சென்னை புத்தகத் திருவிழா-2023- 19.மீன்கள் -தெளிவத்தை ஜோசப்

தெளிவத்தை ஜோசப் இலங்கை மலையக பகுதியில் வாழ்ந்த எழுத்தாளர், தமிழகத்தில் இருந்து பஞ்சம் காரணமாக நான்கு அல்லது ஐந்து தலைமுறைக்கு முன்பு பிழைப்பிற்காக இலங்கை சென்றவர்களே இன்றைய மலையக மக்கள், அங்கு தேயிலை தோட்டங்களில் செய்தனர், அந்த வேலைச் சூழல் என்பது கிட்டத்தட்ட கொத்தடிமை போன்ற நிலைதான், மிக குறைவான ஊதியம், தங்குவதற்கு மிக சிறிய அறை, கடினமான பணிச் சூழல்.  நல்ல வேலை என்று எண்ணி இங்கிருந்து சென்று பிறகு திரும்ப இயலாது மாட்டி அங்கேயே நிரந்தரமாக தங்கியவர்கள். தெளிவத்தை ஜோசப் இந்த வாழ்வை, இதில் இருக்கும் துன்ப நிலைகளை, வாழ்வனுபவங்களை கதைகளாக்கியவர்.

மீன்கள் எனும் தலைப்பு கொண்ட சிறுகதை தொகுப்பு தெளிவத்தை எழுதிய சிறுகதைகளிலிருந்து ஜெயமோகன் தேர்ந்தெடுத்து தொகுத்த தொகுப்பு, இந்த தொகுப்பில் மொத்தம் 7 சிறுகதைகள் இருக்கின்றன, பாவ ரட்சிண்யம் சிறுகதை தவிர மற்ற 6 கதைகள் மிக பிடித்திருந்தன, மிக சிறந்த இலக்கிய தரத்துடன் இருந்தன. இந்த சிறுகதைகளில் சிறந்த சிறுதையாக மீன்கள் சிறுகதையை சொல்லி அதை பற்றி அணிந்துரையில் ஜெயமோகன் இக்கதை ஏன் சிறப்பானது என்று விளக்கி இருக்கிறார், எனக்கு இந்த சிறுகதையை விட கத்தியின்றி ரத்தமின்றி எனும் சிறுகதை இன்னும் சிறப்பானது என்று தோன்றியது.

மீன்கள் சிறுகதை தொழிலாளர், கங்காணி, துரை என இம்மூவரில் இருக்கும் அதிகார அடுக்கு, ஏமாற்றுதல் அதில் இருக்கும் தந்திரங்கள் என்பதை கதை  பேசினாலும், கதையின் ஆன்மா என்பது தொழிலாளிக்கு நிகழும் அந்த வெளியே சொல்ல முடியாத  இழிவு தருணம்தான், ஒரு மிகச்சிறிய அறை மட்டுமே அவனுக்கு அளிக்கப் படுகிறது, அதில் அந்த தொழிலாளியின் வளர்ந்த பெண்கள் மற்றும் அவர் மனைவி தங்கி இருக்கிறார்கள். இரவில் மனைவி என்று நினைத்து மகளை தெரியாமல் தவறாக தொட்டு விட்டார், அல்லது ஏதோ ஆரம்பித்தார், பிறகு விபரம் புரிந்து வெளியே வந்து அது பற்றிய குற்ற உணர்ச்சியில் இருக்கிறார். அறை பத்தவில்லை என்று முன்பே துறையிடமும், கங்காணியிடம் பலமுறை முறையிட்டும் அவனுக்கு அறை கிடைக்க வில்லை. அறை கேட்டு அதில் தொடர்ந்து அவன் ஏமாற்றப் படுகிறான். இந்த கதை அவன் செய்தது தவறு என்றாலும் அதன் பின்னிருக்கும் காரணம் அறை பற்றாக்குறை என்று செல்கிறது. எனக்கு இது காரணம் என்று இருந்தாலும் இந்த காரணத்தை நோக்கி நகர்வதாலேயே இந்த கதை மிக சிறந்த என்ற அந்தஸ்தை இழக்கிறது என்று தோன்றுகிறது. ஏனெனில் சிறு அறையில் மொத்த குடும்பமும் தங்குவது என்பது அங்கு மட்டுமல்ல இங்கும் இருக்கும் சூழல்தான், அடித்தட்டில் இப்படியான வாழும் சூழலில் இருக்கும் சமூகம் இந்த பிரச்சனையை எவ்விதம் தவிர்க்கிறது எனில் பிள்ளைகள் ஓரளவு வளர்ந்த பிறகு பெற்றோர் பாலுறவை தியாகம் செய்கிறார்கள். அவர்களுக்கு எல்லாமே பிள்ளைகள் வாழ்க்கைதான். இதுவே இயல்பான ஒரு அடித்தட்டு சூழல். மீன்கள் கதை நாயகன் இந்த தியாகத்தை நோக்கி செல்லவில்லை. அவனுக்கு இழிவாக இருந்தது மனைவிக்கு பதிலாக பிள்ளையை.. என்று தோன்றியதுதான். பிள்ளைகள் வளர்ந்த பின்பும் இந்த சல்லாபம் இருக்கிறது என்பதும், அது பிள்ளைக்கு தெரியவந்தது குறித்து அவன் இழிவாக எண்ணவில்லை அல்லது கதை அந்த பகுதியை நோக்கி சொல்லவில்லை. இதுதான் இந்த கதையை ஒரு படி தகுதி இறக்கி விடுகிறது என்று தோன்றுகிறது.

மாறாக எனக்கு “கத்தியின்றி ரத்தமின்றி” சிறுகதை அட்டகாசமான ஒன்றாக தோன்றியது. கத்தியின்றி ரத்தமின்றி சிறுகதையில் வரும் நாயகன் தோட்ட தொழிலாளர்களின் தலைவர் (அந்த பகுதி) காந்தியை ஆதர்சமாக கொண்டவர். கதையின் துவக்கமே அவர் தன் அறையில் காந்தி படத்திற்கு மாலை அணிவிப்பதாக வரும். அந்த சூழலில் ஒரு சிங்கள டாக்டர் வருவார். அவர் காந்தி படத்தை சொல்லி, இது எங்கள் நாடு என்று சொல்ல வேண்டியது ஆனால் வீட்டில் காந்தி, நேரு, போஸ் படங்களை மாட்டிக் கொள்வது என்று விமர்சிப்பார். அவரது பேச்சின் உள்ளுறை நீங்கள் ( மலையக தமிழர்கள் ) அந்நியர்கள் அதனால் நீங்கள் வெளியேற்ற பட வேண்டியவர்கள் என்ற எண்ணம் இருக்கும். அவருக்கு பதிலாக தலைவர், இவர்கள் (காந்தி ) எங்களை அடிக்க ஆட்கள் கூட்டி வர வில்லை எங்களுக்காக அடிவாங்கினார்கள் என்பார்!

தலைவர் ( நாயகன் ) காந்தியின் “தென்னப்ரிக்காவில் காந்தி”  என்ற நூலை வாசிப்பதாக வரும். அதில் ஆங்கிலேயர்கள் பகுதியில் பிரவேசித்தற்காக காந்தியை ஒரு காவலாளி எட்டி மிதிக்கும் பகுதியை தலைவர் படிப்பார். காந்தியிடம் எல்லோரும் வழக்கு கொடுக்க சொன்னதற்கு “அடித்தவன் சாவி கொடுக்கப்பட்டு ஆடியவன், சாவி கொடுத்தவன் வேறு யாரோ ” என்கிறார் காந்தி, மேலும் ” அடிவாங்கியதால் எனக்கு அவமானம் இல்லை, என் சமூகத்தையே உதைத்திருக்கிறான்! ” என்கிறார். இதை வாசித்த தலைவர் கண்கள் கலங்குகிறார், இவரல்லவா மகாத்மா என்கிறார்!

மேலும் தலைவர் காந்தி பற்றி பேச ஒப்பு கொண்ட மேடை பேச்சிற்கு “கத்தியின்றி ரத்தமின்றி ” எனும் தலைப்பை அளிக்கிறார்.

தலைவரின் வேலை என்பது தோட்ட தொழிலுக்கு ஆட்களை அழைத்து செல்வது, அப்படி ஒரு தோட்டத்திற்கு வேலைக்காக தொழிலாளர்களை அழைத்து சென்று பணியை ஆரம்பிகிறார். அன்று கடும் மழை பெய்து வேலை செய்ய முடியாமல் ஆகிறது. காலை 9 மணிதான் ஆகியிருக்கிறது, மழை விடாமல் பெய்கிறது மேலும் மழைக்காக மரம் ஒதுங்கி நிற்கும் தொழிலாளர்கள் மீது கிளை முறிந்து விழும் அபாயமும் இருக்கிறது. தலைவர் இனி பணி செய்ய வாய்ப்பில்லை என்று எண்ணி துரையிடம் செல்கிறார். வேலையை நிறுத்தி கொள்கிறோம் என்கிறார். துரை சரி என்று சொல்லி அப்படியானால் கூலி என்று கேட்கிறார். தலைவர் மழை பெய்யாமல் இருந்தால் முழு வேலையும் செய்திருப்போம், மழையால்தான் தடை, எனவே முழுநாள் கூலி வேண்டும் என்கிறார், துரை தலைவரிடம் சரி என்று சொல்லி அனுப்பி விட்டு பிறகு கணக்கு பிள்ளையிடம் மணி 9 தான் ஆகிறது, முழு கூலி கேட்கிறார்கள். அரை நாளாவது மதியம் 12 மணி வரை வேலை வாங்கு என்று சொல்லி அனுப்பி விடுகிறார்.

கணக்கு பிள்ளைக்கு தொழிலாளர்களை அனுப்பினால் துரையிடம் பதில் சொல்ல முடியாது என்று எண்ணி தலைவரிடம் சென்று பணியை தொடர சொல்கிறார், தலைவர் துரையே போக சொல்லிவிட்டார், உங்களுக்கு என்ன என்று கேட்க வாக்குவாதம் ஆகிறது. கணக்குப்பிள்ளை வேலை செய்யவேண்டும் என்று உறுதியாக நிற்கிறார். தலைவர் தொழிலாளர்களுக்கு ஏதாவது ஆகி உயிர் போய்விட்டால் என்று கேட்டதற்கு கணக்கப்பிள்ளை கேலியாக இறந்தால் மண் ஈரத்தால் இழகிதான் இருக்கிறது எளிதாக புதைத்து கொள்ளலாம் என்கிறார். தலைவர் கோபம் ஆகி தன்னிடம் இருந்த பணிக் கத்தியால் கணக்கப்பிள்ளை தோளில் வெட்ட கணக்கு பிள்ளை இறக்கிறார்! இதுதான் கதை.

காந்தி சாவி கொடுத்தவன் யாரோ என்று சொல்லியதை படித்திருந்தும் தலைவர் அறிவார்ந்த சிந்தனையில் இல்லாமல் உணர்ச்சியில் தன்னிலை இழந்து தவறிழைத்து விடுகிறார். இதை அப்படியே ஒட்டுமொத்த இலங்கையை கொண்டும் பார்க்க இயலும், உணர்ச்சி திசையில் இறங்கி தோல்வியில், இழப்பில் நின்றோம்.  அங்கிருக்கும் எழுத்தாளன் இதை உணர்ந்து தன் கதை வழியாக இதை முன்னுணர்ந்து முன்வைக்கிறான் அல்லது இந்த சிறுகதை உணர்ச்சி வழியாக செல்வதில் இருக்கும் ஆபத்தை சொல்கிறது. இன்னொன்று காந்தி வழியாக நமக்கு அகிம்சை வழியே கத்தியின்றி ரத்தமின்றி வழி காண முடியும் என்பதற்கு ஒரு உதாரண எடுத்துக்காட்டு நம் முன் இருக்கிறது என்றும் காட்டுகிறார்!

இந்த தொகுப்பில் இன்னொரு கதையில் ஒரு பஸ் ஸ்டாப்பில் பாட்டு புக்கு விற்பவன் பாடும் பாட்டு ஒரு வரும். அதில் கணக்கு பிள்ளையை கொன்ற கதை வரும். நிஜ அதிகாரம் என்பது பலிக்கடா மீது ஏறி வரும். நாம் பலிக்கடாவை கொன்று அதிகாரத்தை கொண்டு விட்டோம் என்று எண்ணி ஏமாறுவோம்!

இந்த சிறுகதையை வைத்து அந்நிய சூழலில் வாழும் எல்லோரையும் கூட பொருத்தி பார்க்க இயலும். தமிழகத்தில் குறைந்த கூலிக்கு வேலையாட்கள் பணி செய்கிறார்கள் என்று கிண்டல் அடிக்கிறோம். அதிக கூலி தந்தால் அவர்கள் வாங்கி கொள்ள மாட்டார்களா என்ன? ஒரு பஞ்சு மில்லில் ஒரிசா பெண் ஒடுக்குமுறையில் சிக்கி சூப்பர்வைசரால் கடுமையாக தாக்க பட்ட வீடியோவை நாம் பார்த்தோமே!

இந்த சிறுகதை தொகுப்பில் இருக்கும் பல கதைகள் சிறுபான்மை சமூகமாக இருப்பதால் வலுவற்று ஒடுக்கப்பட்டு இருக்கும் சூழலை சொல்கிறது. பயணம் என்ற சிறுகதை ஒரு பஸ் பயணத்தை சொல்கிறது. அதில் சிங்களர்கள் வரிசையில் முன்னால் வந்து நின்று பஸ்ஸில் இடம் பிடித்து கொள்கின்றனர். அவர்கள் இறங்க வேண்டிய ஸ்டாப் என்றால் அது நிற்காத ஸ்டாப் என்றால் கூட நிற்கிறது. தமிழர்கள் பஸ்ஸில் கோழி கூண்டில் அடைக்க பட்ட பிராய்லர் கோழிகள் போல இருக்கிறார்கள். குழந்தை வைத்து கொண்டிருந்த பெண்ணாக இருந்தாலும்  பஸ்ஸில் அமர கூட வசதி இல்லாமல் செல்கிறார்கள்.

உண்மையில் தெளிவத்தை ஜோசப் வைக்கும் உலகம் வெறும் மலையகம் சார்ந்த ஒன்றுக்குள் அடங்குவதாக எண்ணவில்லை. எங்கெல்லாம் வாழ வேறு இடம் நகர்ந்து, வந்த இடத்தில் சிறுபான்மையினராக வலுவற்று வாழும் சமூகங்கள் அனைத்திலும் பொருத்தி பார்க்க முடியும் என்று எண்ணுகிறேன்!

இதில் இருக்கும் 8 கதைகள் ஒவ்வொன்றாக இப்படி விரிவாக வாசிக்கும், காணும் சாத்தியம் கொண்டவைகள்.

வெளியீடு : நற்றிணை பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *