2.அம்மை பார்த்திருந்தாள் – நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் எழுதிய சிறுகதை தொகுப்பு அம்மை பார்த்திருந்தாள். இந்த சிறுகதைத் தொகுப்பினை தமிழினி பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. அட்டைப் படம் மஞ்சளில் அம்மன் மங்களகரமாக இருக்கிறாள். கைம்மா வேட்டுவன் என்ற தலைப்பில் முன்னுரையுடன் தொடங்குகிறது. வேட்டுவன் பாடல் வரிகளில் யானை வேட்டையும் களிறு என்ற யானையின் வேறு சொற்களும் வருகின்றன.

சவம் நினைத்து உரைத்தல் கதை கும்பமுனி கதை வரிசையில் உள்ள கதை. கும்பமுனி எழுத்தாளராக வருகிறார். கும்பமுனிக்கும் தவசி பிள்ளைக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் கதை. கதை சமகால அரசியலை பேசுகிறது. வயிறு குலுங்கி சிரிக்காமல் படிக்க முடியாது. இந்த கதையில் தவசி பிள்ளையை வெளுத்து வாங்குகிறார் கும்பமுனி. கதையில் சொற்கள் நட்சத்திரங்கள் போல் மின்னுகிறது. உதாரணமாக பனிரெண்டு பறவைகளின் பெயர்கள் வருவது சிறப்பு. அரசியல்வாதிகளின் கயமைகளை நகைச்சுவையாக கூறுகிறார். சமூகம் எழுத்தாளனை எவ்வாறு பார்க்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

முனகல் கண்ணி கதை கண்டங்கத்திரி பக்குவ படுத்துவதில் ஆரம்பிக்கிறது. கும்பமுனி தவசி பிள்ளை உரையாடல் வயிறு வலிக்க குலுங்கி சிரிக்க வைக்கிறது. எழுத்தாளர்களின்  சார்பு எழுத்துகளை பற்றி சாடுகிறார் கும்பமுனி.  எழுத்து அல்லாதவர்கள் போடும் சத்தமும் நடிப்பும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. கதையின் இறுதியில் எழுத்தாளர்க்கு கிடைக்கும் 10% தொகை என்பது ஆயிரம் பொற்காசில் ஒரு செப்பு காசு கொடுத்தது போன்று எழுத்தாளர்களின் ராயல்டி பித்தலாட்டத்தை முகத்தில் அறைவது  போல் கூறுகிறார்.

பிறன் பொருளைத் தன் பொருள் போல… கதையில் சுவரொட்டியில் என்னென்ன இருக்கும் என்பது பட்டியல் போடுகிறார். நாம் பார்த்த சுவரொட்டிகள் நினைவுக்கு வருகிறது. எளியவர்களின் எதிர்ப்புகள் யார் கண்களுக்கும் படாது. இந்த கதையில் வருபவனின் அறச் சீற்றம் கதை முழுவதும் வருகிறது. நாம் நடுவில் நின்று செல்ல எங்கும் சாய்ந்து விடாமல் இருக்க நம் சிந்தனையில் மாற்றத்தை கொடுக்கும் கதை. அரசியலுக்கு எதிராக அரசியலை அண்டி பிழைப்பவர்கள் மீது ஏற்படும் கோபமும் அமைதியும் நமக்கு தொற்றிக் கொள்கிறது. பிக்பாக்கட் அடிப்பவர்கள் மீது ஏற்படும் கருணையும் அன்பும் நம்மை கேள்வி எழுப்புகிறது. இறுதியில் தேநீர் குடிக்க காசில்லாமல் அலைவதில் கதை முடிகிறது.

பாவலர் தெங்கரைமுத்துப் பிள்ளை கதையில் தெங்கரை முத்து என்கிற புலவரின் பாடல் வரிகள் வந்து கொண்டே இருக்கிறது. பட்டம் பெறாதவர் பாடல் பாடுகிறார்கள் சொந்தமாக. கி.ரா. வின் வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும் கதைகளை உச்சிப் பேய்ச்சி கதை நினைவு படுத்துகிறது. கிராமத்து பெண்களின் இயல்பான உரையாடல் வழியே அவர்களின் அந்தரங்களை சொல்லிச் செல்கிறது. ஒரு சில பாடல்களை சிரிக்காமல் படிக்க முடியவில்லை.

ஓடும் செம்பொன்னும் கதையில் கும்பமுனி கொஞ்சம் சாவகாசமாக இருக்கிறார். தவிசியார் வந்து அருகில் அமர்ந்து கொள்கிறார். கும்பமுனியை டீவியில் பேட்டி கொடுக்க அழைக்கிறார்கள் மற்றும் பேங்க் லோன் கொடுக்க ஒரு பெண் கும்பமுனியை அழைக்கிறாள். வழக்கமாக நாம் தான் கோபம் கொள்வோம். ஆனால் கும்பமுனி தன் பாணியில் அந்த பெண்ணிடம் நையாண்டி பகடி செய்கிறார். அது அருமை. நமக்கு லோன் போன் வந்தால் சமாளிக்கலாம். எல்லா கதையிலும் கட்டன் சாயா ஒரு கதாபாத்திரம் போல் வருகிறது.

உண்டால் அம்ம! கதை. இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை. கதை முழுக்க அந்த கால பெரிசுகள் வாழ்ந்த வாழ்க்கையை விவரிக்கிறது. மதியானத்தில் சீட்டு விளையாடுவது சிறுவர்களிடம் காப்பி வாங்கி வர சொல்வது. தேநீர் கடையில் காலை கூட்டம் கூடுவது. கிராமத்து வாழ்க்கையில் உள்ளவர்கள் கொடுத்து வைத்தவர்கள். இருளப்ப பிள்ளையின் வாழ்க்கை மற்றும் கதை சொல்லி அப்பாவிற்கு உதவி செய்வது மிக எதார்த்தம்.  அனைவரும் முறைவைத்து பெரியப்பா மாமா என்று அழைத்து கொள்வது. ஒவ்வொருவருக்கும் பட்ட பெயர்கள் இருப்பது சுவாரசியம். கதை முழுக்க பாடல்கள் வருகிறது. இன்று நாம் பேச்சாக தான் பேச முடிகிறது. எந்த பாடலும் தெரியவில்லை. அன்று பாட்டாக பாடிக் கொண்டிருந்தனர். முக்கியமாக பக்தி பாடல்கள். வாரா வாரம் கோயிலுக்கு போவது. அவன் அப்பா இறந்த பிறகு இருளப்ப பிள்ளையை சந்திக்கிறான். அவன் அப்பா பட்ட கடனை நான் அடைக்கிறேன் என்று கூறுகிறான். உடன் இருளப்ப பிள்ளையின் எதிர்வினை கதையின் உச்சம். கண்கள் கலங்க வைக்கிறது. இப்படி பட்ட மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்.

அன்னக் கொடை கதை. அன்னக் கொடையின் நினைவுகளுடன் பல வருடங்களுக்கு பிறகு அன்னக் கொடைக்கு வருகிறான். அப்போது என்ன நடந்தது இப்போது என்ன நடக்கிறது என்பது கதை. கொடைக்கு ஊரே கூடியிருக்கிறது. ஒவ்வொரு கொடையின் போதும் ஒவ்வொரு சம்பவங்கள் நினைவில் தங்கிவிட்டது. கொடைக்கு அனைவரும் பொருள் கொடுக்க வேண்டும். ஊரில் இருந்தாலும் இல்லா விட்டாலும், அம்மன் தங்கள் மன ஆழத்தில் பதிந்து இருக்கிறாள். எண்ணற்ற தெய்வங்கள் வருகின்றன. ஊரை விட்டு பொழப்புக்காக  வேறு ஊர் சென்று விட்டால் ஒரு இடைவெளி வந்து விடுகிறது. கொடையின் போது ஊட்டு நிகழ்ச்சி நடக்கிறது. எல்லா வகையான அம்மன் பூசைகள் நடைபெறுகிறது. ஊரே சேர்ந்து உணவு ஊட்டுகிறது வெளியூர் மக்களுக்கு வழி போக்கர்களுக்கு விருந்தினர்களுக்கு. கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் அவசரமாக எல்லாவற்றையும் முடித்து கொண்டு கிளம்புவது இன்று வழக்கமாகி விட்டது. குளங்கள் மறைந்து  பூங்காவாகி விட்டது. பெரிய மைதானங்கள் பரப்பளவு சுருங்கி விட்டது. இது எங்கும் நடந்து கொண்டு இருக்கிறது. மறைவாக அருந்திய சாராயம் இப்போது பொது வெளியில் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. கொடையில் இருக்கும் உணவு வகைகள் ஒவ்வொரு பந்தியாக  நடைபெறுவது பல தெய்வங்களின் பெயர்கள் அறியமுடிகிறது. ஊரை விட்டு பிழைக்க போனவர்களின் ஏக்கங்கள் வெளிப்படுகிறது. இறுதியாக போன கொடை நிகழ்ச்சியில் உயிருடன் இருந்தவன் இந்த கொடைக்கு இல்லை. நாமும் இந்த கொடையில் கலந்து கொண்ட அனுபவத்தை இந்த கதையின் வாயிலாக பெறலாம்.

தற்குத்தறம் கதை. இக்கதை வெந்தயக் கொழுக்கட்டை மணத்தில் தொடங்குகிறது. கும்பமுனி உண்ட களைப்பில் அமர்ந்து இருக்கிறார். கும்பமுனியும் தவசியாரும் விவாதத்தில் இறங்குகிறார்கள். அதாவது பேச்சு வழக்கில் உள்ள வசைசொல் எழுத்தில் வேறு சொல்லாக ஏன் வருகிறது என்று தவசியார் கும்பமுனியிடம் கேட்கிறார். கும்ப முனியின் வழக்கமான பதில் நம்மை சிரிக்கவும் யோசிக்கவும் வைக்கிறது. சொற்களின் உபயோகத்தில் உள்ள வேறுபாடுகள் முரண்களாக இருக்கிறது. ஆண்பால் பெயர்கள், பெண்பால் பெயர்கள், பொது பெயர்கள் விவாதிப்பது அருமை.

அம்மை பார்த்திருந்தாள் கதை. இக்கதை ஒரு ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. ஏசுவடியான் மாதா கோயிலுக்கு பால் வாங்க போகிறான் நினைத்தவை நடக்க. அவனை பார்த்த சுப்பையாவிற்கும் பால் வாங்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. பால் கிடைத்தால் அதிலிருந்து தேநீர் மற்றும் கட்டி தயிர் சாப்பிடலாம் என்ற ஆவல். ஒரு மூடியில்லாத  தூக்கு வாளியில் வாங்க செல்கிறான். அவன் யாரென்று கண்டு கொண்டவர்கள் அவனை ஏளன படுத்துகிறார்கள். அவனுடன் படிக்கும் பெண் பிள்ளை பார்க்கிறது. அவன் அவமானத்தால் தலையை தொங்க போட்டு கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. இதனை ஒழுங்குபடுத்தும் சாலமன் பார்த்து விடுகிறான். அவர்களை ஏசுகிறான். மனிதம் எங்கும் உள்ளது. சுப்பையாவிற்கு அவன் வாளி நிறைய பால் வாங்கி கொடுக்கிறான். இருந்தாலும் அவமானத்துடன் வீட்டிற்கு செல்கிறான் சுப்பையா. வழியில் படித்துறையில் இவன் மாதா கோயிலில் இருந்து பால் வாங்கி கொண்டு வந்ததை பார்த்தவர்கள் அவனை அவமானப்படுத்தி ஏசுகிறார்கள். அவன் கையில் இருந்த பாலை ஆற்றில் கொட்டுகிறார்கள். மனிதர்களின் வேறுபாடுகளை  பற்றி  பேசுகிறது கதை. சுப்பையா வெறும் வாளியுடன் வீடு திரும்புகிறான். கதையில் விதமான உணவு பதார்த்தங்கள் வருகிறது. படிக்க படிக்க நமக்கு சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த கதை மனதை கனக்க செய்கிறது.

அங்காடி நாய் கதை. இந்த கதையில் கும்பமுனி புறநானூற்று பாடல் பாடி முடித்து விட்டு உரையை கண்டு கோபம் கொள்வதில் ஆரம்பிக்கிறது. பின்பு வழக்கமாக சொற்கள் விளையாட்டில் இறங்கி விடுகிறார். ஐந்து கேள்வியுடன் பேட்டி கேட்டு கமண்டலம் இதழில் இருந்து போன் வருகிறது கும்பமுனிக்கு. பெருமாள் கோயில் சென்ற தவசி பிள்ளை அரவணை மற்றும் மிளகு வடையுடன் வருவதை கும்பமுனி ஆவலாக பார்க்கிறார். சாப்பிட்டு விட்டு கும்பமுனி கமண்டலம் இதழில் இருந்து கேட்ட ஏடா கூடமான கேள்விக்கு  பகடியுடனும் கோபமுடனும் பதில் கூறுகிறார். எழுத்தாளரிடம் மட்டும் எல்லா கேள்வியும் கேட்கலாம் எந்த தயக்கமும் இருக்காது என்பதை கும்பமுனி வெளுத்து வாங்குகிறார். தவசி பிள்ளை பரிகாசம் செய்கிறார்.

இந்த தொகுப்பில் உள்ள கதையில் ஐயா நாஞ்சில் நாடன் அவர்கள் சமுதாயத்தின் மீது கொண்ட அதீதமான பற்றால் அதில் உள்ள ஏற்றதாழ்வுகள், மொழியின் மீது மக்களுக்கு இருக்கும் அலட்சியம், அரசியல் என்றாலே பொய்யும் புரட்டும் வஞ்சகமும், புத்தகத்தின் மீதும் எழுத்தாளர்கள் மீதும் சமுதாயம் பார்க்கும் பார்வை பற்றி அழுத்தமாகவும் பகடியாகவும் தன் கதைகள் மூலம் சொல்கிறார். முக்கியமாக கும்பமுனி தவசிபிள்ளை கதாபாத்திரங்கள் வழியே இன்றைய சூழ்நிலைகளை எல்லா திசைகளிலும் நின்று பேசுகிறார் ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *