திருக்குறள் இன்பத்துப் பாலில் ‘கற்பியல்’ என்ற பகுதியில் இரண்டாவது அதிகாரமாக இடம்பெற்றிருப்பது ‘படர்மெலிந்திரங்கல்’ ஆகும். தம்பதியர் காலச்சூழலால் பிரிந்து தனித்திருக்கும்போது அவர்களின் உள்ளத்தின் ஆற்றாமை கண்ணீராக விழிகளின் வழியே வெளியேறுகிறது.
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்
இது, காதலால் ஏற்பட்ட துன்பத்தை வெளிப்படுத்தாமல் உள்ளத்தில் மறைத்து வைத்திருக்கும் ஒருவரின் உணர்ச்சி வெளிப்படுகிறது. அவர் துன்பத்தை மற்றவர்கள் அறிந்துவிடக் கூடாது என்பதால் அதை மறைக்க முயற்சி செய்கிறார். ஆனால், துன்பத்தை அடக்கி வைக்க முயன்ற அளவுக்கு அது மேலும் மேலும் பெருகுகிறது.
எப்படி ஊற்றுநீரை அடைத்தால் அது இன்னும் வேகமாகப் பெருகுமோ, அதுபோல் உள்ளத்தில் அடக்கப்பட்ட காதல் வேதனையும் மிகுதியாகிறது. இதன் மூலம் உண்மையான காதல் உணர்வுகளை மறைக்க முடியாது என்பதும் அவை இயற்கையாக வெளிப்படும் என்பதும் தெளிவாகிறது.
இந்தத் திருக்குறள், காதலில் ஏற்படும் உள் வேதனையின் உளவியல் பரிமாணத்தை மிக அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. மனத்தின் ஆழமான கோணங்களில் உருவாகும் காதல் ஓர் இனிய உணர்வாகத் தோன்றினாலும் அது நிறைவேறாதபோது மனநோயாக மாறும். இக்குறளில் அந்த மனநோயான “காமநோய்” பற்றிய அந்தரங்கமான, வெளிப்படாமல் இருக்கும் வேதனைப் பற்றிக் கூறப்படுகிறது.
“மறைப்பேன்மன் யான்” என்று கூறும் கதாபாத்திரம் தன் காதலை வெளிக்கொடுக்க விரும்பவில்லை. இது காதலின் ஒரு பரிதாபமான நிலை. ஒருவரை ஆழமாக நேசிக்கிறோம். ஆனால், அந்த நேசம் வெளிப்படக் கூடாது என்று மனத்துக்குள் அடக்கிவைக்கிறோம்.
இந்த நிலை உளவியல் அடிப்படையில் அடக்கப்பட்ட உணர்ச்சி (Suppressed Emotion) எனப்படும். இது மனத்தில் ஆழமான உளைச்சலை உருவாக்கும். அடக்கப்பட்ட உணர்வுகள் வெளியேற்றப்படாமல் இருந்தால் அவை உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இங்கே “இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்” என்கிறார் வள்ளுவர். அதாவது, காதலுக்குள் மூழ்கிய ஒருவர் அதை வெளியேற்றாமல் அதிலேயே உழன்று தவிக்கும்போது அந்த உணர்வு முடிவின்றிப் பெருகும். ஊற்றுநீர் போல ஆரம்பத்தில் மெதுவாகச் சுரந்தாலும் பின்னர் அது பெருக்கெடுத்து நதியாக ஓடத் தொடங்கும். அதுபோல், காதலின் வேதனைத் தடுத்தால் பின்னர் அது தடுக்க முடியாத அளவுக்கு மனத்தை ஆட்கொள்ளும்.
உளவியல் அடிப்படையில், இது அறிவாற்றல் மிகுசுமை (Cognitive overload) எனப்படும். ஒரே உணர்வானது நமது சிந்தனையை முழுமையாகப் பிடித்து வைத்து, மற்ற செயல்களைத் தொடர்ந்து செய்ய முடியாத நிலைக்கு நம்மைக் கொண்டுசெல்லும்.
இங்கு உள்ள நாயகி (அல்லது நாயகன்) தன் உணர்வுகளைச் சுமந்து செல்வதற்கான காரணம், சமூக நெறிமுறைகள், குடும்பக் கட்டுப்பாடுகள் அல்லது காதலின் ஒருபக்கம் தனித்த நிலை ஆகியவையாக இருக்கலாம். அதனாலேயே அந்த உணர்வை வெளிப்படுத்தாமல், “மறைப்பேன்” என்று தீர்மானிக்கிறார். ஆனால், உணர்வுகள் என்பது தடுக்க முடியாத சக்தியே!
அன்பு ஒரு சக்தி. அது தடைப்பட்டால் துயரமாவதோடு நிற்காது; அதனை மறைக்க முயன்றால், அது நம்மையே கட்டுப்படுத்தும் நிலைக்குக் கொண்டு போகும். இதனை நவீன உளவியல் “உணர்ச்சி அடக்குதல் மற்றும் பெருக்கம்” (Emotional suppression and amplification) என்ற கோணத்தில் பார்க்கிறது. அடக்கப்பட்ட உணர்வுகள் நம்முடைய நினைவுகள், செயல்கள், உறவுகள் அனைத்தையும் பாதிக்கும்.
திருவள்ளுவர், உணர்வின் உள் சூழலைச் சொல்லி அதன் உளவியல் தாக்கத்தையும் மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறார். காதல் என்பது வெளிப்படும்போது மட்டும் வலிமையானது அல்ல. அதை மனத்தில் மறைத்து வைப்பது இன்னும் பெரிய உளவியல் போராட்டமாய் உள்ளது. அந்த உணர்வை அடக்க முயற்சி செய்வதன் விளைவாக, அது இன்னும் ஆழமாகவும் வேதனையுடனும் நம்மை ஆட்கொள்ளும். அதனால்தான் காதல் மறைவது அல்ல, வலிவது என்பதைத் தோழர் வள்ளுவர் ஊற்றுநீருடன் ஒப்பிட்டு அழகாகக் கூறுகிறார்.
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்
இங்குக் காதலால் வருந்தும் ஒருவரின் மனநிலையை தோழர் வள்ளுவர் வெளிப்படுத்துகிறார். அவர் அனுபவிக்கும் துன்பம் மிகுந்தது; அதனால், அதை உள்ளத்தில் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், அந்தத் துன்பத்தை உண்டாக்கியவருக்கே அதைச் சொல்ல வேண்டும் என்றால் வெட்கமாக உணர்கிறார்.
காரணம், அவர் மீது இன்னும் அன்பு இருக்கிறது. அதேசமயம், அவரிடம் துன்பத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாதநிலை மனத்தை வேதனையடையச் செய்கிறது. இவ்வாறு, காதலில் ஏற்படும் உணர்ச்சி குழப்பத்தையும் சொல்ல முடியாத வேதனையையும் தருவதை இந்தக் குறட்பா நுணுக்கமாக வெளிப்படுத்தியுள்ளது.
இதில், காதலின் மனவெதும்பலையும் அந்த உணர்வின் இருமுனை வேதனையையும் மிகச் சுருக்கமாகவும் ஆழமாகவும் எடுத்துரைக்கிறார். இது காதலின் உளவியல் வெளிப்பாடாக ஒரு மனநோயைவிட வலியுடைய உணர்வுப் பிணியாகும்.
“இந்நோயை” என்று கூறப்படும் போது, இது உண்மையில் உடல் நோயல்ல; இது மனத்தின் ஆழத்திலிருந்து எழும் காதலெனும் உணர்வு. காதலின் ஆழம், நெருக்கம் ஆகியன ஒருவரின் உணர்வுகளை முற்றிலும் கட்டுப்படுத்திவிடக் கூடியவையே!.
“கரத்தலும் ஆற்றேன்” என்பன் வழியாக, அந்த வேதனையை வெளிக்காட்டாமல் அடக்க வைக்க முடியாத நிலையை நம் முன் வைக்கிறார். இது உளவியல் அடிப்படையில் உணர்ச்சி அடக்குதல் தோல்வி (Emotional Suppression Failure) என்று அழைக்கப்படுகிறது. மனத்துக்குள் உணர்வை அடக்க முயன்றால் அது ஆழமாக ஊறி, எப்போது வெடிக்கும் என்று கூற முடியாத அளவுக்குப் பெருகும். அந்த நிலையில்தான் இக்காதலர் இருக்கின்றனர்.
அதையே காதல் செய்தவருக்கே (நோய் செய்தவர்க்கே) கூற முயன்றாலும் அது நாணத் தரும் என்கிறார். இதுவே காதலின் இன்னொரு உளவியல் பரிமாணம். இது உணர்ச்சிப் பாதிப்பு (Emotional Vulnerability) எனப்படுகின்றது.
நம்மை நேசிக்கிறவரிடம்தான் நாம் மிக அருகாமையில் இருக்க விரும்புகிறோம். ஆனால், அவரிடமே நம் உள் வேதனையை கூறவே நாணம் ஏற்படுகிறது என்றால், அதுவே நம்முடைய உளவியல் நிலையின் பரிதாபம்.
இதுவே வெட்கக்கேடான காதல் (Shame-bound love) எனப்படும். நம்மை நோயாக்கும் அளவுக்கு நேசிப்பவர், அந்தக் காதலை உணராமல் அல்லது மீண்டும் பதிலளிக்காமல், நம்மை விலக்கி வைத்திருப்பது, நம்மை அவரிடம்கூட எதையும் கூற முடியாத நிலைக்குக் கொண்டு செல்கிறது. இது மனத்தில் தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்தும்.
இக்குறள், தனிப்பட்ட உறவுகளின் கூர்மையான உள் நிகழ்வுகளை வெளிப்படுத்துகிறது. இன்றைய உளவியலில் இது கருத்து வெளிப்பாட்டின் உள் முரண்பாடு (Internal Conflict of Expression) எனப்படுகிறது. உணர்வை வெளிக்காட்ட இயலாமல் திணறும் போது, அது மன அழுத்தமாக மாறுகிறது. அதேநேரத்தில், அந்த உணர்வை அதன் காரணமாக இருந்த நபருக்கே சொல்லும் துணிவு இல்லாத நிலை நம்மைக் குழப்பமடைய செய்கிறது.
இந்தக் கருத்து, ஒருவரின் உணர்ச்சி வெளிப்பாட்டுக்கும் (Emotional Expression) சமூகத் தீர்ப்புக்கும் (Social Judgment) இடையேயுள்ள உளவியல் போராட்டத்தைப் பிரதிபலிக்கிறது. நம்மை நேசிக்காதவரிடம் காதலைக் கூறுவது அவமானமாகவும் வீணாகவும் உணரப்படுகிறது.
தோழர் வள்ளுவர் இக்குறளில் ‘காதல்’ என்பது மனத்தின் மிக நுணுக்கமான பக்கங்களைத் தொட்டுத் திளைக்கும் உணர்வு என்பதை உணர்த்துகிறார். காதலை வெளிப்படுத்த முடியாத நிலையும் அதே காதலைக் காதலரிடம் சொல்ல நினைக்கும்போது மனத்துக்கு நாணம் வருவதும் ஒரு பெண்ணின் (அல்லது ஆணின்) உள் பிணியாகும். மனத்தின் இக்குரலே “சொல்ல முடியாமல் வலிக்கும் காதல்” என்பதற்குத் திருக்குறள் தரும் சான்றாகும்.
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து
இதில் காதலால் வாடும் ஒருவரின் ஆழ்ந்த மனவேதனை வெளிப்படுகிறது. அவர் காதலில் ஏற்பட்ட துன்பத்தையும் அதைக் காதலரிடம் சொல்ல முடியாத வெட்கத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கிறார். இந்த இரு உணர்ச்சிகளும் அவரை மிகவும் சிதைக்கின்றன.
தன் உடம்பை ஒரு காவடித் தண்டாகக் கற்பனை செய்து, அதன் ஒரு பக்கத்தில் காதல் நோயும் மற்றொரு பக்கத்தில் வெட்கமும் தொங்குவதாகச் சொல்கிறார். அதாவது, இரு பக்கங்களிலும் இழுக்கும் வேதனையால் அவர் தாங்க முடியாத நிலைக்கு வந்துவிட்டார். இது காதலின் உளவியல் துயரத்தை நுணுக்கமாகக் காட்டுகிறது.
தோழர் வள்ளுவர் இந்தக் குறளில், காதல் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தம் உளவுணர்வுகளை மிகவும் அழுத்தமான, ஆனாலும் அழகான மொழியில் பகிர்கிறார். உடம்பு காமநோயால் மெலிந்து, அதனைச் சேர்ந்த மனநிலைகூட ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஓர் உளவியல் நெருக்கடி எனக் கருதப்படும்.
இந்தக் குறளில், “உயிர்காவாத் தூங்கும்” எனும் உவமை மிகச் சிறந்த உளவியல் விளக்கத்தைத் தருகிறது. தூக்கு என்பது இரண்டு முனைகளில் தொங்கும் அமைப்பாகும். அதன் நடுவில் உயிர்த் தொங்குகிறது. அதாவது, உயிர் என்பது காமமும் நாணமும் என்ற இரு சோர்வூட்டும் உணர்ச்சிகளுக்கிடையில் சிக்கி, ஆழ்ந்த குழப்பத்தோடு உள்ளது.
காமம் என்பது உடலும் மனதும் ஒருவரை விரும்பும் தீவிரமான உணர்வாகும். இது ஒருவரைப் பிடித்துப் பிழிந்து விடக்கூடிய ஆற்றல் கொண்டது. இது அவரைத் தேடிச் செல்ல வைத்தும் அவரை நினைத்து துயருற வைத்தும் மன அழுத்தம், உளவியல் தொந்தரவு போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.
அதேசமயம் நாணம் என்பது, சமூக மரியாதை, நாகரிக கட்டுப்பாடுகள் மற்றும் உள்நோக்கமான மதிப்பீடுகளால் உருவாகும். நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்த அஞ்சும் மனநிலை, நம்மை அடக்கிவைக்கும் ஒரு சுயபரிதாப உணர்வாக மாறும்.
இந்த இரண்டிற்கும் நடுவில், பிணி பிடித்த நபரின் உயிர் அசைந்து கொண்டே இருக்கிறது. இது உணர்ச்சித் தெளிவின்மை (Emotional Ambivalence) எனப்படும் உளவியல் நிலை. ஒரேநேரத்தில் எதிர் நோக்கான இரண்டு உணர்வுகள் நம்மை இழுக்கின்றன. ஒன்று – சேர விரும்பும் காமம்; மற்றொன்று – சொல்லத் துடிக்கும், ஆனால் வெட்கப்படும் நாணம்.
“நோனா உடம்பு” எனக் கூறுவது, உடல் மட்டுமல்லாது அதன் வழியாக வெளிப்படும் மனக் கலக்கம். நவீன உளவியலின்படி, மனத்திலுள்ள அழுத்தங்கள் உடலில் வெவ்வேறு அறிகுறிகளாக வெளிப்படுகின்றன. அவை உணர்ச்சிப் பிணிகள் (Psychosomatic Illness) என அழைக்கப்படுகின்றன.
இங்கு, உடம்பே நோயால் அல்லாது, உணர்வுப் பிணியால் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது காதலின் வெறும் கனவுப்பொழிப்பல்ல; அது வாழ்க்கையின் நிஜமான உளவியல் தாக்கம்.
இவ்வாறு ஒருவர் மனத்தில் இருவரும் போராடும்போது, தீர்வு என்பது அவருடைய உணர்வுகளை வெளியேற்ற வேண்டும் என்பதில்தான் உள்ளது. ஆனால், நாணம் காதலின் வெளிப்பாட்டையே தடுக்கும். இதுவே ஒருவரின் உளவியல் நிலையைக் கடுமையாக்கும். இது அடக்குமுறை உணர்ச்சி மோதல் (Repressive emotional conflict) எனப்படும். அதாவது, உணர்வுகள் உள்ளே அடக்கப்பட்டு வெளியேற்ற முடியாத நிலை.
தோழர் வள்ளுவர், இக்குறளில், காதலின் உணர்வுப் போராட்டத்தை, அதுவும் வெளிப்படுத்த முடியாத, அடக்கிப் பொறுக்க வேண்டிய உளவியல் வேதனையை உயிர்த் தூக்கத்தில் தொங்குவது போலச் சித்திரிக்கிறார். இது காதல், வெட்கம், மனவேதனை ஆகிய அனைத்தையும் ஓர் இழையில் நெசவு செய்கிறது. காமமும் நாணமும் ஆகிய இரண்டும் இணையும்போது, அது உயிரையே சுழன்றழிக்கும் தூக்குக் கயிறாக மாறிவிடுகிறது.
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்
இதில், காதலால் துன்பப்படும் ஒருவரின் ஆழமான உணர்வு வெளிப்படுகிறது. அவர் மனத்தில் வெட்கமும் காதல் துன்பமும் இருந்தாலும் அதில் மிகுந்தது காதல் துன்பமே என்கிறார் தோழர் வள்ளுவர். அந்தத் துன்பத்தை அவர் ஒரு கடலுடன் ஒப்பிடுகிறார். அது ஆழமுடனும் அளவிட முடியாததாகவும் உள்ளது. அந்தக் கடலைக் கடக்கத் தன்னைக் காத்துக் கொள்ளும் படகு இல்லை என்பதால், அந்த வேதனையில் இருந்து தப்பிக்க முடியாதநிலை அவருக்கு உருவாகியுள்ளது. இதன் மூலம் காதலின் வலிமையும் அதனால் ஏற்படும் துயரத்தின் ஆழத்தையும் கவிஞர் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துகிறார்.
இந்தக் குறளில், காதலால் ஏற்படும் மனவேதனையை, ஒரு பரப்பான கடலுடன் ஒப்பிட்டு கவிக்குரிய உளவியல் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். காதல் என்பது நம்மை உயர்த்தக் கூடியதும் அதேநேரத்தில் நம்மை முழுமையாக மூழ்கடிக்கக் கூடியதும் ஆகும். இக்குறளில் காதல் கடலாக உவமிக்கப்பட்டு, அதில் நீந்துவதற்கான பாதுகாப்பான வழி இல்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது.
இங்குக் “காமக் கடல்” என்பது சாதாரணமான ஆசை அல்ல. அது நம்முடைய மனத்தையே கைப்பற்றக்கூடிய, சுய கட்டுப்பாட்டைத் தொலைக்க வைக்கும் அளவிற்கு ஆழமான உணர்வு. இது உணர்ச்சி மிகுதி (Emotional overwhelm), உணர்ச்சி வெள்ளப் பெருக்கு.
உளவியலில் இது வெறித்தனமான காதல் கோளாறு (Obsessive Love Disorder) அல்லது காதல் அடிமையாதல் (Love Addiction) எனப்படும். ஒருவர் காதலரிடம் உறுதியான பாசத்துடன் கட்டுப்பட்டு விடுகிறார்கள். அது மறுக்கப்பட்டாலும் அல்லது அந்த உறவு தொலைந்தாலும் அந்த ஆசையைத் தணிக்க முடியாமல் வேதனையில் வாழ்கிறார்கள்.
“அதுநீந்தும் ஏமப் புணை மன்னும் இல்” என்கிறது, அதைத் தாண்டிப் பாதுகாப்பாகக் கரை சேர உதவும் புணை (தோணி) இல்லை என்கிறார் தோழர் வள்ளுவர். இது உளவியல் அடிப்படையில் தன்னலம், நிதானம், சிந்தனை, உறவுகளில் நெருக்கத்தைக் குறைக்கும் ‘இன்மை’ என்பதை வெளிப்படுத்துகிறது.
நம்மை அழைத்துச் செல்லும் வழிகாட்டி அல்லது பாதுகாப்பான ஆதாரம் இல்லாமல் காதலின் பெருங்கடலில் ஒருவன் மூழ்குவது என்பது உணர்ச்சி உதவியற்ற தன்மை (Emotional Helplessness) எனப்படும். இந்த நிலை கவலை, மனச்சோர்வு, தூக்கமின்மை, பசியின்மை போன்ற உளவியல் பிரச்சனைகளைக் கொண்டுவரும்.
பொதுவாகவே, ஒருவர் மீது காதலாகக் கொண்ட உணர்வுகள், எதிர்வினையாக வராதபோது, அது நிராகரிப்பு உணர்திறனாகத் (Rejection Sensitivity) மாறி, தன்னம்பிக்கை குறைவு, தனிமை உணர்வு, வாழ்க்கையின் அர்த்தம் குறைவது போன்ற தாக்கங்களை உண்டாக்கும். அதுவே இங்குக் “கடலில் புணை இல்லாமல் நீந்த முயலும் மனிதனின் வேதனை” போலச் சித்தரிக்கப்படுகிறது.
நம் வாழ்க்கையில் புணை என்றால் என்ன? உறவுகள், நட்புகள், நம்பிக்கைகள், சிந்தனைக் கட்டுப்பாடுகள். இவையெல்லாம் ஒருவரை உற்சாகமாக வைத்திருக்கும் மனவுறுதி. இவை இல்லாதபோது, ஒருவன் எந்த உணர்விலும் முழுமையாக மூழ்கி விடுகிறான். அதனால்தான் காதற்துன்பம் உச்சக்கட்டத்துக்குச் சென்று, வாழ்வைச் சோதிக்கத் தொடங்குகிறது.
தோழர் வள்ளுவர் இக்குறளில், ‘காதல் என்பது மிகப்பெரிய சக்தியாக இருக்கக் கூடும். ஆனால், அதில் கட்டுப்பாடின்றி மூழ்கும்போது, அதனைக் கடக்க வழி இல்லாத ஒரு நிலைக்குள் நம்மைத் தள்ளும்’ என்கிறார்.
இது நவீன உளவியலில்கூட ஒத்துப் போகும் உண்மை ஆகும். காதலைப் பாதுகாப்புடன் அனுபவிக்க உரிய மனநிலை, சூழ்நிலை, ஆதரவு தேவை. இல்லையெனில், அது கடலாகவே இருந்து நாம் நீந்த முடியாத துன்பமாக மாறும். காதலின் கடலில் தவிக்கிறவன், புணை இல்லாமல் ஆழத்தில் முழ்குகிறான். இது நம் மனத்தின் நிஜமான ஓர் உளவியல் போராட்டமே!”
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்
இதில், ஒருவரின் நட்பிலேயே துன்பத்தை அனுபவிக்கும் நபரின் எண்ணம் வெளிப்படுகிறது. “ஒருவர் நண்பராக இருக்கும்போதே நமக்குத் துயரத்தை அளிப்பவராக இருந்தால், ஒருநாள் அவர் பகைவராக மாறினால் எவ்வளவு வேதனையைத் தருவார்?” என்று நம்மிடம் கேட்கிறார் தோழர் வள்ளுவர்.
அதாவது, நட்பில் இருப்பவரிடமிருந்தே துன்பம் வந்தால், பகைமை நிலையில் அது இன்னும் கொடுமையாக இருக்கும் என்பதைக் கூறுகிறார். இதன் மூலம் மனித உறவுகளில் நம்பிக்கையின் அவசியத்தையும் உண்மையான நட்பு எவ்வளவு மதிப்புடையது என்பதையும் கவிஞர் நுணுக்கமாக வெளிப்படுத்துகிறார்.
மனித வாழ்க்கையின் அடிப்படையான உறவுகளில் நட்பு மிக முக்கியமானது. ஆனால், அந்த நட்பே ஒருவனுக்குத் துன்பத்தின் ஊற்றாக மாறினால், அந்த நபர் மற்ற பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வார்? என வினா எழுப்புகிறார் தோழர் வள்ளுவர். இக்குறளின் உளவியல் வெளிச்சத்தில் நாம் காணும் போது, இது மனநலத்திற்கும் மனித உறவுகளின் உள்மூலங்களுக்கும் தொடர்புடைய ஓர் ஆழமான சிந்தனையாக மாறுகிறது.
நட்பு என்பது ஒருவரின் உளவியல் நலனை நிலைநிறுத்தும் முக்கியமான ஆதாரமாக இருக்கிறது. நம் மனத்தில் நம்பிக்கையும் சொல்லும் வார்த்தையிலும் பகிரும் உணர்வுகளிலும் ஓர் உறுதியைக் கொடுக்கும் உறவாக நட்பு விளங்குகிறது.
உண்மையான நட்பு என்பது நம்மை ஆறுதலாகக் காக்கும் ஒரு மனச்சாந்தி. அப்படி இருந்தும், சில நேரங்களில் நண்பனின் வார்த்தைகள், நடத்தை அல்லது கவனக்குறைவுகள், நம்மிடம் துயரத்தை ஏற்படுத்தும்போது அது மிகச் சங்கடமான உளவியல் பாதிப்பாக மாறுகிறது. இது உணர்ச்சி துரோகம் (Emotional Betrayal) எனப்படும் நம்பிக்கை கொடுத்தவரால் ஏற்படும் துன்பம்.
உண்மையான நட்பில் ஏற்பட்ட மனவருத்தம், சாதாரண விரோதத்தைவிடப் பல மடங்கு வலியாக உணரப்படுகிறது. ஏனெனில், எதிரியிடமிருந்து எதிர்பார்க்கப்படும் துன்பத்தை எதிர்கொள்ள மனம் தயாராக இருக்கும். ஆனால், நம்மைப் பாதுகாப்பார்கள் என்று நம்பியவர்களிடமிருந்து வரும் துயரம் நம்முள் ஒரு வகையான உளவியல் அதிர்ச்சியைத்தான் (Psychological shock) உருவாக்கும்.
இது நம்பிக்கை மீறல் (Trust Violation) எனும் உளவியல் சூழ்நிலைக்கு ஒத்தது. இப்படிப்பட்ட துயரம் நீண்ட நாள்கள் மனத்தில் தீராத புண்களை ஏற்படுத்துகிறது. அந்தப் புண்கள் ஒருவரின் மனநிலை, சமூக உறவுகள், செயல்திறன் மற்றும் நம்பிக்கையைப் பாதிக்கும்.
வள்ளுவர் இங்கு கேட்கும் வினா மிக முக்கியமானது. “இன்னும் பெரிய சிக்கல்களை எதிர்கொள்ளும் போது, இத்தகைய நபர் என்ன செய்வார்?”
இது நம்மை மீட்டெழுச்சி (Resilience) எனும் உளவியல் கருத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது. ஒரு நபர் துயரங்களை எதிர்கொண்டு மீளும் மனவுறுதி. நட்பிலேயே நமக்குத் துயரத்தைத் தருபவர், வாழ்க்கையின் வலுவான சோதனைகளை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க மாட்டார் என்பதையும் அவரது மனத்தளர்வையும் இது வெளிப்படுத்துகிறது.
இக்குறள் நம் வாழ்வில் உறவுகளின் தாக்கத்தையும் அவை எவ்வளவு நுண்ணிய மனதளவிலான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறது. உளவியல் அடிப்படையில் நமக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் நம்மிடம் காட்டும் அக்கறை, ஆதரவு அல்லது அதற்கே எதிரான புறக்கணிப்பு, நம்மை எப்படி உருக்கும் என்பதை உணர்த்துகிறது.
தோழர் வள்ளுவர் இங்கு, “நட்பிலே துயரம் தரும் மனிதன், வாழ்க்கையின் அறைகூவல்களில் நம்பக் கூடியவர் அல்லர்; ஏனெனில், அவர் தன்னை மற்றவர்களையுமே காத்துக்கொள்ளும் மனவலிமையை இழந்திருப்பார்” என்று நம்மை எச்சரிக்கிறார்.
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது
இங்குக் காதலின் இரு முகங்கள் அழகாக விளக்கப்படுகின்றன. காதல் இருக்கும்போது அது மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் அளிக்கிறது; அந்த மகிழ்ச்சி கடல்போல பரந்தது. ஆனால், அதே காதலில் பிரிவு ஏற்பட்டால் அந்த மகிழ்ச்சி துன்பமாக மாறுகிறது. அந்தத் துன்பம் கடலின் அகலத்தைக் காட்டிலும் பெரிதாக உணரப்படுகிறது. காதல் என்பது மகிழ்ச்சிக்கும் துன்பத்திற்கும் காரணமான ஆழமான உணர்ச்சி; அதில் பிரிவு வந்துவிட்டால் மனம் அதைத் தாங்காது.
இந்தக் குறள், காதல் மற்றும் காம உணர்வின் உளவியல் பரிணாமத்தைக் கூர்மையான பார்வையில் வெளிப்படுத்துகிறது. இது, மனித மனத்தின் உணர்வுப் போராட்டங்களையும் காதலின் இரு முகங்களையும் அதாவது இன்பமும் துன்பமும் மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறது.
மனிதர்களின் அடிப்படை உணர்வுகளில் ஒன்று காமம். இது உடல் உறவுகளைக் கடந்த ஓர் உள்மனத்தை ஈர்க்கும், நெருக்கம், சொந்தம், நேசம் ஆகியவை கலந்த ஓர் ஆழமான அனுபவமாக அமைகிறது. ஒருவர் விரும்பியவுடன் அவரிடமிருந்து கிடைக்கும் அன்பு, பார்வை, தொடுதல் ஆகியவை மனத்தில் இன்பம் ஊற்றும். இந்த இன்பம், குறளில் கூறப்படுவதுபோல் “கடல்” போன்று பரந்து விரிந்தது.
உண்மையான காதலின் தருணங்களில் ஒவ்வொரு நிமிடமும் பரவசமானது. காதலரின் அருகில் இருப்பதும் அவருடன் பகிரும் உரையாடலும் கண்கள் மூடப்பட்டுக் கற்பனை செய்யும் அந்த நெருக்கம் ஆகிய அனைத்தும் மனத்தை எல்லையற்ற இன்பம் போன்ற உணர்வில் மூழ்கச் செய்கின்றன.
அந்த இன்பம் கடலைவிடப் பெரியதா? இல்லை; ஆனால்… இன்பத்தில் வியக்கச் செய்யும் இந்தக் காமம், எதிர்பார்ப்புகள் நிறைந்ததாகவும் ஒருவரை முழுமையாக வாட்டக்கூடியதும்கூட. ஏனெனில், காமம் என்பது இருவர் இடையிலான உறவின் மீது நம்பிக்கையை உருவாக்குகிறது. ஒருவரிடம் ஈர்ப்பு ஏற்பட்டதும் அவரே நம் மன உலகின் மையமாகி விடுகிறார். இதுவே பிரிவு, புறக்கணிப்பு, உல்லாசத்திலிருந்து விலகிவிட்டால், அதன் தாக்கம் விபரீதமாகிவிடுகிறது.
அந்த இன்பம் தடுமாறும்போது ஏற்படும் துன்பத்தைத் தோழர் வள்ளுவர் “அதனிற் பெரிது” எனக் குறிப்பிடுகிறார். உளவியல் அடிப்படையில் இதைக் காதல் நிராகரிப்பு அதிர்ச்சி (Love Rejection Trauma) எனலாம். நம்மால் நேசிக்கப்பட்டவர் எதிர்பார்ப்புகளுக்கு விரோதமாக நடந்துகொண்டால், நம்முள் ஆழ்ந்த மனவலியை உருவாக்குகிறது. மனத்தளவில் அது மனச்சோர்வு, பதட்டம், சுய மதிப்பு இழப்பு (Depression, anxiety, loss of self-worth) போன்றவையாக மாற்றமடையும்.
உணர்வுப் பிணைப்பு குலைந்துவிட்டதும் மனத்தில் ஏற்பட்ட பூங்காற்று புயலாக மாறுகிறது. அது தூக்கத்தைக் கெடுக்கிறது. சிந்தனையை மங்கச்செய்கிறது. வாழ்க்கையின் அர்த்தமே தொலைந்தது என ஒரு தனிமை உணர்வில் தள்ளுகிறது. காதலரின் அன்பு இருந்த இடத்தில் இப்போது ஒருமையில் ஊதிக்கொள்ளும் வெறுமையாக நிற்கிறது.
இந்தத் திருக்குறள், காதலின் உச்ச இன்பத்தையும் அதிலிருந்து வரும் நிச்சயமற்ற துன்பத்தையும் உணர்வுப்பூர்வமாகக் காட்டுகிறது. இது ஒருவகையில் உளவியல் உணர்ச்சிகரமான சிக்கல்களை அறிவுறுத்தும் குறளாகும்.
உண்மையான காதல் ஆனந்தமானது; ஆனால், அது திசைமாறும்போது ஏற்படும் வேதனை, கடல் அளவிலான இன்பத்தையே தாண்டும் பெரும் புயலாக மாறுகிறது என்பதே தோழர் வள்ளுவரின் உளவியல் சார்ந்த கூர்மையான பார்வை ஆகும்.
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்
இதில் காதலால் வாடும் ஒருவரின் ஆழ்ந்த தனிமை உணர்வு வெளிப்படுகிறது. அவர் காதல் துன்பத்தை ஒரு கடலாகக் காட்டுகிறார். அந்தக் கடலை நீந்தி கடக்க முயன்றும் கரை — அதாவது அமைதியும் நிம்மதியும் — அவருக்குக் கிடைக்கவில்லை. அதனால், அவர் இன்னும் துன்பத்தில் மூழ்கியவாறே உள்ளார்.
நள்ளிரவிலும் உறங்க முடியாமல் தனிமையில் துன்புறுவது அவரது மனவேதனையின் அளவை நமக்குச் சொல்கிறது. இதன் மூலம் காதலில் பிரிவால் ஏற்படும் நிம்மதியற்ற நிலையும் அதனால் உருவாகும் ஆழ்ந்த தனிமையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இக்குறளில் காதலால் உண்டாகும் மனவேதனையின் ஆழத்தையும் அந்த வேதனையின் உளவியல் தாக்கத்தையும் கவிமனப்பான்மையோடு எளிமையான மொழியில் சித்தரிக்கிறார் தோழர் வள்ளுவர். இது ஒரு காதலியின் நிலை. அவள் காதலால் ஏற்பட்ட உள் காயங்களை வெளிப்படுத்தும் உணர்வுமிக்க குறள் இது.
காமம் என்பது ஒரு வலிமையான உளவியல் உணர்வு. இது ஒருவரின் மனத்தையும் உடலையும் ஆட்கொள்ளும். காதல் என்பது சிறிது நேரம் மட்டும் உணரவேண்டிய உணர்வு அல்ல; அது ஒருவரின் நிஜமான சிந்தனையையும் செயல் முடிவுகளையும் பாதிக்கும். இதனைத் தோழர் வள்ளுவர் “கடும்புனல்” எனறு குறிப்பிடுகிறார்.
“கடும்புனல்” என்பது வெள்ளமாகக் கரையையும் தாண்டும் ஓர் ஆழமுள்ள, மோதி வரும், கட்டுப்பாடில்லாத ஆற்றல். இது காதலின் கோபமும் ஏக்கமும் தனிமையும் பிணைப்பும் கொண்ட கலவையாகும். அதைப் புரிந்து கொள்ளாமல் விலகினால், அதிலே மூழ்கிவிடும் அபாயம் உள்ளது.
பொதுவாக, ஒருவர் ஏதாவது ஒரு பிரச்சினையை எதிர்கொள்வதற்கு ஒரு முடிவு, ஒரு தீர்வு அல்லது ஒரு நம்பிக்கை அவசியம். ஆனால், இங்குக் “கரைகாணேன்” என்கிறார் காதலர். அதாவது, அவளுக்கு இந்த வேதனையின் முடிவே தெரியவில்லை. அவள் பிரிவை ஏற்க முடியவில்லை. சந்திப்பும் இல்லை. எதிர்பார்ப்பும் கலைந்து விட்டது. இது மனநோயின் தொடக்க நிலையாகிவிடும்.
இது நாள்பட்ட நிச்சயமற்ற தன்மை (Chronic uncertainty) எனும் உளவியல் நிலையை உருவாக்குகிறது. உறவின் முடிவையும் எதிர்கால நம்பிக்கையையும் காண முடியாத நிலை, மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. உறுதிப்படுத்த முடியாத எதிர்பார்ப்புகள், நரம்பு மண்டலத்தைத் தடுமாற வைக்கும்.
“யாமத்தும் யானே உளேன்” என்பது, உறங்கும் நேரமான இரவிலும் கவலைகளால் தூக்கமின்றி விழித்திருக்கும் மனநிலை. இது தூக்கமின்மை, பதட்டம், வதந்தி ஆகிய உளவியல் பாதிப்புகளின் வெளிப்பாடு.
காதலின் வேதனை மிகுந்தால், அது தூக்கத்தைக் கெடுக்கிறது. மனம் தானாகவே பழைய நினைவுகளை மீளவிசாரிக்கத் தொடங்குகிறது. நமக்கு அருகில் இருப்பவர்களும் நம்மைவிட்டு விலகிச் சென்றால், நம்முள் “நான் மட்டும்” என்ற தனிமை தோன்றும். இது, சுய தனிமைப்படுத்தல் (Self-isolation) எனும் உளவியல் கட்டமைப்பில் உள்ள தனிமை உணர்வின் விளைவு.
இக்குறள் காதலின் உளவியல் ஆழத்தை மிக நுட்பமாக எடுத்துரைக்கிறது. காதல் வெள்ளமாகி நம்மை அழுத்தும்போது, நாம் கரை காணாமலே ஏக்கத்தில் விழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இந்த நிலை, ஒருவரின் மனநிலையை மட்டும் அல்ல; உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இது உணர்ச்சித் தேக்கத்தை உருவாக்கி, ஒரு தனி உலகத்தில் நாம்மை மூழ்கச் செய்யும்.
“நான் காம வெள்ளத்தில் மூழ்கினேன்; கரை இல்லை. இரவிலும் நான் மட்டும் விழித்திருக்கிறேன் – என் உள்ளத்தில் எவரும் இல்லை”.
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை
இதில் காதல் வேதனையால் விழித்திருக்கும் ஒருவரின் மனநிலை வெளிப்படுகிறது. எல்லா உயிர்களும் இரவில் உறங்குகின்றன. ஆனால், அவர் மட்டும் துயில முடியாமல் துன்பத்தில் இருக்கிறார். அதனால் இரவும் தன்னுடன் விழித்திருப்பதாக அவர் கற்பனை செய்கிறார்.
அந்த இரவுக்கும் அவருக்கும் இடையில் ஓர் ஒற்றுமை உருவாகிறது. இரவு தனியாகவும் அவர் தனியாகவும் இருப்பதாக ஓர் உணர்வு ஏற்படுகிறது. இதன் மூலம் தோழர் வள்ளுவர் தனிமையை உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்துகிறார். காதலின் பிரிவு துன்பம், உறங்க முடியாத வேதனை மற்றும் தனிமையின் ஆழம் ஆகியன இந்தக் குறட்பாவில் நயமாகப் பிரதிபலிக்கின்றன.
இக்குறளில் தோழர் வள்ளுவர் ஒரு காதலியின் மனவேதனையை மிகத் தீர்க்கமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் நம்மெதிரில் எடுத்துவைக்கிறார். காதலின் இனிமையான தருணங்கள் ஒருபுறம் இருந்தாலும் பிரிவு அல்லது எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலை உருவாகும் போதில் அதன் வலி நம்மை ஆழமாகவே தொட்டுவிடுகிறது. இந்தக் குறளில், காதலியின் மன நிலையும் உளவியல் தாக்கமும் அழுத்தமாக வெளிப்படுகின்றன.
“மன்னுயிர் எல்லாம் துயிற்றி” என்ற வரி, காதலியின் மனநிலையை விவரிக்கிறது. இரவு நேரத்தில் எல்லா உயிர்களும் தூங்கிவிட்டன. பிரபஞ்சமே ஓர் அமைதியிலும் தூக்கத்திலும் இருக்கின்றது. ஆனால், அவள் மட்டும் விழிப்புடன், துயரத்தில், தனிமையில் போராடிக் கொண்டிருக்கிறாள். இது உளவியல் தனிமையின் மிக நேரடியான வெளிப்பாடு.
தனிமை என்பது சுருக்கமாக மற்றவர்களிடமிருந்து உடலோ அல்லது மனத்தோடு விலகி இருப்பது மட்டுமல்ல. அது நம்மை நேசிக்கும் ஒருவரின் அருகாமை இழப்பு, நம் மனத்திற்குள் வெறுமையை ஏற்படுத்தும் அனுபவமாக உள்ளது. அது, குறிப்பாக இரவில், அனைத்து மனச்செயல்பாடுகளும் அதிகமாக இயங்கும் நெருக்கமான தருணங்களில் கூர்மையான வலியாகத் திகழ்கிறது.
“அளித்திரா என்னல்லது இல்லை துணை” என்ற வரி காதலியின் குறிப்பு ஆகும். அவளுக்குத் துணையாக இருப்பது அவர் அல்லாமல் வேறு எதுவுமில்லை என்பதைக் குறிக்கிறது. இதன் உளவியலின் உணர்ச்சிச் சார்பு (Emotional dependence) எனும் தன்மையைக் காட்டுகிறது. அதாவது, தன் வாழ்வில் உள்ள பூரணமான பிணைப்பு ஒரே ஒருவரிடமே உள்ளது. அவரின் அருகாமை இல்லாமல் வாழ்க்கை வெறுமையாகத் தோன்றுகிறது.
இது இணைப்புக் கோட்பாடு (Attachment theory) என்பதைக் குறிக்கும். ஒருவர் மற்றொருவரிடம் மிகக் கடுமையாக உணர்வுப் பிணைப்புக் கொண்டிருப்பின், அந்த நபரின் இழப்பு அல்லது அரவணைப்பின்மையின் போது, அதே அளவிலான உருக்கமும் அழுத்தமும் ஏற்படுகின்றன.
இரவு நேரம் என்பது மனத்தின் அடக்கம் சீரழியும் நேரம். அப்போது வலிகள், ஏக்கங்கள், எண்ணக்குழப்பங்கள் அனைத்தும் தலைதூக்கும். “அளித்திரா” எனும் சொல், அந்த நொடிக்கண், காதலியை விட்டு உலகமே விலகி விட்டது போல ஒரு சூழலைச் சுட்டிக்காட்டுகிறது. ஒருவரின் துணையில்லாத நிலை மனத்திற்கு நம்பிக்கையின்மை (Hopelessness) எனும் நிலையை உருவாக்குகிறது. இது தற்கொலை எண்ணங்கள், மனச்சோர்வு போன்ற தீவிர உளவியல் விளைவுகளையும் தரக் கூடியது.
இக்குறள், ஒரு காதலியின் இரவின் தனிமையையும் காதலரின் அரவணைப்பின்மையால் உருவாகும் உளவியல் அழுத்தத்தையும் மிக நுட்பமாக எடுத்துரைக்கிறது.
“உலகமே தூங்கிவிட்டது… நான் மட்டும் விழித்திருக்கிறேன்… என் துயரத்திற்கு என்னைத் தவிர வேறு யாரும் துணையில்லை…” என்ற இந்த மனநிலை, காதலின் அழுத்தமான உளவியல் வெளிப்பாடாக விளங்குகிறது.
தோழர் வள்ளுவர் இக்குறளில் நம்மைக் காதலின் ஆழ்ந்த உளவியல் பாதிப்புகள் குறித்தும் அது மனித மனத்தில் விளைவிக்கும் தாக்கங்கள் குறித்தும் ஆழமாகச் சிந்திக்க வைக்கிறார்.
கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா
இதில் பிரிவால் வாடும் ஒருவரின் மன வேதனை தெளிவாக வெளிப்படுகிறது. காதலரின் பிரிவு அவருக்கு மிகுந்த துயரத்தை அளித்தாலும் அதைவிடக் கொடுமையாக இரவுகள் நீண்டுகொண்டே போவது போலத் தோன்றும் அந்த நிமிடங்களே இருக்கின்றன. இரவு முடிவதில்லை, நேரம் நகர்வதில்லை என்ற உணர்வு, அவரின் துன்பத்தை இன்னும் மிகுவிக்கிறது.
பிரிவுத் துன்பம் ஒருமுறை ஏற்பட்டாலும் அதனை நினைத்து நினைத்துக் கழிக்கும் ஒவ்வொரு இரவும் அந்த வேதனையை மீண்டும் மீண்டும் உணரச் செய்கிறது.
இந்தக் குறட்பாவில் பிரிவால் வேதனைப்படும் ஒருவனின் மனநிலையை நெஞ்சை உருக்கும் விதத்தில் தோழர் வள்ளுவர் விளக்குகிறார். காதலில் பிரிவு என்பது எளிய நிகழ்வாக இல்லாமல், அதன் விளைவுகளும் தாக்கங்களும் நுட்பமான உளவியல் அடிப்படையில் அமைகின்றன. இக்குறளின் வழியாக நம்மை அந்த உளவியல் ஆழத்திற்கு அழைத்து செல்கிறார் தோழர் வள்ளுவர்.
“கொடியார் கொடுமையின் தாம்கொடிய” எனும் சொற்றொடர், காதலியின் உணர்வுபூர்வமான நெருக்கடியைப் பிரதிபலிக்கிறது. அவர் காதலியால் (அல்லது காதலனால்) பிரிந்திருக்கிறார். அந்தப் பிரிவு ஒரு விதமான கொடுமையாகவே உணரப்படுகிறது. ஆனால், அவளுடைய கொடுமையைவிட, இப்போது நேரும் இரவுகள் இன்னும் கொடுமையானவை என்கிறார்.
இதில், உணர்வுப் பிணைப்பு (Emotional bonding) என்ற உளவியல் கருத்து வெளிப்படுகிறது. ஒருவர் மீது மிகுந்த பாசத்தோடு பிணைந்திருக்கும் மனத்திற்கு, அந்த நபரின் பின்னர் நீண்ட காலம் கடத்தும் தனிமை மிகவும் வேதனையானது. பிரிவால் ஏற்படும் உளவியல் விளைவுகளாக மனச்சோர்வு, கவலை, தூக்கமின்மை, ஒருவரைத் தேடும் ஏக்கம் போன்றவற்றைத் தோழர் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
“இந்நாள் நெடிய கழியும் இரா” – பிரிவு ஒருபுறமிருந்தாலும் அதன் தாக்கம் அதிகமாகப் பயிலும் நேரம் இரவுகளாகும். இரவு நேரத்தில் சுற்றியுள்ள அமைதியும் உலகம் துயில்கின்ற அந்த நொடியும் பிரிந்தவனை அல்லது பிரிந்தவளைக் குறித்த நினைவுகளைத் தீவிரமாகத் தூண்டுகின்றன. இதனால் எண்ணங்கள் கிளர்ச்சி அடையும்.
இது அசைபோடுதல் (Rumination) எனப்படும் உளவியல் நிலையைக் குறிக்கின்றது. அதாவது ஒரு விசேஷமான நிகழ்வை மீண்டும் மீண்டும் நினைவுகூர்ந்து அதில் மனத்தைக் குழப்பிக்கொள்வது. பிரிவின் பின்னணியில் ஏற்படும் தனிமையும் அந்த எண்ணப் புழுங்கலும் தூக்கமின்மையையும் மன அழுத்தத்தையும் மிகுதிப் படுத்துகின்றன.
இக்குறளில் ‘நெடிய கழியும் இரா’ எனும் தொடர், நேரம் எவ்வளவு தாமதமாக நகர்கிறது என்பதை உணரச் செய்கிறது. ஒருவரிடம் இருந்து உணர்வுப் பிணைப்பு கொண்ட நபர் விலகியிருக்கும்போது, ஒவ்வொரு நொடியும் நம்மை உளவியல் அடிப்படையில் அச்சுறுத்தி, வேதனையைத் தரும்.
ஒருவர் துன்பத்தில் இருக்கும்போது, நேரம் மெதுவாக நகர்கிறது போலத் தோன்றும். அந்த நேரம் நம் மனத்தின் வேதனையை நீட்டிக்கும் கருவியாகச் செயல்படும்.
இந்தக் குறட்பா காதலின் பிரிவால் ஏற்படும் உளவியல் வேதனையை மிக நுட்பமாகவும் உணர்ச்சிமிகுந்த வகையிலும் பதிவு செய்கிறது. காதலனின் கொடுமை ஒரு புறமென்றாலும் அவரது பிரிவுக்குப் பின்னரான நெடிய இரவுகள் கொடுமையானதாகத் தோன்றுகின்றன.
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்
இதில் காதலரைக் காண முடியாத வேதனையில் வாடும் ஒருவரின் உணர்ச்சி வெளிப்பட்டுள்ளது. என் மனம், என் நெஞ்சம் போலவே உடலால் காதலரிடம் சென்று சேர முடியுமானால், அவரை நினைத்து நான் அழ வேண்டியதில்லை. எனது கண்கள் கண்ணீரால் நனைந்து அவரை நினைத்துத் துயரப்பட வேண்டியதில்லை.
அதாவது, பிரிவு காரணமாகவே இந்தக் கண்ணீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தோழர் வள்ளுவர் காதலின் ஆழத்தையும் பிரிவு ஏற்படுத்தும் வேதனையையும் நயமாகச் சொல்கிறார். காதல் எவ்வளவு தூய்மையானது, அதே நேரத்தில் எவ்வளவு வேதனையையும் தருகிறது என்பதையும் இக்குறட்பா விளக்குகிறது.
தோழர் வள்ளுவர் இக்குறட்பாவில் பிரிவால் உண்டாகும் உள்ளக் குழப்பத்தையும் அந்தக் குழப்பம் எவ்வாறு உடலின் வெளிப்படையான கூறுகளான கண்கள் வழியாக வெளிப்படுகிறது என்பதையும் நுட்பமான உளவியல் பார்வையில் வெளிப்படுத்தியுள்ளார். இந்தக் குறள் உணர்வின் ஆழத்தையும் அதன் உளவியல் தாக்கங்களையும் புலப்படுத்தும் ஆழமான கவிதையாக அமைந்துள்ளது.
“உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின்” எனத் தொடங்கும் வரி, நம்முடைய மனத்தின் இயல்பையும் அதன் வரம்புகளைப் பற்றியும் பேசுகின்றது. மனம் என்பது நினைவுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், கனவுகள் ஆகியவற்றால் நிரம்பியது. ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லக்கூடியது. காதலர் எங்கே இருக்கிறாரோ, அங்கே போய் அவருடன் இருப்பதற்காக ஏங்கும் இச்சை, மனத்தில் தாமே அவளிடம் இருப்பதாக எண்ணும் ஒரு மனப்பதிவை உருவாக்குகிறது.
இது உணர்ச்சிக் காட்சிப்படுத்தல் (Emotional visualization) என்ற உளவியல் செயல்முறையைச் சுட்டிக்காட்டுகிறது. நாம் நம் நலமற்ற உணர்வுகளை எதிர்கொள்ள கற்பனை உலகத்தை மனத்தில் படைத்துக் கொள்கிறோம். ஆனால், நம்முடைய கண்களால் அல்லது உடலாம் அப்படிச் செய்ய இயலாது. மனத்தின் வேகம் உடலுக்கில்லை என்பதில்தான் துயரத்தின் தீவிரம் உள்ளது.
“வெள்ளநீர் நீந்தல மன்னோ என் கண்” என்ற தொடர், ஒருவரின் உள்ளத்தில் ஏற்படும் வலி எவ்வாறு உடல் உறுப்புகள் வழியாக வெளிப்படுகின்றன என்பதற்கான சிறந்த சான்றாகிறது. காதலரின் பிரிவால், அவரிடம் சென்றடைய முடியாத அவலத்தில் மனம் தவிப்பதுபோல், கண்களும் தண்ணீராய் வழிகின்றன. இது உண்மையான உளவியல் நிலையைக் குறிக்கிறது. அதாவது மனத்தில் உருவாகும் வலிகள், உடலிலும் தாக்கங்களை ஏற்படுத்தும்.
அந்தக் கண்ணீரை ‘வெள்ளநீர்’ என்று அழைப்பதன் மூலம், தோழர் வள்ளுவர் அந்த அழுகை சாதாரணமாக இல்லாமல், வெள்ளம் போல் பெருக்கெடுத்து வரும் என்கிறார்.
இந்தக் குறள் மனத்தின் தனிமையை எடுத்துரைக்கிறது. காதலரை நினைத்தும் அவரிடம் செல்ல முடியாத சூழ்நிலை மனத்தில் மனச்சோர்வு, ஏக்கம் ஆகியனவற்றை உருவாக்குகிறது. இது, பிரிப்புக் கவலை (Separation Anxiety) எனும் உளவியல் நிலைக்கு ஒத்ததாகும். பாசம் கொண்ட நபரை விலக்கி வைத்திருக்கும் சூழ்நிலை, மனத்திற்குத் தாங்கமுடியாத பிணியாகிறது.
இந்தக் குறள், காதற்பிரிவால் ஏற்படும் உள்ளார்ந்த மன வேதனையை ஒரு பெரிய உளவியல் கோணத்தில் நமக்குத் திறந்து காட்டுகிறது. மனம் போவதைக் கட்டுப்படுத்த முடியாது; ஆனால், உடல் செல்ல முடியாத ஏக்கம் நம்மைக் கண்களால் அழ வைக்கும். இதுவே உணர்வுப் பிணைப்பு, எதிர்பார்ப்பு, ஏக்கம் மற்றும் துயரம் ஆகிய அனைத்தையும் ஒரே வடிவில் ஒன்றிணைக்கும் உளவியல் உண்மை.
– – –
