பிரயாகை நாவலில் ஒரு காட்சியில் உக்ர சண்டிகை தேவிக்கு மனிதனின் இரத்தமும் , துண்டான இரு தலைகளும் படையலாக வைக்க படுகிறது , கிட்டத்தட்ட இந்த நாவலில் நாயகியான திரௌபதியும் உக்ர சண்டிகையின் அம்சமாக அதை போன்ற படையல்களை விரும்பும் குணம் கொண்டவளாக காட்ட படுகிறாள் . அவளது பிறப்பினை முன்னறிவி்க்கும் நிகழ்வு தொடங்கி ,அவள் பாண்டவர்களை மணப்பது வரை உள்ள நிகழ்வுகள் கொண்டது இந்த பிரயாகை நாவல் .
வரலாறு என்பது ஆளும் வர்க்கத்தின் / ஆள வரும் / ஆள விரும்பும் வர்க்கங்களின் விருப்பங்களின் ,ஆசைகளின் ,செயல்களின் , அவர்களின் வெற்றி தோல்விகளின் மோதல் எனும் எண்ணத்தை இந்த நாவல் உருவாக்குகிறது . இந்த மோதல்கள் , அதனுடன் இணையும் வெவ்வேறு மோதல்கள் பின்னி உருவாகி வருவதே வரலாறு என்று தோன்றுகிறது இந்த நாவல் வரிசையை வாசிக்கும் போது . ஒரு பக்கம் குந்தியும் , சகுனியும் தங்கள் கனவுக்காக மோதுகிறார்கள், இந்த மோதலை மேலும் தீவிரமாக்க துருபதனின் நெஞ்சில் இருக்கும் நெருப்பு திரௌபதியாக வந்து பாண்டவர்களுடன் வந்து இணைந்து கொள்கிறது . சில விசயங்களை யோசிக்க ஆச்சிர்யமாக இருக்கிறது . திரௌபதி தோன்ற துரோணர் காரணமாக இருக்கிறார் ,அதாவது துருபதினில் அழியாத நெருப்பை அவமதிப்பு வழியாக உருவாக்குகிறார் , அந்த துருபதனில் இருக்கும் நெருப்பு , தவிப்பு திரௌபதியை அவனுக்கு அளிக்கிறது !
ஆனால் நாவல் இன்னொரு பக்கம் இப்படி யோசிப்பதை மிகை கற்பனை என்றாக்கி,இந்த நிலத்தில் இருக்கும் மக்கள் குழுக்கள் தங்களை உயர்த்தி கொள்ள நிகழ்த்தும் மோதலாக அப்படியே மார்க்சிய பொருள்முதல்வாத நோக்கு அடிப்படையிலும் காட்டுகிறது . ஒருபக்கம் ஏற்கனவே வளர்ந்த ,அதாவது சத்ரியர்களாக ஆகி விட்ட அரசுகள் , அதை மீறி மேலே வர முயற்சிக்கும் யாதவர்கள் போன்ற சமூகங்கள் . இவைகளுக்கு இடையே நிகழும் வளர்ச்சிக்கான மோதல்கள் என நாவல் இன்னொரு விதத்தில் தன்னை காட்டி கொள்கிறது .
எனக்கு இந்த நாவலில் மிக பிடித்தது , பிடித்தவர் , நாவலின் துவக்கதிலேயே வந்து விடும் துருவன் . அவனது விருப்பமான நிலை பெயராமை . இந்த நாவலின் உச்ச பகுதிகளில் ஒன்று இவன் வரும் இடம் . ஜெயமோகன் எழுத்தின் ,புனைவின் உச்சம் என காட்டும் இடம் இது . முதலில் துருவனின் கதை , அவன் வந்து வானில் நிலைகொள்வது , பிறகு அவனை பிரஸ்னர் கண்டுகொள்வது , அந்த கண்டைதல் வழியாக வானின் மையம் அமைவது ,திசைகள் அமைவது , மையம் எனும் எண்ணம் வழியாக சுழியம் கண்டடைய படுவது , இது மிக அழகாக புனைவில் வந்து அமர்கிறது . அந்த இமைய பனிவெளி அதில் திசை அறியாமல் ரிஷி பிரஸ்னர் மற்றும் அவர் குழு திணறுவது ,பிறகு நகராத துருவனை கண்ணடைந்து அவனை கொண்டு திசைகளை கண்டடைவது ,இந்த நிகழ்வை அந்த இமய நிலத்திலேயே இருந்து தௌம்ரர் சொல்வது ,அப்போது நிலவும் குளிர் , பனி, பிறகு அவர்கள் கோமுகத்தில் வடமீனை பார்ப்பது . இந்த பகுதிகள் எல்லாம் வாசிக்கும் போது அந்த நிலத்தில் ,அந்த பணிவெளியில் நின்று காண்பதை ஒட்டிய வாசிப்பு அனுபவம் கிடைக்கிறது .
பகன் கதை இந்த நாவலில் வருகிறது . முன்பு என் நினைவில் ( சிறுவயது நினைவு ) இருந்த எண்ணம் பகன் தீயவன் ,அதனால் பீமன் அவனை கொல்கிறான் என்பது , ஆனால் இந்த நாவல் பகனிற்கு அவன் ஏன் அந்த தீய குணத்தை வந்தடைந்தான் என்பதற்கு பின்னணி காரணத்தை அளிக்கிறது ! அவனது மக்கள் கருனையற்று கொல்லப்படுகின்றனர் ,அது அவனை அப்படி மூர்க்கனாக ஆக்கி விடுகிறது என . மிக விரிவாக அவனது வரலாறு சொல்லப்படுகிறது , காவிய நாயகன் அளவுக்கு . அசுர குல வரலாறு , இராவணனின் குலம், பிறகு வீழ்ந்து போனது என . இப்போது நாம் சாதரணமாக விவசாயத்தை , மாடு வளர்ப்பதை இயற்கையை ஒட்டிய செயல்களாக பார்ப்போம் , ஆனால் இதில் பகன் கதையை படித்தால் நேர் எதிரான எண்ணம் நம்மில் உருவாகும் , மாடு மேய்த்தலும் , விவசாயமும் காடுகளை அழித்தே உருவாக்க படுகிறது . காடுகளில் வாழ்ந்த அசுரர்கள் இவர்களால் பாதிக்க படுகிறார்கள் , காடுகள் குறைவது இவர்களை வாழ வழியற்றவர்களாக ஆக்குகிறது . ஆரம்பத்தில் சொல்ல வந்ததை விட்டு விட்டேன் . இயல்பாக ஒருவன் தீயவனாக இருக்க முடியாதா என்ற பகன் கதையை வாசிக்கும் போது தோன்றியது . அந்த நிலைக்கு தள்ளப்படும் போதுதான் தீயவனாக ஆகிறானா என்ற எண்ணம் வந்தது . இதை எழுதும் போது கணிகன் ஞாபகத்திற்கு வருகிறார் , இயல்பாக தீமை மனநிலை கொண்டவர் , இந்த நாவலில்தான் அறிமுகம் ஆகிறார் , அறிமுக காட்சியே அவர் மற்றவர்களின் மனதை தன் எண்ணத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கும் திறன் கொண்டவராக காட்டும் . அதேசமயம் அவரது உடல்குறை அவரது குணத்தை வடிவமைத்த முக்கிய காரணம் என்ற எண்ணம் ஏற்படுகிறது ,ஏனெனில் சகுனி குணம் மாறுவதும் , அவனுக்கு உடலில் குறை ஏற்படுவதும் ஒரே சமயத்தில் நாவலில் நிகழ்கிறது .
துருவன் மற்றும் திரௌபதி இருவருக்கும் உள்ள தொடர்பு என்பது அவள் கங்கை , துருவனின் சகோதரி , துருவன் நிலை பெயராமை என்றால் அவள் நிலையற்றவற்றவள் என்ற கதை சொல்லும் அம்சங்கள் தாண்டி என்ன மேலதிக தொடர்பு இருக்கும் என்று தேடினேன் . திரௌபதிக்குள் துருவனின் நிலை பெயராமை உண்டு என்று தோன்றியது . அவளில் சஞ்சலங்கள் இல்லை , குழப்பங்கள் இல்லை, சுயம்பரம் சமயத்தில் மட்டும் தேர்வு சார்ந்து சிறு தடுமாற்றம் மட்டும் இருந்தது என்று தோன்றியது . பிறகு அதையும் அவள் எளிதாக கடந்து விட்டாள் என்று தோன்றியது . இதை விட இன்னொரு ஒப்புமை தோன்றியது . எப்படி துருவன் வின்னின் மையமாக இருக்கிறானோ அது போல இவள் பாரத கதை நாயகர்களின் மையமாக இருக்கிறாள் என்று தோன்றியது , அதாவது பாண்டவர்கள் தாண்டி கர்ணன் போன்ற சுயம்பரம் வந்த இளவரசர்கள் , அர்சர்கள் உட்பட . மேலும் துருபதன் அவன் சகோதரர்கள் , துருபதன் மகன்கள் போன்றவர்களும் திரௌபதியை மையமாக கொண்டவர்கள் கூட .
இடும்பன் , இடும்பி, கடோத்கஜன் வரும்பகுதிகள் எல்லாம் அழகானவை .
முன்பு ஒருமுறை சுயம்பர பகுதிகளை வாசித்திருந்த போது அந்த வில் என்பது திரௌபதியின் மனதை காட்டும் ஒரு உருவகம் என்று எண்ணி இருந்தேன் , நாவலில் கூட பீமன் அவ்வாறு சொல்வான் , அந்த வில்லை யார் எடுப்பது என்பதை அவள் முடிவு செய்கிறாள் என்ற ரீதியில் . இப்போது படிக்கும் போது அவ்வாறு தோன்ற வில்லை . அந்த வில்லில் மறைமுக பொறிகள் உண்டு ,அதை அறிந்து அதற்கு ஏற்ப அதை இயக்க வேண்டும் , அவ்வளவுதான் அந்த வில்லில் இருப்பது என்று தோன்றியது . திரௌபதி அவள் விரும்பியன் வரும் போது நிமிர்ந்து பார்க்கிறாள் . பீமன் ,அர்ஜூனன் வரும்பொழுது பார்ப்பவள் கர்ணனை பார்க்க வில்லை , கர்ணன் கடைசி கிளியிடம் தோற்க அவரது குருவின் சாபம் மட்டும் அல்ல ,இவளது விருப்பமின்மையை கர்ணன் உணர்ந்ததும் ஒரு காரணம் என்று தோன்றியது .
திரௌபதி போர்களை , இரத்த பலிகளை விரும்புபவள் என்பது அவள் சுயம்பரம் பின்பு நடந்த மோதலை தன் பீடத்தில் அமர்ந்து ரசிக்கும் காட்சியிலும் , நாவலின் கடைசி அத்யாயத்திலும் காண முடிந்தது !
நாவலில் பிடித்த இடம் என்றால் தருமன் திரௌபதியையும் , மாயையையும் ஒன்றாக மதிக்கும் பார்க்கும் இடம் . இந்த மனநிலை எனக்கு பிடித்திருந்தது . பீமன் அந்த குணம் கொண்டவன் என்றாலும் கர்ணனை சூதன் என்று சொல்லி எதிர்க்கும் காட்சிகள் ( முந்திய நாவலில்) பிறகு அவனை என்னால் அப்படி காண முடிய வில்லை .
பிடித்த விவாத இடம் என்பது தர்மன் , திரௌபதி விவாதிக்கும் இடம் , நூல்கள் சொல்லும் நெறியை அப்படியே கைகொள்ளாமல் அந்த சூழல் சார்ந்து ,அந்த நபர்கள் சார்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று உணர்த்தும் இடம் . சமகாலத்தை, சமகாலத்தில் மாற்ற முடியாத நெறிகள் கொண்ட நூல்கள் என்று சொல்லப்படுவதை எல்லாம் இதை யொட்டி யோசிக்க முடிந்தது .
ReplyForward |