‘அகச்சிறையும் புறவிடுதலையும்’ -(ஜெயமோகனின் ‘மரீஃபா’ நாவலை முன்வைத்து)

தமிழ் நாவல் உலகிலும் உலகிலக்கியப் பரப்பிலும் குற்றப் புலனாய்வுக் கதைகள் (Detective Fiction) பெரும்பாலும் புறவயமான புதிர்களை அவிழ்க்கும் நுட்பத்தையும் குற்றவாளியைக் கண்டறியும் விறுவிறுப்பையுமே முதன்மையாகக் கொண்டு இயங்குகின்றன. ஆனால் ஒரு குற்றத்தை வெறும் சட்டப்பூர்வமான மீறலாகவோ, சமூகக் கேடாகவோ மட்டும் பார்க்காமல் மனித மனத்தின் ஆழத்து நெளிவுசுழிவுகளோடும் பிரபஞ்ச இயக்கத்தின் மெய்யியல் புதிர்களோடும் பிணைத்து நோக்கும் எழுத்து முறைகள் மிகச் சிலவே. அந்த அரிய வரிசையில் சூஃபி ஞான மரபின் ஆழமான பின்னணியோடு மனிதனின் இருத்தலியல் வினாக்களை எழுப்பும் மிக முக்கியமான நாவலாக ‘மரீஃபா’ திகழ்கிறது.

மானுட எல்லைகளின் விளிம்பில் நன்மையின் எல்லைக்கும் தீமையின் எல்லைக்கும் இடையிலான மெல்லிய கோட்டில் உலாவுபவர் இந்நாவலின் முதன்மை நாயகனான பொறிஞ்சு. 

‘மரீஃபா’ என்ற அரபுச் சொல் சூஃபித்துவத்தில் ‘இறை ஞானம்’ அல்லது ‘உள்மன அறிவொளி’ என்பதைக் குறிக்கும். புறவுலகில் நிகழும் கொடூரமான குற்றத்தின் பின்னணியைத் துப்பறியத் தொடங்கி அகவுலகில் மனித ஆன்மா எதிர்கொள்ளும் விடுதலையையும் சிறையையும் ஆராயும் இலக்கியப் பயணமாக இந்நாவல் விரிகிறது.

 நாவல் முழுக்க முழுக்க முரண்களாலும் அதேவேளையில் ஒன்றுக்கொன்று இயல்பாகப் பின்னிப்பிணைந்த எதிரிணைகளாலும் (Binary Opposites) கட்டமைக்கப் பட்டுள்ளது. நாவலின் வாசிப்பனுபவத்தில் பின்வரும் எதிரிணைகள் தனித்தனியாக நிற்பதில்லை; ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றி மறையும் இயல்புடையவையாகப் படிந்துள்ளன.

குற்றம் – தண்டனை: சட்டம் வரைறுக்கும் குற்றமும் அதற்கான தண்டனையும் புறவயமானவை. ஆனால், மனசாட்சியின் நீதிமன்றத்தில் நிகழும் குற்ற உணர்ச்சியும் அதிலிருந்து தப்பிக்க இயலாத அகத் தண்டனையும் மெய்யியல் சார்ந்தவை.

லௌகீகம் – ஆன்மிகம்: உலகியல் சார்ந்த பொருள்வயமான வாழ்வும் (லௌகீகம்) அதைத் தாண்டிய ஆன்மா சார்ந்த விடுதலையும் (ஆன்மிகம்) மனிதனை இரு வெவ்வேறு திசைகளில் இழுக்கின்றன.

அஞ்ஞானம் – ஞானம்: பேரறியாமையின் இருளில் நிகழும் குற்றமும் அதைக் கடந்து மெய்மையைக் கண்டடையும் ஞான ஒளியும் நாவலில் ஒன்றையொன்று உரசிச் செல்கின்றன.

இயல்பு – மீறல்: சமூகம் வகுத்த இயல்பான வாழ்வொழுங்கிலிருந்து மனிதன் விலகும் கணமே ‘மீறல்’ உருவாகிறது.

நிஜம் – மாயை: நாம் காணும் புறவுலக நிஜத்தின் அடியில் மறைந்திருக்கும் மாயத் தோற்றங்களை நாவலின் கதையோட்டம் அவிழ்த்துக் காட்டுகிறது.

நன்மை – தீமை: முற்றிலும் நல்லவரோ, முற்றிலும் தீயவரோ மனிதகுலத்தில் இல்லை என்பதை நாவலின் கதாபாத்திரங்கள் நிறுவுகின்றன.

அகவுலகு – புறவுலகு: வெளியே நிகழும் துப்பறியும் நடவடிக்கை புறவுலகு சார்ந்தது என்றால் பொறிஞ்சுவின் மனத்தினுள் நிகழும் மெய்யியல் தேடல் அகவுலகு சார்ந்தது.

இத்தகைய எதிரிணைகள் நாவலில் செயற்கையாகத் திணிக்கப்படாமல் கதைமாந்தர்களின் உரையாடல்களிலும் அவர்களின் மனப்போராட்டங்களிலும் மிக இயல்பாக மேலெழுந்து வந்துள்ளன. அந்த வகையில் எழுத்தாளரால் இயல்பாகக் காட்டப்பட்டுள்ளன.

பொதுவாகத் துப்பறியும் நாவல்களில் காவலர் (துப்பறிவாளர்) நீதியின் அடையாளமாகவும் குற்றவாளி தீமையின் பிம்பமாகவும் சித்தரிக்கப்படுவர். இருவருக்கும் இடையே நிகழும் ‘நீயா நானா’ என்ற கடுமையான போட்டியே கதையின் முதன்மை உந்துசக்தியாக இருக்கும். இந்த நாவலிலும் தொடக்கத்தில் இந்த மோதல் மிகத் தீவிரமாகவே வெளிப்படுகிறது.

ஆனால் கதையின் போக்கில் அந்த மோதலின் கூர்மை மெல்ல மெல்ல மழுங்கி இருவருக்கு இடையிலான எல்லைக்கோடு கரையத் தொடங்குகிறது. குற்றவாளியின் அகவுலகைப் புரிந்துகொள்ள முயலும் காவலர் ஒருகட்டத்தில் குற்றவாளியின் மனநிலையைத் தானே அடைகிறார். அதேபோல் குற்றவாளியின் செய்கைகளுக்குப் பின்னால் இருக்கும் ஆழமான உளவியல் மற்றும் இருத்தலியல் காரணங்கள் வெளிப்படும்போது அவன் வெறும் கொடூரன் அல்லன் என்றும் அவன் மனிதப் பலவீனத்தின் பலிகடா என்பதும் புலனாகிறது.

இந்தப் போட்டி மறையும் தருணத்தில் காவலரும் குற்றவாளியும் ஒரு நாணயத்தின் இரு வேறு பக்கங்களாக அமைவு கொள்கின்றனர். இருவருமே மானுட மீறலின் இரு வேறு வெளிப்பாடுகள் மட்டுமே என்ற உண்மை வெளிப்படும்போது, ‘நீயா நானா’ என்ற போட்டி தணிந்து ஆழமான பரிதாபமும் ஆன்மிகப் புரிதலும் எஞ்சுகின்றன.

அடர்ந்த காட்டுக்குள் உலவும் வேட்டைக்காரன் ஒருவன் நிலத்தில் பதிந்துள்ள ஒரு புலியின் கால் தடத்தைக் காண்கிறான் என்று வைத்துக்கொள்வோம். பல நாள்கள் நீளும் தேடலுக்குப் பின் அவன் ஒரு புலியை நேரில் காணக்கூடும். ஆனால் தான் முன்னாளில் கண்ட அந்த அரிய கால் தடம் இப்போது தன்முன் நிற்கும் இந்தப் புலிக்குரியதுதானா என்பதை அவனால் ஒருபோதும் அறிவியல் பூர்வமாக நிறுவிவிட முடியாது. 

மறுபுறம் ஏதோ ஒரு புலியை எதிர்பாராதவிதமாகக் காணும் வேட்டைக்காரன் அடர்ந்த காட்டின் பரப்பில் தான் கண்ட எண்ணற்ற புலிக்கால் தடங்களுள் எது அப்புலியினுடையது என்று அறிய முடியாமல் திகைத்து நிற்பான்.

ஆனால் அனுபவம் வாய்ந்த கைத்தேர்ந்த வேட்டைக்காரன் புலியைக் கண்டதும் உடனடியாக அதை வேட்டையாடி வீழ்த்துவானே தவிர இத்தகைய ஒப்பீடுகளிலோ, ஆராய்ச்சிகளிலோ தன் கவனத்தைச் சிதறவிட்டுத் தன் இலக்கைத் தவறவிட மாட்டான்.

காடு, புலி, வேட்டைக்காரன் என்ற முக்கோணக் கட்டமைப்பிற்குள் சுழலும் சூஃபி ஞானமே இந்த நாவலின் ஆன்மாவாகத் திகழ்கிறது. தடம் எது, தடம் பதித்த விலங்கு எது என்ற குழப்பங்களைத் தாண்டி பிரபஞ்சத்தின் பேரொழுங்கையும் அதன் ஒழுங்கின்மையையும் கண்டடைவதே நாவல் உணர்த்தும் ஆன்மிகச் செய்தியாகும். 

மனிதன் சமூகத்திலும் பிரபஞ்சத்திலும் தன்னை எவ்வாறு நிலைநிறுத்திக் கொள்ள விரும்புகிறான் என்பதைப் பொறுத்து இந்நாவலை மூன்று முக்கிய அடுக்குகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.

ஒன்று –  எல்லாவற்றுக்கும் வெளியே தன் இருத்தலை நிலைப்படுத்திக் கொள்ள விழைதல். இது உலகியல் அமைப்புகள், குடும்பம், சமூகம், சட்டம் ஆகிய அனைத்திலிருந்தும் முற்றிலும் விலகி நின்று, ஒரு பார்வையாளனாக மட்டுமே வாழ்ந்து தன் இருப்பை உறுதிசெய்யத் துடிக்கும் மனநிலை. சூஃபி துறவிகளுக்கும் தீவிரமான குற்றவாளிகளுக்கும் இடையே இந்தப் பொதுப் பண்பைக் காண முடியும்.

இரண்டு – எதிலும் கால்பாவாமல் தன்போக்கில் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள விழைதல். சமூகத்தில் வாழ்ந்தாலும் எந்தவொரு பந்தத்திலும் பற்றிலும் ஆழமாகச் சிக்கிக் கொள்ளாமல், தாமரை இலைத் தண்ணீர் போலத் தன்போக்கில் வாழ நினைப்பது. பொறிஞ்சுவின் கதாபாத்திரம் பெரும்பாலும் இந்த இரண்டாவது அடுக்கிலேயே இயங்குகிறது. அவர் குற்றத்தைச் விசாரிக்கிறார். ஆனால் குற்றத்தின் உணர்ச்சிகளுக்குள் மூழ்கிவிடாமல் விலகியிருந்து கவனிக்கிறார்.

மூன்று – எதிலும் எல்லாவற்றிலும் தன்னையே முன்னிலைப்படுத்திக் கொள்ள விழைதல். இது பேரகந்தையின் (Ego) வெளிப்பாடு. உலகத்தின் மையப்புள்ளி தாங்கள்தான் என்றும் அதிகாரமும் செல்வமும் தங்களையே சுற்றி வர வேண்டும் என்றும் விரும்பும் லௌகீக மனிதர்களின் மனநிலை. நாவலில் நிகழும் பல குற்றங்களுக்கு இந்த மூன்றாவது அடுக்கில் உள்ள மனநிலையே, அந்த அகந்தையே மூலகாரணமாக அமைகிறது.

இந்த நாவலின் ஆழமான மைய இழையாக இருப்பது விடுதலைக்கும் சிறைக்குமான அகப்போராட்டம் ஆகும். 

சூஃபி ஞானம் – அகவிடுதலை: வெளி உலகின் பந்தங்களிலிருந்து விடுபட்டுத் தன்னுடைய அகத்தின் ஆழத்திற்குள் இறைவனைக் காண்பது அகவிடுதலை. அது எல்லையற்ற சுதந்திரத்தை அளிக்கிறது.

லௌகீக ஞானம் – புறச்சிறை: உலகியல் சார்ந்த அறிவும் சேர்க்கையும், புகழும் மனிதனைச் சுற்றிலும் நுட்பமான வலையைப் பின்னுகின்றன. இது வெளிப்புறத்தில் சுகமாகத் தெரிந்தாலும் உண்மையில் ஆன்மாவிற்குப் பெருஞ்சிறையாகவே முடிகிறது.

நாவலில் எந்தவொரு மனிதனுக்கும் முழுமையான விடுதலையோ, முழுமையான சிறையோ வாய்ப்பதில்லை. மனித மனம் இவ்விரண்டிற்கும் இடையே ஊசலாடிக் கொண்டே இருக்கிறது. எதிரெதிர்த் திசையில் நிற்கும் காவலரும் குற்றவாளியும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போலத்தான் இருக்கிறார்கள்.

ஒருவரின் திசைக்கு மற்றவர் ஒருபோதும் முழுமையாகச் சென்றுவிட முடியாது. ஏனெனில், காவலன் தன் சட்டத்தின் எல்லையைத் தாண்டி குற்றவாளியாக மாற முடியாது; குற்றவாளியும் தன் மீறலிலிருந்து எளிதில் விடுபட்டுச் சமூக இயல்புக்கு வர முடியாது. ஆனால், “மற்றொரு பக்கத்திற்குச் செல்ல வேண்டும்” என்ற அடங்காத விழைவும் தவிப்பும் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஓய்வில்லாமல் எழுந்து எழுந்து வீழ்கிறது. இந்த அடங்காத மீறலே மானுட வாழ்வின் பேரழகாகவும் பெருந்துயரமாகவும் மாறுகிறது.

நாவலின் கதைக் களம் கேரள சமூகத்தின் தனித்துவமான பண்பாட்டு, சமூகக் கட்டமைப்பை மிக நுட்பமாக ஆராய்கிறது. கேரளா முழுவதும் பரவலாகக் காணப்படும் குற்றம் சார்ந்த தேர்ச்சிக்கும் நுட்பமான குற்றச் திட்டமிடல்களுக்கும் பின்னால் உள்ள உளவியல் காரணங்களை நாவல் திறம்பட வெளிப்படுத்துகிறது.

கேரளாவின் உயர்ந்த கல்விநிலை மனிதர்களுக்குத் தன்னம்பிக்கையை அளிப்பதோடு, ‘தான் மிகச் சிறந்த அறிவாளி, சட்டத்தின் நடுக்கண்ணிலிருந்து தப்பித்துவிடலாம்’ என்ற தவறான துணிவையும் அளிக்கிறது. கல்வி வளர்ச்சி இயல்பாகவே உலகியல் நுகர்வுப் பொருட்களின் மீதான ஈடுபாட்டை (Materialism) வளர்க்கிறது. ஏழை முதல் செல்வந்தர் வரை ஒவ்வொருவரும் ஆடம்பர வாழ்விற்கும், விரைவான பணச் சேர்க்கைக்கும் ஏங்கத் தொடங்குவது, அவர்களைக் குற்றங்களை நோக்கி உந்துகிறது.

தமிழகக் கிராமங்களில் காணப்படும் சாதிய, சமூக உறவுச் செறிவும் பரஸ்பர கண்காணிப்பும் கேரளச் சமூகத்தில் ஒப்பீட்டளவில் குறைவு. அங்கே சமூகம் என்ற அமைப்பு வலுவானதாக இருந்தாலும் தனிக்குடும்பங்கள் தனித்தனித் தீவுகளைப் போல முற்றிலும் தனிமைப்பட்டு வாழ்ந்து வருகின்றன. இதனால், பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பதுகூடப் பல வருடங்களாக வெளிப்புற உலகிற்குத் தெரியாமல்போய் விடுகிறது. இத்தகைய கடுமையான தனிமை, குற்றங்கள் அஞ்சாமல் விளைவதற்குக் சாதகமான சூழலை அமைத்துக் கொடுக்கிறது.

தமிழ்ப் புனைகதை உலகிலும் உலக இலக்கியத்திலும் ஷெர்லாக் ஹோம்ஸ், எர்குல் போரோ, துப்பறியும் சாம்பு எனப் பலவகையான துப்பறிவாளர்கள் தோன்றியுள்ளனர். அவர்கள் அனைவரும் தர்க்கரீதியான கூர்மை, தடயங்களை ஆராயும் திறன், சாட்சியங்களை இணைக்கும் சாதுரியம் ஆகியவற்றைக் கொண்டே குற்றங்களை அவிழ்த்தார்கள். இந்த நாவலில் வரும் காவல் அதிகாரி முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம். 

அவர் குற்றத்தைச் சட்ட மீறலாக மட்டும் பார்ப்பதில்லை; மனித மனத்தின் ஆழமான காயங்களின் வெளிப்பாடாகப் பார்க்கிறார். ஒரு குற்றத்திலிருந்து தொடங்கி, அதன் பின்னணியில் உள்ள உளவியலை நோக்கி நகர்ந்து, இறுதியாக அதை மெய்யியல் (Philosophical) தளத்திற்கு உயர்த்துகிறார். அவரது துப்பறியும் முறை தடயங்களைச் சேகரிப்பதுதன்று; குற்றவாளியின் அக உலகிற்குள் ஊடுருவி அவனது ஆன்மிகத் தவிப்பைப் புரிந்துகொள்வதாகும். நாவலின் இறுதிக்கட்டம் உணர்த்தும் மிகப்பெரிய உண்மை மீறல்களின் வழியே மனித இயல்பைப் புரிந்துகொள்வது பற்றியதாகும்.

மெய்யியல் (Philosophy) என்பது சமூகம் அமைத்த இயல்பான வாழ்வு எல்லையைத் தாண்டி உண்மையைத் தேடும் ‘ஆன்மிக மீறல்’. குற்றம் (Crime) என்பது சமூகம் வகுத்த சட்ட திட்டங்களைத் தாண்டிச் செல்லும் ‘சமூக மீறல்’. இவ்விரண்டு மீறல்களுமே மனிதனின் அதீத எல்லைகளை வெளிச்சமிடுபவை. எனவே, மெய்யியலும் குற்றமும் ஒன்றையன்று பிரதிபலிக்கும் இரு கண்ணாடிகளாகச் செயல்படுகின்றன. நேர்கோட்டில் எதிரெதிர்த் திசையில் செல்வது போலத் தோன்றும் இவ்விரு எல்லைகளும் ஒரு கட்டத்தில் வளைந்து வந்து ஒன்றையன்று சந்திக்கின்றன.

சாதரண மனித இயல்பு வெளிப்படாத ஆழமான உணர்ச்சிகளும் மனித ஆன்மாவின் புதிர்களும் இத்தகைய தீவிரமான மீறல்களின் வழியேதான் வெளிப்படுகின்றன. இதனாலேயே காலம்தோறும் கலை இலக்கியங்கள் இயல்பான மனிதர்களை விடவும் மீறல்களில் ஈடுபடும் மனிதர்களைப் பற்றிப் பேசுவதிலும் ஆராய்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்த நாவல் வெறும் துப்பறியும் கதையன்ற; இது மனிதனின் அகவயமான தவிப்புகளையும் இருத்தலியல் முரண்களையும் சூஃபித்துவச் செறிவோடு பேசும் இலக்கியப் படைப்பு. இந்நாவல் குற்றப் புனாய்வுத் துறையை ஆன்மிகக் தளத்திற்கு உயர்த்தியதில் பெருவெற்றியைப் பெற்றுள்ளது. மீறல்களின் வழியே மானுடத்தின் அதீத எல்லையைத் தொட முயலும் ஒவ்வொரு வாசகருக்கும் இந்த நாவல் புதிய அகவொளியை நிச்சயம் வழங்கும்.

(ஜெயமோகன், ‘மரீஃபா’ (நாவல்), விஷ்ணுபுரம் பதிப்பகம், கோவை, பக்கங்கள் – 216, விலை ரூபாய் – 290.00)

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *