
எழுத்தாளர் ஆர். வெங்கடேஷ் எழுதிய இந்த நாவல் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் திட்டமிட்ட நாள்களைவிட (எட்டு) மிகக்கூடுதலான நாள்கள் (286) தங்க நேர்ந்துவிட்ட நிகழ் வரலாற்றை மையமாகக்கொண்டு அதிஅறிவியல்தொழில்நுட்பத்துக்கும் ஆன்மிக உயர்நிலைக்கும் இடையே ஊடாடும் மனிதர்களின் செயற்திறன்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் பூமி எவ்வளவு சிறியதோ அதேபோலத்தான் மனிதன் இந்தப் பூமியில் மிக மிகச் சிறியவன். அந்த மீச்சிறு மனிதனின் பிரபஞ்சத்தை நோக்கிய பாய்ச்சல் என்பது அதிகனவுகளை நிஜமாக்கும் விந்தைதான். அந்த விந்தையில் எண்ணற்ற சறுக்கல்கள் இருக்கத்தான் செய்யும். அவற்றை எதிர்கொள்வதும் அவற்றின் வழியாக உயிர்த்திருப்பதும் ஒரு சாதனைதான் என்பதே இந்த நாவல் நமக்கு உணர்த்துகிறது.
அறிவியலுக்கும் ஆன்மிகத்துக்கும் இடையிலான நூலிழையிடைவெளியைப் பற்றி இந்த நாவல் விரித்துரைப்பதால் இதனை ‘நிகழ்வரலாற்று நாவல்’ என்பதிலிருந்து உயர்த்தி ‘மெய்யியல் நாவல்’ என்றே கருதத்தோன்றுகிறது.
வீரதீரச் செயல்களைப் பற்றிய வெளிநாட்டுத் திரைப்படங்கள் பார்வையாளரை இருக்கையின் நுனிக்குத் தள்ளிவிடும். அந்த வகையில் இந்த நாவல் மிக சுவாரஸ்யமாகவும் புரிந்துகொள்ளத் தக்க மிகுதியான அறிவியல் தகவல்களுடனும் உள்ளது.
இந்த நாவலின் பலமே கதையைக் (வரலாற்றைக்) கூறும் விதம்தான். சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் அவர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியவர் ஆகியோரின் பார்வையில் மாறி மாறி நாவலின் கதை நகர்கிறது. இந்த மூவரின் வழியாகவும் பிறரைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்ள முடிகிறது. அந்த வகையில் இந்த நாவலின் கட்டுமானம் வலிமையாகவும் நளினமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நாவலில் அறிவியல் பேசப்படும் அளவிற்கு ஆன்மிகமும் பேசப்பட்டுள்ளது. ‘அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றையொன்று உரசிச் செல்லும் அந்தக் கூர் விளிம்பிலிருந்தே மனித சாதனை மதிப்பிடப்படவேண்டும்’ என்று கருதுகிறேன். காரணம் அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. அவை ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போன்றவை. ஒன்றிலிருந்து மற்றறொன்றுச் செல்ல மனிதன் அந்த நாணயத்தின் ஒரு விளிம்பினைக் கடந்து ஆன்மிகத்துக்குச் செல்லவும் மறு விளிம்பினைக் கடந்து அறிவியலுக்குச் செல்லவும் அவனுக்கு அறிவியலும் ஆன்மிகமும் உதவ வேண்டும். அறிவியல் இல்லாத ஆன்மிகம் உணர்வற்றது. ஆன்மிகம் இல்லாத அறிவியல் வளர்ச்சியற்றது.
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரின் மனவோட்டமே இந்த நாவலில் எனக்கு மிகவும் முக்கியமானதாகப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக அவர்களின் ரத்த உறவினர்களின் மனம்படும்பாடும் அவர்கள் இவர்களுக்கு அளிக்கும் சொல்லூக்கமும் மிக முக்கியமானதாகவே நான் கருதுகிறேன்.
இவற்றுக்கு இடைவெட்டாகவும் அடிப்படையாகவும் நிலவிய அந்த நாட்டு அரசியல்சூழல், நிதிஆதாரங்கள், அரசு-தனியார் நிறுவனப் போட்டிகள் ஆகியன வாசகரின் நெஞ்சைப் பதற வைக்கின்றன.
இவற்றுக்கு எல்லாம் மேலானதாக நான் கருதுவது, பொதுமக்களின் மனநிலை.
“பூமி தன்னைத்தானே முதலில் சுற்றிக்கொண்டு, அதன் பின்னர், தன்னைவிட ஆற்றல் மிக்க சூரியனை மட்டும் சுற்றி வருகிறது. மனிதர்களும் அப்படித்தான். தங்களைப் பற்றித்தான் முதலில் நினைப்பார்கள். அடுத்ததாக, தங்களைவிட வலிமையானவர்களை, தங்களுக்குப் பயன் தரக்கூடியவர்களைப் பற்றித்தான் யோசிப்பார்கள். இவற்றுக்கிடையே மற்றவர்களைக் கவனிக்க அவர்களுக்கு ஏது நேரம்?” என்று பொதுமக்களின் பொதுப்புத்தியை மிக அழகாக வரையறுத்துள்ளார் எழுத்தாளர் ஆர். வெங்கடேஷ்.
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மிகக்கூடுதலான நாள்கள் தங்கியிருந்து தவித்த துயரினை எவ்வாறு அவர்களும் பிறரும் புறந்தள்ள வேண்டும் என்பதனை, “இந்த வருத்தங்களும் குறைகளும் நீண்டகாலம் நீடிக்காது. அவற்றுக்கெல்லாம் ஒரு மாற்று உண்டு. அந்த மாற்று அல்லது தீர்வு வரும்வரைதான் அவை ஒரு பிரச்சினையாக இருக்கும். ஆனால், மாற்று கிடைத்த பின்னர் அப்படி ஒரு பிரச்சினை இருந்ததா, வருத்தம் இருந்ததா என்றே ஞாபகம் இருக்காது” என்ற ஆறுதலான சொற்களின் வழியாக மறைமுகமாக வாசகருக்கு அறிவுரை பகன்றுள்ளார் எழுத்தாளர் ஆர். வெங்கடேஷ்.
தமிழ்ப் பதிப்புச் சூழலில் போலிநூல்கள் மலிந்துவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் கருத்து, எழுத்து, இலக்கணம் சார்ந்த எப்பிழையுமின்றி ஒரு நூல் வெளிவருவதென்பது பதிப்பகத்தின் சாதனைதானே! அந்த வகையில் ‘சுவாசம் பதிப்பகம்’ பாராட்டத்தக்கது.
ஒட்டுமொத்தத்தில் ‘நிகழ் வரலாறு, நாவலாகிய அதிசயம்’ இந்த நாவலின் வழியாக சாத்தியமாகியுள்ளது என்பேன்.
(ஆர். வெங்கடேஷ், பதினாறு சூரிய உதயங்கள் (நாவல்), சுவாசம் பதிப்பகம், சென்னை, பக்கங்கள் – 176, விலை – 200.00)
– – –
