நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 89.தனிமனித அறம்  (சு. சமுத்திரம் எழுதிய ‘புலித்தோல் போர்த்திய மாடுகள்’ சிறுகதையை முன்வைத்து…)

எழுத்தாளர் சு. சமுத்திரம் எழுதிய ‘புலித்தோல் போர்த்திய மாடுகள்’ என்ற சிறுகதை, தமிழ் நவயுக இலக்கிய உலகில் படைப்பிலக்கியத்திற்கும் வணிக சினிமாத்துறைக்கும் இடையிலான முரண்களைத் துல்லியமாகவும் கறாரான பார்வையோடும் பதிவு செய்யும் ஆவணமாகும். 

மக்கள் பிரச்சினையை, நாவலாசிரியரின் ரத்தமும் சதையுமான அனுபவத்தைப் பொதுச் சந்தை எவ்வாறு அப்பட்டமாகச் சிதைக்கிறது, லாப வெறிக்காக எத்தகைய தார்மீகக் கொலைகளைச் செய்கிறது என்பதை இக்கதை தனிமனித வாழ்வியலின் உளவியல் சிக்கல்களோடு பிணைத்து விவரிக்கிறது. 

இங்கு இலக்கியவாதியின் உழைப்பும் ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீரும் திரையுலகின் இலாபக் கணக்குகளில் எவ்வாறு விலைபோகின்றன என்பதையும் அதன் பின்னணியில் நிகழும் தனிமனிதனின் அகப்போராட்டங்களையும் இந்தக் கதை விவரிக்கிறது.

கதையின் மையக் கதாபாத்திரம் மயில்நாதன் நாவலாசிரியர். வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி, தான் நேரில் கண்ட வாச்சாத்தி மலைக்கிராமத்து வன்கொடுமைகளை ‘மனித பங்கம்’ என்ற பெயரில் நாவலாக வடித்தெடுத்தவர். 

இலக்கியத்தை வெறும் பொழுதுபோக்காகவோ, கற்பனையின் எல்கையாகவோ கருதாமல் சமூகத்தின் ரணங்களைச் சுமக்கும் ஆவணமாக்கக் துடிக்கும் உண்மையான படைப்பாளி. ஆனால், அவரது தனிமனித வாழ்வியலோ மிகவும் எதார்த்தமான, நடுத்தர வர்க்கக் கடன்களாலும் அழுத்தங்களாலும் சூழப்பட்டுள்ளது.

மயில்நாதனின் மனைவி சமையலறையில் குக்கர் சூட்டில் கைபட்டுக் கத்தும்போது வெளிப்படும் எதார்த்தம் நடுத்தர வர்க்கத்தின் குரல். தங்கைக்கோ எரும மாடு மாதிரி குதித்து ‘கம்ப்யூட்டர் கோர்ஸ்’ படிக்க வேண்டும் என்ற ஆசை, தலை தீபாவளிச் செலவுகள், நாவலுக்கு வரும் சொற்ப அன்பளிப்புத் தொகையைக் கொண்டு குடும்பத்தை ஓட்ட முடியாத கையறுநிலை எனப் படைப்பாளியின் மேன்மை பொருளாதாரத்தின் முன் சிதைக்கப்படுகிறது.

சினிமாக்காரர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் விதம், எழுத்தாளர்களை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காமல் அவர்களைப் பணத்தால் விலைக்கு வாங்க முயலும் முறைமை ஆகியன மயில்நாதனின் ஆன்மாவை உலுக்குகின்றன. 

ஆரம்பத்தில் சினிமாக்காரர்களை வெறுக்கும் அவர், தன் குடும்பத்தின் நெருக்கடிகளைப் போக்க வேண்டிய கட்டாயத்தினால் அந்த நட்சத்திர ஹோட்டலுக்குச் செல்ல நேரிடுகிறது. இது கலைஞனின் முதல் தார்மீகச் சமரசமாகும்.

‘புலித்தோல் போர்த்திய மாடுகள்’ என்ற இக்கதையின் தலைப்பு, மனிதாபிமானத்தைப் பேசுவதுபோல் பாசாங்கு செய்துவிட்டு, மனிதர்களின் துயரங்களையும் வன்கொடுமைகளையும் தங்களின் வியாபாரப் பொருளாக மாற்றும் சினிமாக்காரர்களை சரியாக அடையாளப்படுத்துகிறது.

சினிமாத் துறையைச் சேர்ந்த கலிங்கன், அசோசியேட் டைரக்டர் அன்பு வேந்தன், இயக்குநர் அரூபசொருபன் மற்றும் ‘நடிப்புப் புயல்’ சந்திரபிம்மன் ஆகியோர் அடங்கிய கூட்டம், இலக்கியத்தின் ஆன்மாவை எப்படி வதைக்கிறது என்பதை கதை அப்பட்டமாகக் காட்டுகிறது. நாவலின் தலைப்பைக்கூட சரியாகத் தெரியாமல் வருபவர்கள், சமூக பிரக்ஞை கொண்ட கதையைத் தங்களுக்கு ஏற்ற வணிகப் பண்டமாக மாற்ற முயல்கின்றனர்.

தமிழ்ச் சினிமாவின் மலிவான சூத்திரங்களை இயக்குநர் விவரிக்கும் விதம் நகைப்புக்குரியதாகவும் அதேநேரம் கோபத்தை ஊட்டுவதாகவும் உள்ளது. தீவிரமான உண்மைச் சம்பவத்தை வணிக வெற்றி பெறச் செய்ய காதல், இரட்டை அர்த்த வசனங்கள், பிளாஷ்பேக் வன்முறைகள் என எதை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ‘உல்டா’ செய்வதையும் ‘சொருகுவதையும்’ அவர்கள் தொழிலாக வைத்துள்ளனர். வாச்சாத்தி கிராமத்துப் பெண்களின் அவலத்தைக் கதாநாயகனின் மாஸ் இமேஜுக்கான கருவியாக மாற்றுவது தமிழ் சினிமாவின் அறமற்ற முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

1992 ஜூன் மாதத்தில் பெரியார் மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தி மலைக்கிராமத்தில் வனத்துறையினரால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான வன்கொடுமைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் இந்திய ஜனநாயகத்தின் கறுப்புப் பக்கங்களாகும். அந்த மக்களுக்காகக் குரல் கொடுத்த நல்லசிவன் போன்ற தோழர்களின் அறப் போராட்டத்தையும் அந்த எளிய மக்கள் படும் சித்திரவதைகளையும் மயில்நாதன் தனது நாவலில் உயிர்ப்புடன் பதிவு செய்திருந்தார்.

ஆனால், இயக்குநர் அரூபசொருபனும் நடிப்புப் புயல் சந்திரபிம்மனும் அந்த மக்களின் ரத்தக் கண்ணீரை மசாலாப் படத்துக்கான மூலப்பொருளாக மட்டுமே பார்க்கிறார்கள். 18 பெண்கள் பாலியல்வன்கொடுமை செய்யப்பட்ட கோர நிகழ்வை, கதாநாயகனின் பழிவாங்கும் படலத்திற்காகவும் ரசிகர்களின் விசில் சத்தத்திற்காகவும் வளைக்கிறார்கள்.

பாலியல்வன்கொடுமை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் காதலி உண்மையில் பாலியல்வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும் அது நாயகனை உசுப்புவதற்காகச் செய்யப்பட்ட பொய் என்றும் மலிவான கிளைமாக்சை அவர்கள் உருவாக்கும்போது, இலக்கியத்தின் உன்னதம் அங்கு அடியோடு கொல்லப்படுகிறது. இது பாதிக்கப்பட்ட உண்மை மனிதர்களுக்கு இழைக்கப்படும் இரண்டாவது வன்கொடுமையாகும்.

கதையின் உச்சக்கட்டக் காட்சியில் மயில்நாதன் பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக் கொள்ளும் தருணம் மிக வலி மிகுந்ததாகும்.

தன் தங்கையின் எதிர்காலத்திற்காகவும் குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காகவும் தனது நாவலின் ஆன்மாவை விற்றுவிட்டதாக அவர் படும் மனவேதனை தனிமனிதனின் பரிதாபகரமான நிலையைக் காட்டுகிறது. பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளியேறும் போது, தன் கைகளாலேயே தனது படைப்பின் கழுத்தை நெரித்துவிட்டதாக உணர்கிறார்.

சினிமா உலகத்தை விட்டு வெளியேறும் மயில்நாதன், வாச்சாத்தி மக்களுக்காக மனத்திற்குள் அழுதது போய், ‘இப்போது தமிழகமே ஒரு வாச்சாத்தி ஆகிவிட்டது’ என்று எண்ணி வெளிப்படையாக அழுவதாகக் கதை நிறைவடைகிறது. இது வெறும் எழுத்தாளரின் தோல்வி அன்று; ஒட்டுமொத்த சமூகத்தின் அறம் செத்துப் போனதற்கான அழுகையாகும்.

சு. சமுத்திரம் அவர்களின் ‘புலித்தோல் போர்த்திய மாடுகள்’ என்ற சிறுகதை, இலக்கியத்திற்கும் சினிமாவுக்கும் இடையிலான மோதலைப் பேசுவதோடு நின்றுவிடாமல், நவீனச் சமூகத்தில் மனித உறவுகளும் கலைகளும் எப்படிப் பணத்தின் முன் மண்டியிடுகின்றன என்பதைத் திறம்படக் காட்டுகிறது. 

தனிமனிதன் தனது குடும்பச் சூழலுக்காக எங்குத் தன் சுயமரியாதையைத் தொலைக்கிறான், வணிகச் சந்தை எப்படி நல்ல படைப்புகளை விலைக்கு வாங்கிச் சிதைக்கிறது என்பதை மிகக் கறாராகவும் சமரசமின்றியும் இக்கதை காட்டுகிறது. இன்றைய நுகர்வுப் பண்பாட்டுச் சூழலில் கலையைச் சரக்காக மாற்றும் போக்குகளுக்கு எதிரான எச்சரிக்கை மணியாக இச்சிறுகதை நிலைகொள்கிறது.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *