24.நிரம்பி வழியும் கோப்பை…

சைவக் கோயில்களின் பிரகாரங்களிலும், திருநீற்று மணத்திலும் தேவார, திருவாசகங்களிலும் நடராஜனின் நர்த்தனத்திலும் சிவகாமியின் மவுனப் புன்னகையிலும் மகோன்னதம் கண்டு, சக மனித சமூக வாழ்வில் அம்மாவின் அதட்டலையும் மீறி தண்ணீரில் தப்புக்கொட்டி விளையாடுகிற குழந்தை மனசு –  சுதந்திர விக்ரமாதித்யனுக்கு.

மொழிக்குள் தான் அறியப்படாத தேடப்படுகிற – மனிதம் தொலைந்து போய் புதைந்து கிடப்பதாய் வராகமாய் மீண்டும் மீண்டும் மீண்டும் தன்னை மொழிக்குள் நுழைத்து தேடித்தேடி சில முத்துக்களையும், சிப்பிகளுமாக சேர்த்து குதூகலிக்கிறார், சோர்வுறுகிறார், கொண்டாடுகிறார்.

இது ஒருவகை பித்து, சித்தம்போக்கு.

பைசா பைசாவாக லாப நஷ்டக்கணக்கு பார்க்கும் பெரும்பான்மைக்கிடையே இது நட்சத்திரங்களுக்குப் பெயரிட்டு தனதாக்கிக் கொள்கிற ஆளுமை அல்லது பைத்தியக்காரத்தனம்.

ஊர் ஊருக்கும் மனிதம் தேடி அனுபவம் தேடி அலைக்கழிக்கிற மாயப்பிசாசம்! இருந்த இடத்தில் இருக்கவிடாமல் துரத்திக்கொண் டேயிருக்கிற (துர்) தேவதை!

ஒவ்வொரு காலிக்குப்பியை தூக்கி எறிந்தபின்னும் இன்னொரு குப்பியைத் திறக்கச்சொல்லி அதில் கிடைத்துவிடாதா என்ற போதாமை! நிறைவேயற்ற நிறைவை நோக்கிய நிதானம்கெட்ட அல்லது கூர்மையான ஒருவழிப்பாதை!

இவனா? அவனா? இதுவா? அதுவா? இருக்கா? இல்லையா? சரியா? தப்பா? சந்தோஷமா? துக்கமா? துல்லியமாகத் தெரியாத புகை படிந்த அகல்விளக்கு. எண்ணெய் வற்றி அணைந்து போகும்முன் பாதாளப் புதையலை அடைய முனைகிற வேகம்.

மொழிக்குள் வராத ஆலாபனைகளும், இசைக் கருவி மீட்டும் கலைஞர்களும் மிக பாக்கியவான்கள். அவர்களது லாவகமான உயரம் தொடுதலையோ, ஆழம் போவதையோ மொழிக்குள் படு சிரமப்பட்டே அடைய வேண்டியதாகிறது.

அலைகளை எண்ணி எண்ணி குதூகலிக்கிற குழந்தை மனசும், அயராத தன்மையும் மொழிக்குள் இயங்க வேண்டியிருக்கிறது.

விக்ரமாதித்யன் கூடவே கவிஞன், திராவிடன், சைவன், தமிழன் என்கிற சுமைகளோடு மொழிக்குள் பயணிக்கிறார்.

ஒற்றை நோட்டோடு சகல பாடங்களையும் எழுதியோ எழுதாமலோ வருகிற கல்லூரி மாணவனைப் போலல்லாமல் இன்றைய நர்சரி பிள்ளைகள் போல ஏகச்சுமை!

இவற்றோடு பாலைவனத்தில் தீராத்தாகமோடு சுனை தேடுகிற பயணம் அவரது. சுட்டெரிக்கும் வெயிலும், ஈச்சமர நிழலும் என பயணம் நீண்டுகொண்டேயிருக்கிறது. அயராத அவரது பயணத்தின் தடங்கள் தமிழ் வாழ்வினைச் சொல்வதாய் பாலை வெளியில் பதிந்து கிடக்கின்றன.

கல் நந்தி இடம் மாறி அமர்வதன் அவஸ்தைகளை கவிப்படுத்தவும் எதிர்கொள்ள நேர்கிற மனசு, இவரது புனைவு.

எளிமையும் நேரடித்தன்மையும் நொம்பலமும் சேர்ந்து துக்கத் தைக் கொண்டாடுகிற ஆத்மா! தொடர்ந்து இயங்கி இயங்கி தன்னை அர்ப்பணித்து தமிழுக்குள் நவீன வாழ்வின் அபத்தத்தை எழுதி எழுதி எழுதி வார்த்தைகளுக்குள் சிக்கித் தவிக்கிறது. வார்த்தைகளற்று காணாமல் போய்விடுகிற துயர் மிக்க ஆத்மா!

