
எழுத்தாளர் வா.மு. கோமுவின் படைப்புலகம் எப்போதும் பெருநகரங்களின் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள்ளோ அல்லது சாமானியர்களின் வாழ்வியலைத் தொலைவிலிருந்து பார்க்கும் பார்வையாளர்களின் நிலையிலோ நிற்பதில்லை. மாட்டின் சாணம் படிந்த கரங்களோடும் வியர்வை நாற்றத்தோடும் கிராமத்து மண் வாசனையோடும் நேரடியாகக் களமிறங்கிப் பேசக் கூடியது.
அவர் எழுதியுள்ள ‘ஜாம்பீஸ்’ என்ற சிறுகதை, நடுத்தர வயது மனிதனின் அன்றாட இருத்தலியல் போராட்டங்களையும் அவனது சமூகச் சூழலையும் மனித உறவுகளின் ஊசலாட்டங்களையும் ஆழமாகப் பேசும் முக்கியமான படைப்பாகும். இக்கதை மனித மனங்களின் உன்னதத்தையும் அதேசமயம் அதன் நயவஞ்சக முகத்தையும் காட்டுகிறது. எளிய மக்களின் உளவியல், நகரமயமாக்கலின் தாக்கம், புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வியல் சிக்கல்கள் ஆகியவற்றை யதார்த்தமாகவும் அதேசமயம் கூர்மையாகவும் இந்தச் சிறுகதையில் காணமுடிகிறது.
கதையின் நாயகனான மனோகரனுக்கு வயது ஐம்பத்தைந்து. அவனது உடல் ஆரோக்கியம் சார்ந்த பயங்கள், நவீனத் தொழில்நுட்பங்களின் வருகையால் அவன் அடைந்திருக்கும் சிறு சிறு மாற்றங்கள், ஊசி போடுவதிலிருக்கும் அவனது தீவிரமான பீதி ஆகியவை மூலம் ஒரு சராசரி கிராமத்து நடுத்தர மனிதனின் பிம்பம் நம் கண்முன்னே கட்டமைக்கப்படுகிறது.
“இதுகாலம் வரை அவன் உடலில் குளுக்கோஸ் கூட இறங்கியிருக்கவில்லை. ஊசிபோடுவதற்கு அவனுக்கு இன்னமும் பயம் தான்.” என்ற வரி அவனது எளிய கிராமியப் பின்னணியையும் நவீன மருத்துவ முறைகளிடம் அதுவும் ஊசி போன்ற விடயங்களில் அவன் காட்டும் விலகலையும் தெளிவாக உணர்த்துகின்றது.
ஆனால், இத்தகைய எளிய மனோகரன், இன்றைய நுகர்வுப் பண்பாட்டின் வலைக்குள் எப்படிச் சிக்கிக்கொள்கிறான் என்பதை அவனது ‘டாஸ்மார்க்’ சார்ந்த தேடல்கள் மிகச் சரியாக வெளிப்படுத்துகின்றன. ‘குடி’ என்பது அவனுக்கு வெறும் போதை அன்று; அது அவனது அன்றாட ஏகலைப்புக்கான தற்காலிகத் தப்பித்தல். ஊருக்கும் ‘டாஸ்மார்க்’ கடைக்குமான தொலைவு, வடதிசை, தென்திசை என அவன் அளக்கும் கணக்குகள், மின்சார வாகனம் (Electric Scooter) வாங்கியதால் தெருநாய்களிடம் அவன் படும்பாடு போன்றவை கதையைச் சுவாரஸ்யமாக நகர்த்துவதோடு, ஒரு மனிதனின் தனிப்பட்ட வெளியை இந்தச் சமூகம் எவ்வாறு குறுக்குகிறது என்பதையும் குறியீட்டு ரீதியாக உணர்த்துகின்றன.
மனோகரன் தனது தேவைகளுக்காக எட்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் கடைக்குச் செல்லும்போது, சிற்றூரில் காத்திருக்கும் சில மனிதர்கள் அவனிடம் இலவசமாகச் சரக்கு வாங்கித் தரும்படி நச்சரிப்பது கிராமியச் சமூகத்தின் பரிதாபகரமான பக்கத்தைக் காட்டுகிறது. ஆரம்பத்தில் அதனைத் தவிர்க்க முடியாதவனாக இருக்கும் மனோகரன், ஒருகட்டத்தில் சண்முகம் என்பவனின் அறிவுரையைக் கேட்டுத் தன் போக்கை மாற்றிக்கொள்ள முயல்கிறான்.
ஆனால், தன் சொந்தக் கவலையைத் தாண்டி அடுத்தவர்களுக்கு உதவ நினைக்கும் எளிய மனிதர்கள் எப்போதுமே இந்தச் சமூகத்தில் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. ஊர்க்காரர்கள் அவனிடம் எதிர்பார்த்தது அவனது மனிதநேயத்தையன்று; அவனது பணத்தையும் ‘பாட்டில்’களையும் மட்டுமே. உதவி செய்த கைகளே தனக்கு எதிராகத் திரும்பும் போது மனோகரன் அடைந்த ஏமாற்றம் தனிமனித உறவுகளின் பொய்ம்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
கதையின் மிக முக்கியமான திருப்புமுனையாகவும் ஆழமான உளவியல் தளமாகவும் அமைவது பரிச்சன் என்ற ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியின் அறிமுகம் ஆகும். சொந்த மண்ணில் பிழைக்க வழியில்லாமல், தமிழ்நாட்டிற்கு வந்து திருப்பூர், மதுரை, சென்னை என உழைப்பை விற்றுப் பிழைக்கும் பரிச்சன் போன்ற இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் பிரதிநிதியாக இருக்கிறான்.
மொழி தெரியாத இடத்திலும் தமிழைக் கற்றுக் கொண்டு, தன் குடும்பத்திற்காக உழைக்கும் பரிச்சனின் அப்பாவித்தனமான புன்னகையும் அவனது காதலியின் புகைப்படத்தைக் காட்டிப் பெருமிதம் கொள்ளும் தன்மையும் மனோகரனை அவனுடன் ஐக்கியப்படுத்துகின்றன.
சொந்த ஊர்க்காரர்களிடம் ஏமாந்த மனோகரனுக்கு, மொழி அறியாத வேறு மாநிலத்துத் தொழிலாளி ஒருவன் உண்மையான தோழமையாக மாறுவது மனித உறவுகளின் விசித்திரமான பரிமாணத்தைக் காட்டுகிறது.
இங்குச் சாதியோ, மொழியோ, மாநிலமோ தடடையாக இல்லை; விளிம்புநிலை மக்களின் ஏளனங்களும் வாழ்வியல் நெருக்கடிகளும் அவர்களை ஒன்றாக இணைக்கின்றன.
கதைக்குத் தலைப்பாக வைக்கப்பட்டுள்ள ‘ஜாம்பீஸ்’ (Zombies) என்ற வார்த்தை மிகவும் அர்த்தமுள்ளதாகும். ‘ஜாம்பீஸ்’ என்பவை உயிருள்ள பிணங்கள்; எதைக் கண்டாலும் தின்று தீர்க்கக் கூடியவை; சுயசிந்தனையற்றவை. கதையின் இறுதியில் பரிச்சன் வேலை செய்யும் கட்டட வளாகத்தில், சிக்கன் விருந்துக்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகள் இந்தக் குறியீட்டை முழுமை பெறச் செய்கின்றன. மனோகரன் தன் சொந்தப் பணத்தை செலவழித்து, அவர்களுடன் நட்பாகப் பழகி, மதுவும் உணவும் வழங்கி உதவினாலும், கணக்கில் சிறிய மாற்றம் ஏற்பட்டவுடன் அந்த மனிதர்கள் மிருகங்களாக மாறுவதை எழுத்தாளர் வா.மு. கோமு பதிவு செய்துள்ளார்.
“இல்ல சார் பத்து கோட்டருக்கு பணம் குடுத்தேன்! திடீரென நான்குபேர் அருகில் வந்து நிற்கவும் மனோகரனுக்கே பீதியானது. ஆங்கிலப்படங்களில் வரும் ஜாம்பீஸ் கூட்டம் போல தெரிந்தது இவனுக்கு.” என்ற காட்சி கச்சிதமாகப் பொருந்துகிறது.
நன்மை செய்தவனைத் திரும்பித் தாக்கத் துடிக்கும் மனித மனங்களின் பேராசையையும் நன்றிக் கெட்டத்தனத்தையுமே அந்த ‘ஜாம்பீஸ்’ கூட்டம் வெளிப்படுத்துகிறது.
இறுதியில் சமையல்காரர் கிஷோர் தாஸ் மனோகரனின் சட்டையைப் பிடித்துக் கிழிப்பதன் மூலம், எளிய மனிதர்களிடம் காணப்படும் வன்முறையும் நன்றிமறத்தலும் உச்சத்தை அடைவதை வா.மு. கோமு துல்லியமாகக் காட்டுகிறார்.
எழுத்தாளர் வா.மு. கோமுவின் ‘ஜாம்பீஸ்’ சிறுகதை வெறும் போதையில் திரியும் மனிதனின் கதையன்று; இது நவீன நாகரிகத்தின் விளிம்பில் நின்றுகொண்டு, மனிதநேயத்திற்கும் பேராசைக்கும் இடையே நடக்கும் நிரந்தர யுத்தத்தின் பதிவு.
எளிய மக்களின் பலவீனங்களை எள்ளிநகையாடும் அதேவேளையில், அவர்களின் துயரங்களையும் உளவியலையும் கறாரான பார்வையோடு இக்கதை அணுகுகிறது. வட்டார வழக்குச் சொற்களின் பலத்துடன் எழுதப்பட்டுள்ள இப்படைப்பு, சமகாலச் சமூகத்தின் உண்மையான முகத்தைக் கண்ணாடியில் காட்டும் ஆவணமாகும்.
– – –
