
எழுத்தாளர் அசோகமித்திரனின் எழுத்துலகம் ஆர்ப்பாட்டமான முழக்கங்களோ, வீரியமிக்க புரட்சிகளோ அற்றது. நடுத்தர, விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலில் ஊறிப்போன மெல்லிய சோகம், அன்றாட வாழ்க்கையின் கோரப் பிடிகளிலிருந்து தப்பிக்க அவர்கள் நடத்தும் தொடர்ப் போராட்டம், காலம் எவ்வித இரக்கமுமின்றி அவர்களை மிதித்துச் செல்வதை எந்தவிதக் கோபமும் வெளிக்காட்டாமல் பதிவு செய்யும் யதார்த்த பூர்வமான இயல்புவாதப் பாணி ஆகியன அவரின் அடையாளங்கள்.
அவர் எழுதிய ‘புலிக்கலைஞன்’ என்ற சிறுகதை, சினிமா உலகின் குளிர்ச்சியான பின்னணிக்கும் அதன் மறுபக்கத்தில் பசியோடு அலையும் எளிய கலைஞனின் நசுக்கப்பட்ட ஆன்மாவுக்கும் இடையிலான மோதலைப் பேசும் முக்கியமான சிறுகதை.
இக்கதையை வெறும் சினிமா பின்னணியிலான நிகழ்வாகப் பார்ப்பதைவிட, இயந்திரத்தனமான நவீன உலகில் மனித உறவுகளின் உறைநிலை, தனிமனித வாழ்வியலில் கலைக்கும் வாழ்வாதாரத்திற்கும் இடையிலான நிரந்தர முரண்பாடு மற்றும் பசித்த வயிறின் முன் கலை எவ்விதப் பலனுமற்றுக் கானலாகிப் போவது ஆகியவற்றைச் சுட்டும் உளவியல் ஆவணமாக அணுக வேண்டும்.
கதையின் தொடக்கம் எவ்வித அவசரமுமின்றி, சலிப்பான மதிய வேளையின் மந்தநிலையோடு தொடங்குகிறது. கால அட்டவணைகளின் நீட்டிப்பு, டிபன் இடைவெளிகளின் சுருக்கம், அலுவலகத்தின் தண்டனைக்குரிய நேர நீட்டிப்பு என விவரிக்கப்படும் சூழல், தனிமனிதனின் ஒட்டுமொத்த ஆயுளையும் காலமும் முதலாளித்துவமும் எவ்வாறு உறிஞ்சிக் கொள்கின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
கதையில் வரும் அலுவலகப் பணியாளர்கள் ஒன்றரை ஆண்டுகளாகத் திரைப்படமே எடுக்காமல், சம்பளம் பெற்றுக் கொண்டு மேசையில் கால்களைத் தூக்கிப் போட்டுக் கொண்டு தூங்கியவர்கள். ஆனால், இந்த ‘நிர்ப்பந்த ஓய்வு’ அவர்களுக்கு எந்த விடுதலையையும் கொடுக்கவில்லை. அவர்களின் தலைமயிரை நரைக்க வைத்து, அடிவயிற்றில் ஊளைச் சதையைச் சேர்த்து, ‘டயாபடிஸ்’ நோய்க்கு இடம் கொடுத்து, சிந்தனைக்கு இலக்கின்றி விழிகளை அலைபாய வைத்துள்ளது. இது தனிமனிதனின் உளவியல் சிதைவின் துல்லியமான சித்திரம்.
வேலை இல்லாத நடுத்தர வர்க்கத்தின் சோம்பலும் அதேசமயம் அந்தச் சோம்பலே அவர்களை எப்படி அகத்தளவில் வதைக்கிறது என்பதையும் எழுத்தாளர் அசோகமித்திரன் நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளார்.
“சிந்தனைக்கு இலக்கு இல்லாத காரணத்தால் விழிகளுக்கு அலைபாயக் கற்றுக் கொடுத்து, பேச்சில் நிறைய உளறலை வரவழைத்துக் கொள்ளலாம்” என்ற வரிகள் மனித வாழ்வின் அர்த்தமற்ற தன்மையைக் (Absurdity) கறாராகப் பேசுகின்றன.
இந்தத் தேக்க நிலையிலும் சோர்விலும் மூழ்கியிருக்கும் அலுவலகத்திற்குள் திடீரென்று சூறாவளியைப் போல வந்து விழுகிறான் ‘டைகர் பைட்’ காதர்.
காதர் சாதாரண மனிதனல்லன்; தன் வாழ்நாளின் உழைப்பையும் கலையையும் நம்பி, தன் உடலில் மிச்சமிருக்கும் அத்தனை சக்தியையும் திரட்டி புலியின் தன்மையை அப்படியே வெளிப்படுத்தக் கூடியவன். அவனது வருகை அந்தச் சிறிய அறைக்கு விசித்திரமான அதிர்ச்சியை அளிக்கிறது.
காதர் தன் உடலை வளைத்து, முகத்தை மாற்றி, சிறுத்தையின் உக்கிரத்தோடு அறையில் கர்ஜிக்கும் அந்தத் கணம், தமிழ் சினிமாவும் கலையும் ஒருகாலத்தில் எத்தகைய எளிய மனிதர்களின் உழைப்பில் இயங்கின என்பதைச் சொல்கிறது.
அவன் நாற்காலிகள் மீது பாய்ந்து, ஜன்னல் ‘வெண்டிலேட்டர்’ கம்பியைப் பற்றி, மின்விசிறிக்கு அடியில் ஆளுயரத்திற்கு எகிறிக் குதிக்கும்போது, அங்கிருந்த சர்மாவும் மற்றவர்களும் திகிலடைந்து “பேஷ்” என்கிறார்கள். அங்கே அவனது கலைக்கு உடனடி அங்கீகாரம் கிடைக்கிறது; பாராட்டு கிடைக்கிறது.
ஆனால், இந்தக் கலை அவனுக்கு எதைத் தந்தது? ஒரு சோற்றுப் பருக்கையையாவது தந்ததா? இல்லையே! அவன் கலைத்துவிட்டுக் கழட்டிய முகமூடிக்குப் பின்னால் இருப்பது வெறும் எலும்பும் தோலுமாய் மாறிய மனிதனின் வடிவம்தானே!.
“நான் சம்பாரிச்சு எவ்வளவோ மாசமாகுதுங்க… நாலு குழந்தைங்க, எல்லாம் சின்னச் சின்னது” என்று அவன் சர்மாவின் காலில் விழுந்து அழும் அந்த நிமிடம், கலையின் புனிதம் குறித்த நம் முகத்தில் அறைகிறது.
தன் வாழ்நாளில் நாட்களாகச் சாப்பிடாத அந்த மனிதனுக்கு, சர்மா தரும் இரண்டு ரூபாயைக்கூட வாங்க மறுத்துவிட்டு, “ஏதாவது ‘ரோல்’ வாங்கித் தாங்க, ஐயா!” என்று அவன் கெஞ்சுவது, கலையைத் தன் வயிறாற்றுவதற்கான ஒரேவழியாக அவன் நம்புவதைக் காட்டுகிறது. இங்கே கலையும் மனித வாழ்வியலும் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றன; இறுதியில் பசிதான் ஜெயிக்கிறது.
எழுத்தாளர் அசோகமித்திரன் இக்கதையில் சினிமா துறையின் இன்னொரு கோர முகத்தையும் மிக யதார்த்தமாகப் பதிவு செய்துள்ளார். ‘சினிமா’ என்பது நிரந்தரமற்றது; அது எப்போது வேண்டுமானாலும் திசையை மாற்றக் கூடியது.
கூட்டமாக வந்து நிற்கும் அந்த எளிய மனிதர்களை சினிமா பயன்படுத்திக் கொள்கிறது. “ராமராஜ்யம் பற்றிப் படம் எடுத்தால்கூடப் படத்தில் வரும் பிரஜைகள் ‘தாதுவருஷத்து’ (தாதுவருஷப் பஞ்சகாலம்) மக்களாகத்தான் இருப்பார்கள்” என்ற வரி, சினிவாவில் விளிம்புநிலை மக்கள் எப்போதுமே இழிவுபடுத்தப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட பிம்பங்களாகவே நடத்தப்படுவதை விமர்சிக்கிறது.
காதருக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று சர்மா மனப்பூர்வமாக விரும்புகிறார். அவனுக்கான ஒரு காட்சியைப் படத்தில் இணைக்க முயல்கிறார். காதருக்குக் கடிதம் போடப்படுகிறது; ஆனால், அந்த விலாசம் மாறிவிடுகிறது. காதரைத் தேடினால் அவன் அந்த ஊரிலேயேயில்லை.
காதர் எங்குச் சென்றான் என்றுகூடத் தெரியாமல் காலம் வேகமாக நகர்ந்துவிடுகிறது. இதற்கிடையில், சினிமா உலகம் தனது போக்கை மாற்றிக்கொள்கிறது. புலிச்சண்டைக்கான தேவை போய், இப்போது கிராமிய சங்கீதத்துடன் கதாநாயகன் “காவடி எடுக்கும்” அல்லது “கரகம் எடுக்கும்” ‘ட்ரெண்ட்’ வந்துவிடுகிறது. ஒரு மாதத்திற்குள் ரசனை மாறிவிடுகிறது. காதரின் புலிவேடம் குப்பைத் தொட்டிக்குப் போகிறது.
இங்கே ‘தனிமனிதனின் வாழ்வியல்’ என்பது சினிமா லாபத்துக்காகவும் ரசிகர்களின் மாறிவரும் மனநிலைக்காகவும் தூக்கி எறியப்படும் கவிழ்ந்து நனைந்துவிட்ட காகிதக் கப்பலைப் போலாகிவிடுகிறது.
காதரின் வாழ்வில் ‘தனிமனித அவலம்’ என்பது வெறும் பொருளாதாரப் பசியோடு நின்றுவிடுவதில்லை; அது அவனது குடும்ப வாழ்வையும் நிம்மதியையும் முற்றிலுமாகச் சிதைத்து விடுகிறது.
அவனுடைய சொந்த மனைவியே, “வீட்டுப் பக்கமே வராதே” என்று அவனை விரட்டிவிடுகிறாள். நீண்ட காலமாகச் சம்பாதிக்காத கணவனை, பிழைக்கத் தெரியாத மனிதனை, நான்கு பசிக்கிற குழந்தைகளுக்குத் சோறு போட முடியாத அப்பாவைச் சமூகமும் குடும்பமும் எப்படி நடத்துகிறது என்பதன் நேரடி சாட்சியாகக் காதர் திகழ்கிறான்.
அவன் திறமையான கலைஞன்தான்; நிஜப் புலியைப் போலவே பாய்ந்து கர்ஜிக்கக் கூடியவன்தான். ஆனால், அந்தத் திறமை அவனுக்குச் சோறு போடவில்லை. திறமைக்கும் வயிற்றுப் பசிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை உணர்ந்து அவன் அடையும் உளவியல் சிதைவுதான் கதையின் உண்மையான சோகம்.
‘புலிக்கலைஞன்’ சிறுகதையின் முடிவு எந்தவிதப் பிரம்மாண்டமான திருப்பங்களுமின்றி, மெல்லிய பெருமூச்சோடு முடிவடைகிறது. காதர் கிடைக்கவில்லை; அவனுக்காகச் சிந்தித்த திட்டங்கள் கைவிடப்படுகின்றன; சினிமா தன்போக்கில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிடுகிறது.
எழுத்தாளர் அசோகமித்திரன் இக்கதை வழியாக மனித வாழ்வியலின் பெரிய எதார்த்தத்தை நம் கண்முன்னே நிறுத்துகிறார். நவீன உலகம், கலையையோ அல்லது தனிமனிதனின் உழைப்பையோ மதிக்கிறது என்பதைவிட, அது இயந்திரத்தின் உதிரிப்பாகம் போல மனிதர்களை நசுக்கித் தள்ளுகிறது என்பதையே இது உணர்த்துகிறது.
காதர் அணிந்த அந்தப் ‘புலி முகமூடி’ என்பது அவனது கலை மட்டுமன்று; அது இந்தச் சமூகத்திடமிருந்து தன் பசியை மறைத்துக் கொள்ளவும் தன் அடையாளத்தை நிலைநிறுத்தவும் அவன் அணிந்திருக்கும் தற்காப்புக் கவசம். அந்த முகமூடியைக் கழட்டியவுடன் அவன் எளிய, பரிதாபத்திற்குரிய மனிதன் மட்டுமே. அந்த மனிதனின் கண்ணீரைத் துடைக்க முடியாத இந்தக் கலை உலகமும் இயந்திரத்தனமான நம் சமூகமும் என்றென்றும் குற்றவாளிக் கூண்டில்தான் நிற்கின்றன.
– – –
