இருநூறு தமிழ்ச் சிறுகதைகள் – 150.அகங்காரத்தின் வீழ்ச்சி  (ரிஸ்வானின் ‘குச்சிப்பாளையம் மிஸ்கின் தெரு’ சிறுகதையை முன்வைத்து…)

 

நவீனத் தமிழ் முஸ்லிம் அடையாள அரசியலையும் கிராமியச் சூழலின் வாழ்வியல் யதார்த்தங்களையும் ஆழமாகப் பதிவுசெய்து வருபவர்களில் எழுத்தாளர் ரிஸ்வான் முக்கியமானவர். 

இவரது ‘குச்சிப்பாளையம் மிஸ்கின் தெரு’ எனும் சிறுகதை, செல்வம், அதிகாரம் மற்றும் சாதிய/வர்க்கப் பெருமிதங்களால் கட்டமைக்கப்பட்ட கிராமத்தின் அதிகார மையங்களைச் சுற்றியும் அதன் விளிம்பில் வசிக்கும் எளிய மக்களின் (மிஸ்கின்கள்) வாழ்வியலைச் சுற்றியும் பின்னப்பட்ட சமூகப் பிரதியாகும்.

வளமையின் உச்சியிலிருந்த குடும்பம் விபத்துகளாலும் காலத்தின் கோலத்தாலும் முற்றிலுமாகச் சிதைந்து, பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதையும் மறுபுறம் சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மனிதனின் மனிதநேயம் அந்தச் சமூகத்தின் அகங்காரத்தை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதையும் இக்கதை உணர்ச்சிகரமாகப் பேசுகிறது. 

கதையின் மையக் கதாபாத்திரமான புகாரி, கடந்த காலத்தின் சொகுசான வாழ்க்கையிலிருந்து வறுமையின் கோரப் பிடிக்குள் தள்ளப்பட்டவன். அவனது வாப்பா ஆதம் சாகிப் காலத்தில் தோல் மண்டி, குதிரை வண்டிகள், தேக்கு மர ஊஞ்சல் மற்றும் ஊருக்குச் சோறிடும் வள்ளல் தன்மை என அந்தக் குடும்பம் செல்வச் செழிப்பில் திளைத்திருந்தது.

வெள்ளைச் சட்டை, கழுத்துப் பட்டையில் கைக்குட்டை, அத்தர் வாசனை என்று மைனாவைப் போல வாழ்ந்த புகாரி, பிற்காலத்தில் வயிற்றுப் பசிக்குத் தல்லாடும் நிலைக்கு ஆளாகிறான்.

தன் சொந்த வீட்டை இழந்து, பள்ளிவாசலை ஒட்டியுள்ள ‘மிஸ்கின் தெருவில்’ (ஏழைகள் வாழும் பகுதி) குடியேற வேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்படுகிறது. மத்தவர்களின் வீட்டு விசேஷச் சோரைக் கைநீதி வாங்கத் தயங்கும் அவனது உளவியல், மேட்டுக்குடி மனோபாவத்திலிருந்து எளிய யதார்த்தத்திற்கு வர அது படும் வேதனையைத் துல்லியமாகக் காட்டுகிறது.

குச்சிப்பாளையம் கிராமத்தில் செய்யது மரைக்கார் போன்றவர்களின் அதிகாரத்திற்குள் இயங்கும் சமூக அமைப்பு, ஏழைகளை எவ்வாறு நடத்துகிறது என்பதற்கான குறியீடே ‘மிஸ்கின் தெரு’ ஆகும்.

நிராதரவானவர்கள், நோயாளி, வயதானவர்கள் வாழும் அந்த இடம், பள்ளிவாசலின் சொத்துக்களையும் மீறி உருவானது. அங்கு வாழும் மக்கள் தினசரி கூலி வேலைகளையும், அகத்திக்கீரை பறிக்கும் தொழிலையுமே நம்பி வாழ்கின்றனர்.

வெளிநாட்டுப் பயணம் செல்பவர்களும், நேர்த்திக் கடன் கழிப்பவர்களும் மிஸ்கின் தெருவுக்குச் சோறுபோடுவதைச் சடங்காக மாற்றியுள்ளார்களே தவிர, அந்த மனிதர்களின் சுயமரியாதையை அவர்கள் ஒருபோதும் மதித்ததில்லை. அதிகாரமும் பணமும் உள்ளவர்களின் காலடியில் எளியவர்களின் வாழ்க்கை எப்பொழுதும் அடகு வைக்கப்பட்டே தீரும் என்ற சமூக யதார்த்தத்தை இது வெளிப்படுத்துகிறது.

ஆதம் சாகிப் குடும்பத்தால் வளர்க்கப்பட்ட பர்கத் அலி, புகாரியின் வீழ்ச்சிக் காலத்தில் அவனுக்குத் தூணாக நிற்கிறான். வர்க்க வேறுபாடுகளைத் தாண்டிய மனிதரின் நன்றி உணர்வை அவனது பாத்திரம் பிரதிபலிக்கிறது.

பள்ளிவாசலின் முத்தவல்லியான செய்யது மரைக்காரின் கோபத்திற்கு ஆளானாலும், புகாரிக்கு மிஸ்கின் தெருவில் இடம் வாங்கித் தருவதற்கும் அவனது குடும்பத்தின் பசியைப் போக்குவதற்கும் பர்கத் அலி படும்பாடு அளப்பரியது.

தன் சொந்த மனைவியின் நகையைக் கொடுத்து உதவ முன்வரும் பர்கத் அலி, சமூகத்தின் ஒடுக்குமுறைகளுக்கு நடுவே மனிதநேயம் இன்னும் செத்துவிட வில்லை என்பதை நிரூபிக்கிறான்.

இக்கதையின் சமூக விமர்சனம் செய்யது மரைக்கார் பாத்திரத்தின் ஊடாக வெளிப்படுகிறது. செல்வாக்கும் அதிகாரமும் படைத்த அவர், எளிய மனிதர்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதிப்பவராகச் சித்தரிக்கப்படுகிறார்.

புகாரியின் குழந்தையின் அகீகா (பிறப்பு) விருந்துச் சோற்றை மிஸ்கின் தெருவிலிருந்து கொண்டுவந்து கொடுத்தபோது, அதை “ஊர் புறம் பேசுவதற்காக” என்று கூறி, மண்ணில் கொட்டி மூடும் மரைக்காரின் செயல் ஆணவத்தின் உச்சமாகும்.

கதையின் இறுதியில் அதே செய்யது மரைக்கார் இறக்கும் போது, அவர் மக்களுக்குச் செய்த பாவங்களுக்கு ஜனாஸா (இறுதிச் சடங்கு) தொழுகையில் பர்கத் அலி ஆண்டவனிடம் பாவமன்னிப்பு வேண்டுகிறான். ஊர் மக்களும் அனைத்தையும் மறந்து “ஆமீன்” என்று குரல் எழுப்புகிறார்கள்.

இந்த முடிவு மிக முக்கியமான ஒரு வாழ்வியல் உண்மையைச் சொல்கிறது:- மனிதனின் செல்வமும் அதிகாரமும் அவனது இறுதி வரை உடன் வருவதில்லை; அவன் சக மனிதர்களிடம் காட்டிய அன்பும் செய்த பாவங்களும் மட்டுமே அவனது மரணத்திற்குப் பின் நிற்கின்றன. மௌத் (மரணம்) என்பது தண்டனையன்று, அது ஆணவத்தை அடிபணிய வைக்கும் தருணம் என்பதை இது உணர்த்துகிறது.

இந்தச் சிறுகதை, வர்க்க வேறுபாடுகளையும் அதிகாரத் திமிரையும் மனிதநேயத்தின் வெற்றியையும் செறிவாகப் பதிவு செய்துள்ள படைப்பாகும்.

தனிமனித வாழ்வியலின் வீழ்ச்சிகளையும் காலத்தின் மாற்றங்களுக்கு நடுவில் மனிதன் கைவிடக் கூடாத அறம் என்ன என்பதையும் பேசும் இக்கதை, தமிழ்ச் சிறுகதை உலகில் தவிர்க்க முடியாதது.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *