இரவில் எல்லோருடைய ரத்தமும் கருப்புதான் –தாவித் தியோப்பின் ஆத்ம சகோதரனை முன்வைத்து-

இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேல் லியோ டால்ஸ்டாயால் எழுதப்பட்டு, தமிழில் டி.எஸ்.சொக்கலிங்கம் மொழிபெயர்த்த போரும் அமைதியும் (War and Peace) நாவல் மூலமாகத் தான், போரையும் அதன் விளைவுகளையும் குறித்து நான் துலக்கமாக அறிந்து கொண்டது. அதே போல தமிழ் மன்னர்களின் போர்முறைகளைப் பற்றி தொல்காப்பியத்தின் புறத்திணையியல் விரிவாகச் சித்தரிக்கிறது. 1914 முதல் 1918 வரை நடைபெற்ற முதலாம் உலகப்போர் மற்றும் 1939 முதல் 1945- வரை நடந்த இரண்டாம் உலகப்போர் என இரண்டு மாபெரிய போர்களுமே இன்றைக்கு மானுடத்தின் மீதான கறைபடிந்த துயர வரலாறாக மாறி, பல்லாயிரம் பக்கங்களில் விரிந்து கிடக்கிறது. இந்திய –சீனப் போர், இந்திய –பாகிஸ்தான் போர்,வளைகுடாப் போர்கள் என நாமறிந்த போர்களுக்கும், அதிகாரம், ஆக்கிரமிப்பு, ஆயுதப்போட்டி என போர்களுக்கான காரணங்களுக்கும் அளவேயில்லை. 30 ஆண்டுகளாகக் கனவில் வந்த தமிழீழம் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் துர்சொப்பனமாகிப் போனது. இலக்கியம் என்றைக்குமே கெட்ட போரிடும் உலகை வேரோடு சாய்க்கவே சங்கல்பம் கொள்கிறது.

             தாவித் தியோப்பின் “ஆத்ம சகோதரன்” குறு நாவலுமே கூட முதலாம் உலகப் போர் முனையின் ஒரு பகுதியையே கதைக்களமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. தியோப் 24.02.1966 அன்று பாரிஸில் ஒரு “செனகலிஸ்” கறுப்பர் இனத் தந்தைக்கும் பிரெஞ்சுத் தாய்க்கும் மகனாகப் பிறந்தவர். மேற்கு ஆப்பிரிக்காவில் படித்து வளர்ந்தவர். பதினெட்டு வயதில் மீண்டும் பிரான்ஸ்க்கு வந்து பள்ளிப் படிப்பை நிறைவு செய்து, முனைவர் பட்டமும் பெறுகிறார். 18 ஆம் நுாற்றாண்டு பிரெஞ்சு இலக்கியத்தையே முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார். தொடர்ந்து 17-18 ஆம் நுாற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் ஐரோப்பாவின் பிரதிநிதித்துவம் குறித்து இவர் ஆய்வு செய்ததையும் அறிந்து கொள்ள முடிகிறது.

          தாவித் தியோப்பின் தந்தைக்கு 1960-க்கு முன் பிரெஞ்சு காலனியாக இருந்த செனகல் நாடு பூர்வீகம். அங்கு வாழ்ந்த கறுப்பர்களை முதலாம் உலகப் போரின் போது பிரெஞ்சு ராணுவம் மோசமாகப் பயன்படுத்திக்கொண்டது. தியோப்பின் முப்பாட்டன் உலகப்போரில் பிரான்ஸ் ராணுவத்தில் பணியாற்றினார். ஆத்ம சகோதரன் நாவல் இந்தப் பகைப்புலத்திலிருந்து தான் எழுதப்பட்டுள்ளது.

            1914 முதல் 1916 வரை மேற்குமுனை பதுங்கு குழிப்போர் நடைபெற்றுள்ளது. 1915-இல் பிரான்சின் இலவேண்டியில் இந்திய பிரிட்டானிய வீரர்கள் தான் இந்தப் பதுங்கு குழிகளைத் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேச நாடுகள் அணியில் பிரான்ஸ், ரஷ்யா,பிரிட்டன், அமெரிக்க நாடுகள் இருந்ததும், அப்போது பிரிட்டன் ஆதிக்கத்துக்கு உட்பட்டு இந்தியா இருந்த காரணத்தால் பிரிட்டன் ராணுவத்தில் இந்திய  வீரர்கள் பணியாற்றியதும் நாம் அறிந்த தகவல்களே. இந்தப் பதுங்கு குழிகள் சுமார் 600 கிலோ மீட்டருக்கு மேல் தோண்டப்பட்டதாகவும் இதனுள்ளே நுழைந்து வெளியேறுவதற்கும், உள்ளிருப்போர்க்கு உணவு, உடை,மருந்து, கடிதம் போன்றவற்றை விநியோகிப்பதற்கும் சிறப்பு வழிகள் இருந்ததாக அறிகிறோம். ஆனாலும் பதுங்கு குழிகளில் வாழ்ந்த வீரர்களுக்குப் பதுங்கு குழி கால்நோய், வெடி கல அதிர்ச்சி,சல்பர் மஸ்டர்டால் கண்பார்வை இழப்பு, எரிகாயங்கள், காய்ச்சல் போன்ற பலவிதமான நோய்கள் ஏற்பட்டுள்ளன. ஆத்ம சகோதரன் நாவல் பதுங்கு குழி அனுபவங்களைத் தான் முக்கியத்துவம் தந்து பேசுகிறது.

        “நான் பூமியின் வயிற்றிலிருந்து வெளியில் தவழ்ந்து வந்துவிட்டால்…”   “மண்ணின் வயிற்றிலிருந்து நான் வெளியில் வரும்போது…”  “பூமியின் வயிற்றிலிருந்து பீறிட்டுக் கிளம்பி ஓடுவதற்கு…” என்று கதை சொல்லி திரும்பத் திரும்பக் கூறுவது இதைத்தான்.

     இந்நாவலை நான் வாசிக்கையில் முன்னதாக இடம் பெற்றிருந்த மொழி பெயர்ப்பாளர் குறிப்பைப் படிக்கத் தவறி விட்டேன். இவ்வகைக் குறிப்புகள், முன்னுரைகள் எவற்றையும் வாசிப்பின்போது பொருட்படுத்துவது வழக்கமில்லை. இந்த நாவலலைப் பொறுத்தவரை அது தவறாகிவிட்டது. எனவே மொழிபெயர்ப்பாளரின் ஆற்றல் குறித்து சந்தேகம் கொண்டுவிட்டேன். தெரிந்துவிட்டது- புரிந்து விட்டது, எனக்குத் தெரியும், எனக்குப் புரியும், எனக்கு ஒன்று தெரிகிறது, புரிகிறது,எனக்குத் தெரிந்தது-புரிந்தது என்றெல்லாம் திரும்ப திரும்ப வார்த்தைகள் வந்து என்னை மோதியபோது எரிச்சலுற்று மூல ஆசிரியரையும் மொழிபெயர்ப்பாளரையும் மனதுக்குள் திட்டித் தீர்த்தேன். ஆனால் எஸ்.ஆர்.கிருஷ்ண மூர்த்தி பெரிய ஸ்காலர். என் தந்தையைக் கொன்றவர் யார், முன்பின் தெரியா ஒருவனின் வாழ்க்கை- என்று அவர் நிறைய மொழி பெயர்ப்புகளைச் செய்திருக்கிறார்.- மறுப்பதற்கில்லை.

         அல்ஃபா நிந்தியாயேவின் சகோதரனுக்கும் மேலான நண்பன் மதெம்பா தியோப், பிரான்ஸ் தேசத்திற்காக உலகப் போரில் ஈடுபட்டு படுகாயத்துடன் குடல் வெளியே தள்ளி உயிர் பிழைக்க இயலா நிலையில் தன்னைக் கொன்றுவிடுமாறு நண்பன் நிந்தியாயேவிடம் மூன்று தடவை கெஞ்சிக் கேட்டுக்கொண்டும், நிந்தியாயே அதைச் செய்ய மறுத்து விடுகிறான். அல்ஃபா நிந்தியா-யே இதற்காக அடையும் குற்றவுணர்ச்சிதான் இந்த நாவல் என்று அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட இயலாது.

      பிரான்ஸ் நாட்டுக்காக, நேச நாடுகள் அணியிலிருந்து போர் புரியும் வீரர்களைக் கொண்ட பகுங்கு குழிகளுக்குள் தான் தியானே, குருமா, பேயே, ஃபக்கோலி, சால், தியேங், சேக், கா, சே, நிதுார்,துரே என்று எத்தனை எத்தனை பிரிவுகள்? இவர்களெல்லாம் கேப்டன் அர்மானுக்கு ஆப்பிரிக்கச் சாக்கிலெட்கள்,காட்டு மிராண்டிகள். கேப்டன் ஏதாவது வஞ்சமாகப் புகழ்ந்தால் கூட அது புரியாமல் உடனே வயிறு தரையில் தவழும்படி சென்று காட்டு மிராண்டிகளாகக் கத்தி, ஒரு கையில் துப்பாக்கியோடும் மறு கையில் பட்டாக்கத்தியோடும் பலிகடாவாகி விடுவார்கள். இவர்களுக்கிடையில் இருப்பவன்தான் அல்ஃபா நிந்தியாயே. பிரான்ஸ் ராணுவம் தங்களை எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்கிறது என்று புரிந்தவன்- தெரிந்தவன். பதுங்கு குழிக்குள்ளிருந்து இவன் வெளியேறிவிட்டால் வெகுநேரம் கழித்து உயிரோடும் முகத்தில் ததும்பும் புன்னகையோடும் கணிப்பாகத் திரும்பி வருவான்- எப்படி என்றால் ஒரு துப்பாக்கியையும் அதனை ஏந்திய எதிரியின் கையையும் வெட்டிக்கொண்டு. இப்படி இவன் நாவல் முழுக்க ஏழு எட்டு எதிரிகளின் கைகளை வெட்டிக்கொண்டு வருகிறான். இது கேப்டன் இட்ட  உத்தரவெல்லாம் கிடையாது. ஆனால் இவன் அதைத்தான் திரும்பத் திரும்பச் செய்கிறான். இதனால் உயிரைக் குடிக்கும் ”தெய்ம்” தீய சக்தி என இவன் சக வீரர்களால் கருதப்படுகிறான். எதிரியின் கணுக்காலைக்கட்டி வைத்து வயிற்றிலிருக்கும் எல்லா உறுப்புகளையும் மழையில், பனியில், நிலவொளியில் பரப்பி வைத்து முகத்தைத் திருப்பி உயிர் பிரிவதைப் பார்த்துப் பிறகு நிஜமான மனித நேயத்துடன் குரல் வளையை நெரிப்பது அவனின் ஆகச்சிறந்த கலையாக இருக்கிறது. இதையெல்லாம் செவ்வனே நிறைவேற்றிய பிறகு அல்ஃபா நிந்தியாயே கூறிக்கொள்கிறான். – “இரவில் எல்லா இரத்தமும் கறுப்புத்தான்.”  பொருள் பொதிந்த சிறந்த வாசகம். இதே வாசகத்தைத்தான் இந்நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அன்னா மோஸ்கோவாக்கிஸ் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ‘At Night All Blood is Black”. கொலை புரிவதற்கு முன்னதாக நிந்தியாயே செத்துப்போன தன் நண்பன் மதெம்பா தியோப்பை நினைத்து தியானிப்பதும் உண்டு. நண்பனை மூன்று தடவை கெஞ்ச விட்டதைப் போல எதிரியும் மூன்று தடவை கெஞ்சட்டும் என்று காத்திருப்பதில்லை. அவன் நண்பனுக்குக் காட்டாத மனித நேயத்தை அவன் எதிரிகளுக்குக் காட்டுகிறான். அதை மனிதாபிமானம் என்கிறான்.

       நிந்தியாயே முதல் மூன்று கைகளை வெட்டிக்கொண்டு வரும் போது அவனை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். பிறகு வதந்தி பரவத் தொடங்குகிறது. இராணுவத்தினர் எல்லோரும் அவர்கள் கறுப்பர்களானாலும் வெள்ளையார்களானாலும் அவனை சூனியக்காரன், மக்களின் உள் உறுப்புகளைத் தின்பவன் என்று நம்புகிறார்கள். தன் சகோதரனுக்கு மேலான மதெம்பா தியோப்பின் உள் உறுப்புகளைக்கூட அவன் இறப்பதற்கு முன்பாகவே தின்றுவிட்டதாகக் கூறுகிறார்கள்.

          இந்தச்சிறிய பிரெஞ்சு நாவலில் பேசுவதற்கு வாய்ப்பான இடங்கள் நிறைய உண்டு. ஆனால் நான் அல்ஃபா நிந்தியாயே கதா பாத்திரத்தை மட்டுமே மையப்படுத்தி இக்கட்டுஐரயை எழுதியிருக்கிறேன். 21-ஆம் நுாற்றாண்டின் இலக்கிய வாசகர்களுக்குக் கிடைத்த விநோத குணாதிசயம் நிந்தியாயே. ஆனால் அவன் நம் காலத்திற்கெல்லாம் முந்தைய மனிதன். நாவல் முழுக்க அவன் பேசிக்கொண்டேயிருக்கிறான். 25 அத்தியாயங்களிலும் அவனுடைய குரல் விதம் விதமாக ஏற்ற இறக்கங்களுடன் ஒலித்த படியே இருக்கிறது.

        நிந்தியாயே தன் சகோதரனுக்கு மேலான மதெம்பா தியோப்பைத் தான் கருணைக் கொலை செய்யாமல் விட்டதை மட்டுமலா்ல, அவன் வயிறு கிழிக்கப்பட்டு இறந்ததை மட்டுமல்ல, அவனுடைய இனக்குறியீடாக இருந்த மயிலை,கொண்டை வைத்த கொக்கு எனத் தான் கேலி செய்ததையும் பேசுகிறான். அவன் வெட்டிக் கொண்டு வந்திருந்த கையை வைத்துக்கொண்டு அவனுடைய வெள்ளைக்கார நண்பன் ழான்பத்தீஸ்த் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டதையும், பிறகு அந்த விளையாட்டின் காரணமாகவே அவன் எதிரிகளால் கொல்லப்பட்டதையும் கூறுகிறான். ஃபிரதியாமோடு அனுபவித்த சுகத்தை, டாக்டர் ஃபிரான்சுவாவின் பல மகள்களில் ஒருத்தியான மிஸ்.பிரான்சுவா நீலநிறக் கண்களால் தன் உடலின் நடுப்பகுதியை வட்டமிட்டதை, பிறகொரு சந்தர்ப்பத்தில் அவளுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டதையும் சொல்கிறான்.

   அல்ஃபா நிந்தியாயேவின் தற்புகழ்ச்சியையும் (Self Complacency) நாவலில் நாம் ஆங்காங்கே கேட்கிறோம். அவன் தன்னை அழகன் என்று கூறிக்கொள்ளும் வேளையில், சகோதரனுக்கும் மேலான நண்பனை அழகற்றவன்- குள்ளமானவன்-பலவீனன் என்று கருதுகிறான். அவன் தன்னை சுய இழிவு செய்து கொள்வதிலிருந்து தான் நாவல் தொடங்குகிறது. ஆனால் இடையிடையே அவனுடைய பெருமிதக் குரலையும் கேட்க முடிகிறது. எல்லாவற்றையும் பெண்ணின் உடல்பாகமாகக் கற்பனை செய்ய அவன் முயற்சிக்கிறான். அவனைக் காப்பாற்றி வைத்திருக்கின்ற பதுங்கு குழியை ஒரு பெண்ணின் பிறப்புறுப்பாகக் காண்பதும், அவனைக் குறித்த வதந்தி கிளம்பிப் பரவத் தொடங்கும்போது, “அது துணிகளை அவிழ்த்துப் போட ஆரம்பிக்கும் ஒரு பெண் போல ஆகிவிட்டது” என்று எண்ணவும் அவனால் முடிகிறது. அந்த வதந்தியை தவறான வாழ்க்கை வாழும் ஒரு பெண் போல தொடர்ந்து வந்து கொண்டிருந்தது என்றும் ஓரிடத்தில் சிந்திக்கிறான். கேப்டன் அர்மானை  “மனம் போல நடந்துகொள்ளும் ஒரு பெண்ணை விரும்புவது போல அவன் போரை விரும்பினான்” என்று நினைக்கிறான்.

          அதிகாலைப் பொழுதைக் கொண்டே அன்றைய நாள் நன்றாக இருக்குமா அல்லது மோசமாக இருக்குமா என்று சொல்லிவிடலாம் என்று அவன் நினைப்பதெல்லாம் தான் அவனை ஒரு நாட்டுப்புறத்தான் என நம்ப வைக்கிறது. மற்றபடி அவனே கூறிக்கொள்வதைப் போல ”துடிக்கும் மீனும் நான்- மிதக்கும் தோணியும் நான் – வலையும் நான்-மீனவனும் நான்-“. எல்லாம் அவன்தான்.

     தாவித் தியோப் இப்படி ஒரு கதாபாத்திரத்தை எப்படிப் புனைந்தார் என்று யோசித்துப் பார்த்தேன். அவருடைய முப்பாட்டன் பாட்டனுக்குச் சொல்லி, பாட்டன் தகப்பனுக்குச் சொல்லி, தகப்பனும் பிள்ளைக்குச் சொல்லிய சம்பவங்களால் புனைவுற்ற நாவலாகவே ஆத்ம சகோதரனை நான் கருதுகிறேன். எதிரிகளின் கைகளைத் துண்டித்துக்கொண்டு வந்தவன் பிறகு அந்தக் கைகளை படங்களாகவும் வரைந்து காட்டுகிறான். முதலாம் உலகப் போர் குறித்த பல ரகசியங்கள் நுாற்றாண்டு கடந்தும் இன்னும் வெளியாகவில்லை என்கிறார்கள். அந்த ரகசியங்களுக்குள் அல்ஃபா நித்தியாயே போன்ற விசித்திர மனிதர்கள் ஆயிரக் கணக்கில் இருக்கக் கூடும்.  நாம் பணக்காரனாகிவிட்டால் அம்மாவைத் தேடிக் கண்டு பிடித்துவிடலாம்- அவளைத் துாக்கிச் சென்ற மூரிஷ் குதிரை வீரர்களிடமிருந்து அவளைத் திருப்பி வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் அலைவுறுவார்களாக இருக்கக்கூடும்.

     இந்த சிறிய நாவல் முதலாம் உலகப் போரைக் குறித்த நம்முடைய மீள் சிந்தனையைக் கோருகிறது. நம் பாதங்களுக்குக் கீழே பதுங்கு குழிகளெனும் இன்னொரு உலகம் இருந்திருக்கிறது என்பதை நினைவூட்டுகிறது.

 

 

One comment

  1. ஆத்ம சகோதரன் நாவல் குறித்து நல்லதொரு விமர்சனம் எழுதப்பட்டிருக்கிறது. முதலாம் உலகப் போர் குறித்தும் இந்த நாவலை குறித்தும் நல்ல தெளிவை ஒரு வாசகம் தேடிக் கொள்ள முடியும். வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *