க.சுப்பிரமணியன் பக்கங்கள்- நுால் அறிமுகம் -5.ஜப்பான்: இரண்டு துரதிர்ஷ்டங்களின் கதை!

 

ப்பானுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவுகளாக இரண்டு சம்பவங்களைக் கூறலாம். முதலாவது இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது வீசப்பட்ட அணுகுண்டுகள். அடுத்தது நிலநடுக்கம், சுனாமி பாதிப்பால் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் இருந்த அணு உலைகள் வெடித்து ஏற்பட்ட பாதிப்பு. 

இதில் இரண்டாவது ஏற்பட்ட பாதிப்பைக் குறித்து விரிவாகப் பேசும் நூல்தான். ஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை. டோக்கியோவில் பிரெஞ்சுப் பேராசிரியராகப் பணியாற்றும் மிக்காயேல் ஃபெரியே-வின் நூலை தடாகம் பதிப்பகம் தமிழில் வெளியி்டடிருக்கிறது. இதனை சு.ஆ. வெங்கடராய நாயகர் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

ரண்டாம் உலகப் போரில் மிக ஆக்ரோஷமாக தாக்குதல் நிலைப்பாடை எடுத்து நேச நாடுகளைத் தாக்கிக்கொண்டிருந்த ஜப்பானின் வெற்றிப் பவனியை நிறுத்த கையிலெடுக்கப்பட்ட ஆயுதம்தான் லிட்டில் பாய், ஃபேட் மேன். ஒன்று செறிவூட்டப்பட்ட யுரேனியம் வகை அணுகுண்டு. மற்றது புளுட்டோனியம் வகை அணுகுண்டு. 

இந்தத் தாக்குதலில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் லட்சக்கணக்கான மனிதர்கள் பலியாகினர். தாக்குதல் முடிந்தபின்பு, அணுகுண்டு வெடிப்பினால் ஏற்பட்ட கதிர்வீச்சின் பின்விளைவாக இறந்தவர்கள் இந்தக் கணக்கில் வரமாட்டார்கள். அவர்களது மரணம் தனிக்கணக்கு.

1945, ஆகஸ்ட் 6-ஆம் தேதி லிட்டில் பாய் அணுகுண்டு ஹிரோஷிமாவிலும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஃபேட் மேன் நாகசாகியிலும் வீசப்பட்டது. முதல் குண்டை வீசியதுமே ஜப்பான் சரணடைந்துவிடும் என நேச நாடுகள் எதிர்பார்த்தன. ஜப்பான் அதிகாரமட்டம் சரணடையப் போவதில்லை என பேசிய தகவலை வழிமறித்துக் கேட்ட நேச நாட்டுத் தலைமைகள் அடுத்த குண்டை வீச ஆயத்தமாயின. இரண்டாவது குண்டு வீசப்பட்ட பின்னும் ஜப்பான் சரணடைய மறுத்தால் மூன்றாவது குண்டையும் வீசுவதற்கான திட்டமும் கைவசம் இருந்திருக்கிறது. அதற்கான அவசியம் எதுவுமில்லாமல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஜப்பான் சரணடைவதாக அறிவித்துவிட்டது.

வெற்றிபெற்ற பின், இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்பைத் தவிர்க்க அணுகுண்டு போடப்பட்டதாக, அமெரிக்கத் தரப்பில் நியாயப்படுத்தப்பட்டது. அணுகுண்டை பயன்படுத்தாமல் இரு தரப்பும் போரிட்டிருந்தால் எந்தப் பக்கம் எத்தனை உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் யார் கணிக்க முடியும்? இரண்டு அணுகுண்டால் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாவது எப்படி குறைந்தபட்ச உயிரிழப்பாக இருக்கமுடியும்? மொத்தத்தில் அணுகுண்டுகள் மொத்த உயிரிழப்புகளையும் ஒரு தரப்புக்கு மாற்றிவிட்டு எளிதாக வெற்றியை அறுவடை செய்ய அமெரிக்காவுக்கு வழிவகுத்தது.

குண்டுவீச்சு நடந்து 65 ஆண்டுகள் கடந்து ஜப்பான் இன்னொரு மிகப்பெரும் பேரிடருக்கு ஆளானது. அதுதான் ஃபுக்குஷிமா அணு உலை விபத்து. 2011, மார்ச் 11 அன்று பூகம்பம் மற்றும் சுனாமியின் ஒருங்கிணைந்த தாக்குதலில் டாய்ச்சி அணுமின் உலையில் ஒரு மிகப்பெரும் விபத்து நடந்தது. உலகின் மிகப்பெரிய 15 அணு உலைகளில் ஒன்று ஃபுகுஷிமா. இதன் மின் உற்பத்தித் திறன் 4.7 ஜிகாவாட். 

சுனாமியின் தாக்குதலில், அணு உலைகளை குளிர்விக்கப் பயன்படுத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பலனிழந்து போக அணு உலைகளின் வெப்பம் அளவுக்கு அதிகமாக அதிகரித்து உலைகள் கசிவுக்கு உள்ளாகின. ரஷ்யாவின் செர்னோபில்லில் ஏற்பட்ட அணு விபத்துக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய அணு உலை விபத்தாக வகைப்படுத்தப்படும் டாய்ச்சி அணு உலை விபத்து, ஜப்பானியர்கள் தங்கள் வாழ்வில் சந்தித்த மிகப் பெரும் பேரிடர். 

இதில் பலியானவர்கள் குறித்த துல்லியமான தகவல்கள் கிடைக்கவில்லை. ஜப்பானில் அதுசமயம் தொடர்ச்சியாக நடந்த நிலநடுக்கம், சுனாமியுடன் இணைந்தே இந்த விபத்து ஏற்பட்டதால் பலிக் கணக்குகள் சுனாமியுடன் சேர்த்தே கணக்கிட்டு முடிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 21,000 பேர் அச்சமயம் பலியாகியதாக அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. 

அணு உலைக் கசிவைத் தடுக்கவும், பேரழிவைத் தடுக்கவும் ஈடுபடுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கதிர்வீச்சுப் பாதிப்புக்கு உள்ளாகினர். அணு உலையைச் சுற்றி பல கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்திலுள்ள மக்கள்  அகற்றப்பட்டனர். விபத்தைப் பற்றிய பல தகவல்களை அரசு மூடி மறைப்பதாகப் பேச்சு எழுந்தது.

டோக்கியோவின் ஷூயோ பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சுப் பேராசிரியராகப் பணியாற்றிய மிக்காயேல் ஃபெரியே ஜப்பானை நடுக்கியெடுத்த நிலநடுக்கத்தின்போதும், ஃபுக்குஷிமா விபத்தின்போதும் அங்கேதான் இருந்தார். இயல்பிலேயே நாவலாசிரியரும், கட்டுரையாளருமான அவர், இந்த விபத்துக்குப் பின் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கும் தைரியமாகப் பயணம் செய்து விபத்தின் நீள, அகல, ஆழங்களைப் பதிவுசெய்து எழுதிய நூல்தான் “ஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை.” மிக்காயேல் பேராசிரியராகவும், இலக்கியவாதியாகவும் இருப்பதால் தரவுகளும் இலக்கிய மேற்கோள்களும் அவரின் கூர்மையான பார்வையில் பதிவான காட்சிகளும் இந்நூலில் பதிவாயிருக்கிறது.

2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11-ஆம் நாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் நேரம். ஜன்னல்களில் அதிர்வு- என்று தொடங்கும் மிக்காயேல், சுவரின் மேற்பூச்சில் ஏற்படும் விரிசல் சத்தம் போன்று அந்த நிலநடுக்கம் தொடங்கியதாகக் குறிப்பிடுகிறார்.

ஜப்பானியர்களுக்கு நிலநடுக்கமும் சுனாமியும் புதிதல்ல. அதனால் முந்தைய அனுபவங்களைப் போல்தான் அன்றைய அறிகுறிகளையும் கருதினர். எப்பொழுதுமே ஒரு நடன மங்கையின் மெல்லிய அசைவுகளுடன், எலிக்குஞ்சுகளின் சேட்டைகளுடன் தான் வந்திருப்பதை அறிவித்ததாக நிலநடுக்கத்தை விவரிக்கும் அவர், நிலநடுக்கத்தின் முதலாவது பின் அதிர்வு அரை மணி நேரத்துக்குப் பின் ஏற்படுவதை விவரிக்கிறார். நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அந்த முறை டோக்கியோவுக்கு மிக அருகில் இருக்கிறது. டோக்கியோவே ஆடி அமைகிறது. எல்லோரும் கைபேசியை எடுத்து பிறருடன் தொடர்புகொள்ள முனைகிறார்கள். ஆனால் அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தது.

அன்று வந்தது நிலநடுக்கம் அல்ல… பேரழிவு. அது நிகழ்ந்து மூன்று நாட்களுக்குப் பின்னும் துக்கம் நிலவியது. அந்தத் துக்கத்தைவிடவும் பெரிய துக்கம் தொலைக்காட்சி சானல்கள் சுனாமி, நிலநடுக்கத்தின் காட்சிகளை ஒளிபரப்பியபடியே இருந்தது. அழிவுக் காட்சிகள் மீண்டும் மீண்டும் காட்டப்படுவது முடிவின்றிப் பேரழிவுகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பெருகிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. அதனை ஆசிரியர் ஊடக சுனாமி என அழைக்கிறார். 

நிலநடுக்கத்துக்குப் பின் ஊடகங்களிலும் மக்களிடமும் இருந்து வரும் முதல் தகவல்களின் இயல்பை நேர்த்தியாக விவரிக்கிறார். ஜப்பானின் புவியமைப்பு ஓடு 30 மீட்டர் தூரம் நகர்ந்துள்ளதாகவும் இன்னும் பலவாகவும் பேச்சுக்கள் எழுகின்றன.

மிக்காயேல் பேராசிரியர் என்பதால், தனது முன்னாள் மாணவரும் ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையத்தில் வேலைபார்க்கும் ஒருவரைத் தொடர்புகொண்டு பேசுகிறார். அவரது பணியிடத்துக்கே சென்று பார்த்து சில விவரங்களை அறிந்துவருகிறார். நிலநடுக்கத்தின் தாக்கத்தில் நிலநடுக்கம், சுனாமிகளை அறிவிக்கும் பல சென்சார்கள் முற்றிலும் அழிந்துவிட்டதையும், பல செயலிழந்துவிட்டதையும் மேலதிகத் தகவல்களையும் அவர் தருகிறார்.

மார்ச் 11-ஆம் தேதி முதல் பின்னதிர்வுகள் ஏற்படத் தொடங்கின.  ஒன்றிரண்டு அல்ல… ஒரு நாள் இருநாள் அல்ல… பெரிய அதிர்வெண்களைக் கொண்டிராத, பல நிலநடுக்கங்கள். மார்ச் 11-ல் தொடங்கிய பின்னதிர்வு நிலநடுக்கங்கள், ஜூன் 8-ல்தான் முடிவுக்கு வந்தன. கிட்டத்தட்ட பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் இரண்டு மாத காலத்துக்கு மேல் நிம்மதியாக இருக்கமுடியாதவாறு இந்த அதிர்வுகள் பார்த்துக்கொண்டன. சில நாட்களில் 100-க்கும் மேற்பட்ட நடுக்கங்கள், சில நாட்களில் 40-க்கும் அதிகமான நடுக்கங்கள்.

இந்த நிலநடுக்கங்களைவிட, மிகப்பெரிய பேரிடர் சுனாமியால் விளைந்தது. கிட்டத்தட்ட15 மீட்டர் உயரம் வரை எழுந்து பாய்ந்த சுனாமி அலை அணு உலையின் மையப் பகுதியைத் தாக்கியது. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டால் வெளியான செசியம்137-ஐவிட, இப்போதைய சுனாமி தாக்குதலால் வெளிப்பட்ட செசியம்137, 168 மடங்கு அதிகம். கற்பனை வளமுள்ளவர்கள் அழிவின் தாண்டவத்தை கற்பனை செய்துகொள்ளலாம்.

அணு உலை இருக்கும் பகுதிகளில் பிரதமர் நெருக்கடி நிலையை அறிவித்தார். முதலில் உலையைச் சுற்றி 3 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் வெளியேறும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். பின் 20 கிலோமீட்டர் சுற்றளவு. கடைசியாக உலையைச் சுற்றி 30 கிலோமீட்டர் சுற்றளவில் யாரும் வசிக்கக்கூடாதென கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்டதைப் போன்ற மிகப்பெரிய மக்கள் இடப்பெயர்வு ஏற்பட்டது. உலை மேலும் பாதிக்கப்படாமல் பாதுகாக்க 1 லட்சம் நெருக்கடி கால ஊழியர்கள் அழைக்கப்பட்டனர்.

தேபோல, மேலுமொரு வேடிக்கையும் நிகழ்ந்தது. இத்தனை பெரிய அணு உலை விபத்து நிகழ்ந்திருக்கும்போது, அணு உலையின் தேவையைக் குறித்து உரையாற்றினார் குடியரசுத் தலைவர். மார்ச் 16-ஆம் தேதி ஜப்பான் அரசர் அகித்தோ, பிரச்சனையை எதிர்கொள்ளுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஜப்பானில் உள்ள சர்வதேச அதிகாரிகள் அவசர அவசரமாக வெளியேறிவிட்ட நிலையில் மிக்காயேல் என்ன செய்வதென யோசிக்கிறார். பாரீஸில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கான அழைப்பும் விமானச் சீட்டும் அவருக்கு இருந்தது. அங்கு அவருக்கு வெண்ணிற நுரை கொப்பளிக்கும் ஒயினும் வழங்கப்படும். இருந்தும் ஜப்பானிலேயே இருப்பதென அவர் தீர்மானிக்கிறார்.

தனது துணைவியான ஜூனுடன் கியாத்தோவிலுள்ள நண்பனின் வீட்டுக்கு வந்து சில நாட்கள் தங்குகிறார். சில நாட்களைச் செலவிட்டுவிட்டு மீண்டும் டோக்கியோவுக்கே திரும்புகிறார். திரும்பும்போது அவர் காணும் டோக்கியோ வேறு மாதிரி இருக்கிறது. 

டோக்கியோவின் பிரதான மின் உற்பத்தி கேந்திரம் அழிந்த நிலையில், மின் தடை, இருப்புப் பாதை பாதிப்பு, நிலநடுக்க பாதிப்பால் பல்வேறு வழித்தடங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு விளம்பரப் பலகைகள் மின்சாரம் இன்றி அணைந்த நிலையிலேயே காணப்படுகிறது. பல இடங்களில் லிப்டுகள் இயங்கவில்லை. சில குடியிருப்புகளே மின்சாரமின்றி இருளடைந்து கிடக்கின்றன.

டாய்லட் பேப்பர் முதல் அரிசி வரை பலவற்றுக்கும் தட்டுப்பாடு. ஜப்பானின் சுற்றுலாப் பகுதிகள் பலவற்றுக்கும் வெளிநாட்டவர்கள் வருவதாகத் தெரியவில்லை. இப்படியே முடங்கிக் கிடப்பதற்கு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவதுடன் தன்னாலான உதவிகளைச் செய்ய நினைக்கிறார் மிக்காயேல். இந்தப் பயணத்தில் ஜூனையும் இணைத்துக்கொள்கிறார்.

பின்னால் வரும் சில அத்தியாயங்கள், கடற்கரையையொட்டிய சில நகரங்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது, அங்கே கண்டது என்ன என்பது குறித்த விரிவான விவரங்களால் அடங்கியிருக்கிறது. மீண்டும் மீண்டும் அழிவினைக் குறித்த விவரங்கள். காட்சி விவரணைகள்.

இருவரும் இஷினோ மாக்கி என்றொரு கிராமத்துக்கு வருகிறார்கள். மாக்கியின் ஒரு பகுதியில் எவ்வித பாதிப்பும் இல்லை. மறுபுறம் அனைத்தும் காலியாகியிருந்தது. மீதமுள்ள ஒன்றிரண்டு சாலைகளைத்தான் அலைகள் வந்து உரசிச்செல்வதைப் பார்க்கிறார்கள். 

இன்னொரு இடத்தில் சாலையின் திருப்பத்தைக் கடந்தால், மறுபுறம் பேரழிவைப் பார்க்கிறார்கள். மரங்கள் இல்லை. வீடுகள் இல்லை. தோட்டங்கள் இல்லை. கண்ணுக்கு எட்டும் தூரம் வரை இடிபாடுகளின் குவியல்.

ஒரு இரவு நேரம். நாய்கூட சுற்றித்திரியாத, பறவைகள் எதுவுமில்லாத நகருக்கு வருகிறார்கள். இந்த பிரம்மாண்டமான பேரழிவில் அவை எங்கே தங்கியிருக்க முடியும் என நினைத்துக்கொள்கிறார்கள்.

சுனாமியின் ஆற்றலைப் பற்றி பேசும் நூலாசிரியர், 55 செமீ உயரமுள்ள சுனாமி அலைகூட ஒரு மனிதனைக் கீழே தள்ளிவிடமுடியும். 1 மீட்டரை எட்டும்போது அலையின் அழுத்தம் 5-லிருந்து 10 டன் அழுத்தமாக உயர்ந்துவிடும். இந்த ஆற்றல் ஓர் உலோகத் தட்டினை முறுக்கப் போதுமானது. 2 மீட்டர் சுனாமி வீடுகளை உடைத்துவிடும். அதில் சிக்கியவனின் எலும்புகளையும்கூட என்கிறார்.

அன்றைய தினம் ஒரேயொரு சுனாமியோடு நிற்கவில்லை. முதல் சுனாமிக்குத் தப்பியவர்கள் என் மனைவி எங்கே, என் கணவர் எங்கே. என் சகோதரன், என் மகன் எங்கே என கேள்விகளை எழுப்பிக்கொண்டு இருந்தனர். அவர்களுக்காக காத்திருக்கவா, தேடிப்போகவா என்று காத்திருந்த பலரை அடுத்து வந்த சுனாமிப் பேரலை கொண்டுசென்றிருக்கிறது.

உடற்பயிற்சிக் கூடங்கள், தற்காலிக சவக்கிடங்குகளாக்கப்பட்டு நூற்றுக்கணக்கில் சடலங்கள் குவித்துவைக்கப்பட்டிருக்கின்றன. பிளாஸ்டிக் அல்லது ரப்பர் உறைகளில் அடைக்கப்பட்டவை. அந்த கூடங்களும் நிறைந்து ஐஸ் நிரப்பிய பைகளில் உடல்களைப் பாதுகாக்க வேண்டிவருகிறது. மின்மயானங்களில் ஒரே நாளில் 60 உடல்களைக் கூட எரிக்கவேண்டியிருந்தது. இறந்தவர்களும் வரிசையில் காத்திருக்கவேண்டிவந்தது. (கொரோனாவின்போது இந்தியாவும் இத்தகைய சூழலைக் காணநேர்ந்தது.)

சுனாமியோடு வரும் சேற்றின் ஆபத்தையும் அதன் நாற்றத்தையும் பற்றியும் மிக்காயேல் சில பக்கங்களுக்கு விவரிக்கிறார்.

பின் சுனாமி, அணு உலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், புலம்பெயர்ந்தவர்களுக்கான முகாம் இருக்குமிடம் ஒன்றிற்கு சென்று அந்த முகாமின் பெயர் குறிப்பிடாமல் அதைப் பற்றிய விவரங்களைத் தருகிறார். அங்கு 1,13000 பேர் இருக்கின்றனர்.

முற்பகல் முடியும் தறுவாயில் நாங்கள் அங்குப் போய்ச் சேர்ந்தோம். விழா அரங்கம் ஒன்றில், மீட்கப்பட்ட அனைவரும் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அரங்கு நிறைந்திருந்தது. ஒரு மேற்கூரை, 1000 கட்டில்கள். வரிசையின் இடைவழிகள், படிக்கட்டுகள், ஜன்னல்கள் கொஞ்சம் பெரிதாக இருந்தால், அவற்றின் விளிம்புகளில்கூட மக்கள் ஒண்டவைக்கப்பட்டிருந்தனர். அங்கு நாள்தோறும் 3000 பேருக்கு உணவு பரிமாறப்பட்டது. கழிவறைகள் செயல்படவில்லை. நடமாடும் கழிவறைகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் எல்லோரும் பார்க்கும்படித் தங்களைக் குறுக்கிக் கொள்வார்கள். தோள்பட்டைகளின் மீதிருக்கும் ஒரு பெரிய போர்வையால் மூடப்பட்டிருக்கும். அது குதிகால்வரைத் தொங்கிக்கொண்டிருக்கும். எவ்வித அந்தரங்கத்திற்கும் இடமில்லை. சிலர் பகற்பொழுதைக் காரில் கழிப்பார்கள். அல்லது ஒரு செய்தித்தாளை மறைப்பாக வைத்துக்கொண்டு அதன் பின்புறம் ஒளிவார்கள். 

எத்தகையதொரு இக்கட்டான நிலைமை!

இத்தாத்தோ முரோ என்ற கிராமத்துக்குச் செல்கிறார்கள். அந்தக் கிராமம் சகே பானத்துக்கும், காளான்களுக்கும் மாட்டிறைச்சிக்கும் பேர் போனது. ஒரு மாடு 1 மில்லியன் யென்னுக்கு விலைபோகும். அணு உலை விபத்துக்குப் பிறகு அங்குள்ள மாடுகளை யாரும் விலைக்கு வாங்க முன்வரவில்லை. பால், உருளைக்கிழங்கு, கோஸ் அனைத்தும் கதிரியக்க பாதிப்புக்கு உள்ளானது. குழிகள் தோண்டி அதில் டன் கணக்கான பால் ஊற்றிமூடப்பட்டது.

இந்த விபத்துக்கு முன்பு அரசு, நகர நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் அனைத்தும் ஒரே விஷயத்தை, ஒரே வார்த்தையை அனைவரிடமும் சொல்லிவந்துள்ளது. சேப். அதாவது பாதுகாப்பு. அந்நிய மொழியில் சொன்னால், மேலும் நம்பகத்தன்மை உடையதாக மாறிவிடுவதுபோல். விபத்து என்பதே ஏற்படாது என சொன்னார்கள். இப்போது எல்லாம் அம்பலமாகிவிட்டது.

அந்த கிராமத்தினர் அவர்கள் வளர்த்த 700 விலங்குகள், 1300 பன்றிகள், 680 கோழிகள் இவையனைத்தையும் தடைசெய்யப்பட்ட பகுதியில் பட்டினியாய் விட்டுப் போகவேண்டிவந்தது. பசி, பட்டினியால் இத்தனை விலங்குகளும் விட்டுவந்த இடத்தில் கத்தி, வாடி மாண்டுபோகின்றன. இரவு நேரத்தில் அவை எழுப்பும் ஓலம் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்பதாக விளக்குகிறார்கள்.

முயாக்கோ- முரா எனும் காலிசெய்யப்பட்ட கிராமத்துக்குள் நுழைகிறார் மிக்காயேல். பெருத்த அமைதி. அதை விவரிப்பது கடினம் என்கிறார். காகங்கள் கரையாத, வாகன ஒலி கேட்காத, நாய்கள் குரைக்காத முழு அமைதியிலிருக்கும் கிராமத்தின் மெளனம் அவரை என்னவோ செய்கிறது.

ன் பயணத்தை முடித்து டோக்கியோ திரும்பிய பின், அரசு இந்த விபத்துக்குப் பின் மக்களுக்கு அவசியமான தகவல்களைத் தராததைக் குறித்து விமர்சிக்கிறார்.

நமக்கு எதுவும் சொல்லப்படுவதில்லை என்றும் நினைக்கக்கூடாது. பத்திரிகைகளில், அலைவரிசைகளில், தொலைக்காட்சியில், இணையத்தில் தகவல்கள் வந்து குவிந்தவண்ணம் இருக்கும். பாமரனுக்கு அவை எதுவும் விளங்காது.

மைக்ரோ சிவர்ட், மில்லி சிவர்ட், பெக்கோரல், ராட், ரெம், ரான்ட்ஜென் என அளவை முறைகளை வைத்து விளையாட்டு நடக்கும். ஒரு நாள், கடலில் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவைவிட 3355 மடங்கு அதிகமாக அயோடின் கதிரியக்க அளவு இருந்தது. மறுநாள் இது 4835 மடங்காகியது. அப்படியென்றால் இதற்கு என்ன பொருள். அணு உலை மையம் இருந்த கடற்பகுதியில் பிடிக்கப்பட்ட மீன்களைப் பரிசோதித்தபோது, அயோடின் 131இன் அளவு ஒரு க்யூப்செ.மீ.க்கு 200000 பெக்கோரலாக இருந்தது. இது அனுமதிக்கப்பட்ட அளவைப்போல் 5 மில்லியன் மடங்கு ஆகும்.

உண்மை என்னவென்றால், எப்படியும் இந்த எண்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. என்றுமே மீளமுடியாத, கணக்கிடமுடியாத ஒரு விஷயத்தில் நுழைந்துள்ளோம் என்பதை மட்டுமே அவை உணர்த்துகின்றன.

தர்மசங்கடமான சூழ்நிலைகளில் இருந்து நழுவிச் செல்ல, தகவல்களை நீர்க்கச் செய்யும் சில வழிமுறைகள் உள்ளன. தகவல்களை மிகவும் அளவுக்கு அதிகமாகத் தேக்கிவைப்பது வாடிக்கையான முறை. உதாரணமாக, அணு உலை மையப்பகுதி முழுவதும் கண்காணிப்புக் கருவிகள் இருக்கும். அவற்றில் சில காட்சிப் படங்களே காணப்படும். அணு உலைகள்  2, 4 வெடித்தபோது பதிவான வீடியோவைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவை பொதுமக்கள் பார்வைக்கு வரவே இல்லை.

ஏப்ரல் மாதம் கடலில் கொட்டப்பட்ட 11,500 டன் நீரின் கதிரியக்க அளவு பற்றி எதுவும் தெரியாது. வெடிவிபத்தின் காரணமாக வெடித்துச் சிதறிய பல்லாயிரக்கணக்கான டன் எரிபொருள் குறித்து எதுவும் தெரியாது.

காற்றிலுள்ள கதிரியக்கத்தைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சர்வதேச குழுக்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து எதுவும் தெரியாது.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், ஜப்பான் நாடாளுமன்ற விசாரணைக் குழுவிடம், அணு உலை மையத்தின் நிர்வாகி சில ஆவணங்களை அளித்தார். அவற்றில், கருப்பு ஸ்கெட்ச் பேனாவால் அழிக்கப்பட்டு சில பகுதிகள் முற்றிலுமாகப் படிக்கமுடியாதபடி இருந்தன.

தகவலை மூடி மறைக்க நம்பகமான வழி அதனைச் சொல்லாமலிருப்பது இல்லை. ஆயிரக்கணக்கில் தகவல்களைத் தெரிவிக்கும்போது, இந்தத் தகவலையும் சேர்த்து பொதுமக்களுக்கு அறிவித்துவிடுவதுதான். இதனால் அறிவுத் திறன்மிக்கவர்கள்கூட குழம்பிப்போவார்கள் என்கிறார். இன்னும் பல தர்மசங்கடமான கேள்விகளையும் அதன் தொடர்ச்சியாக எழுப்புகிறார்.

ணு உலை வெடிவிபத்து உளரீதியாக ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்கும் மிக்காயேல்,

முதலில் 3 கிலோமீட்டர், பிறகு 20 கிலோமீட்டர் தூரத்திலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். மக்களிடம் தயக்கம் இருந்தது. நடுக்கம் காணப்பட்டது. முற்றிலுமாக வேறுபட்ட முறையில், அச்சூழலுக்கு ஏற்றவாறு ஏறக்குறைய ஒரு மாதம் கழித்து தடைசெய்யப்பட்ட பகுதிக்கு அப்பாலிருந்த கிராமத்தவர்களும் வெறியேற்றப்பட்டனர். இதுகுறித்த எண்ணிக்கைகளும் தகவல்களும் எப்போதும் மாறிக்கொண்டே இருந்தன.

இதுபோன்ற அலைக்கழிப்புகளால் சோர்ந்துபோன மினாமி சோனா பகுதியைச் சேர்ந்த ஒரு பாட்டி ஜூன் மாத இறுதியில் தன் தோட்டத்தில் தூக்கில் தொங்கினார். அணு உலை மையத்திலிருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் வசித்துவந்த அவர் முதல் வெடிவிபத்து ஏற்பட்டதும் தன் மகள் வீட்டில் முதலில் தஞ்சம் புகுந்தார். 2 வாரங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் வீடு திரும்பியதும் கதிரியக்கம் காரணமாக,அந்த கிராமத்திலுள்ளவர்களும் வெளியேற்றப்படக்கூடும் என தெரிய வந்ததாலேயே இந்த முடிவையெடுத்தார். 

93 வயதில் ஒருவர் ஏன் தூக்கிட்டுக்கொள்ளவேண்டும்? தன் செயலுக்கு விளக்கமளித்து 4 கடிதங்களை அவர் விட்டுச்சென்றுள்ளார். ஒன்று தன் குடும்பத்துக்கு. மற்றது அருகில் வசிப்பவர்க்கு, மூன்றாவது தன் உறவினர்களுக்கு. நான்காவது மூதாதையர்களுக்கு.

தன் கடிதத்தின் முடிவில், “இந்த அமளியால் அரண்டுபோய்விட்ட நான் இங்கிருந்து வெளியேறி என் கல்லறைக்குச் செல்கிறேன். மன்னிக்கவும்” என்று முடித்திருந்தார்.

ணு உலையில் பணியாற்றிய கா என்பவரிடம் அணு உலை விபத்தன்று என்ன தான் நடந்தது என கேட்டு பதிவுசெய்திருக்கிறார் மிக்காயேல். அதைச் சுருக்கமாக இங்கு பதிவுசெய்துவிடமுடியாது.

இனி வாழ்க்கை என்பது, கழிவுகளின் மேலாண்மைதான். நச்சுக் கலந்த மண், சேறு, தழைகள் இவற்றை வைத்துக்கொண்டு என்ன செய்வது? என்கிறார். மேலும் எப்போதும் பதற்றம் இலாபங்களை உருவாக்கிவிடும் எனச் சொல்லும் அவர், புக்குஷிமாவிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கஷிவாவில் உணவுப்பொருட்களில் படிந்திருக்கும் கதிரியகத்தின் அளவை கணக்கிட உதவும் பெக்குமீரு எனும் நிறுவனம் அமைந்திருப்பதையும், இத்தகைய நிறுவனங்களுக்கு இனிமேல் கிராக்கிதான் எனவும் கூறுகிறார்.

 மிக்காயேலின் இன்னொரு மாணவனான டெட்சுயோ, வேலைநிமித்தமாக டோக்கியோ வந்தவன் மிக்காயேலைக் காணவருகிறான். ஒரு பாரில் சந்திக்கும்போது அவன் தரும் தகவல் விநோதமாகவும் மனித இயல்பை விளக்கக்கூடியதாகவும் இருக்கிறது. இந்த டெட்சுயோ லவ் ஓட்டல்கள் நடத்திவருபவன். அதை தன் ஆசிரியரிடம் விளக்குகிறான்:

மார்ச் 11 இரவில் நிலநடுக்கம் நிகழ்ந்துமுடிந்த சில மணி நேரத்திற்குள் அத்தனை லவ் ஓட்டல்களும் நிரம்பிவழிந்தன. ஆண்களுக்கு தங்கள் மனைவியரிடம் கூற அருமையான சாக்கு கிடைத்துவிட்டது. “மெட்ரோ ஓடவில்லை தாமதமாக வருகிறேன்” என எதையாவது கூறிவிட்டு நேரே இந்தப் பாழாய்ப்போன இடத்துக்கு வந்துவிடுவார்கள். மதுக்கூடத்தில் உள்ள பெண்களைத் தள்ளிக்கொண்டு அறைக்குச் சென்றார்கள்.

நிச்சயமாக, வாடிக்கையாளர்கள் அச்சத்துடன் காணப்பட்டனர். அதனால் முதல் தளம், அதிகபட்சம் இரண்டாவது தளத்திலுள்ள அறைகளைக் கேட்டார்கள். ஏதாவது பிரச்சனை என்றால் சீக்கிரமாகக் காலிசெய்ய வசதியாக இருக்குமே. மூன்றாவது தளத்துக்கு மேலுள்ள அத்தனை அறைகளும் காலியாக இருந்தன. எனவே மேல் தளத்தில் உள்ள அறைகளில் விளக்கைப் போட்டேன். உயரே உள்ள அறைகளில் துணிந்து கால்வைக்க வருபவர்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்தேன். அந்த திட்டத்துக்கு மேல்மாடியில் காதல் என பெயரிட்டேன். வரவேற்பு நன்றாகவே இருந்தது.

டைசி அத்தியாயத்தில் வேறொன்றைப் பதிவுசெய்கிறார்.

1947-ல் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இடங்களில் வீசப்பட்ட அணுக்குண்டுகளுக்கு பலியானவர்களுக்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் அணுகுமுறையை நினைக்கவேண்டியுள்ளது. அதில் உயிர்பிழைத்தவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் அவர்களை ஆய்வுசெய்வதோடு நிறுத்திக்கொண்டது. 

இன்றும் இத்தகைய புரிந்துகொள்ளமுடியாத அதிகாரம் செலுத்தும் அணுகுமுறைதான் நிலவுகிறது. இன்றைய சூழலுக்கு அது புதுப்பிக்கப்பட்டு, சர்வதேசமயமாக்கப்பட்டு ஒப்பந்த வடிவம் பெற்றுவிட்டது. உலகின் அத்தனை நாடுகளிலும் அணுசக்தி மையங்களைச் சூழ்ந்திருக்கும் இருண்மை ஆச்சரியமானது. முறைகேடுகளும் எதிர்ப்புகளும் மாறி மாறி வந்துகொண்டிருந்தாலும் எந்தப் பலனும் இல்லை.

சுருக்கமாக, திட்டத்தை வகுத்துத் தரும் நாடுகளுக்கு அணு உலைகளை விற்று காசுபார்க்கும் நாடுகளுக்கு பலத்த ஆதாயம். எந்த நாட்டில் திட்டம் செயல்படுத்தப்படுகிறதோ அவர்களுக்கு அணு உலைக் கழிவும், ஏதும் பெரும் விபத்து நடந்தால் அதற்கான பேரழிவுகளும். மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம்கூட இல்லையென்பதைச் சொல்லவருகிறார்.

தன் மற்றுமொரு அத்தியாயம் கடந்த வருடம் நிகழ்ந்தது. அணு உலைக்குள் புகுந்த கடல் நீரை சுத்திகரித்து கடலில் விட அனுமதி கோரியது ஜப்பான். ஐ.நா. இதற்கு அனுமதியளித்த நிலையில் ஜப்பானின் அண்டை நாடுகளான சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. அதையும் மீறி ஜப்பான் அந்த நீரைக் கடலில் கலந்தது. இதையடுத்து ஜப்பானின் கடல் உணவுகளை இறக்குமதி செய்வதற்கு சீனா தடைவிதித்துள்ளது.

கதிரியக்க குணமுடைய தனிமங்கள் தங்கள் அரை ஆயுளை எட்டவே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும் எனும்போது, அணு உலைக்குள்ளிருந்த நீரை ஜப்பான் எப்படி சுத்திகரித்தது, எப்படி அவை கதிரியக்கத் தன்மையை இழக்கச் செய்யப்பட்டது என்பது சந்தேகத்திற்குரியதாகும். கடல்வாழ் உயிரிகளையோ, கடல் வாழ் உயிரிகளை உணவுகளாகக் கொள்ளும் மனிதனையோ கருத்தில்கொள்ளாமல் மொத்தத்தில் அவை வெறுமனே கடலுக்குள் விடப்பட்டன என்றே அணு உலை எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர். 

ஏற்கெனவே ஜப்பானிய மக்களைப் பழிவாங்கிய அரசு, இந்த முடிவின் மூலம் கடல்வாழ் உயிரினங்களையும் பழிவாங்கியுள்ளது. இதனால் ஜப்பானை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் வாழும் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படவும், அந்தப் பகுதியிலுள்ள கடல் நீர் முழுவதும் கதிரியக்கம் பரவவும் காரணமாகியுள்ளது. 

செர்னோபில் அணு உலை விபத்தும், டாய்ச்சி அணு உலை விபத்தும் மனித சமூகத்துக்கு ஒரு பாடம். அணு உலை விபத்து என்ற இடத்தில், ரஷ்யா, ஜப்பான் இவற்றுக்குப் பதில் உலகின் எந்த ஒரு அணு உலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் நாட்டின் பெயரும் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *