ஸ்ரீமான் கு.பால்வண்ணம் பிள்ளையின் பூர்வாங்க சரித்திரம்

1.நுான்முகம்

ஆம். என் பெயர் ஸ்ரீமான் கு. பால்வண்ணம் பிள்ளை. அப்பாவின் பெயர் பிரம்ம ஸ்ரீ குற்றாலிங்கம் பிள்ளை. சாமியா பிள்ளை என்று தெருவிற்குள் கூப்பிடுவார்கள். அப்பாவின் அப்பா பெயர் பால்வண்ணம் பிள்ளை.  அவரின் அப்பா பெயர் குற்றாலிங்கம் பிள்ளை. இப்படியே ஐந்தாறு தலைமுறைகளாக பால்வண்ணம் பிள்ளை, குற்றாலிங்கம் பிள்ளை என்கிற பெயர்கள் எங்கள் குடும்பத்தில் இருந்து வருகின்றன.

அப்பாவின் அப்பாவிற்கு  எட்டு ஆணும் நான்கு பெண்ணும் என பன்னிரெண்டு குழந்தைகள். அவர்கள் இன்று நாற்பெத்தெட்டு குடும்பங்களாக இந்தியாவெங்கும் பரவியிருக்கிறார்கள்.  நாற்பெத்தெட்டு குடும்பங்களிலும் ஏதாவது ஒரு பால்வண்ணனோ அல்லது குற்றாலிங்கமோ இப்போதும் பிறந்து  அம்மாவிற்காக அழுது அடம்பிடிப்பதைப் பார்க்கலாம்.  பெண்குழந்தைகளில் வீர என்கிற முன்னொட்டு உள்ள பெயர்கள். வீர லெட்சுமி, வீர ஜோதி என்பது மாதிரி. குடும்ப முன்னோர்களில் யாரோ ஒரு பால்வண்ணம் பிள்ளையோ அல்லது குற்றாலிங்கமோ பெரும் செல்வத்தை ஈட்டி குடும்பத்தை நிலை நிறுத்தியிருக்கிறார்கள். பண்ணையம் பார்த்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பெரிய சித்த வைத்தியர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இரண்டு மூன்று ஜமீன்களோடு அவருக்கு தொடர்புகள் இருந்திருக்கின்றன. அடிமுறை ஆசானாகவும் புகழ் பெற்றிருக்கிறார். தனி ஒரு மனிதராக அவர் இங்கே பிழைப்புத் தேடிவந்து ஐந்நுாறு தலைக்கட்டுகள் கொண்ட சமுதாயமாக எங்கள் இனக்குழுவினை உருவாக்கியிருக்கிறார். என் முன்னோர்களின் பெயர்கள் எங்கள் இனக்குழுவிற்குள் வியப்பும் மரியாதையும் கலந்த எண்ணங்களோடு இப்போதும் நினைவு கூரப்படுகின்றன.

ஸ்ரீமான் என்கிற முன்னொட்டும், பிள்ளை என்கிற பின்னொட்டும் உங்களுக்கு அசூசையை அளித்திருக்கக்கூடும். இந்தக்காலத்தில் இப்படியா என்று தோன்றக்கூடும். நீங்கள் நினைப்பதைப் போல இதில் இனப்பெருமிதம் ஏதும் இல்லை. பண்பாட்டு உச்சங்கள் நீண்ட காலமாக பொருளியலில் வெற்றி கண்ட இனக்குழுக்களுக்கு உரியவைதான் என்றாலும் என் பெயரின் முன்னொட்டு பின்னொட்டுக்கான காரணங்கள் வேறு. தமிழகத்தை ஐம்பதாண்டுகளுக்கு மேலாக சீரழித்துவரும் ஒரு அரசியல் கொள்கையின் மீது கடும் ஒவ்வாமையும் விமர்சனமும் எனக்கிருந்ததால், அக்கட்சி அரசியலை எதிர்க்கும் எண்ணத்தோடு நான் வைத்துக்கொண்ட பெயர்தான் ஸ்ரீமான் பால்வண்ணம் பிள்ளை என்பது. பொதுவில் சாதிப்பெயரை ஒளித்து வைத்து மனம் முழுக்க மனிதர்களை சாதிகளின் உருவங்களாக மதிப்பிடும் மனங்கள் கொண்டவர்கள்தான் நாம்.  புரட்சிகர சிந்தனையாளர்கள் என்ற சுய ஏமாற்றினைச் சுட்டிக்காட்டும் ஒரு விழைவு. அரசாங்க கெஜெட்டில் அப்பா எனக்கிட்ட பெயரோடு முன்னொட்டு பின்னொட்டுச் சேர்த்து பெயர் மாற்றம் செய்துவிட்டேன். தீவிர நவீன தமிழ் இலக்கிய வாசகராக ஒருவேளை இருக்கக்கூடும் என்றால் புதுமைப்பித்தனின் நினைவு உங்களுக்கு வந்து போகலாம். பால்வண்ணம் பிள்ளையை பிரபலமாக்கியதில் புதுமைப்பித்தனுக்கு முக்கியப் பங்குண்டு.

நாராயண குரு தெருவில் எட்டாவது கதவிலக்கம் கொண்டுள்ள வீட்டிற்கு வந்தால் நீங்கள் என்னைப் பார்க்கலாம். தெருப்பெயராக மட்டுமல்ல என் வீட்டிலும் நாராயண குருவின் படம் உண்டு. சைக்கிள் ஊதுபத்தி சதா அவர் படத்தின் முன் புகைந்து ஒற்றை நேர்க்கோடாக வான்நோக்கி சென்று மறைவதை நல்ல வாசனையோடு அனுபவிக்கலாம்.  என்னைச் செல்லமாக சுவர்முட்டி பாலு என்று கூப்பிடுவார்கள். நெருங்கிய நண்பர்கள் மத்தியில் பாட்டில் முட்டி பாலு என்கிற ரகசியப் பெயரும் உண்டு. இரண்டும் காரணப்பெயர்கள்.

நான்காண்டுகளுக்கு முன்னர்தான் சொந்தமாக வீடு கட்டினேன். பத்துக்கு பத்து கொண்ட இரண்டு அறைகள். ஒன்றில் குடும்பம் நடத்தவும் மற்றொன்றில் சமையல் செய்யவும். அரசின் நிதி உதவி கிடைத்திருக்காவிட்டால் இந்த வீடும் சாத்தியமாகி இருக்காது. மொட்டை மாடியில் சின்டெக்ஸ்  தண்ணீர் தேக்கம் போக ஒரு தகரச்  செட்டு. நண்பர்கள் சீட்டு விளையாடவும், விச்ராந்தியாக மது அருந்தி மகிழ்ந்திருக்கவும். தெரு முற்றத்தை அடைத்து உயரமான படிக்கட்டுகள். அதையொட்டி சிறிய அறை ஒன்றும் உபரியாக. அவ்வறையை ஒரு பலசரக்குக் கடைக்கு வாடகைக்கு விட்டுள்ளேன். வீடு கட்டிய கடன்பணத்திற்கு வட்டித்தொகைக்கு  மாற்று ஏற்பாடு. நாராயணகுரு தெருவில்  நான்குதலைமுறைகளாக வாழ்ந்து வருகிறோம். முன்பு ஒரு காலத்தில் தெருவிற்கு வேறு ஒரு பெயர் இருந்திருக்கிறது. கூட்டமாக குடியேறி- அப்போது ஓடைத்தெருவிற்கு வடக்கே வரை வயல்வெளி. முந்தல் மலையில் இருந்து கிளைபிரிந்த ஓடை ஒன்று சிதம்பரப்பேரி ஏரி வரை நீண்டு செல்லக்கூடியது. அதுதான் ஊரை இரண்டாகப் பிரித்தது. ஓடைக்கு தெற்கே நாடார்கள் வந்து குடியேறினார்கள். ஓடைக்கு மேற்கே இஸ்லாமியர்கள். கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை எங்கள் ஊரை இரண்டாகப் பிரிக்கிறது. ஊருக்கு மத்தியில் அடுத்தடுத்து மூன்று தெருக்களில் ஒரே இனக்குழுக்கள் குடியேறியதனால் அது நாராயணகுரு தெரு வடக்கு, நடு, தெற்குத் தெருக்கள் என்றானது. என் பேரப்பிள்ளைகளின் காலத்தில் தெருவின் பெயர் வேறொன்றாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது. முக்கால்வாசி வீடுகள் இஸ்லாமியர்களுக்கு விற்பனையாகி விட்டது. தீப்பெட்டிக்களைப் போல நெருக்கு அடித்துக்கொண்டு பிறைநிலாக்களைச் சூடிய பாய்மார்களின் புதிய வீடுகள் தெரு முழுக்க. நாளையே நாராயண குரு தெரு என்பது ஐந்து வண்ணம் தெரு என்றோ ஆசாத் நகர் என்றோ மாற்றி எழுதப்படலாம்.

அப்பாவிற்கு காந்தி பஜாரில் ஜவுளி வியாபாரம். காந்தி பஜாரே ஒரு காலத்தில் எங்கள் குடும்பச் சொத்துதான். தாத்தா பால்வண்ணம் பிள்ளைக்கு நவ்வாச்சாலையில்  ஏக்கர் கணக்கில் புன்செய் நிலங்கள். வீடு நிறைய நெல் மூட்டைகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும். தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் அன்றாடச் சமையலுக்குப் போக மீதம் சந்தைகளில் கூறு கட்டி விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். வைக்கோல் படப்புகளும் அவற்றை ஒட்டிய தொழுவுகளும், அவற்றில் தகிப்பாறி அசைபோடும் ஆவினங்களின் கழுத்து மணிக்குலுங்கல்களும் என் பால்ய காலத்து நினைவுகள்.

ஈழுவர், இல்லத்தார், இல்லத்துப் பிள்ளைமார் என்றெல்லாம் அழைக்கப்படும் இனக்குழுவில், பள்ளி இல்லம், மூட்டு இல்லம், தோரணத்து இல்லம், மஞ்ச நாட்டு இல்லம், சோழிய இல்லம் என்கிற ஐந்து வகை இனப்பிரிவுகளில் என் தந்தை குற்றாலிங்கம் பிள்ளை  மூட்டு இல்லத்தைச் சார்ந்தவர். தாய் வழி மரபினை பின்பற்றும் இனக்குழு என்பதால் என்னுடைய இல்லம் பள்ளி இல்லம். ஏனெனில் என் அம்மாவின் இல்லந்தான் என்னுடையது. என் சகோதரிகளுடையது. எங்கள் சாதியில் தாய் மாமாவை திருமணம் செய்து கொள்வதில்லை. அக்கா முறையுள்ள பெண்களின் மகள்களையும் கல்யாணம் செய்வதில்லை. சித்தப்பாவை, அத்தானை, மச்சானை, கொழுந்தனை பெண்கள் திருமணம் செய்து கொள்வதுண்டு.

ஐந்து இல்லங்கள் என்பதில் நிறைய குழப்பங்கள் உள்ளன.  பள்ளி இல்லம் என்னுடையது. என் மனைவி மூட்டு இல்லம். அவளின் அக்காவும் அதே இல்லந்தான். ஆனால் அவளின் அக்காவின் கணவரின் இல்லம் தோரணத்து இல்லம். எனக்கு திருமண வழியில் அவர் சகலையாக அதாவது அண்ணன் முறை,  என் மனைவியின் அக்காளைத் திருமணம் செய்திருக்காத பட்சத்தில் மச்சான் முறை. அவருக்கு என் தங்கையைத் திருமணம் செய்து தரலாம். அதாவது ஒரே ஆள் ஒரே நேரத்தில் அண்ணனாகவும் அத்தானாகவும் மாறும் சாத்தியம். உங்களை மேலும் குழப்பவில்லை. ஐந்து இல்லங்களும் தங்கள் இல்லங்களைத் தவிர பிற இல்லங்களில் சம்பந்தம் செய்து கொள்ளலாம்.  ஒருவரைப் பார்த்ததும் நீங்க என்ன இல்லம்? என்று கேட்ட பின்னர்தான் உறவுமுறை கொண்டாடுவது. அத்தான் என்றால் அவரை உரிமையோடு நக்கல் செய்து குதுாகலம் கொள்ளலாம். பாலியல் வக்கிரம் நிறைந்த சொற்களால் சீண்டி விளையாடலாம். சகோதர முறை என்றால் கனவானைப் போல நடந்துகொள்வது உத்தமம். சிவ பெருமானின் மகன் ருத்திரன் என்கிற புராணக் கதையில் ஆரம்பிக்கிறது இல்லத்துப்பிள்ளைமாரின் வம்ச வரலாறு. விக்கி பீடியாவில் நிறையவே கிடைக்கிறது. இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் என்பதால் ஈழவர்கள் ஆனோம் என்கிற கதை தொன்மையானது. கேரளத்தில் ஈழவர்கள் என்கிற மக்கள் அதிகம் இருக்கிறார்கள். கேரளத்தை ஒட்டிய – முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானமாக இருந்து வந்த- திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஈழவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அங்கிருந்து கிளம்பி மதுரை, விருதுநகர், துாத்துக்குடி,தேனி, சென்னை போன்ற பிற மாவட்டங்களிலும் இருக்கின்றனர். பொதுவாக பிற இனக்குழுக்களைப்  போல உலகமெங்கும் பிழைப்பின் பொருட்டு பரவி விரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவர் ஈழவர் என்று இல்லத்துப்பிள்ளைமார்கள் சாதிச்சங்க இணைய தளம் பெருமை கொண்டாடி வருகிறது. மருத நாயகம் என்கிற கான்சாகிப், நாராயண குரு, முன்னாள் மதுரை மேயர் முத்து, நாஞ்சில் சம்பத் என்று சில குறிப்பிட்ட ஆளுமைகள் கொண்ட இனக்குழு எங்களுடையது. நவீன தமிழ் இலக்கியத்தில் ஆர்.பி.ராஜநாயகம். இந்தளவிற்கு சுயசாதிப்புராணம் போதும்.

நான் புத்தகங்கள் வாசிக்கக்கூடியவன். என் நண்பர்களில் இருவர் எழுத்தாளர்கள். வாசிப்பும் எழுத்தும் எனக்குத் தொட்டில் பழக்கம் . என் நண்பர்களைப் போல நான் வாழ்வில் தோற்றுப் போய்விடவில்லை. எழுத்தாள நண்பர்கள் இருவரைப் பார்க்கும் போதெல்லாம் “லுாசுக் கூதிகளா ஒழுங்கா பிழைக்கிற வழியைப் பாருங்கடா?” என்று உரிமையோடு திட்டுவேன். சிவகிரி சங்கர் ஒரு சோதாப் பயல். இளஞ் சூர்யன் ஒரு தொடை நடுங்கி.  நானும் நாற்பது வருடங்களாக அவர்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். எந்தவித முன்னேற்றமும் இல்லை. சோத்துக்குச் செத்த பயல்கள்.  கையிலே எப்போதும் பணத்தட்டுப்பாடுதான். ஊருக்கு வந்தால் பதறிக்கொண்டே இருப்பார்கள். கேட்டால் இலக்கிய வாசிப்பும் ஓஷோவும் எங்களைச் சீரழித்து விட்டது என்பார்கள். நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன். சேர்ந்துதான் வாசித்தோம், ஊர் சுற்றினோம், பிகருகள் பின்னால் அலைந்து திரிந்தோம்.  பஸ் புட்போர்டில் பெண்களை நுகர்ந்து மயங்கி உரசிக்கிடந்தோம். போட்டி போட்டுக்கொண்டு கவிதைகள், கதைகள் எழுதி பிரபல வார இதழ்களுக்கு அனுப்பிவைத்து அதில்  கிடைக்கிற காசுக்கு புரோட்டாவும் ஆம்லெட்டும் சாப்பிட்டு, அம்மையப்பா தியேட்டரில் பிட்டுப்படமும் பார்த்தோம். அதெல்லாம் பள்ளிப் படிப்பை முடித்து தண்டச் சோறு என்றழைக்கப்பட்ட பொற்காலத்தில் நடந்தவை.  சிவகிரி சங்கர் பிழைப்பிற்காக கரூர் சென்று விட்டான். இளஞ்சூர்யன் சினிமாவில் இயக்குநர் ஆகி “உன்னை பைவ் ஸ்டார் ஓட்டலில் தங்க வைத்து பெரிய பார்ட்டி கொடுப்பேன்” என்று சத்தியம் செய்துவிட்டு ஒரு மஞ்சள் பையோடு சென்னைக்கு சென்றுவிட்டான்.  குடும்பக் கடன்களை அடைக்க அடிமாட்டு விலைக்கு சொந்த வீடுகளை அவர்கள் விற்ற பிறகு சொந்த ஊருக்கும் அவர்களுக்குமான தொப்புள் கொடி அறுபட்டு விட்டது. நெருங்கிய திருமணம், துட்டி வீடுகளுக்கு அவர்கள் எப்போவாவது இங்கே வருவதுண்டு. அவர்களைப் போல சொந்த வீடுகளை விற்றுவிட்டு என் பூர்வீக நிலத்தை தொலைத்தவன் அல்லன் நான். என் தாத்தா , என் அப்பா வாழ்ந்து மிச்சம் வைத்துவிட்டுப்போன பரம்பரை மண்ணில்தான் நான் நடமாடி வருகிறேன். என் மகன் கிருஷ்ணகிரியில் ஆட்டோமொபைலில் வேலையில் இருக்கிறான். அவனிடமும் சொல்லிவிட்டேன் எக்காரணத்தைக் கொண்டும் சொந்த வீட்டை மட்டும் விற்றுவிடக் கூடாது என்று. எந்த சாதியிலும் எவளையும் கூட்டிக் கொண்டு வா எனக்கு அது பிரச்சினையே இல்லை. ஆனால் சொந்த மண் என்பது இந்த மண்தான். அதை மட்டும் இழக்கலாகாது என்று ஒவ்வொரு முறையும் சொல்லத்தான் செய்கிறேன். நானிருக்கிற வரை அது நடக்கும். என் மறைவிற்குப் பிறகு காலந்தான் முடிவு செய்ய வேண்டும்.

