க.சுப்பிரமணியன் பக்கங்கள்- நுால் அறிமுகம்-4

நேற்று வாசு முருகவேலின் ஜெப்னா பேக்கரியை வாசித்துமுடித்தேன். இந்த நாவலின் முதல் பதிப்பு முழுக்க ஈழத் தமிழ் நடையிலிருந்தது எனவும் இந்தப் பதிப்பு சற்று வாசகர்களை மனதில் கொண்டு எளிதாக்கப்பட்டதாகவும் வாசு முருகவேலே குறிப்பிட்டிருக்கிறார்.
நான் புதிய பதிப்பையே படித்திருந்தேன். இதிலேயே பூச்சிப்போளை, பொல் என பல வார்த்தைகள் புரியவில்லை. மற்றபடி ஆசிரியரின் ஈழத்தமிழ் பெரிய சிக்கல் எதையும் தரவில்லை.
ஒரு புதிய வட்டாரத்தின் வழங்குமொழியை ஆசிரியர் நாவலில் பயன்படுத்தும்போது, அதுவும் நாவலுக்கு அவசியம் என அவர் உணரும்போது நாம் அதனைப் புரிந்துகொள்ள முயலவேண்டியதுதான்.
யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ள இந்நாவலின் நடை உற்சாக வாசிப்பை அளிப்பதாக இல்லை. மிக மெதுவாக, வாசித்தேயாக வேண்டும் என மெனக்கெட்டால் மட்டுமே வாசிக்கமுடிவதாக உள்ளது.
ஷர்மி, அவளது அம்மா மூலம் தொடங்கப்படும் நாவல் அவளது உறவுகளை, அண்டை அயலார்களை, அவரது தந்தை மூலம் வந்த இரண்டாவது மனைவி ஜெசீமா, அவளது மகன் என அறிமுகப்படுத்தியபடியே ஜெப்னா பேக்கரியை வந்தடைகிறது.
இதற்கிடையில் சோனகர் எனப்படும் முஸ்லிம்கள் திடீரென யாழ்ப்பாணத்தில் அதிகளவு குடிவரத் தொடங்க, சிங்களப் படையினருடன் இணைந்து தமிழர்களை தொந்தரவுக்கு உள்ளாக்குவதுடன், தோட்டக் காவலரும் அமைதியானவருமான கொசுனாமணியின் மரணத்தில் சென்று முடிகிறது.
குடும்பத்தையே பறிகொடுத்த தாஸ் என்பவர் மீது பரிதாபப்பட்டு திருலிங்கத்தார் ஆதரவு கொடுக்க அவர் தொடங்குவதுதான் ஜெப்னா பேக்கரி.
இந்த ஜெப்னா பேக்கரி எப்படி ஆயுத பதுக்குமிடமாக மாறி, கடைசியில் புலிகளின் கவனத்துக்கு வந்து முஸ்லிம் இளைஞர்களை கொத்துக் கொத்தாகக் விசாரணை முகாம்களுக்கு கொண்டுசென்று, இறுதியில் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் யாழ்ப்பாணத்தை விட்டே துரத்துவதில் முடிந்தது என்பதை விவரிக்கிறது .
முஸ்லிம்கள் உண்மையிலே ஆயுதம் கடத்தினரா… அதனால்தான் அவர்களை புலிகள் துரத்தினரா என்பதை நாம் இத்தனை வருடம் கழித்து தமிழகத்தில் இருந்துகொண்டு உறுதிசெய்யவோ, யூகம் செய்யவோ முடியாது.
ஆனால் அதற்காக அதிகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் புலிகளின் அதிகாரத்தின் கீழிருந்த பகுதிகளிலிருந்து துரத்தியடிப்பது சர்வாதிகார முடிவு.
ஒட்டுமொத்தமாக நாவல் எந்தவித திருப்தியையும் அளிக்கவில்லை. நாவலாசிரியரின் விவரணை அவர் கூறும் தர்க்கத்தில் நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை.
நாவலை வாசித்து முடித்தபோது… அப்பாடா முடிந்தது. அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்ற நிம்மதி மட்டுமே ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *