கைம்மா பறக்கும் குதிரையில் வானில் பறந்தான். மெலிதான முகில் கீற்று ஒன்றின் உள்ளே புகுந்து கடந்தான். குளிரில் அவன் உடல் நடுங்கியது. கீழே பார்த்தபோது வெகு உயரத்திற்கு வந்து விட்டோம் என்று தோன்றியது. வேகமான காற்றில் குதிரையில் இருந்து கீழே விழுந்து விடுவோமோ என்று அஞ்சினான். பின் மெதுவாக வட்டமடித்து கீழிறங்கத் தொடங்கினான். அந்த குதிரை அவன் எண்ணங்களை புரிந்து கொண்டது. அவன் தரையிரங்க வேண்டும் என்று மனதில் நினைத்தவுடனேயே அது புரிந்துகொண்டு இறங்கத் தொடங்கி விட்டது.
குதிரையின் கால்கள் தரையைத் தொட்டு ஓடத் தொடங்கியது. கனசேகரனும் தினசேகரனும் துரத்திக் கொண்டு வந்தனர். அவர்களால் ஓட முடியவில்லை.
”கைம்மா கைம்மா” இருவரும் கத்தி கத்தி ஓய்ந்தனர்.
”அய்யோ இதற்கு மேல் ஓட முடியாது. நான் விழுந்து விடுவேன்” என்றார் கனசேகரன். அவருக்கு மூச்சுத் திணறியது.
”நாம் கூப்பிட்டது அவன் காதில் விழவே இல்லை” என்றார் தினசேகரன்.
”எப்படி விழும்? எவ்வளவு தூரம் இருக்கிறது. காற்றும் இப்படி வேகமாக வீசுகிறது” என்றார் கனசேகரன்.
”ஆமாம் கனம்..இப்போது எதற்காக நாம் அவனிடம் பேச வேண்டும்?” என்று கேட்டார் தினசேகரன்.
”மீண்டும் முட்டாள் நீர் என்று நிரூபிக்கிறீர். எவ்வளவு பெரிய அதிசயம் நம் கண் முன்னே நிகழ்கிறது. பறக்கும் குதிரை அய்யா! பறக்கும் குதிரை! உலகில் வேறு எங்காவது….உம் வாழ்நாளில் இப்படி எப்போதாவது கண்டது உண்டா?” என்றார் கனசேகரன்.
”சரி பறக்கும் குதிரை. அவன் அதில் பறக்கிறான். அதிசயம் தான். ஆனால் அதனால் நமக்கு என்ன? ஏதோ இந்த பன்றிமலைக் குகையில் ஓவியங்களை ஆராய வந்த வரலாற்று ஆய்வாளன் என்று சொன்னான். நாமும் அப்படி என்ன தான் இவன் செய்கிறான் என்று பார்க்க வந்தோம். பகல் முழுவதும் குகை வாயிலில் காத்திருக்கும் படி செய்து விட்டீர். உள்ளே போவோம் என்றால் பயந்து கொண்டு அவனது ஆய்வுக்கு இடையூறு செய்யக் கூடாது என்று சப்பைக் கட்டு கட்டினீர். வெட்டியாக காத்திருந்தது தான் மிச்சம். செல்வோம் என்றாலும் நீர் கேட்கவில்லை” என்றார் தினசேகரன்.
”யோவ் யாருக்கு பயம் என்கிறீர்? உமக்குத்தான் அறிவு கிடையாது. நான் உண்மையாகவே ஒரு ஆய்வாளனைத் தொந்தரவு செய்யக் கூடாது என்றுதான் அவ்வாறு செய்தேன். அவன் வெளியே வரும் போது பேசிக் கொள்வோம் என்று சொன்னேன்” என்றார் கனசேகரன்.
”ஆனால் என்ன நடந்தது? அவன் இருட்டும் வரை குகைக்கு வெளியே வரவே இல்லை. இடி மின்னலுடன் மழை பெய்யத் துவங்கி விட்டது. ஒரு முறை வெளியே வருவது போல வந்தவன் மீண்டும் உள்ளே போய் விட்டான்” என்றார் தினசேகரன்.
”அப்போதும் நாம் கூப்பிட்டது அவன் காதில் விழவில்லை” என்றார் கனசேகரன்.
”தேவையில்லாமல் மழையில் நனைந்து குளிரில் நடுங்கி இடியில் ஒடுங்கி செடியில் பதுங்கி…இதெல்லாம் நமக்குத் தேவையா? என்றார் தினசேகரன்.
”அய்யா எப்போதும் வசதியான வாழ்கையையே நாடுகிறீர். வாழ்க்கையில் உயர வேண்டும் என்றால் கொஞ்சமாவது கஷ்டப்படத்தான் வேண்டும்” என்றார் கனசேகரன்.
”அதோ அவன் நம்மை நோக்கி வருகிறான்” என்றார் தினசேகரன்.
நெருங்கி வரும்போதே அவர்களை அடையாளம் கண்டு கொண்டான் கைம்மா. அவன் சற்று அச்சமடைந்தான். இவர்கள் பார்த்து விட்டார்களே இவர்களிடம் என்ன சொல்வது என்று எண்ணினான். எப்படியும் இப்படி விண்ணில் பறப்பது எவர் கண்ணிலும் படாமல் போய் விடாது ஏதாவது சொல்லித் தானே ஆக வேண்டும் என நினைத்தான்.
அவன் குதிரையை விட்டு இறங்கினான். அதை தட்டிக் கொடுத்து விட்டு அவர்களை நோக்கி நடந்து வந்தான்.
”ஓ வாருங்கள் பாவலர்களே…நீங்கள் எப்படி இங்கே?” என்று கேட்டான்.
”உன்னைத் தான் காலை முதல் பின் தொடர்ந்து கொண்டிருந்தோம்” என்றார் தினசேகரன்.
”ஓய் நீர் வாயை மூடும்” என்று அவரை அதட்டினார் கனசேகரன்.
”எங்கள் கதை பிறகு இருக்கட்டும். நீ என்ன பெரிய மந்திரவாதியாக இருக்கிறாய்? உன்னை வரலாற்று ஆய்வாளன் என்றல்லவா நினைத்தோம்? உனக்கு இந்த குதிரை எப்படி கிடைத்தது?” என கனசேகரன் கேட்டார்.
கைம்மா சில கணங்கள் யோசித்தான். பிறகு,
”ஓ …..என்னை மன்னித்து விடுங்கள் பாவலர்களே. நான் உங்களிடம் பொய் தான் சொல்லி விட்டேன். நான் வரலாற்று ஆய்வாளன் அல்ல. நான் உண்மையில் மந்திரவாதி தான்” என்றான்.
”மந்திரவாதியா?” தினசேகரன் அதிர்ச்சி அடைந்தார்.
”என்னய்யா சொல்கிறாய்?” கனசேகரன் கேட்டார்.
”ஆமாம்”
தினசேகரன் கனசேகரன் அருகே நெருங்கி ”மந்திரவாதி என்கிறான். சென்று விடுவோம் அய்யா. தேவையில்லாமல் ஏதாவது ஆபத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம்” என்று ரகசியமாக மெல்லிய குரலில் சொன்னார்.
”யோவ் நீர் சும்மா இரும். எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் கனசேகரன்.
”ஒன்றுமில்லை கைம்மா. நீ ஒரு மந்திரவாதி என்று இப்போதாவது உண்மையைச் சொன்னாயே” என்றார் அவர்.
”நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் பாவலர்களே. அவசரமாக ஒரு பணிக்காக சென்று கொண்டிருக்கிறேன். என்னைப் பற்றியும் என்னுடைய இந்த பறக்கும் குதிரையைப் பற்றியும் எவரிடமும் சொல்லாதீர்கள். அதுவே நான் உங்களிடம் கோரும் உதவி” என்று சொன்னான் கைம்மா.
”ஓ……அப்படி என்னய்யா அவரச பணி?” என்று கேட்டார் கனசேகரன்.
”அதுவும் ஒரு மந்திரவாதிக்கு?” என்றார் தினசேகரன்.
”சொல் என்ன உன் பணி?” கனசேகரன் கேட்டார்.
”அதுபற்றி இப்போது நான் விவரமாக சொல்ல முடியாது. பிறிதொரு சமயம் சொல்கிறேன். நான் புறப்படுகிறேன். மீண்டும் சந்திப்போம்” என்று சொல்லி கைம்மா குதிரையை நோக்கி புறப்பட்டான்.
”இருய்யா…இரு..அப்படி என்னை மீறி நீ சென்று விட முடியாது” என்றார் கனசேகரன்.
”என்ன சொல்கிறீர்கள்?”
”நீ செல்ல நாங்கள் அனுமதிக்க வேண்டும் என்றால் நான் கோருவதை நீ தந்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்”
”அனுமதியா?”
”ஆம்”
கைம்மாவிற்கு கோபமாக வந்தது. எனினும் அவன் ”உங்களை என் நண்பர்களாவே கருதுகிறேன். உங்களுக்குத் தர இப்போது என்னிடம் ஒன்றுமில்லை” என்றான்.
”அடேங்கப்பா…எவ்வளவு பெரிய மந்திரவாதி!….பறக்கும் குதிரை வேறு!…….ஒன்றுமில்லையா உன்னிடம்?” என்றார் தினசேகரன்.
”சரி…வீண் பேச்சில் உன் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. நீ வேறு அவசரமாக செல்ல வேண்டும் என்கிறாய். அத்துடன் நாங்களும் காலை முதல் அலைந்து களைத்து போய் இருக்கிறோம். நேரடியாகவே சொல்கிறேன். இந்த குதிரையை எனக்கு நீ தந்து விடு” என்றார் கனசேகரன்.
”இந்த குதிரையா?.
”ஆமாம். நீ செல்ல வேண்டிய இடத்திற்கு உன்னை நானே கொண்டு சென்று இறக்கி விட்டு விடுகிறேன்” என்றார் கனசேகரன்.
”இந்த குதிரையை வைத்துக் கொண்டு நீர் என்னய்யா செய்யப் போகிறீர்?” என்று தினசேகரன் கனசேகரனிடம் கேட்டார்.
”இதனால் தான் அய்யா உமக்கு அறிவு குறைவு என்கிறேன். இந்த குதிரையைப் பாரும். எவ்வளவு பெரியதாக இருக்கிறது. என் போன்ற பேருடல் கொண்ட பெரும் பாவலனுக்கு ஏற்ற குதிரை. இதில் நான் பறந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார். பறக்கும் பாவலன் என்று நான் புகழ் பெறுவேன். என் பாக்கள் இனி மண்ணில் மட்டுமல்ல விண்ணிலும் ஒலிக்கும்” என்றார் கனசேகரன்.
அவர் சொன்னதைக் கேட்டு தினசேகரன் வியப்படைந்தார்.
”கேளும் அய்யா…நான் நாடுகள் தோறும் பறப்பேன். அரசர்களின் மாளிகைகள் மீது பறப்பேன். விண்ணில் இருந்தவாறே என் பாக்களை ஓலையில் எழுதி அவர்கள் மீது விட்டெறிவேன். நான் விண்ணோன் இது விண்ணோர்களின் வழக்கமடா என்பேன். பொன்னை நிறைய சேர்த்து மலை உச்சியில் ஒரு மாளிகை கட்டுவேன்” கனசேகரன் உணர்ச்சிகரமாக கூறினார்.
தினசேகரன் ”இதெல்லாம் உம் வீண் கற்பனை….முதலில் நீர் இந்த பன்றி மலையின் மீது வானில் பறக்கும் போதே ….தவறி கீழே விழுவீர் மிக உயரத்தில் இருந்து விழுவதால்…உம் எலும்புகள் பொடிப்பொடியாக நொறுங்கி விடும்.” என்றார்.
”வாயை மூடடா முட்டாளே. எவ்வளவு கெட்ட புத்தி உனக்கு. உன்னை பிறகு பார்த்துக் கொள்கிறேன்” என்று சொன்ன கனசேகரன். ”கைம்மா உனக்கு வேறு வழியில்லை. இந்த குதிரையை எனக்குத் தந்துவிடு” என்றார் கனசேகரன்.
கைம்மா யோசித்தான். பிறகு,
”என் நண்பரான நீங்கள் இவ்வளவு தூரம் கேட்ட பிறகு நான் எப்படி மறுக்க முடியும்?” என்றான்.
கனசேகரன் மகிழ்ச்சி அடைந்தனர்.
”ஆனால் நண்பரே இந்த குதிரையை உங்களுக்கு தரும் முன் ஒரு உண்மையைச் சொல்லி விடுகிறேன். அதைச் சொல்லாமல் விட்டால் உங்களுக்கு துரோகம் செய்தவன் ஆகிவிடுவேன்” என்றான் கைம்மா.
”அது என்னய்யா உண்மை?” என்று கேட்டார் தினசேகரன்.
”சீக்கிரம் சொல்” என்றார் கனசேகரன்.
”நான் தான் என் மந்திர சக்தியால் இந்த குதிரையை உருவாக்கினேன். ஒரு பாதாள உக்கிர தெய்வத்தை வழிபட்டு அதன் அருளால் இதை உருவாக்கினேன். நான் இதை உருவாக்கியவன் என்பதால் இது எனக்கு கட்டுப்படுகிறது” என்றான்.
”இது மற்றவர்களுக்கு கட்டுப்படாதா?” என்று கேட்டார் தினசேகரன்.
”இரும் அய்யா…இவன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்” என்ற கனசேகரன் ”ஏதாவது கதை சொல்லி எனக்கு இந்த குதிரையைத் தராமல் ஏமாற்றலாம் என்று நினைக்கிறாயா?” என்று கைம்மாவிடம் கேட்டார்.
”இல்லை. நான் சொல்வதைக் கேளுங்கள். இது மற்றவர்களுக்கு கட்டுப்படாது என்று நான் சொல்லவில்லை. தன்னை உருவாக்கிய எனக்கு முழுமையாக கட்டுப்படும் இது மற்றவர்களுக்க கட்டுப்பட வேண்டும் என்றால் அதற்கு ஒரு நிபந்தனை உள்ளது” என்றான் கைம்மா
”நிபந்தனையா?”
”ஆம். இதன் மீது சவாரி செய்ய விரும்புபவர் யாராக இருப்பினும் அவர்கள் தங்கள் துறையில் நிகரற்றவராக விளங்க வேண்டும். அதாவது ஒருவர் படை வீரர் என்றால் அவர் மிகச் சிறந்த வீரராக இருக்க வேண்டும். ஒரு சமையல் கலைஞர் என்றால் மிகச் சிறந்த சமையல் கலைஞராக இருக்க வேண்டும் ” என்றான் கைம்மா.
”புரிந்து விட்டது. ஒருவன் பாவலன் என்றால் அவன் தன்னிகரற்ற பாவலனாக இருக்க வேண்டும். சரிதானே” என்றார் கனசேகரன்.
”ஆம்” என்றான் கைம்மா.
”அப்படியென்றால் இந்த குதிரையை அடையும் தகுதி எனக்கு மட்டுமே உள்ளது” என்றார் தினசேகரன்.
”ஒரு பெரும் பாவலன் முன் உளறுகிறாய் அறிவிலியே…நீ என் நண்பன் என்பதால் பொறுக்கிறேன். உலகம் அறியும் எனக்கு நிகரான பாவலன் நான் மட்டுமே என்று. இந்த குதிரையும் இனி எனதே” என்றார் கனசேகரன்.
”யார் சிறந்த பாவலர் என்று நாம் நம்முள் வாதித்து குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. இந்த குதிரையே சிறந்த பாவலனைக் கண்டுகொள்ளும். இது மிகுந்த இலக்கிய நுண்ணர்வு கொண்டது. சிறந்த கவிதைகளை ரசிக்கக் கூடியது” என்றான் கைம்மா.
கனசேகரன் மிகவும் மகிழ்ந்தார்.
”அப்படியென்றால் மிகவும் நல்லது. மேற்கொண்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். வா….நாம் புறப்படுவோம்” என்று அவர் குதிரையை நோக்கிச் சென்றார்.
”இருங்கள். ஒருவேளை உங்களது பாக்கள் இதற்கு பிடிக்கவில்லை என்றால் உங்களை நல்ல பாவலர் என்று இது கருதவில்லை என்றால் நீங்கள் வானில் பறந்து கொண்டிருக்கும் போது இது தலைகீழாக பறக்கத் தொடங்கிவிடும். நீங்கள் உயரத்தில் இருந்து கீழே விழ நேரும்.”
கனசேகரன் ஒரு கணம் நின்றார். அவர் தினசேகரனைப் பார்த்தார்.
”நான் உலகின் மிகச் சிறந்த பாவலன் என்பதில் எனக்கு அய்யமே இல்லை. ஆனால்…நான் எந்த அளவுக்கு சிறந்த பாவலனோ அந்த அளவுக்கு சிறந்த வள்ளலும் கூட. எனவே என் நண்பனான உனக்கே இந்த குதிரையை விட்டுக் கொடுத்து விடுகிறேன்” என்றார் தினேசேகரன்.
கனசேகரன் சிரித்தார். ”பார்த்தாயா கைம்மா. எப்படி சாமார்த்தியமாக பேசுகிறார். இவருக்கு தன்னம்பிக்கையே இல்லை. இவர் ஒரு பாவலன் அல்ல என்று இவருக்கே தெரிந்திருக்கிறது. வள்ளலாம். எனக்கு விட்டுத் தருகிறாராம்” என்றார் அவர்.
கனசேகரன் வேகமாக சென்று குதிரையின் மீது ஏற முயன்றார்.
”வா …கைம்மா உன்னை நீ எங்கே செல்ல வேண்டுமோ அங்கே இறக்கி விட்டு விடுகிறேன். இந்த ஆள் நம்முடன் வர வேண்டாம்” என்றார்.
அந்த பெரிய குதிரையின் மீது அவர் ஏற முயன்ற போது கைம்மா விரைந்து குதிரையின் அருகே சென்றான். அதன் தலை அருகே சென்று அதன் காதில் முணுமுணுப்பாக ஏதோ சொன்னான். அது கனைத்தது.
”என்ன சொன்னாய் கைம்மா?” என்று கேட்டார் கனசேகரன்.
”தாங்கள் ஒரு பாவலர் என்று சொன்னேன்”
”நல்லது”
”சென்று வாருங்கள் பாவலரே….வாழ்த்துக்கள்” என்றான் கைம்மா.
”நீ வரவில்லையா? இந்த பெரிய குதிரையில் தாராளமாக இடம் இருக்கிறதே. நீ என் பின்னால் அமரலாமே. இதோ இந்த துண்டால் நீ உன்னை என்னுடன் பிணைத்துக் கொள்ளலாம்” கனசேகரன் தன் பையில் இருந்து நீண்ட துண்டு ஒன்றை எடுத்தார்.
”வேண்டாம் அய்யா. அது கனைத்ததைக் கேட்டீர்கள் அல்லவா? அது தாங்கள் மட்டுமே தன் மீது சவாரி செய்ய வேண்டும் என்று விரும்புகிறது” என்றான் கைம்மா.
”மிகவும் நல்லது” என்ற கனசேகரன் மிகவும் சிரமப்பட்டு குதிரையின் மீது ஏறிக் கொண்டார்.
”கொஞ்சம் முன்னால் நகருங்கள்” என்றான் கைம்மா.
கனசேகரன் அமர்ந்து கொண்டு கடிவாளத்தைப் பற்றிக் கொண்டார்.
”சரி கைம்மா…நன்றி…வருகிறேன்” என்றார் கனசேகரன்.
”யோவ்… கனம்…வேண்டாமய்யா…தேவையில்லாமல் உயிரைப் பணயம் வைக்காதீர்” என்றார் தினசேகரன்.
”உம் வாயைக் கழுவும் ….மூடரே” என்று சொல்லிவிட்டு கனசேகரன் குதிரையைத் தட்டினார்.
குதிரை ஓடத் தொடங்கியது. சிறகுகள் விரித்து வானில் எழுந்தது.
(மேலும்)