இரு நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 106 வேரறுந்த மனிதர்கள் (கோணங்கியின் ‘கம்மங்கதிர்’ சிறுகதையை முன்வைத்து…)

 

 

தமிழ் நவீன இலக்கிய வெளியில் சிதறிப்போன நிலப்பரப்புகளையும் காலத்தின் வன்முறையால் நசுக்கப்பட்ட கிராமியச் சின்னங்களையும் தன் குறியீட்டு மொழியால் உயிர்ப்பித்தளித்த முக்கியமான எழுத்தாளர் கோணங்கி. இவரது புனைகதைகள் வெறும் கதைகளாக இருப்பதில்லை; அவை நிலத்தின் மணத்தையும் ரத்தத்தையும் சரித்திரத்தின் வறட்சியையும் ஒருசேரச் சுமந்து நிற்கும் கவித்துவ வெளிப்பாடுகள். அந்த வகையில், கோணங்கியின் ‘கம்மங்கதிர்’ என்ற சிறுகதை, தனிமனித வாழ்வியல் சார்ந்து ஆழ்ந்த விவாதத்திற்குரிய ஒரு பிரதியாகும்.

கிராமங்களைவிட்டு நகரத்திற்குத் துரத்தப்பட்ட மனிதர்களின் வேரறுத்த நிலையை, நினைவுகளின் சுமையையும், காலத்தின் கொடூரத்தையும் இக்கதை விவரிக்கிறது.

“கடைசிமரம். கடைசி எறும்பு. கடைசிப்பருந்து இந்தக் கிராமத்தின் கடைசி மனிதனாய் நடந்து போகிறான்” என்ற வரிகள் இக்கதையின் ஒட்டுமொத்த ஜீவனுமாகும். நவீனமயமாக்கலும் கால மாற்றமும் கிராமங்களை எப்படிப் பெரும் சூனியமாக மாற்றிவிட்டன என்பதை எழுத்தாளர் கோணங்கி தீவிரமாகப் பதிவு செய்கிறார்.

“ஊரில் எல்லையை நெருங்க முடியாமல் திரும்பி வருகிறான் தொலைவான கிராம வீடுகள் க்ஷீணதசையடைந்துள்ளன. வீடுகளுக்குள் பாதுகாக்கப்பட்ட உழவுச் சின்னங்களின் பெரு மூச்சு இரவில் எழும். ஓர் இரவு ஊரில் தங்க முடியாது.”

இங்குக் ‘கிராமம்’ என்பது மனிதர்கள் வாழ்ந்த இடமாக இல்லாமல், அதன் ஆத்மா கருகி உலர்ந்த மயான பூமியாக மாறிவிட்டது. நிலம் தன் கருமையை இழந்து, காய்ந்து, வெயிலில் எரிகிறது. உழவுச் சின்னங்கள் வெறும் எச்சங்களாக மட்டுமே எஞ்சியுள்ளன. கிராமத்தை விட்டு வெளியேறி, புகைமூடப்பட்ட நகரில் முடங்கிப்போன மனிதர்களின் தொடர்ச்சியாகவே அந்த மனிதனின் பயணம் அமைகிறது. எழுத்தாளர் கோணங்கி இக்கதையில் கிராமத்தைப் பொருளாதார அலகாகப் பார்க்கவில்லை; அது மானுடவேர்கள் கருகிப்போன சரித்திரத்தின் சாட்சியாகப் பார்க்கிறார்.

நகரத்தின் பேருந்து நிலையத்தில் நடக்கும் எதிர்பாராத சந்திப்பு, மனிதனின் நிகழ்காலத்தை மொத்தமாகச் சிதைத்துப் போடுகிறது. பல ஆண்டுகளுக்குப் பின் தன் கிராமத்துச் சித்துப்பெண் உடையம்மாவைச் சந்திக்கும் தருணம் அவனுக்கு மரண தண்டனைக்கு நிகரானது.

“முப்பது வருஷங்களுக்குப் பின்னால் பிள்ளை குட்டிகளோடு பஸ்டாண்டில் வைத்து சந்தித்துத் துளி மெளனத்தால் அவனைக் கொன்ற உடையம்மா. வாடி உலர்ந்த கதிரில் கண் தொட மறுக்கிறது.”

இக்கதையில் ‘உடையம்மா’ என்பது வெறும் பெண்பாத்திரமன்று; அது அவனது இளமைக்காலத்தின், பாட்டியின் வேர்களின் ஆழத்திலிருந்து உயிர்த்தெழுந்த ஒரு குறியீடு. ஆனால், காலத்தின் கரங்கள் அவளை மாற்றிவிட்டன. “இற்று நரம்பான உடையம்மா. கையில் போட்டிருந்த பளுப்பு ரப்பர் வளையல். நரம்பு துருத்திய உலர்ந்தகைகள்” என அவள் காலத்தின் வன்முறைக்கு ஆளாகியுள்ளாள்.

அவளைத் திருமணம் செய்துகொள்ளாமல் விலகிச்சென்ற அந்தத் தயக்கமும் பின்னாளில் அவள் இன்னொருவனுடன் குடும்பம் நடத்தி, குழந்தைகள் பெற்று, பேருந்து நிலையத்தின் நெரிசலில் சந்திக்கும் கணமும் மனித வாழ்வில் தீர்க்கப்படாத குற்றவுணர்ச்சியின் உச்சமாகும். அந்தச் சந்திப்பு வார்த்தைகளால் அன்று; மௌனத்தால் அவனைக் கொல்கிறது.

எழுத்தாளர் கோணங்கியின் கதைகளில் பாட்டிப்பாத்திரம் மிக முக்கியமான குறியீடாகும். “நூற்றி மூணாவது வயதில் செத்துப்போன பாட்டிக்காக அழுதார்கள்… பெரிய முலைகளுடன் பாட்டியின் கருமையான உடல், பாட்டியின் அந்தரங்கம் சொன்ன சேதிகளை உடையம்மா முணு முணுத்தாள்.”

இங்குப் பாட்டி என்பவள் நிலத்தின் தொடர்ச்சி; தலைமுறைகளின் கதைகளைச் சுமந்த ஒரு பழங்குடி மூதாட்டி. அவளது உடலும் பால்மையும் நிலத்தின் வளமைச்சாயலோடு இணைத்துப் பேசப்படுகிறது.

இந்தக் கதையில் வரும் நத்தைக்கூடுகள் மிக முக்கியமான உருவகமாகும் – 

“தீங்கருதுப் பருவத்தில் கம்மங் கதிர் மீது கொம்புகளை ஆட்டி ஆட்டி ஏறும் நத்தை கதிரின் உச்சி வரை ஸ்பரிசித்து கொம்புகளில் நடனமிடும். இன்று நத்தையாய் கூடுசுமந்து அலைகிறான்.”

மனிதர்கள் அனைவரும் தங்கள் கடந்த கால நினைவுகளையும் நசுக்கப்பட்ட வறுமையையும் கிராமத்தின் எச்சங்களையும் நத்தையைப் போல முதுகில் சுமந்துகொண்டு நகர வீதிகளில் அலைகிறார்கள். கம்மங்கதிரின் உச்சியில் ஏறி நடனமிட்ட நத்தையின் காலம் போய், இன்று கூடுசுமந்து தவிக்கும் அலைச்சலே மனிதனின் மீதமுள்ள வாழ்க்கையாக உள்ளது.

இக்கதையின் நாயகன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய நெருக்கடி என்பது ‘நிச்சயமின்மை’. “இதுவரையான நிச்சயங்கள் சருகாகி உதிர்ந்தன.” மனிதன் தான் வாழ்ந்த மண்ணை இழந்து, காதலித்த அல்லது விலகிய பெண்ணை இழந்து, நிரூபிக்கப்பட்ட அடையாளமின்றி அந்தரத்தில் நிற்கிறான்.

அவன் எதிர்கொள்ளும் வெயிலும் கானலும் கருங்கோடையும் அவனது அக உலக வறட்சியின் வெளிப்பாடுகளே. “கெட்ட நெடுங்காலம்” அவனைக் கிராமத்திலிருந்து துரத்தி நகரப் பேருந்து நிலையங்களுக்குக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. பாட்டியின் மரணம், உடையம்மாவின் மௌனம், கம்மங்கதிரின் தொலைதூர இயக்கம் ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்து அவனை பரிதாபகரமான தனிமைப் பெருநிலையில் ஆழ்த்துகின்றன.

இந்தச் சிறுகதை, தமிழ் வாசகரை வசதியான கற்பனைகளில் வாழ அனுமதிக்காத யதார்த்தப் பிரதி. நிலத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான பந்தம் அறுந்துபோகும் போது, மனிதன் வெறும் கூடுசுமந்த நத்தையாக எப்படி மாறுகிறான் என்பதை இக்கதை கறாராகவும் கவித்துவத்தோடும் விவரிக்கிறது.

நவீன நாகரிகத்தின் போர்வையில் நாம் தொலைத்துவிட்ட கிராமிய ஆத்மாவுக்கான தீராத ஒப்பாரியாகவே இக்கதை ஒலிக்கிறது. மனித வாழ்வியலின் இத்தகைய வலிமிகுந்த உண்மைகளை எதிர்கொள்ளும்போது, நம்காலத்தின் வெற்றி எத்தனையோ இழப்புகளின் மீதுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்ற கசப்பான உண்மை புரியவருகிறது.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *