நினைவோடையில் நீந்தும் மீன்கள் -3

பிரம்மஸ்ரீ மாணிக்கம் பிள்ளைக்கு மூன்று பெண்மக்கள். ஓர் ஆண். மூத்த வாரிசான குத்தாலிங்கம் தவமாய் தவமிருந்து பெற்ற மகன். கஞ்சாவிற்கு பலியானவர். பெரிய குடும்பம் சரிந்து கட்ட மண்ணாகப் போகக் காரணம் ஆனவர். நான்கு மக்களில் இரண்டு கிறுக்குகள். அதில் ஒருவர் என் அம்மா.

பால்ய நாட்கள் இலைகளில் படிந்த பனித்துளிகள் போல தளும்பிக்கொண்டே இருக்கின்றன. அவை விழுந்து இருந்த தடமின்றி காணாமல் போய்விடாதா என்று ஏங்கிய காலம் உண்டு. காலப்போக்கில் கல் உருக்கள் போல அவை பரிணாமம் கண்டுள்ளன. அவற்றின் இருப்பாக இன்றும் நிம்மதியான உறக்கம் வாய்ப்பதில்லை. பதறி எழுந்து என்ன ஏது? எங்கிருக்கிறேன்? என்ற தவிப்பு நிசிகள் தோறும் ஏற்படுகிறது. எப்போது துாங்கினாலும் உறக்கத்தின் இடையே பாதுகாப்பற்ற அபாயத்தின் மத்தியில் இருப்பதைப்போல ஒரு நிலை கொள்ளாமை உண்டு. இருளில் பிறந்து இருளைத்தின்று இருளாக வளர்ந்து நிற்கிறேன்.  சூடு கண்ட பூனையின் மனநிலை. சக மனிதர்களின் மீது அச்சமும் அவ நம்பிக்கையும் என் இயல்பு. மனிதன் மகத்தானவன் என்பதில் தீராத ஐயம். மகத்தான சல்லிப்பயல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இவை அத்தனைக்கும் அம்மா ஒரு காரணமாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது.

இரணடு  விதமான அம்மா என் நினைவுகளில் வந்து ஊடாடிக் கொண்டிருக்கிறாள். இராயகிரியில் இருந்தவரை அம்மாவின் மீதான ஈர்ப்பும் அன்பும் வற்றியதே இல்லை. அவளை நான் படுத்திக்கொண்டிருந்தேன். என்னைக்கண்டு அவள் அஞ்சிய காலம். அப்பாவைப் போல அரளிக்கொட்டைகள் அரைத்துத்தின்று செத்துவிடுவேன் என்று மிரட்டுவது அன்றாடச் சாகசம். விதவையின் பாடுகளை அறிந்துகொள்ள வாய்க்காத  பதின். மங்களாபுரம் அநாதைகள் விடுதியில் தங்கி, கல்வி கற்ற நாட்கள். அம்மாவைப் பற்றிய எண்ணங்களே தித்திப்பாக இருக்கும். செம்மண் ஒளிரும் ஒற்றையடிப் பாதையில், பனைமரங்களின் மத்தியில் பரும்பின் பச்சைச் சருமத்தின் பகைப்புலத்தில் முந்தானை காற்றில் பறக்க அம்மா வரும் காட்சி என்னை நடுக்கத்திற்கு ஆளாக்கும். வாழ்வின் உச்சபட்ச மகிழ்ச்சியான தருணங்களில் அவையும் சேரும். காற்றில் அறைபடும் விடுதி சன்னல்களின் பின்னால் நின்று, அநேகம் மாலைகள்  அவளை உத்தேசித்துக் காத்திருந்திருக்கிறேன். சில சமயங்களில் அவள் வருவாள் என்று நம்பி, ஏமாந்து, கண்ணீர் வழிந்து விம்மல்களாக விரிந்து தேம்பல்களாக மாறி பின்னர் தானாக நின்று போகும். நோய்வாய்ப்பட்டு கவனிக்க யாருமற்ற நாட்களில் அம்மாவின் அணைப்பிற்காக அதிகம் ஏங்கியிருக்கிறேன். சதா கைகளில் சிரங்கும், வயிற்றுப்போக்கும், அவ்வப்போது காய்ச்சலும் வந்து போகும். சிரங்கு வந்து நன்கு வெந்த சீனிக்கிழங்குபோல என் உறுப்பு வீங்கிக் கிடக்கும். குப்பை மேனியினை அரைத்து அனல் பறக்க அம்மா அப்பி விடுவாள். அந்நாட்களை அம்மாவே நிறைத்திருந்தாள்.

நாற்பதைத் தொட்டு, மனச்சிதைவிற்கு ஆளான அம்மாவை நான் வெறுத்தேன். அம்மா ஒரு அவமானம், அம்மா ஒரு இழிபிறவி, அம்மா ஒரு அசிங்கம் என்றெல்லாம் எண்ணங்கள் வலுத்தன. அம்மா உறவினர்களிடம் நிறைய ஏமாந்திருந்தாள். பீடி சுற்றி பிள்ளைகளை வளர்க்க முடியாமல் திண்டாடிப்போனாள். ரேசன் அரிசியும் அரசுப்பள்ளியும்தான் என்றாலும் அதையே அவளால் எங்களுக்கு வழங்க முடியவில்லை. தங்கையை தன்னுடன் வேலைக்கு அமர்த்திக்கொண்டாள். என்னை மட்டும் படிக்க அனுப்பினாள். நான் பத்தாம் வகுப்பினைத் தாண்டுவதற்கு முன்னதாகவே கடன் பிரச்சினையில் அகப்பட்டு,  பெயரைக் கெடுத்துக்கொண்டாள்.

கட்டப் பஞ்சாயத்திற்காக அம்மாவை மிரட்ட வந்த உள்ளாற்றுப் பாண்டியன் உருவம் திடீரென்று கனவுகளில் இப்போதும் வந்து போகும்.  கட்சிக்கரை வேட்டி சட்டை, பத்தடிக்கு முன்பாகவே பீறிவரும் சாராய நாற்றம். சிவந்த கண்கள். அக்குள்வரை சட்டையைச் சுருட்டி விட்டிருந்தார். திறந்து கிடந்த குடிசைக்குள் உரிமையோடு நுழைந்தார். குனிந்து வரவேண்டியிருந்தது. அம்மா தறிச் செட்டில் இருந்து திரும்பி, விறகு அடுப்பினை கண்கள் கசிய ஊதிக்கொண்டிருந்தாள். புகை மண்டலத்தின் நடுவே அருவமான இருப்பு . தள்ளாடி வந்தவர் மண் திண்டில் அமர்ந்து கொண்டார். பச்சைத் துணி பெல்டில் இருந்து பீடியை எடுத்துப் பற்ற வைத்து அம்மாவைப் பார்த்தார். பார்த்துக் கொண்டே இருந்தார். உதடுகளை நாவால் சுழற்றி ஈரப்படுத்திக்கொண்டார். என் கால்கள் வெடுக்வெடுக்கென அதிர்ந்தன. ஒரு மிருகத்தை மிக அருகே கண்டுகொண்ட தவிப்பு. வீட்டிற்கு வெளியே முற்றத்தில் ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்தது. “அறுதலிக்கிட்ட என்ன கிடைக்கும்னு வந்தீக பாண்டியரே” என்றாள் அம்மா நடுங்கும் குரலில்.

அம்மாவைக் காதலித்த இருவர்களை அப்போதே நெருக்கமாக அறிவேன். ஒருவருக்கு ஐம்பது வயதிற்கும் மேல் இருக்கும். தம்பி மனைவியை அப்படியே அள்ளி எடுத்து விடலாம் என்று உரிமை கொண்டாடியவர். என் மீது அன்பைப் பொழிவார். பார்க்க நேரிட்டால், சட்டைப்பையில் இருப்பதை அப்படியே அள்ளித்தருவார். நான் பயந்து ஓடி ஒளிவேன். ஒருநாளும் அவரை அனுமதித்ததில்லை. அவரைக் கண்டாலே அருவருப்பாக இருக்கும். என்னை மடியில் கிடத்தியபடி அம்மா அவரின் தொல்லைகளை அநந்தம்மாளிடம் சொல்லி, கண் கலங்கியதைக் கேட்டிருக்கிறேன். “எங்கே சென்றாலும் பின்னால் வருகிறார். கூழ் பானை ஒடைஞ்சா குருட்டு நாய்க்கெல்லாம் கொண்டாட்டம்” என்றாள். அவரால்தான் நாங்கள் இராயகிரியை விட்டே கிளம்பி வர வேண்டியிருந்தது.

மற்றொருவருக்கு அப்போது திருமணம் ஆகியிருக்கவில்லை. அம்மாவிற்கும் அவர் மீது ஆர்வம் இருந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். அவரின் வருகை இரண்டாம் ஆட்டம் சினிமாவிட்டு ஆட்கள் வீடு திரும்பிய பின்னர் நிகழும். “மருதமலை மாமணியே முருகையா” என்று டூரிங் டாக்கீஸ் இரண்டாம் காட்சிக்கு ஆட்களை அழைக்கும். அப்பாடல் கேட்கும்போது ஊர்ப்புரணி பேசுவதில் இருந்து எழுந்து அம்மா படுக்கப்போவாள். வாசலை நோக்கி ஒரு தகரக் கதவு. துாக்கி நகர்த்த வேண்டியிருக்கும். அதனால் யார் திறந்தாலும் உராய்ந்து முணங்கும். குடிசை மரக்கதவின் தாழ்ப்பாள் அருகே சதுரவடிவ சிறிய ஓட்டை. அதன் வழியாக இரவு அறைக்குள் எட்டிப்பார்க்கும். மின்மினிகள் ஒளிரும். பௌர்ணமி இரவுகளில் சதுரம் வெண்மை கொண்டு பூரிக்கும். அவர் வரும் நாட்களில் திடிரென்று இருண்டு விடும். அதற்கு முன்பே தெருவில் நாய் குரைப்பின் ஆருடம். தகரக் கதவின் கரகர நாராசம்.  பாதச்சுவடுகளின் உராய்வு. தொடர்ந்து தாழ்ப்பாள் திறக்கும் சப்தம். ஒருமுறை நான் சுதாரித்து எழுந்து கதவை நோக்கி ஓடினேன். திறந்து உள்ளே வர முயன்றவரை கதவிற்கு வெளியே தள்ளிச் சாத்தினேன். “அப்பா இல்லாத பிள்ளைங்க..எங்களை விட்டிருங்க” என்று கெஞ்சினேன். அம்மாவிடம் யாரும்மா? என்று கேட்டேன். அவள் “திருடன்” என்றாள். இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த திருடன் என்னைத் தேடி வந்தான்.  சில மாதங்களுக்கு முன்னர் தன் மகளின் திருமணத்திற்காக பத்திரிகை வைக்க என் வீட்டைக் கண்டு பிடித்து விட்டார். அவரைக் கண்டதும் எனக்குள்  பதறி எழுந்த சிறுவனை அப்போது அடக்கி வைத்தேன். வாயெல்லாம் கசந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *