
தனித்துவமான படைப்பாளிகளில் ஒருவரான எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு எழுதிய ‘ரத்தசுவை’ என்னும் சிறுகதை, தமிழ் நடுத்தர வர்க்க மற்றும் கிராமியச் சமூகத்தின் அசல் பரிமாணங்களை அதன் முரண்களுடன் காட்டும் சிறந்த உளவியல் படைப்பாகும். பக்தியின் முகமூடியை அணிந்துகொண்டு இயங்கும் பொருளாதாரச் சுரண்டலையும் அதனை நியாயப்படுத்தும் சமூக அமைப்பையும் அதிலிருந்து தப்பிக்க வழியின்றி மனம்பிறழ்ந்துபோகும் தனிமனிதனின் அவலத்தையும் இக்கதை பேசுகிறது.
கதையின் தொடக்கம் ராமுவுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்ற ஊாரின் குற்றச்சாட்டோடு தொடங்குகிறது. ஆனால், தன் நண்பனைத் தேடிச் சென்று அவனுடன் உரையாடும்போது கதையின் விவரிப்பாளர் உண்மையை உணர்கிறார்.
ராமுவுக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை; அவனது குடும்பச் சொத்துக்கள் வட்டி வியாபாரத்தின் பெயரால் பறிபோன அதிர்ச்சியும் இந்தச் சமூகம் கட்டமைத்துள்ள போலித் தர்மங்களின் மீது ஏற்பட்ட கோபமும்தான் அவனை ஒருவித மௌன உலகத்திற்குள் தள்ளியுள்ளன.
ஊரார் அவனைப் பைத்தியம் என்கிறார்கள்;, அவன் ஊரில் தனியரசு செலுத்தும் ஒற்றைக் குரங்கின் பின்னேயும் அதன் வெறித்தனமான செயல்களின் பின்னேயும் தன் வாழ்வியலைப் பொருத்திப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆனால், ராமுவின் இந்த வெறிபிடித்த செயல் சாதாரணமானதல்ல; அது இந்தச் சமூகத்தின் வன்முறைச் சுழற்சியைக் கண்டடைந்த ஒருவனின் அகச்சிக்கலாகும்.
இக்கதையின் மைய உருவகமாக (Metaphor) அமைவது அந்த ‘ஒற்றைக் குரங்கு’. ஊரில் அட்டுழியம் செய்து, நாய்க்குட்டிகளைக் கொன்று, ஆடுகளைக் காயப்படுத்தி, ரத்தத்தின் சுவை கண்டுகொண்ட அந்தத் தடிக்குரங்கு, ஆரம்பத்தில் சாதாரணமானதாகவே இருந்திருக்கலாம். ஆனால், சூழ்நிலையும் தொடர் செயல்களும் அதற்குப் பழகிப்போய், இன்று அது ‘மாம்ஸ பக்ஷியாய்’ (இறைச்சி உண்ணும் கொடூரப் பிராணியாய்) மாறிவிட்டது.
இந்தக் குரங்கின் பரிணாமத்திற்கும் ஊரில் வட்டி வியாபாரம் செய்து குடும்பங்களைக் குடித்தாக்கும் கோபாலய்யர் போன்றவர்களின் செய்கைக்கும் இடையே அற்புதமான இணைப்பினை ராமு முன்வைக்கிறான்:- “ஆரம்பத்தில் வட்டி இல்லாமல் உபகார நோக்கத்தோடு, உதாரச் சிந்தையோடு ஏழைகளுக்குக் கடன் கொடுக்க ஆரம்பித்தவர், இப்போ குடும்பங் குடும்பமாய் அழித்துத் துடைத்துக்கொண்டு வருகிறார். அதையும் கடமையைப் போல் செய்கிறார். வழக்கமும் சட்டமும் அதை ஒப்புக்கொள்ளவும் செய்கின்றன.”
கோபாலய்யர் ஆசார அனுஷ்டானம் தவறாதவர்; நல்ல வம்சத்தில் பிறந்தவர்; தெய்வ பக்தியுள்ளவர். ஆனால், சட்டத்தின் ஓட்டைகளையும் போலிப் பத்திரங்களையும் பயன்படுத்தி ஏழைகளின் சொத்துக்களை உறிஞ்சிக் குடிப்பதில் அவர் காட்டும் ஆர்வம், அந்தக் குரங்கின் ரத்தவெறியைவிடக் கொடூரமானது. குரங்கு இரத்தத்தின்சுவை கண்டு வெறிபிடித்து அலைகிறது என்றால், கோபாலய்யர்கள் செல்வத்தின்சுவை கண்டு மனிதர்களின் உயிரைக் குடிக்கிறார்கள்.
ஊரில் உள்ளவர்கள் அந்தக் குரங்கைக் கொல்லவோ அடிக்கவோ அனுமதிப்பதில்லை. அது ஆஞ்சநேயரின் வம்சமாகக் கருதப்படுவதால், அதற்கு அபசாரம் செய்யக்கூடாது என்று நம்புகிறார்கள். அதேபோல், கோபாலய்யர் செய்யும் அக்கிரமங்களை யாரும் தட்டிக் கேட்பதில்லை; அவர் நல்ல வம்சத்தைச் சேர்ந்தவர், முறைப்படி வட்டி வசூலிப்பவர் என்று சமூகம் அதைத் தர்மமாகக் கருதுகிறது.
இங்கு பக்தியும் ஆன்மிகமும் அதிகார வர்க்கத்தின் கவசங்களாகச் செயல்படுகின்றன. எளிய மக்களின் சொத்துக்கள் சூறையாடப்படுவதும் மனிதர்கள் நசுக்கப்படுவதும் சட்டத்தின் பெயராலும் சாஸ்திரங்களின் பெயராலும் அங்கீகரிக்கப்படுகின்றன. குரங்கு பிச்சைக்காரனின் வாயில் அடித்து அவன் இரத்தத்தைச் சிந்த வைத்தாலும் ஊரார் அதைக் கண்டிக்காமல் பிச்சைக்காரனையே தண்டிக்க முற்படுகிறார்கள். இதுதான் சமூகம் பலகாலமாகக் கடைப்பிடித்து வரும் அநீதியான நியதியாகும்.
தன் சொத்துக்களை இழந்து, வாழ்ந்த ஊரை விட்டே ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட ராமு, இந்தச் சமூகத்தின் அமைப்பை வாசகருக்குக் காட்டுகிறான். “பச்சை காய்ந்து வரட்சி குத்தும் இந்த மனமும் வாழ்ந்த ஊரில் ஓட எடுக்க ஆன இந்தத் தினதசையும்தான் மிச்சம். “ராமுவின் இந்த வார்த்தைகள் நடுத்தர வர்க்க மனிதனின் பரிதாபகரமான வீழ்ச்சியைக் குறிக்கின்றன. சமூகம் தவறு செய்பவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அந்தத் தீமைக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களைப் ‘பைத்தியக்காரர்கள்’ என்று முத்திரை குத்தி ஒதுக்கிவிடுகிறது. ராமு குரங்கோடு சுற்றத் தொடங்கியதற்குக் காரணம், மனிதர்களைவிடக் கொடூரமான மிருகத்தனத்துடன் இயங்கும் இந்தச் சமூகத்தின் சுயரூபத்தை அவன் அந்தக் குரங்கிடம் கண்டறிந்ததுதான்.
கதையின் இறுதியில், பிச்சைக்காரனின் குரங்கு கொல்லப்பட்டாலும் ஊர்க் குரங்கு தன் வன்முறையைத் தொடர்கிறது. பழையபடியே ஐயமாரும் தன்ரசு செலுத்த ஆரம்பிக்கிறார்கள். பல ராமுக்களின் சொத்துக்கள் பறிபோகின்றன; பலர் ராமூகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஊரில் ஸ்நான, சந்தியா, ஜபதப ஹோமங்களுக்குக் குறைவே இல்லை. அதாவது, புறத்தூய்மையும் பக்தி அனுட்டானங்களும் நிறைந்த சமூகம், அகத்தில் கொடூரமான வன்முறையையும் சுரண்டலையும் தாங்கி நிற்கிறது என்ற மிகக் கூர்மையான சாடலை எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு இதன் மூலம் பதிவுசெய்கிறார்.
இந்தச் சிறுகதை, வெறும் பைத்தியக்காரன் ஒருவனின் புலம்பல் கதையன்று; அது நம் சமூகத்தின் அடிநாதத்தில் ஊறிப்போயுள்ள பொருளாதாரச் சுரண்டல் மற்றும் போலித்தனமான தர்மத்தின் மீதான சாட்டைடியாகும். மனிதர்களின் ரத்தத்தைச் சுவைப்பதில் விலங்குகளுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை ராமுவின் கதாபாத்திரம் மூலம் உணர்த்தியுள்ளார் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு.
– – –