தமிழர் பெருங்கொண்ட வாழ்வு வாழ்ந்ததை எண்ணி எண்ணி மருகி ரத வீதிகளிலும், தேர்ச் சக்கரங்களிலும் மறவர் ரணங்களிலும் விழுப்புண் வேட்கையிலும்… சாம்ராஜ்ய சரிவுகளிலுமாய் ஐந்திணை வகைப்படுத்தலிலும் மெய்சிலிர்த்தும் இழப்பின் துயரில் துக்கம் சுமந்து அழாமல் விதைத்துக்கொண்டேயிருக்கிறது. வானம் பார்த்த பூமியில் இதிலென்ன என்று உயிர்களை காவு கேட்கிற தனுஷ்கோடி பிரளயம்.

தமிழ் வாழ்வில் எவ்வளவோ உயரப் பறந்த கழுகுகளின் எச்சம்! விக்ரமாதித்யன் விதை நெல்!

பிரண்டைச்செடி நோய் தீர்க்கும் என்று பின்னாளில் தேடி அலையப்போகிற சந்ததிக்கு அகப்படப் போகிற மூலிகைச்செடி!

“சமூக ஒவ்வாமை” (Social Alergy) என்பது குடிக்கும் எனக்குமான நெருக்கத்துக்கு நானே சூட்டிக்கொண்ட தப்பித்தல் கிரீடம். விக்ரமாதித்யனுக்கோ இது திருவிழா, கொண்டாட்டம்! குழந்தைமையை மீட்டுக் கொடுக்கிற தாய்ப்பால்.

மாம்பலம் கள்ளுக்கடை வாசலில், கோடம்பாக்கம் மேம்பால சாராயக்கடைகளில் மயிலை ஒயின்ஷாப் சண்டைகளில் மொசாத்தை அறிந்த சண்டைக்கு பின் வாங்கி ஒதுங்கிய மறவன் முன் இன்னும் இன்னுமென கிராமபோன் பெட்டி முன் பாடும் நாய் பட இசைத்தட்டாய் நீள்கிறது, எனக்கும் அவருக்குமான கோடையும், மழையும்.

மொழியெனும் மாய மோகினியின் வசீகரத்தில், கவிஞன் எனும் மாயா கர்வ வியூகத்தில் சிக்குண்டு தன் வாழ்வையே பணயம் வைத்து சூதாடும் குழந்தை மனம் விக்ரமாதித்யனுக்கு.

காவுகொள்ளும் தெய்வம் என்று தெரிந்தே தரிசிக்கப் புறப்பட்டவர். சங்கிலி பூதத்தானும், காத்தவராயனும், சுடலையும் கைகோர்த்து அலைக்கழிக்கிற வாழ்வை மொழிக்குள் பதியமிட்டிருக்கிறார்.

பல வருட வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் வாழும் துடிப்போடு ஒவ்வொரு துளி சந்தோஷம் கிட்டும்போதும் நிற்காதோ, நிலைக்காதோ என பதறிப் பதறி தவறவிட்டு பரிதவிக்கிற ஆத்மா.

தன் நிலை மறந்த போதையிலும் வார்த்தைகளின் தொலைந்த வாழ்க்கையின் ஈர்ப்பில் பிடியிலிருந்து மீளாத் துயரில் பதிவு செய்வதிலேயே ஓர்மையோடு திரிகிற பித்தன்.

சைவம் வளர்த்த தமிழ், சைவன் விக்ரமாதித்யனை வக்க, அதுவே தனக்கு தள்ளாட தடுமாற தட்டுக்கெட்டலையவைக்க, நேர்ந்ததென தேர்ந்துகொண்டு வாழ்கிறவர்.

லௌகீகத்தில் தோற்றபோதும், அகத்தில் அன்பெனும் வற்றாத ஊற்றைக் காத்து பெருக்கிவிடத் துடிக்கிறார்.

வாழ்வின் அற்புதங்களோடு சமமாக கைகோர்த்துச் செல்லும் அபத்தங்களை அப்படிக்கப்படியே முன் வைக்கிறார்.

மொழி வியூகத்தில் மாட்டிய அபிமன்யூ தகர்த்து மீள முடியாது. பெரியப்பன் – கர்ணன் கதையடிக்குப் பலியாகி அப்பன் அர்ஜுனன் உதவியிழந்து, மொழியற்று மூர்க்கமாய் மூச்சிழந்த மொழி, விக்ரமாதித்யனின் விலா எலும்புக்குள். மார்புக்கூட்டுக்குள் கோப்பை ரசங்களின் நிரம்பலாய் ததும்பி வழிந்து கொண்டேயிருக்கிறது. இன்னும் நதிப்பெருக்காய்..

நன்றி – வித்யாஷங்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *