
தமிழ் நவீன இலக்கியத்தில் பெண் எழுத்துகளின் வழியே சமூகத்தின் ஆழமான உளவியல் சிக்கல்களையும் மரபுவழிப் பாலியல் கற்பிதங்களையும் வெளிப்படுத்தியதில் எழுத்தாளர் அம்பைக்கு (சி.எஸ். லட்சுமி) முக்கியமான இடமுண்டு.
அவரது குறிப்பிடத்தக்கப் படைப்புகளில் ஒன்றான ‘காட்டில் ஒரு மான்’ என்ற சிறுகதை, பெண் உடலின் முழுமை அல்லது குறைபாடு குறித்த சமூகத்தின் கொடூரமான வரையறைகளையும் அதனைத் தனிமனிதன் தன் அக உலகத்தால் எப்படிக் கடந்து செல்கிறான் என்பதையும் குறித்து ஆழமாகப் பேசுகிறது. உடல் சார்ந்த சமூக ஒடுக்குமுறைகளையும் தனிமனித வாழ்வியலின் உளவியல் பரிமாணங்களையும் இப்படைப்பு கறாராகவும் நுட்பமாகவும் முன்வைக்கிறது.
கதையின் மையக் கதாபாத்திரமான தங்கம் அத்தை என்பவரைச் சுற்றியுள்ள மர்மம் என்பது அவளுடைய உடல்சார்ந்த இயல்பை மையமாகக் கொண்டது. வள்ளி என்ற பெண் மூலம் வெளிப்படும் “அத்தை பெரியவளே ஆகலை” என்ற செய்தி, பெண்ணின் மதிப்பையும் முழுமையையும் அவளது உடலியல் மாற்றங்களைக் கொண்டே சமூகம் அளவிடுகிறது என்ற யதார்த்தத்தைக் காட்டுகிறது.
சமூகம் பெண்களின் உடலைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, அதனைக் குறிப்பிட்ட சட்டகத்திற்குள் (Reproductive framework) மட்டுமே மதிப்பிடுகிறது. தங்கம் அத்தையின் உடல் அந்தச் சட்டகத்திற்குள் பொருந்தவில்லை என்பதால், அவளை “உடைபட்ட பறவை” போலவும் உள்ளே ஒன்றுமில்லாத “பொக்கை மரத்தைப்” போலவும் சமூகம் முத்திரைக் குத்துகிறது.
இங்கே எழுத்தாளர் அம்பை மிகக் கறாராக ஒரு கேள்வியை எழுப்புகிறார். ஒரு பெண்ணின் மதிப்பு அவள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதில் மட்டும்தான் உள்ளதா? அவளது உணர்வுகள், அன்பைச் சொரியும் கைகள், அறிவுசார் ஆற்றல்கள் யாவும் சமூகத்தின் பார்வையில் பொருட்படுத்தப் படுவதில்லையா? என்று கேட்டு மரபுவழிப் பார்வையை இக்கதை முற்றிலுமாக நிராகரிக்கிறது.
சமூகம் அவளை “குறைபாடுள்ளவள்” என்று ஒதுக்கிய போதிலும் தங்கம் அத்தையின் அக உலகமும் அவளது உடல் வெளிப்படுத்தும் உயிர்ப்பும் அதற்கு முற்றிலும் முரணாக உள்ளன.
தங்கம் அத்தையின் கைகள் தொட்டால் மாட்டுக்குப் பால் சுரக்கிறது; அவள் நட்ட விதைகள் முளைக்கின்றன; பிரசவ வலியில் துடிக்கும் சகோதரிக்கு அவள் தரும் ஆறுதல் வார்த்தைகள் தாயின் அரவணைப்பைவிடப் பிரம்மாண்டமானவை.
“ஏன், என் உடம்புக்கு என்ன? வேளாவேளைக்குப் பசிக்கலையா? தூக்கமில்லையா? எல்லா உடம்புக்கும் உள்ள சீரு இதுக்கும் இருக்கு” என்று அத்தை கேட்கும் கேள்வி, உடலியல் ரீதியான குறுகிய வரையறைகளைத் தகர்க்கும் தத்துவார்த்தக் குரலாகும்.
தனிமனித வாழ்வியலின் மிகக்கியமான அம்சம் என்னவென்றால், சமூகம் வழங்கும் பட்டங்களோ அல்லது குறைகளோ மனிதனின் முழுமையைத் தீர்மானிக்க முடியாது; அவனது செயல்களும் அன்பும் மட்டுமே அவனது இருப்பை அர்த்தப்படுத்துகின்றன என்பதை அத்தையின் கதாபாத்திரம் உணர்த்துகிறது.
‘தங்கம் அத்தையின் உடலை இயல்புநிலைக்குக் கொண்டுவர முயற்சிசெய்தல்’ என்ற பெயரில் சமூகம் நிகழ்த்தும் வக்கிரங்கள் கொடூரமானவை. ஊரில் புதுவைத்தியன் வந்தால் மருந்து கொடுப்பது, இங்கிலீஸ் வைத்தியம் பார்ப்பது, பேய் விரட்டுவது போலக் கரிய போர்வை போர்த்திய உருவத்தைவிட்டுப் பயமுறுத்துவது என அவளது உடல் ஒரு பரிசோதனைக் கூடமாக மாற்றப்படுகிறது.
சமூகம் தனக்கு உகந்ததாக வடிவமைக்காத எதையும் திருத்த முயலும் போர்வையில், அது தனிமனிதர்களின் மீது நிகழ்த்தும் வன்முறையை இந்தக் கதை காட்டுகிறது. ஏகாம்பர மாமாவுக்கு வேறு பெண் பார்த்தபோது அத்தை அரளி விதையை அரைத்துக் குடிக்க முயன்றதும் அதன் பின்னர் செங்கமலம் அந்த வீட்டிற்கு வருவதும் பெண்களின் உளவியல் சிதைவின் உச்சகட்டக் குறியீடுகளாகும்.
சமூக எதிர்பார்ப்புகளுக்குப் பயந்து தன் சுயத்தை இழந்து, தன் காதலுக்காகவும் நிம்மதிக்காகவும் போராடும் பெண்களின் தவிப்பை இப்படைப்பு மிக இரக்கமின்றி, அதே சமயம் யதார்த்தமாகப் பதிவு செய்கிறது.
கதையின் இறுதியில் தங்கம் அத்தை குழந்தைகள் கூடும் இரவில் சொல்லும் ‘காட்டில் ஒரு மான்’ என்ற கதை, ஒட்டுமொத்தக் கதையின் ஆன்மாவாக ஒளிர்கிறது.
தன் சொந்தக் காட்டைவிட்டுத் திடீரென்று வேறொரு அறிமுகமில்லாத காட்டிற்குத் தள்ளப்படும் மான், ஆரம்பத்தில் படும் பயமும் நடுக்கமும் தங்கம் அத்தை தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட அந்நியமாதல் மற்றும் நிராகரிப்பின் நேரடிப் பிரதிபலிப்பாகும்.
ஆரம்பத்தில் மிரண்டு ஓடும் அந்த மான், போகப்போக நிலவொளியில் அந்தப் புதிய காட்டின் ரகசியங்களைப் புரிந்து கொண்டு, அச்சம் நீங்கிச் சாந்தமடைவதுபோல, தங்கம் அத்தையும் தனது துயரங்களையும் சமூகத்தின் முத்திரைகளையும் தாண்டித் தன் சொந்த அக உலகில் அமைதியைக் கண்டடைகிறாள். குழந்தைகள் அந்த மானுடன் தோழமை பூண்டு உறங்குவது, மனிதர்களின் மீதான தூய அன்பின் வழியே அனைத்து வேதனைகளும் ஆற்றுப்படுத்தப்படுவதைக் குறிக்கிறது.
எழுத்தாளர் அம்பையின் இந்தச் சிறுகதை, பெண்களின் உடல் குறித்த சமூகத்தின் பிற்போக்கான கற்பிதங்களை உடைத்தெறியும் கூர்மையான விமர்சனப் பிரதியாகும்.
சமூகம் ஒரு பெண்ணை எவ்வாறெல்லாம் வரையறுக்க முயல்கிறது என்பதையும் அந்த வரையறைகளை மீறித் தனிமனிதன் தன் சொந்த அன்புக்கும் ஜீவனுக்கும் எப்படி உயிர்க்கொடுக்கிறான் என்பதையும் இக்கதை பேசுகிறது. தங்கம் அத்தையின் கண்ணீரும் புன்னகையும் ஒடுக்கப்பட்ட தனிமனிதர்களின் அக உலகப் போராட்டத்திற்கான அழியாத சாட்சியாகத் திகழ்கின்றன.
– – –
