இருநூறு தமிழ்ச் சிறுகதைகள் – 151.அறிவொளி  (அண்டனூர் சுராவின் ‘அலுக்கை வாசனை’ சிறுகதையை முன்வைத்து…)

 

 

கிராமிய மக்களின் எளிய வாழ்வியலையும் அவர்களின் அறியாமையைச் சமூகமும் உறவுகளும் எப்படிக் கொடூரமாகக் கையாளும் என்பதையும் துல்லியமாகவும் மிகுந்த உணர்ச்சிகரமாகவும் பதிவுசெய்துவரும் எழுத்தாளர்களில் அண்டனூர் சுரா குறிப்பிடத்தக்கவர். 

அவர் எழுதிய ‘அலுக்கை வாசனை’ என்ற சிறுகதை, வெறுமனே தந்தையின் அறியாமையைப் பேசும் கதையன்று; கல்வி மறுக்கப்பட்ட பாமரனின் வாழ்வு எத்தகைய அவமானங்களையும் வன்முறைகளையும் எதிர்கொள்கிறது என்பதையும் அந்த அறியாமையின் மீது குடும்பமும் சமூகமும் நடத்தும் உளவியல் தாக்குதல்களையும் விவாதிக்கும் படைப்பாகும். 

கதையின் நாயகனின் அப்பா சுப்பையா, ஊராரால் ‘ஊமையன்’ என அழைக்கப்படுகிறார். ஆனால், அவன் உண்மையாகவே ஊமையன் அல்லர்; அவரது நுனி நாக்கு சற்றுத் தட்டியிருந்ததால் ‘ல, ழ, ள’ போன்ற எழுத்துகளை அவனால் சரியாக உச்சரிக்க முடியவில்லை. இத்தகைய எளிய உடல் குறைபாட்டைச் சமூகமானது அவரது முழுமையான அடையாளமாக மாற்றி, அவரை ‘ஊமையன்’ என்று முத்திரை குத்துகிறது. ஆரம்பத்தில் இதில் வருத்தப்பட்டாலும் நாளடைவில் தன் பெயரே அதுதான் என ஏற்றுக்கொள்கிற பக்குவத்திற்குத் தள்ளப்படுகிறார்.

அவனது இயல்பு முரட்டுத்தனமானது. பனை மரங்களில் குரங்கு போலத் தாவுவது, ஆபத்தான முறைகளில் நுங்கு சீவுவது, யாரும் செய்யத் துணியாத சாகசங்களைச் செய்வது என அவனது இளமைக்காலம் அடங்காத கன்றுக்குட்டியைப் போலவே கழிந்திருக்கிறது. பெரியவர்களின் பேச்சைக் கேட்பதும் ஆடுகளை விரட்டச் சொன்னால் அதன் காதுகளை அறுத்துவிடுவது போன்ற முரட்டுத்தனமான காரியங்களைச் செய்வதுமாக அவன் வாழ்ந்தாலும் அவனுக்குப் பள்ளிக்கூடம் என்பது எட்டாக் கனியாகவே இருந்திருக்கிறது. “பர்ரிக்கொடம் தொரவா இருந்துச்சு. அவ்ரோ நெட்டுக்கு என்னார போவ முடிர” என்று அவன் சொல்லும் வார்த்தைகளில் அவனது அறியாமையும் அன்றைய கிராமியச் சூழலில் பள்ளிக்கூடம் அவனுக்கு எவ்வளவு தூரத்தில் இருந்தது என்பதற்கான ஏளனமும் கலந்துள்ளன.

இக்கதையில் வரும் அப்பாயி (பாட்டி) கதாபாத்திரம் மிகவும் விசித்திரமானது. அவள் தன் மகனை அடித்து வளர்ப்பதை உரிமையாகக் கருதுகிறாள். அப்பா பனை மரத்திலிருந்து இறங்கி வந்தாலும் சரி, வேறு எங்குச் சென்றாலும் சரி, அவள் கைநீட்டி அடிப்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது. ஆனால், அந்த அடி அவனது தாட்டியான உடம்புக்குத் தட்டிக் கொடுப்பதாகவே அமைகிறது.

அப்பாயி தன் மகனை எவ்வளவுதான் அடித்தாலும் அவன் ஒரு நாளும் அதை எதிர்த்துப் பேசியதில்லை. அடிவாங்குவதற்கென்றே நேர்ந்துவிடப் பட்டவனைப் போலச் சிரித்துக்கொண்டே அவற்றை ஏற்றுக்கொள்கிறான். தாய்-மகன் இடையேயான இந்த உறவுமுறை கிராமியச் சமூகத்தின் பாரம்பரியமான கண்டிப்பையும் அதேசமயம் அதன் ஆழத்தில் இருக்கும் பாசத்தையும் காட்டுகிறது. ஆனால், இந்த வன்முறை அடுத்த கட்டத்திற்கு நகரும்போதுதான் கதை சோகமான திருப்பத்தைச் சந்திக்கிறது.

கதையின் மையப்புள்ளியே அந்த அலுக்கைத் தூள் சம்பவம்தான். வீட்டு வேலைகளுக்காகவும் பண்டிகைக்காலச் சமாளிப்புகளுக்காகவும் கீழைச்சீமைக்குச் செல்லும் அத்தைக்கு உடல்வலி ஏற்படும்போது, அலுக்கைத் தூள் (அலுப்பு மருந்து) வாங்கிவருமாறு அண்ணனிடம் (அப்பாவிடம்) கேட்கிறாள். படிக்காத அப்பா, கடைக்குப் போய் மருந்துக்குப் பதிலாக ‘அரப்புத் தூள்’ (தலைக்குத் தேய்க்கும் குளியல் பொடி) வாங்கி வந்து கொடுக்கிறார்.

அதை உணராத அத்தை, உடல் அசதியில் அந்த அரப்புத் தூளைச் சுடுநீரில் கரைத்துக் குடித்துவிடுகிறாள். அதன் விளைவு கொடூரமானது; வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, அத்தை கவலைக்கிடமான நிலைக்குச் சென்றுவிடுகிறாள். படிக்காததன் விளைவு எவ்வளவு கொடூரமானது என்பதை முதன்முறையாக அந்தத் குடும்பம் உணர்கிறது.

இங்கு விமர்சனத்திற்குரிய விஷயம் என்னவென்றால், கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தில் மனிதன் பழகிய எழுத்துகளை வாசிக்கத் தெரியாமல் இருப்பதாலேயே அவன் செய்யும் சிறிய தவறு அவனது குடும்பத்தின் உயிரையே பறிக்கும் விளிம்பிற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. ஊராரும் கங்காணியும் அப்பாவைத் திட்டுவதும் தலையில் கொட்டுவதும் பாமரனின் அறியாமையின் மீது சமூகம் நிகழ்த்தும் வன்முறையாகும்.

உயிர்ப் பிழைத்துத் திரும்பிய அத்தை நடந்ததைக் கூறும்போது, அப்பாயி ஆவேசம் கொள்கிறாள். அதுவரை மகனை அடித்து வந்தவள், இந்தமுறை அவனது தலைமயிரைப் பற்றிக் குலுக்கி, முதுகில் பலத்த அடி கொடுத்துக் கொடூரமாக வசைபாடுகிறாள்.

“அடி நீ சாம்பாதிச்சா நான் வயித்த கழுவணும். ஒன்னைய இவன் கொல்லப் பார்த்திருக்கிறானே, தடிப்பய…” என்று அவள் வெடித்து அழுவதும் அப்பாவைத் தாழ்வாகப் பேசுவதும் அப்பாவின் அகத்தைச் சிதைத்துவிடுகிறது. அத்தையின் தவறுக்கும் எழுத்துத் தெரியாத அப்பாவின் அறியாமைக்கும் சேர்த்து அவனுக்கு வழங்கப்பட்ட தண்டனை அது. அடியை விடவும் அப்பாயியின் வார்த்தைகள் அவன் செவிகளை அறைந்ததால், அவன் அந்த இடத்தை விட்டு வெட்கத்துடனும் ஒடுங்கிய முகத்துடனும் கோபித்துக்கொண்டு வெளியேறுகிறான்.

தன் வாழ்நாளில் எப்போதுமே எதிர்த்துப் பேசாத அப்பா, தன்மானமும் ரோசமும் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவது அவனது அகத்தில் ஏற்பட்ட ஆழமான காயத்தின் வெளிப்பாடாகும்.

அப்பா வீடு திரும்பாததால் ஊர் முழுவதிலும் தேடும் குடும்பத்தினரின் தவிப்பு, பாமர மக்களின் உண்மையான உளவியலைக் காட்டுகிறது. அப்பாயி தேடிக்கொண்டு பள்ளித் திண்ணைக்குச் செல்லும்போது, அங்கு அப்பா குக்கிட்டுக் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறாள்.

அவள் ஓடிச்சென்று அவனது கன்னத்தை உருவிக் கொஞ்சி, “பின்னே என்னப்பா, அலுக்கெ தூளுக்கும் அரப்புத் தூளுக்கும் வித்தியாசம் தெரியாமலா போச்சு” என்று கேட்கும்போது, அப்பா பதிலுக்குச் சொல்கிறார்: “தெரியாமத்தான் ஆயா போச்சு.” அந்த வார்த்தைக்குப் பிறகு அவன் தன் முகத்தை இரு கைகளால் பொத்திக்கொண்டு குலுங்கி அழுகிறான். 

தன் வாழ்நாளில் அழுதறியாத முரட்டுமனிதன், தனது அறியாமையாலும் அதனால் தன் தமக்கைக்கு ஏற்பட்ட ஆபத்தாலும் மனம் உடைந்து அழுவது வாசகர்களின் நெஞ்சைப் பிழிவதாக உள்ளது. அப்பா அழுவதை வாழ்நாளில் பார்த்திராத அப்பாயியும் அவனுடன் சேர்ந்து அழுவது கதையின் உச்சக்கட்ட உணர்வுப்பூர்வமான தருணமாகும்.

கல்வி அறிவற்ற பாமர மனிதனின் உளவியலையும் அவனது அறியாமையைச் சமூகமும் குடும்பமும் எவ்வாறு தண்டிக்கின்றன என்பதையும் துல்லியமாகக் காட்டுகிறது. அப்பா மீது பொழியப்படும் அடிகளும் வசைகளும் வெறும் குடும்பச் சண்டைகள் அல்ல; அவை கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தின் மீதான சாட்டையடிகள். அறியாமையின் வாசனையைச் சுமந்துகொண்டு வாழும் எளிய மனிதர்களின் கண்ணீரை இப்படைப்பு வெளிப்படுத்துகிறது.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *