
கிராமியச் சூழலின் யதார்த்த வாழ்வியலையும் ஆணாதிக்கச் சமூகத்தில் ஒடுக்கப்படும் பெண்களின் உளவியல் தத்தளிப்புகளையும் துல்லியமாகப் பதிவுசெய்து வருபவர்களில் எழுத்தாளர் பாரததேவி குறிப்பிடத்தக்கவர். இவரது ‘அவள் பெயர் பூங்கோதை’ எனும் சிறுகதை, கடுமையான உழைப்புக்கு நடுவே குடும்பச் சுமையால் சிதைந்துபோகும் கிராமத்துப் பெண்ணின் (பூங்கோதை) வாழ்வையும் அவளது சுயமரியாதைப் போராட்டத்தையும் இறுதியில் பாரம்பரியச் சமூகக் கட்டமைப்புகளுக்குள்ளேயே அவள் மீண்டும் சரணடையும் அவலத்தையும் குறித்துப் பேசுகிறது.
கடுமையான உழைப்பும் வறுமையும் நிறைந்த கிராமிய வாழ்க்கையில், பெண்ணின் உடல் உழைப்பு எவ்வாறெல்லாம் சூறையாடப்படுகிறது என்பதையும் அவளது உணர்வுகள் ஆணின் கோபத்திற்கு எப்பொழுதும் பலிகடா ஆக்கப்படுவதையும் இக்கதை காட்டுகிறது.
கதையின் நாயகியான பூங்கோதை, கிராமியப் பெண்களின் உழைப்பின் குறியீடு. களத்து உழைப்பை முடித்துவிட்டு வரும் கணவனுக்குச் சோளக் கஞ்சியும் கடியும் வைக்கும் எளிய குடும்பத் தலைவி.
வீட்டில் ஒன்றரை வயதுக் குழந்தையையும் ஓடிவிளையாடும் மற்ற பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வதுடன், பால் மாட்டுக்குப் புல் பறிப்பது, ஆடுகளுக்குக் கொளு கொண்டு வருவது, சோளம் குத்தி காய்ச்சுவது என அவளது அன்றாட வாழ்க்கை ஓய்வற்ற உழைப்பால் ஆனது.
கணவன் திருமனுக்குத் தன் மனைவியின் இந்த உழைப்பின் பரிமாணத்தைப் பற்றியோ அவளது உடல் சோர்வைப் பற்றியோ எந்தவிதப் புரிதலும் இல்லை. அவனுக்குத் தேவை பசியைத் தீர்க்கும் ருசியான உணவு மட்டுமே. வெங்காயத்தை உரிக்காமல் அப்படியே அள்ளிப் போட்டாள் என்ற சிறிய காரணத்திற்காக, அவன் அவளைக் கண்மூடித்தனமாக அடித்துத் துன்புறுத்துவது, ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்ணின் உடல் மீதான ஆணின் வன்முறை உரிமையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
திருமன் பூங்கோதையை அடிக்கும் விதம் மனிதத்தன்மையற்றது. கன்னத்தில் அறைவது, இடுப்பில் மிதிப்பது, வாசல்படியில் தள்ளுவது மற்றும் உச்சி மயிரைப்பிடித்து சுவரில் முட்டுவது போன்ற கொடூரங்கள் பெண்ணின் தனிமனித உரிமையை முற்றிலும் குலைக்கின்றன.
அடிதாங்காமல் பிறந்த வீட்டுக்கு ஓடிவரும் பூங்கோதை, இனி அந்த வீட்டுக்குப் போகவே மாட்டேன் என்று சபதம் செய்கிறாள். கணவனால் தன் வலது கண் கலங்கியதையும் நெற்றியில் வீக்கம் ஏற்பட்டதையும் எண்ணி அவள் படும் வேதனை அவளது அக உலகத்தின் வலியைக் காட்டுகிறது.
பிறந்த வீட்டில் சற்று காலம் நிம்மதியாக இருக்கும் அவளுக்கு, பிள்ளைகளைப் பிரிந்திருக்கும் தவிப்பு மிகப்பெரிய உளவியல் நெருக்கடியைத் தருகிறது. ஆனாலும், தன் சுயமரியாதையை விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற அவளது உறுதி, கிராமியப் பெண்களிடம் எழும் முதல் எதிர்ப்புக் குரலாக ஒலிக்கிறது.
பூங்கோதை வீட்டைவிட்டு வெளியேறிய பின்னர்த் திருமனின் நிலை பரிதாபகரமானதாக மாறிவிடுகிறது. பிள்ளைகளை வைத்துக் கொண்டு சமைக்கவும் முடியாமல், காட்டு வேலைக்கும் போக முடியாமல் அவன் படும் அவதி, குடும்ப அமைப்பில் பெண்ணின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்துகிறது.
பெரியம்மாவைக் கெஞ்சிப் பார்த்தாலும், அவரும் சலித்துக்கொண்டு விலகிவிடுகிறார். ஊர்ப் பெரியவர்களை அனுப்பிப் பூங்கோதையைச் சமாதானப்படுத்த முயலும் திருமன், இறுதியில் தான் செய்த தவறுக்கு வருந்துவதாகச் சொன்னாலும் அவனது மன்னிப்பு ஒரு உண்மையான குற்ற உணர்ச்சியை விடத் தன் தேவைகளுக்கான சமரசமாகவே முடிகிறது.
மறுபுறம், தாய் வீட்டில் தோழிகளுடன் சேர்ந்து வேலைக்குப் போய் வருவதும் கவலையின்றி வாழ்வதும் பூங்கோதைக்குப் புதிய சுதந்திரக் காற்றை வழங்குகிறது.
இக்கதையின் முக்கியமான உளவியல் திருப்புமுனை எம்.ஜி.ஆர் திரைப்படங்களின் தாக்கமாகும். கிராமியப் பெண்கள் தங்கள் கடினமான வாழ்க்கையிலிருந்து தற்காலிகமாகத் தப்பியோடத் திரைப்படங்களைத் துணையாகக் கொள்கின்றனர்.
‘அலிபாபாவும், நாற்பது திருடர்களும்’ படத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் பானுமதியின் காட்சியைக் கண்டு பூங்கோதை தன் கணவனோடு இருந்த இணக்கமான தருணங்களை எண்ணி ஏங்குகிறாள்.
அடுத்ததாக ‘தாய் சொல்லைத் தட்டாதே’ படத்தைப் பார்க்கச் செல்லும் போது, எம்.ஜி.ஆர் பல பெண்களைக் கட்டுவதைக் கண்டு பூங்கோதை கோபமடைகிறாள். “இதுக்கு எம் புருசன் எம்புட்டோவில்ல தாவல. நானு படம் பாக்கல. ஒன்னும் பாக்கல. பாவம் எம் புருசன், புள்ளைகள் வச்சி என்னம்மா தவிச்சிக்கிட்டு இருக்காரோ” என்று கூறிவிட்டு அவள் தன் கணவனின் வீட்டுக்கே திரும்பிச் செல்வதுதான் கதை.
இந்த முடிவு வெறும் எளிமையான சமரசமன்று; உழைக்கும் வர்க்கத்துப் பெண் தன் சுதந்திரமான வாழ்க்கையைவிட, குடும்பம் மற்றும் சமூகக் கட்டமைப்பு களுக்குள்ளேயே மீண்டும் தன்னைத் பிணைத்துக் கொள்ளும் கட்டாயச் சூழலின் உளவியல் யதார்த்தமாகும். தன் மீது வன்முறை பிரயோகித்த கணவனைத் தன் சொந்த சுயேச்சையான சிந்தனையால் மன்னிக்காமல், ‘சினிமா கதைமாந்தர்களின் ஒழுக்கக் குறியீடுகளை வைத்துத் தன் கணவனே மேல்’ என்று அவள் தீர்மானிப்பது ஆணாதிக்கச் சமூகத்தின் ஆழமான வேர்களைக் காட்டுகிறது.
பாரததேவியின் ‘அவள் பெயர் பூங்கோதை’ சிறுகதை, கிராமியப் பெண்களின் உழைப்புச் சுரண்டலையும் அவர்களின் குடும்ப வாழ்வின் வலிகளையும் காட்டியுள்ள படைப்பாகும்.
தனிமனித வாழ்வியலின் மிகச் சிக்கலான முரண்களையும், சுயமரியாதைக்காக எழுந்து பின்னர் சமூகச் சூழலால் அடங்கிப்போகும் பெண்களின் உளவியலையும் பேசும் இக்கதை, பாலினச் சமத்துவம் குறித்த ஆழமான சிந்தனைகளை விதைக்கக் கூடியது.
– – –