என் அப்பா குற்றாலிங்கம் பிள்ளையின் காலத்தில் இருந்து எங்கள் குடும்பத்தின் வீழ்ச்சி ஆரம்பம் ஆயிற்று. அப்பாவிற்கு காந்தி பஜாரில் சொந்தமாக ஜவுளிக்கடை இருந்தது. பூர்வீகச் சொத்தாக அவர் பங்கிற்கு  இருபது செண்ட் நிலத்தில் அமைந்த கார வீடும், நவ்வாச்சாலையில் பத்து ஏக்கர் நன்செய் நிலமும் கிடைத்தது. ஐம்பது ஆண்டு இடைவெளியில்  அப்பா வைத்திருந்த அதே ஜவுளிக்கடையில் கல்லாவில் இருக்கிறேன்.  முதலியார் முதலாளிக்கு சலாம் வைக்கிறேன். அவர் தரும் பேட்டா காசை பெருமகிழ்ச்சியோடு வாங்கிச் சென்று மறுநாள் குழம்பிற்கு காய்கறி வாங்கிச் செல்கிறேன். முப்பது ஆண்டுகளாக மாறாத நடைமுறை இது. ஒரே ஜவுளிக்கடையில் முப்பது ஆண்டு ஊழியம்.

அப்பா இயல்பிலேயே தனிமையானவர். கூச்சம் நிறைந்தவர். கறுத்த உடலும் காசநோய் பீடித்த முகக் கடும்பும் கொண்டிருப்பவர். அவரால் எவரையும் தன்னம்பிக்கையோடு நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாது. எப்போதும் நடுங்கிக்கொண்டேதான் இருப்பார். பால்வண்ணம் பிள்ளைத் தாத்தா உண்டாக்கி என் அப்பாவின் கைகளில் ஒப்படைத்த வீரஜோதி ஜவுளிக்கடையை பத்தே ஆண்டுகளில் இல்லாமல் செய்தார்.  ஜவுளிக்கடையில் ஒரு மூலையில் ஆட்கள் அதிகம் வர வாய்ப்பில்லாத காடாத்துணி, வாயில் மல், தலையணை உறைகள் அடங்கிய பிரிவில் ஓதுங்கி அமர்ந்து ஏதாவது புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பார். தாத்தா ஜவுளிக்கொள்முதல் செய்வதற்காக சூரத், பாம்பே, ஈரோடு என்று வெளியூர் செல்லும் நாட்களில் மட்டுந்தான் அப்பா கல்லாப்பெட்டியில். அப்போதும் அவரைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்ள பெரியசாமி முதலியார் கல்லாப் பெட்டி அருகே நின்றுகொள்வார். பிள்ளையிடமிருந்து முதலியாருக்கு வீரஜோதி துணிக்கடை கைமாறுவதற்கு அதிக ஆண்டுகள் தேவைப்படவில்லை. தாத்தா பால்வண்ணம் பிள்ளை இறந்த முப்பதாவது நாள் விசேத்தின்போதே கடை கைமாறியது. மீண்டுவர முடியாத கடன். திரும்பிய பக்கமெல்லாம் வட்டியும் முதலும் சுற்றி நின்று  மிரட்டியது. அம்மாவிற்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. சொன்ன இடத்தில் கைரேகைகள் வைத்தாள்.

ஒரு குத்தாலிங்கம் பிள்ளை உண்டாக்கினார். வேறொரு குற்றாலிங்கம் பிள்ளை பிறந்து முடித்து வைத்தார். இப்படி ஒற்றை வரியில் என் குடும்ப சரித்திரத்தை சுருக்கிவிடலாம்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *