழிகளோ, தன் துயரத்தை யாரிடமும் பகிர்ந்துகொள்ளும் சுதந்திரமோ கிடையாது. அவளது உலகம் சமையலறை, கணவனின் படுக்கையறை மற்றும் அந்த அரளிப் புதர்கள் சூழ்ந்த ஜன்னல் ஓரம் மட்டுமே சுருங்கிவிடுகிறது.

இச்சிறுகதையின் மிக முக்கியமான குறியீட்டு வடிவம் ‘அரளிவனம்’ ஆகும். வீட்டின் ஜன்னலுக்கு வெளியே அடர்ந்து வளர்ந்திருக்கும் அரளிச் செடிகள் வெறும் இயற்கைக் காட்சியாக இன்றி, வான்மதியின் ஆழ்மனத்தின் வெளிப்பாடாகவும் ஒரு நச்சுச் சூழலின் குறியீடாகவும் உருவெடுக்கின்றன.

அரளிப்பூக்கள் பார்ப்பதற்கு இளரோஜா நிறத்தில், மென்பச்சை இலைகளுடன் அழகாகத் தெரிந்தாலும், அது கொடிய நஞ்சைக் கொண்டது. கதையில் மாணிக்கவேல் வான்மதிக்குத் தரும் மனவேதனையும் ஒருவகையான நஞ்சே.

இரவுகளில் ஜன்னலுக்குள் நுழைந்து ஆடும் அரளிப்புதர்கள், வான்மதியின் மனக்கொந்தளிப்பைச் சித்தரிக்கின்றன. “மனிதர் சூட ஆகாதென்று சொல்லப்படும் அந்த மலர்கள் – பிணங்களுக்கும் பெருமானுக்கும் மட்டுமேயானவை” என்ற வரி கதையின் முடிவை நோக்கி வாசகரை அழைத்துச் செல்கிறது.

கணவனின் தொடர்ச்சியான வன்முறைகளாலும் உளவியல் சிதைவுகளாலும் புழுங்கித் தவிக்கும் வான்மதி, படிப்படியாக அந்த அரளிக்காய்களைச் சேகரிக்கத் தொடங்குகிறாள். தன் தலையணையின் அடியில் அவற்றைப் பத்திரப்படுத்துவது என்பது அவளது தற்காப்புணர்வின் மௌனமான எதிர்வினை. ஆரம்பத்தில் இரண்டே இரண்டு விதைகளாக இருப்பவை, கதையின் இறுதியில் எண்ணற்ற காய்களாகப் பெருகுவது, அவளது மனத்தில் வளர்ந்துவரும் மரண விழைவையும் வன்முறைக்கு எதிரான அமைதியான மறுதலையையும் குறிக்கிறது.

கதையின் இறுதியில் மாணிக்கவேலுக்கு அறுவை சிகிச்சை நடக்கும் தருணத்தில், வான்மதி மருத்துவமனைக்குச் சென்று திரும்புகிறாள். அவளது தலையணைக்கு அடியில் இருந்த விதைகள் பெருகி, அவளது கூந்தலிலும் உடலிலும் மனத்திலும் அந்த அரளிவனம் முளைக்கத் தொடங்குகிறது.

இது வெறும் தற்கொலை முடிவு அன்று; வதைக்கும் கணவனின் உலகில் இருந்து தப்புவதற்கான, அல்லது அந்த வன்முறைச் சூழலே அவளுக்குள் ஏற்படுத்திய நிரந்தர நச்சுத்தன்மையின் உளவியல் வெளிப்பாடு. கணவனின் உடல் பலவீனமடைந்து அறுவை சிகிச்சைக்குள்ளாகும் அதேவேளையில், வான்மதியின் அகத்தில் அந்த அரளிவனம் கிளைத்து வளர்ந்து நிற்பது கதையின் பலத்த முரண் ஆகும்.

‘அரளிவனம்’ சிறுகதை, நோயாளியைப் பராமரிக்கும் பொறுப்பு ஒரு குடும்பத்தில் எத்தகைய உளவியல் அழுத்தங்களை ஏற்படுத்துகிறது என்பதை மிகத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளது. 

ஒரு மனிதனின் உடல் முடக்கம் அவனது அகத்திலுள்ள வன்மையை எப்படிப் பெரிதாக்குகிறது என்பதையும் அதற்கு நடுவில் சிதையும் ஒரு பெண்ணின் தனிமனித வாழ்வியலை உமா மகேஸ்வரி தனது தனித்துவமான கவித்துவ நடையாலும் கூர்மையான அவதானிப்புகளாலும் இக்கதையில் உயிர்ப்பித்திருக்கிறார். 

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *