5.சதுரங்கக்குதிரை : ஒரு வாசிப்பு அனுபவம்

 

                                             

தி.ஜா, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, சாரு இவர்கள் டெல்லியை தங்கள் நாவலில் ஒரு கதை மாந்தராக அறிமுகப் படுத்தியிருப்பார்கள். அவர்களுக்கு நிகராக அன்றைய பாம்பே பற்றி எழுதிய ஒரே தமிழ் எழுத்தாளர் நாஞ்சில் நாடனே. 

தன் பூர்விகப் பிரதேசத்தை புனைப்பெயராக சூடிக்கொண்ட சுப்பிரமணியம் என்கிற நாஞ்சில் நாடனின்  தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை வெயில் காயும், மாமிசப்படைப்பு, மிதவை க்குப் பிறகான ஐந்தாவது நாவல் சதுரங்கக் குதிரை.

1993  ல் எழுதிய நாவல்அந்த  ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசின் முதல் பரிசும், புதிய பார்வை-நீலமலைத் தமிழ்ச் சங்கம் பரிசும் பெற்றது. நகுலனுக்கு சமர்ப்பிக்கப்படுள்ளது.

அவர் தன் நாவல் முயற்சிக்கு,

.வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்

பாற எறிந்த பரிசயத்தால் – தேறாது

திங்கள் மேல் நீட்டும் தன் கை.

என்ற முத்தொள்LAயிரப் பாடலினை உதாரணம் காட்டுகிறார் . கிட்டதட்ட அந்த யானையின் நிலைதான் எனக்கும். . திங்கள் மீது கைநீட்டும் முயற்சி. முயற்சி கூடுமா கூடாதா எனபதல்ல. முயற்சி முக்கியம். இந்நாவலை வாசித்து முடித்த பின் அவர் திங்களைத் தொட்டுவிட்டார் என்று தோன்றுகிறது.

புலி மீது சவாரி செய்ய நினைத்து புலியின் வயிற்றில் சங்கமாகி விடுகிற துயரம். ஒவ்வொரு நாவலையும் எழுதி முடிக்கும் போது இதுவே நிகழ்ந்து விடுகிறது என்று அவர் சொன்னாலும் தமிழ் இலக்கியப்புலி அவரை  தன் முதுகாசனத்தில் அமர்த்தி அழகு பார்த்தது என்றே சொல்லலாம்.

எண்பதுகளில் இலக்கிய பத்திரிக்கையோ, ஜனரஞ்ச பத்திரிக்கையோ எதுவாக இருந்தாலும் அதன் மையச்சரடு வயதேறியும் திருமணமாகாப் பெண்ணை முதிர்கன்னி என விளித்து கவிதையோ,சிறுகதையோ, நாவலோ படைக்கும் ஒரு விசித்திர போக்கு இருந்ததது. ஆனால் அந்த காலகட்டத்தில் வயதாகியும் திருமணம் ஆகாத  முதிர்கண்ணனைப் பற்றி எழுதிய மிகச்சிலரில் இவரும் ஒருவர்.

அப்பா, அம்மா இல்லாத நாராயணன் எனும் இளைஞன் தன் வாழ்விடம் நீங்கி வேலை நிமித்தம் பாம்பே எனும் அந்நிய நிலத்திற்குள் ஒரு போன்சாய் மரம் போல் வேர்மண்ணின்றி , கையடக்க இடத்தில் வாழ்வதையும், அலைந்து திரியும் ஒரு விற்பனை பிரதிநிதி  வேலையையும் ,  அந்தத் தனிமை வாழ்வின் அவலங்களையும் பகடியுடன் சொல்லும் தன் விவரக்குறிப்பு போன்ற சாயலில் தோன்றும் கதையே சதுரங்கக் குதிரை.

”ஒரு புஸ்தகம் கொஞ்சம் புதுசா இருக்கு .படமெல்லாம் கொள்ளாம்” 

பழைய புத்தகக்காரர் இவனிடம் சொல்கிறார். நாற்பத்தைந்து வயதாகியும் திருமணம் செய்யாத்  தனிமை இரவுகளின் தவிப்புகளை தணிக்க இவன் கைக்கொள்ளும் முயற்சியே படம் போட்டஅந்த  புத்தகங்கள்.

மூன்று செட் பனியன்,ஜட்டி,கர்சீப், சாக்ஸ், ஒரு லுங்கி, ஒரு துண்டு, விரிப்பு, போர்வை, தலையணை உறையுடன், பேண்ட்டும் ஷர்ட்டும் ஆறேழு ஜோடிகள், பேனா, பைஃபோகல் கண்ணாடி, பெல்ட், ஒரு ஜோடி ஷூ, தோல் செருப்பு, மழைக்கால சாண்டாக், மடக்கு குடை, அட்ரஸ் டெலிஃபோன் எண்கள் கொண்ட டயரி, கல்விச்சான்றிதழ்கள், ரேஷன் கர்டு, பாஸ்போர்ட், இந்தியன் வங்கியின் சேமிப்பு கணக்குப் புத்தகம். கொஞ்சம் பங்குகள், யூனிட் ட்ரஸ்ட் பத்திரங்கள், எல்.ஐ.சி. பாலிசி இரண்டு.

இவைகளே அந்த ஒற்றை மனிதனின் ஆஸ்திகளெனக் கொண்டால் ஒரு    கைரிக்‌ஷாவில் ஏற்றிவிடலாம். பொருள் சூழா உலகில் பொருளற்ற வாழ்க்கை.

அப்பா இறந்து போவதற்கு முன்பாக ஒரு நாள் பின்னிரவில் கொண்ட உடலுறவின் தற்செயல் விளைவு. அம்மாவின் மாதவிலக்கு நின்று போவதற்கான அறிகுறிகள் தோன்றிய போது கொண்ட சூழ். அது வரை வாய்க்காத மணி வயிறு ரிஷி வரம் போல் ஏன் வாய்த்தது என்று தெரியவில்லை. தன் பிறப்பு குறித்த நாரயணனின் சுயபரிசீலனை.

அத்தைக்கு இவனைப் பிடிக்காது. பட்டப் படிப்பென்ற மலைலயுச்சியில் மரண பயம் ஏற்படுத்தும் பாறைபிளவில் நின்ற நெல்லி மரத்தின் கனியானது தன் மகனுக்கு கிடைக்காமல் இவனுக்குக் கிடைத்ததால் இவன் மீது கசப்பு ஏற்பட்டிருக்கலாம். 

அத்தையின் கோபத்தை புரிந்து கொண்டாலும் நெல்லிக்கனி தின்றவன் எல்லாம் ஜீரணமும் ஆகாமல் வாந்தியும் செய்ய முடியாமல் திணறுவது  அத்தைக்கு அர்த்தமாகாது என்ற நடைமுறையையும் சொல்கிறார். 

நாஞ்சில்நாடன்  எழுத்தில் எப்போதுமே ஒரு  specification இருக்கும்.  அதுவே அவரது தனித்துவம். ஒரு வாழைப்பழத்தைச் சொல்லவேண்டுமென்றாலும்  அது பாளையங்கோட்டான், ரசகதலி, சிங்கன், வெள்ளைத்துளுவன்,செந்துளுவன் இதில் எந்த வகையில் சேர்ந்தது என்றே சொல்வார். .

பகடியை கிச்சுகிச்சுமூட்டும் ஒரு மயிலிறகு புன்னகையாக மட்டுமல்லாமல் ஓர் ஆயுதமாகவும் பயன்படுத்தத் தெரிந்தவர். ஜெனரல் கோச் என்றால் ரயில்வே நிர்வாகத்திற்கு ஏகப்பட்ட மரியாதை. பலகையிலான இருக்கைகள், மூட முடியாத அல்லது மூடமுடியாத ஜன்னல்கள், தண்ணீர் இல்லாத, மலமூத்திர நாற்றம் பெருக்கும் பாத்ரூம், யுகங்களாய் கூட்டாத குப்பைகள். நாதியற்ற சனங்கள். கேவலப்படுத்தலாம்தான்.

அம்மா இறந்த போது கைகாசு புரட்டி பாம்பேயிலிருந்து ரயில், பஸ் பிடித்து ஊர் வந்து சேரும்முன் எவரோ வைத்த கொள்ளிக்கு அம்மா தன் உடலை கொடுத்திருந்தார்.

இப்படித்தான் எத்தனை அன்னையின் உடல், எவரோ வைத்த நெருப்புக்கு எரிந்திருக்கும்;. நினைவுக்குக்கூட அம்மாவின் ஒரு புகைப்படம்  இல்லை. முகம் நினைவு வைத்து வரைய அக்கம்பக்கத்தில் எவனும் ஓவியனில்லை.

இருபத்தேழு வயதில் கல்யாணம் ஆகியிருந்தால் வாழ்க்கை இத்தனை ஆத்தலாக இருக்காது. பிடுங்கல்கள் இடுக்கும். போதாமைகள் இருக்கும். முதுமை சற்று விரைவில் ஓடி வருவதாக இருக்கும். காசு சேர்க்கும் பதற்றம் அதிகமாக இருக்கும். வீடு வாங்கும், டி.வி.வாங்கும், ஃப்ரிஜ் வாங்கும் ஆவேசங்கள் இருக்கும். சொந்த்தக்காரர்கலிடம் கூடுதல் மரியாதை இருக்கும்..

ஆனால் இந்த சுதந்திரம் இருக்குமா? இது சுதந்திரமா அல்லது தனக்குத் தான் சொல்லிக்கொள்ளும் சாக்குப் போக்கா?

அக்னி தகிக்கும் நாரயணனின் பாலைவன யாத்திரை வாழ்க்கையில் ஓயாசிஸ்களாக சிலர் . சலாவுதீன். குட்டினோ, ராவ்.

சலாவுதீன் இருப்பிடத்திற்கு  நிறையப் பணம் இருக்கும் போதும் போகலாம். பை சுத்தமாக காலியாக இருக்கும் போது போகலாம். உற்சாகமாக இருக்கும் போது மட்டுமல்ல.. தற்கொலை செய்யும் கணந்த்துக்கு முந்திய கணத்திலும் போகலாம். அவரிடமுள்ள எந்தப் பொருளையும் “ இது நல்ல இருக்குன்னு” என்று சொல்லி விடக்கூடாது. “எடுத்துக் கொண்டு போ: என்று சொல்வார். அது உபசாரத்துக்கு சொலவதல்ல.

குட்டினோ சொல்வான்” உனக்கு இப்போது நாற்பத்தி ஐந்து வயதுதானே ஆகிறது. இன்னும் சில ஆண்டுகள் ஆகட்டும். சித்ரவதை மேலும் கம்பீரமாக இருக்கும். வாழ்க்கை யாருக்காவது உபயோகமானதாக இருக்க வேண்டும். மண்ணில் கவிழ்த்த கள்ளுப் பானையாக இருக்கக்கூடாது.”

ராவ் சொன்னார். மூணு லட்சம் ரூபா ரெடிபண்ணு. என் போரிவிலி ஃப்ளாட்டை டிஸ்போஸ் பண்ணப் பேறேன்.அதை உனக்கே ரிஜிஸ்டர் பண்ணி தர்றேன். ஒரு கட்டில் வாங்கு.டேபிள்,சேர் வாங்கு. கேஸுக்கு அப்ளை பண்ணு. ஒரு குக்கர், சில பாத்திரங்கள் வாங்கு.சாயங்காலம் ஒரு வேளை சமைச்சு சாப்பிடு. எந்த உதவி வேண்டுமென்றாலும் சங்கோஜப் படாமக் கேட்டுக்கோ.

இம்மூவருமே அவனது வாழ்க்கை யுத்தத்தின் மூன்று பிதாமகர்கள்.

பையன் கிரீவ்ஸ் காட்டன்ல ஜோலியா இருக்கான். இருப்பது அந்தேரி வெஸ்ட்ல. ஒரே பொண்ணு முலண்டில இருக்கா. மாமி போய்ச்சேர்ந்தாச்சு. பென்ஷன் வருது. பாவுதாஜி ரோட்ல பிளாட்ஸ் இருக்கு. மூணு பிராம்மணப் பசங்க பேயிங்க் கெஸ்ட்டா இருக்கா..போயிண்டிருக்கு..

கிட்டத்தட்ட எல்லாக் கிழவர்களிடமும் இதே போல் சொல்ல ஒரு கதை இருக்கிறது. 

இது ஒரு காத்திருப்பு. என்று வரும் என்று தெரியாத வண்டிக்காக.. யாருமில்லாத ஸ்டேஷனில் காத்திருப்பு. பக்த சமாஜம், ராமநவமிக் கொண்டாட்டம், புராணப்பிரசங்கங்கள் எல்லாம் சாவுக்காக காத்திருப்பவர்களுக்காவா? 

வாழ்க்கை வானவில்லற்றுப் போயிற்று . 

ஆனாலும் அது பொய்க்கும் வண்ணம்  சிலசமயம் திடீர் வானவில் ஒன்றிரண்டும்  வருவதுண்டு. அப்படித்தான் ஒரு முறை  ஃபேக்டரியிலிருந்து நடந்து போகும்போது  கரும்பு வண்டியின் மேலமர்ந்து, கரும்பைக் கடித்துத் துப்பிக்கொண்டே போன பதினான்கு வயதுப் பெண், கால் முட்டியில் வைத்து ஒடித்து மறுபாதிக் கரும்பை அவனை நோக்கி வீசி எறிந்த கணம் வாழ்க்கையை சுவாரசியமுள்ளாதாக்கி விட்டுப் போனது

பல சமயம் தோன்றுவதுண்டு.அணிந்த ஒரு சோடி ஆடை,  மாற்றிக்கொள்ள ஒரு சோடி, ஒரு துவர்த்து,  ஒரு போர்வை, கொஞ்சம் பணம். ஊர் ஊராக சுற்றி வரவேண்டும். பஸ்நிலையங்களீல், ரயில்வேஸ்டேஷன்களில் இரவுகளைக் கழித்து.

ஆனால் என்றும் அந்த தைர்யம் வருவதில்லை.ராதா. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவள். நாவலின் கடைசி பக்கத்திற்கு முன் பக்கத்தில் நாராயணனிடம் ஒரு சின்ன சுடரைத் தூண்டுகிறாள். அந்த தைர்யத்தில் கேட்கிறான். திங்கட்கிழமை ஆர்ட் கேலரிக்கு வரமுடியுமா? திங்கட்கிழமை  ராதா அலுவலகம் வந்திருந்தாள். ஆனால் ஆர்ட் காலரிக்கு வரவில்லை. அவளுக்கு அநேக காரணங்கள் இருக்கலாம். எதை என்று கேட்பது என்று தோன்றியது நாரயணனுக்கு. 

இதுதான் நாராயணன்.  சதுரங்க ஆட்டத்தில் எதிபாராத் தருணத்தில் தாக்கி checkmate   செய்யும் குதிரையென வாழ்க்கை இருப்பதை இந்த நாராயணனால் எவ்விதம் தடுக்க முடியும் அல்லது தற்காத்துக் கொள்ளமுடியும்.

இதென்ன அர்த்தமற்ற வாழ்க்கை? அம்மா இருந்த போதும் இல்லாத போதும் துரத்திக் கொண்டு வரும் ஒரு அநாதை உணர்வு. 

பிரவாகங்களுக்கு இடையிலான தனியன்.

ஆம். 

Gabriel Garcia Marquez ன் நூற்றாண்டுத்தனிமைக்கு நிகரானது அல்லவா நாராயணனின்  நாற்பத்தைந்து ஆண்டுத் தனிமை.

                                                        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *