நினைவோடையில் நீந்தும் மீன்கள் 9 – சூதாடியின் கரங்கள்

ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். கிராமத்தின் உள்ளே குடியிருப்பு பகுதிகளில் இருந்து தனித்து அமைந்துள்ள ஆசிரமம். வெளியில் இருந்து பார்த்தால் அவ்விதம் தோன்றுவதில்லை. ஒரு பாக்டரி போன்றுதான் காணப்படும்.

சமீபத்தில் கட்டப்பட்ட பிள்ளையார் கோவில். வேம்பும் புளியமரமும் அடர்ந்த நிழல் படுதாக்கள். அதன் அருகில் சிறிய நீரோடை. நீரோடையைத் தாண்ட உதவும் கலுங்கு. அதன் கல்வெர்ட் சமீப காலத்தை சார்ந்தது. அதனை ஒட்டி தனித்த இரண்டு கட்டிடங்கள். முதல் கட்டடம் தியான மண்டபம். அதன் வாசலில் குரோட்டன்ஸ். தியான மண்டபத்தை கண்காணிக்கும் சி.சி்.டி.வி.கேமிரா. அதனையொட்டி நான்கு அறைகளை உள்ளடக்கிய வெள்ளைச் சுவர்கள். முன்னே நகரத்தை நோக்கிச் செல்லும் மண் சாலை. தரிசு நிலங்கள் சூழ, ஆழ்ந்த மௌனம் உறைந்த அத்துவானம்.

என் தாத்தா பிரம்ம ஸ்ரீ மா.சு.மாணிக்கம் பிள்ளை உயிரோடு இருந்தபோது அங்கே என்னை அழைத்து வந்திருக்கிறார். ஏன் எதற்கு என்று தெளிவாக நினைவில் இல்லை. அவரின் குருவானவர் அந்த ஆசிரமத்தில் தங்கி இருந்தார். ஆசிரமத்தை நான் இன்றும் நினைவில் வைத்திருக்க வேறொரு காரணம் உண்டு. அவரின் இறுதிச் சடங்குகளை அந்த ஆசிரமத்தின் ஆட்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள். அதற்கு தாத்தா ஏற்பாடு செய்திருந்தார். அந்நாட்களில் அது என்னை வியப்பில் ஆழ்த்திய நிகழ்வு.

தாத்தாவின் கடைசிக் கணங்களில் நான் அருகில் இருக்க நேரிட்டது. நோயுற்ற தாத்தாவை கோவில்பட்டி சித்தி புதுக்கிராமத்திற்கு கூட்டிச் சென்று பராமரித்து வந்தார். தாத்தா பங்கு வீடு சித்திக்கு என்று எங்களுக்குள் ஏற்பாடாகி இருந்தது. தாத்தாவிற்கு சிறுநீரகப் பாதிப்பு. எண்பதைத் தாண்டிய உடல். வயோதிகத்தின் இயலாமை. தொந்தியோ, உபரிச் சதைத்திரட்சியோ அவரிடம் இல்லை. கட்டுச்சிட்டான உடம்பு. உணவுக் கட்டுப்பாடும், ஓயாத நடையும், தியானமும் அவரைப் பேணிக்காத்தது. தொப்புள் தொடும் வெண்தாடி, முதுகில் மோதி அலைபாயும் வெண் கூந்தல், கதர் கோமணம் உள் ஒடுங்கித் தெரியும் நான்கு முழ கதர் வேட்டி. அவைதான் அவருடைய ஆகிருதி. தன்னுடைய கடைசி நாட்களை உள்ளுணர்வால் அறிந்திருந்தார். சொந்த வீட்டில் கொண்டு விடுமாறு சித்தியைக் கேட்டிருக்கிறார்.

நான் அப்போது என் அம்மாவின் பொருட்டு புளியங்குடியில் தங்கி இருந்தேன். டி.என்.பி.எஸ்.சி. தொகுதி 2 போட்டித் தேர்விற்காக கரூர் வேலைக்கு இரண்டு மாத விடுமுறை எடுத்திருந்தேன். அம்மாவும் தன்னுடைய கடைசி நாட்களை வந்தடைந்துள்ளார் என்று தங்கை போனில் சொன்னாள். வந்து பார்த்த போது குற்றவுணர்ச்சியால் தவித்துப் போனேன். எழுந்து நிற்கக் கூட அம்மாவால் முடியவில்லை. எலும்புகள் வெளித்தெரிய நன்றாக வற்றிய உடல். மார்போ பின்பகுதியோ தொடைகளோ இல்லை. எலும்புக் கூட்டின் மீது நைட்டியைப் போர்த்திய உருவம்.

 என் மனைவி அம்மாவைப் பேணினார். தாத்தாவின் பக்கத்து அறையில் அம்மா நோய்வாய்ப்பட்டு சாவிற்காக காத்திருந்தாள். ஆனால் சரியான நேரங்களில் வழங்கப்பட்ட உணவு அம்மாவைத் தேற்றியது. விரைவாக உடல் மெலிவில் இருந்து பூரித்து எழுந்தாள். நாள்தோறும் அந்த மாற்றத்தை அருகில் இருந்து பார்த்தேன்.  பேச்சும் நடமாட்டமும் அதிகரித்தது. பேச்சு என்பதே தீராத வசைதான். தாத்தாவையும் விட்டு வைக்கவில்லை. அவளின் ஏச்சுக்களை கேட்டபடி தாத்தா மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு ஈசிச் சேரில் படுத்திருப்பார்.

சாயந்திரம் நான்கு மணி இருக்கும். மனைவி தயாரித்த இஞ்சி டீயை கொண்டு வந்து தாத்தாவிடம் கொடுத்தேன். இதமான கொதி நிலைக்கு டீ ஆறும் வரை காத்திருந்து, குடிக்க ஆரம்பித்தார். நெடு நேரம் அருகில் நிற்க முடியவில்லை. எழுந்து நடமாட முடியாத நிலை என்பதால் சாந்து சட்டியில் மலம் கழிப்பார். நான்தான் அதைக்கொண்டு கழிப்பறையில் கொட்டி கழுவி விடவேண்டும். பெண் என்பதால் அம்மாவை மனைவியும் ஆண் என்பதால் தாத்தாவையும் நானும் கவனித்துக்கொள்ள வேண்டியதாயிற்று. இருவரின் அறைகளும்  மல ஜல புழக்கத்தால் நாறிக் கிடந்தன.

ஆறு மணிப்போல மீண்டும் வந்து அவரைப் பார்த்தேன். உடனே தெரிந்து விட்டது அவர் அங்கே இல்லை என்பது. அப்போதுதான் கிளம்பிச் சென்றிருக்கக் கூடும். உடலில் எஞ்சிய உஷ்ணம்.  ஈசிச் சேரில் சாய்ந்திருந்தார். கண்கள் நிலைக் குத்தியிருந்தன. சாந்தம் ததும்பும் உதடுகளும் கன்னக் கதுப்புகளும். ஆனாலும் இயல்பிற்கு மீறிய ஒரு  வெறுமை. தாத்தாவின் அறையை அஞ்சியது அன்றுதான். “தாத்தா..தாத்தா..“  என்று கூப்பிட்டுப் பார்த்தேன். அசைவில்லை. அவர் தன்னுடைய இறுதிக்காரியங்கள் குறித்து சிலவற்றை எங்களிடம் சொல்லி இருந்தார்.

உயிர் பிரிந்த உடன் உடலை பத்மாசனத்தில் அமர வைக்க வேண்டும். ஆசிரமத்தில் இருந்து அமரர் ஊர்தி வந்து அவரைக் கொண்டு செல்லும். அதற்கு ஒத்துழைக்க வேண்டும். ஜீவ சமாதியாக அவர்கள் அவரை அடக்கம் செய்வர். அதற்கு முன்னர்  பூத உடலை எந்தவித மதச் சடங்குகளுக்கும் உட்படுத்தக் கூடாது. குளிப்பாட்டுதல், நீர் மாலை எடுத்தல், சிதையில் எரித்தல் என்கிற சம்பிரதாயங்கள் தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக அவரின் உடலைச் சுற்றி நின்று ஒப்பாரி வைத்து அழக் கூடாது. அவர் தகவல் தெரிவிக்கச் சொல்லி கொடுத்திருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டேன். எதிர்முனையில் உடனே வருவதாகச் சொன்னார்கள். உடல் விரைக்கும் முன்னர் கண் விழிகளை மூடவும், பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் சாய்த்து வைக்கவும் கேட்டுக்கொண்டார் போனில் பேசியவர்.

மூன்றாம் நாள் விசேசம், பதினாறு படையல், முப்பதுக்கு சாமி கும்பிடுதல் என நீத்தார் சடங்குகள் எதையும் நாங்கள் பின்பற்ற வில்லை. தாத்தா அவற்றைத் தவிர்க்க உத்தரவிட்டிருந்தார்.

இறுதிக் காரியங்களுக்காக எந்தவித செலவுகளையும் எங்கள் மீது தாத்தா சுமத்தவில்லை. அதற்கான முன்னேற்பாடுகள் செய்திருந்தார். தாத்தாவிடம் தீட்சை வாங்கிய சீடர்கள் சிலர் இருந்தனர். அவ்வப்போது அவரைக் காண வந்து செல்வார்கள். அவர்களின் முன் தாத்தாவின் இருப்பு வேறொரு பரிமாணத்தில் அமையும். அவர்கள் தாத்தாவிடம் காட்டும் பக்தியும் மரியாதையும் எங்களுக்கு தாத்தாவைக் குறித்து கூடுதல் மதிப்பை உண்டாக்கும்.  அவர்களில் தான்  நம்பிய ஒருவரிடம் தாத்தா எல்லாப் பொறுப்புகளையும் ஒப்படைத்திருந்தார். தன்னுடைய இறுதிச் சேமிப்பையும் அவரிடமே அளித்திருந்தார். அத்தொகை  கணிசமானது. வாரிசுகள் என்ற முறையில் எங்களுக்கு வரவேண்டியது. தாத்தா சமாதிக்கான பணிகளை அவர் ஏற்றுக்கொண்டதால் வரவு செலவு விவரங்களை அவரிடம் இருந்து  கேட்டுப்பெற முடியவில்லை. சித்தியும் முயன்று பார்த்தார். அவரிடம் அவள் சாமர்த்தியம் பலிக்கவில்லை.

பெரிய தொகைதான். பல ஆயிரங்கள் இருக்கும் என்றார்கள். தாத்தா நீண்ட காலமாக பனையூர் குருபூஜையை தலைமை ஏற்று நடத்தி வந்தார். குருநாதன் பேரில் ஒரு அறக்கட்டளையும் நிறுவி இருந்தார். குருபூஜைக்காக ஊர் ஊராகச் சென்று நன்கொடைகள் பெறுவார். அதற்கான ரசீது புத்தகங்கள் எப்போதுமே அவரிடம் இருக்கும். ஆண்டுதோறும் சித்திரை 20 அன்று பனையூர் சென்று மதியம் குருபூஜையும், இரவில் அபிசேக அலங்காரப் பூஜையும் நடத்துவார். பனையூரில் நான்கு செண்டில் நிலம் வாங்கி அறக்கட்டளைக்கென்று ஒரு புதிய கட்டடம் ஒன்று கட்டும் திட்டம் இருந்தது.  செலவுகள் போக மீதியிருந்த தொகையை சிறுகச் சிறுகச் சேமித்து வந்தார்.  வெளியே வட்டிக்கு கொடுத்திருந்தார்.

தென்காசியில் இருந்து மதுரை செல்லும் ரயில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதி. லெவல் கிராசிங்கின் வலதுபுறம். உடைமுள் மரங்கள் மண்டிய புன்செய். ஆசிரமத்திற்கு உரிய நிலம் என்றார்கள். அந்த ஆசிரமத்தோடு தொடர்புடைய அத்தனை பேர்களின் சமாதிகளையும் அங்கேதான் அமைக்கப் போவதாகச் சொன்னார்கள். சமாதிக்குத் தேவையான இடத்திற்கு உரிய தொகையை ஆசிரமத்திற்கு அளித்தால் போதும். காலம்முழுக்க அங்கே வந்து வழிபட்டுக்கொள்ளலாம். நினைவுப்பலகையும் எழுப்பப்படும் என்றார்கள்.

பத்தடி ஆழம் தோண்டப்பட்ட குழி. உள்ளே மூட்டைக் கணக்கில் விபூதியை கொட்டினார்கள். கற்பூரத்தோடு இன்னும் ஏதேதோ பொருட்கள் சேர்த்து தாத்தாவை அமர்ந்த வாக்கில் இறக்கினார்கள். மண்மூடி மேடிட்டார்கள். சில நாட்களில் அவரின் சமாதிக்கு மேலே சிமிண்ட் கொண்டு தளம் அமைக்க இருப்பதாகச் சொன்னார்கள். ஆசிரமத்திற்கு திரும்பி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த சிற்றுண்டியைச் சாப்பிட்டு வீடு திரும்பினோம். நெருங்கிய உறவினர்களை மட்டுமே வேனில் அழைத்து வந்திருந்தோம். எனக்கு அழுகையை அடக்க முடியவில்லை. அவரின் உத்தரவினையும் மீறி அழுதேன்.

தன் மறைவிற்குப் பின்னர் தான் நடத்தி வந்த குருபூஜை பணிகளைத் தொடர்ந்து நடத்தச் சொல்லி தாத்தா என்னிடம் பலமுறை கேட்டிருக்கிறார். நானோ கரூரில் அத்தக்கொத்து வேலையில் நாடோடியைப் போல வாழ்ந்து கொண்டிருந்தேன். எங்கிருந்தாலும் சித்திரை 20 அன்று தவறாமல் பனையூருக்குச் சென்று அன்னதானமும், அபிசேகமும் நடத்தி ஆக வேண்டும். தவறினால் தெய்வக் குற்றம். அவர் நட்பு கொண்டிருந்த மனிதர்களைத் தொடர்பு கொண்டு உறவாடுவது சார்ந்து சங்கடங்கள் இருந்தன. குருபூஜைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே ரசீது புத்தகங்கள், அழைப்பிதழ்கள் அடித்து வாங்க வேண்டும்.  ஊர் ஊராகச் சென்று நன்கொடைகள் வசூல் செய்ய வேண்டும்.  நன்கொடை அளித்தவர்களுக்கு மறக்காமல் பிரசாதப் பொட்டலங்களைத் தேடிச்சென்று வழங்க வேண்டும். தொட்டுத்தொட்டு ஏகப்பட்ட வேலைகள். அவற்றை எந்தவிதக் குறைகளும் இன்றி என்னால் மேற்கொள்ள இயலாது என்று தோன்றியது. எனவே அந்தப் பொறுப்பை மறுத்தேன். அதில் தாத்தாவிற்கு என் மேல் நீங்காத மனக்குறை.

சித்திக்கு தாத்தாவின் மீது பக்தி. தாத்தாவின் இளமைக்காலம் குறித்து பாட்டி ஏற்கனவே என்னிடம் பகிர்ந்திருந்த சம்பவங்களுக்கு மாறாக சித்தி தாத்தாவைப் பற்றி நினைவு கூர்ந்ததைக் கேட்டிருக்கிறேன். முரண்பாடுகள் நிறைந்த கணவனாகவும், அன்பிற்குரிய தந்தையாகவும் தாத்தாவிற்கு இரண்டு இறந்த காலங்கள். நான் பாட்டியின் சொற்களையே நம்பினேன். தாத்தா அதில் வெளிப்பட்ட விதம் அந்நாட்களின் புருஷ லட்சணங்களைக் கொண்டிருந்தது.

தாத்தாவை புதைத்த நாளில் நான் அவர் சார்ந்த எல்லாக் காரியங்களில் இருந்தும் விலகி வந்தேன். தாத்தாவின் பெயரில் வீடு இருந்தது. சொத்தும் இன்ன பிறவற்றையும் சித்தியிடம் ஒப்படைத்தோம். தாத்தா மறைவிற்கு பின்னர் சித்தியும் புளியங்குடி வீட்டை விற்பதில் ஆர்வம் காட்டினார்.

தாத்தா சமாதி ஆன நாள் சித்திக்கு மாறா நினைவு. முதல் ஆண்டு நினைவு நாளின் போது என்னை சாமி கும்பிட அழைத்தாள். தாத்தாவின் மீது ஏற்பட்டிருந்த கடுமையான விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு வர மறுத்தேன். தாத்தாவின் நினைவுகளையும் தாத்தாவின் சமாதியையும் அவரோடு தொடர்புடைய அந்த ஆசிரமத்தையும் தவிர்க்க விரும்பினேன்.

 சித்தி  தாத்தா சமாதியின் தற்போதைய நிலை குறித்து என்னிடம் முறையிட்டு கண்கலங்கினாள். தாத்தா சமாதி இருந்த இடத்தை அவளால் சரியாக அடையாளம் காண முடியவில்லை. அத்துவானக் காடு என்பதால் ஓராண்டு கழித்துச் சென்று சாமி கும்பிடச் சென்றபோதே குழப்பம். இரண்டு மூன்று சமாதிகள் புற்கள் மண்டி அருகருகே இருந்தன. தாத்தாவின் சமாதி என்று அவள் நம்பிய மண்மேட்டைத் தொழுது வந்திருக்கிறாள். ஆசிரமத்தில் சொல்லியபடி தாத்தாவின் சமாதி இருந்த இடத்தில் அவர்கள் நினைவுச் சின்னம் எழுப்ப வில்லை. சிமிண்ட் கொண்டு தளம் அமைக்கவில்லை. புதைத்த அன்று என்ன நிலையில் இருந்ததோ அதே கட்டுமானந்தான். ஒரு செங்கலைக் கூட அவர்கள் அதற்குப் பின்னர் நடவில்லை. ஆசிரமமே வேறொருவரின் கட்டுப்பாட்டிற்கு மாறியிருந்தது. குருவானவர் மறைந்திருந்தார்.

அந்தாண்டு அவள் தாத்தா இறந்த நாளை நினைவில் கொண்டு சாமி கும்பிட சென்றிருக்கிறாள். புளியங்குடியில் ஆட்டோ பிடித்து ஆசிரமத்தை வந்தடைந்திருக்கிறாள். தாத்தாவின் சமாதியை அடைந்தபோது திகைத்து நின்றாள். அங்கே சுற்றிலும் கம்பிவேலிகள். முன்பு வெட்ட வெளியாக இருந்த நிலம், துண்டுகளாகக்கப்பட்டிருந்தது. சென்று வர நடைபாதை இல்லை. புற்கள் மேலும் அடர்ந்திருந்தன. பாம்புகளை எண்ணிப் பயந்தவாறே தாத்தாவின் சமாதியைத் தேடினாள். மிகுந்த சிரமத்திற்கு பின்னரே ஒருவழியாக அவளால் கண்டு பிடிக்க முடிந்திருக்கிறது.

கொண்டு வந்திருந்த ரோஜா மாலையைச் சார்த்தி மண்மேட்டின் முன்னர் சூடம் ஏற்றி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து தொழுதாள். அவள் வந்த ஆட்டோ சாலையில் காத்து நின்றது.  அங்கே ஆட்டோ நிற்பதை அறிந்த ஒருவர் என்ன ஏது என்று விசாரித்து சித்தியின் அருகே வந்தார்.

வந்தவர் சித்தியிடம் இனிமேல் இந்த இடத்திற்கு வரக்கூடாது என்று எச்சரித்திருக்கிறார். இடம் தற்போது வேறு ஒருவருக்கு விற்கப்பட்டு விட்டது. இது ஆசிரம நிலம் இல்லை. புல எண்கள் தெரியாமல் தவறுதலாக அந்த தனியார் இடத்தில் சமாதிகளை எழுப்பிவிட்டார்கள் என்றார்.

சித்திக்கு திக்கென்றது. அவரே அடுத்தும் சொன்னார். சித்தி வழிபட்டுக்கொண்டிருந்த சமாதி புன்னையாபுரத்தைச் சேர்ந்த ஒரு கோனாருடையது, தாத்தாவின் சமாதி அங்கே வேறு எங்காவது இருக்கலாம் தேடிப் பாருங்கள் என்று. சித்தி மேலும் துணுக்குற்றாள்.

கண்ணீர் பீறிட தாத்தாவின் சமாதியை வெறிகொண்டு தேடியிருக்கிறாள். அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை. தாத்தாவின் இறுதிக்காரியங்களை முன்நின்று நடத்திய அந்த பிரதானச் சீடரைத் தேடி சென்றிருக்கிறாள். அவரும் அவளின் ஆதங்கத்தை புரிந்துகொள்ளாமல் நிலப் பிரச்சினை இருப்பதால் தன்னால் உதவி செய்ய முடியாது என்று மறுத்து விட்டார். இனிவரும் காலங்களில் எப்படித் தன்னால் சாமி கும்பிட போக முடியும் என்று என்னிடம் பொங்கி வழிந்தாள். அங்கே தாத்தாவின் சமாதி உள்ள இடத்தை கண்டுபிடித்து, அந்த நிலத்தை மட்டுமாவது விலைக்கு வாங்கி நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றாள்.

எனக்கு தாத்தாவின் இறுதிக்காரியங்களில் முன் நின்று ஓடி ஆடி வேலை செய்த அந்த பிரதான சீடரின் முகம் நினைவில் வந்தது. அவரைத்தான் தாத்தா முழு மூச்சாக நம்பினார்.  தாத்தாவைக் காணும்போதெல்லாம் இரண்டு புருவங்களும் சேரும் நெற்றி மத்திக்கு நேராக கூப்பிய கைகளைக் கொண்டு சென்று அந்த பிரதானச் சீடர் வணங்குவார். அதுகுறித்து தாத்தாவிற்கு பெருமை உண்டு.

‘வ்வோய்..மாப்ள..உங்க அண்ணன நம்பாதடோய்..அவன் உன்ன அடிமாட்டு விலைக்கு வித்துப்போடுவான்”.

பிறர் காரியங்களை மிகச் சரியாக கணித்துவிடும் பார்வை தாத்தாவிற்கும் இருந்திருக்கிறது. தாத்தா எச்சரித்ததைப் போல அண்ணன்  என்னை சல்லிசான விலைகளுக்க விற்க துண்டிற்குள் கை மறைத்து விரல்கள் வழயே விலைகள் பேசினார்.

தாத்தாவின் சமாதியை இனிமேல்தான் தேடிக் கண்டடைய வேண்டும். தன் விசயத்தில் தாத்தா கடைசியிலும் கூட தோற்றுப் போனதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *