தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருக்கும் எந்த எழுத்தாளர்களும் , ஒவ்வொரு படைப்பும் எப்படித் தோன்றியது என்று யோசித்துப் பார்ப்பதில்லை என்றுதான் நினைக்கிறேன்.

ஒருவிதத்தில் இப்படித் தோண்டித் துருவிப் பார்ப்பது, படைப்பியக்கத்தின் இயல்புத்தன்மையைப் பாதிக்கக்கூடும் என்று கூடத் தோன்றுகிறது.

என் அருமை நண்பர் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களின் வேண்டுகோள் நான் மூன்று சிறுகதைகளின் தோற்றத்தைப் பற்றியாவது எழுத வேண்டுமென்பது.

இது எந்த அளவுக்கு ஒரு வாசகனுக்குப் பயனளிப்பதாக இருக்கும் என்று தெரியவில்லை. அப்படித்துளியளவேனும் இருந்தால் நான் மெத்த மகிழ்ச்சியடைவேன்.

நான் 1952 தொடங்கி, 1962 வரை எழுதினேன். அப்போது நோய்வாய்ப்பட்டு, சுமார் மூன்றாண்டுகள் மிகுந்த பிரயாசைப்பட்டு மிகச் சில கதைகள் எழுதினேன்.

இந்த ஐம்பதாண்டுகளில் நான் ஆயிரத்துக்கும்மேல் சிறுசிறு குறிப்புகள் எழுதிச் சேர்த்து வைத்திருக்கிறேன். அவை கட்டுக் கட்டாக இன்றும் என்னை ஏளனமாகப் பார்க்கின்றன.

சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள், இந்த நாடகங்களிலேயே ஓரங்க நாடகங்கள், இரண்டு மூன்று கவிதை நாடகங்கள், காவிய நாடகங்கள் (!) எனக் குறித்து வைத்திருக்கிறேன்.

ஷேக்ஸ்பியர் தரத்துக்கு இல்லாத போதிலும், பெர்னாட்ஷா நாடகம் போலவாவது வரிக்கு வரி பதிலடி வசனமாக எழுத  வேண்டும் என்று அரைகுறையாக மூன்று நாடகங்கள் உள்ளன.

அதன் ஒன்றின் பெயர் “சீஸரின் மனைவி”. பின்னர் இதே தலைப்பில் “கார்ன்டன் வைல்டர்” என்பவர் ஒரு நாடகம் எழுதியிருக்கிறார் என்று தெரிந்தது.

என் உற்சாகம் சற்றுக் குறைந்தாலும், என்னுடையது ஒரு தமிழன் பார்வையில் இருக்கும் என்று ஆறுதல் கூறிக்கொண்டென். நாடகம்தான் முடியப் பெறவில்லை.

விக்ரமாதித்யன் அவர்கள் “வழி” என்ற சிறுகதை தோன்றியதைப் பற்றிக் கூற வேண்டுமென்கிறார்.

பல ஆண்டுகள் தமிழகத்தில் மதுவிலக்கு அமலாகி, திடீரென்று அது ரத்து செய்யப்பட்டது. நானறிந்து மூன்று நான்கு நல்ல தேர்ச்சி பெற்ற கட்டடத் தொழிலாளிகள், சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குடியில் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

அந்த நாளில் கட்டடத் தொழிலாளிகள் காலை எட்டு மணிக்கே வேலையில் இறங்க வேண்டும். இல்லாது போனால் அன்று வேவை இல்லை. வேலை இல்லை என்றால் சம்பாத்தியம் கிடையாது.

இன்று நகரமெங்கும் பல மாடிக்கட்டடங்கள் உருவாகிக் கொண்டே இருப்பதுபோல அன்று கிடையாது. எங்கோ ஒரு மூலையில் ஒரு புது வீடு கட்டப்படும். பெரும்பாலும் பழைய வீட்டைச் சரி  செய்வதுதான் நடக்கும்.

இந்தச் சூழ்நிலையில் ஒரு குடும்பத் தலைவன் குடியால் அவனுக்கும், அவன் குடும்பத்தாருக்கும் இழைத்துக்கொள்ளும் துன்பந்தான் என்னை “வழி“ என்ற கதையை எழுத வைத்தது. உண்மையில் அது என்னுடைய துயரத்தின் கதை.

இன்று “குடி“ சர்வ சகஜமாகி விட்டது. நான் வசிக்கும் இடத்தில் அநேகமாக, தினம் ஒருவர் குடித்துவிட்டு நிலை தெரியாமல் தெருவில் விழுந்து கிடப்பதைப் பார்க்கலாம்.

சமீப காலம் வரை நான் இருந்த வீட்டில் குடியிருப்போர் அனைவருக்கும் பொதுவாகக் கிணறும் கழிப்பிடமும் இருந்தன. ஒருநாள் அதிகாலை, கிணற்றடியில் ஒரு நேபாளி விழுந்து கிடக்கிறார். கிணற்றுக்கு அருகாமையில் குடியிருந்தவருக்குக் கற்பனை எப்படி எல்லாமோ ஓடி, மிகுந்த கலவரத்தில் இருந்தார்.

நான் அந்த நேபாளியைத் தட்டியெழுப்பி. ஒரு வழியாகத் தெருவில்  கொண்டு போய் விட்டேன். சென்னையில் பல நேபாளியினர் காவல்காரர்களாகப் பணிபுரிகிறார்கள். குடும்பம் அங்கே அவர்கள் நாட்டில். அவர்கள் ஊருக்குப் போவதற்கு ஐந்தாறு நாட்கள் கூட ஆகும்.

அவர்கள் வீட்டில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் இருந்தால், இங்கே சென்னையில் இருக்கும் நேபாளிக்கு ஆறு மாத்திற்கு ஒரு போஸ்ட் கார்டு வரும். அந்த நேபாளி ஆறு மாதம் ஒரே முகவரியில் இருப்பவரானால் இக்கடிதம் அவர் கைக்குப் போய்ச் சேர வாய்ப்புண்டு. இல்லையெனில், எங்கெங்கோ சுற்றியலைந்து தொலைந்துவிடும்.

எங்கள் வீட்டுக் கிணற்றடியில் விழுந்து கிடந்த நோபாளிக்கு முன்தினம் கடிதம் வந்திருக்குமோ? அல்லது பல மாதங்களாக அவர் வீட்டிலிருந்து தகவலே இல்லையோ?

நான் அவரைப் பிடித்து மெதுவாகத் தெருவில் கொண்டு போய்ச் சேர்த்தபோது மிகவும் துக்கமாக இருந்தது. அவர் குடித்த சாராயம் அவரை எவ்வளவு நேரத்துக்கு அவர் வீட்டு நினைவை மறக்கச் செய்திருக்கும்?

“வரவேற்பறையில்” என்ற கதை பற்றியும் விக்ரமாதித்யன் எழுதப் பணித்திருக்கிறார். இது ஒரு மூதாட்டி பற்றிய கதை. அவரும் முகவரி இழந்து வருபவர்.

ஒரு காலத்தில் நான் சைக்கிளில் இலக்கே இல்லாமல் சென்னையைச் சுற்றி வருவேன்.  அப்போது வேப்பேரி பகுதியில் பல கிழவர்கள் தெருமுனையில் உட்கார்ந்திருப்பது அல்லது நின்றிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

பார்த்தவுடனேயே தெரியும் – அவர்கள் கிறிஸ்துவர்கள் என்று. தனிமையும் நிராதரவும் ஜாதி – மதம்  பார்த்து வருவதில்லை.

நான் எழுதிய இரண்டாவது கதை “தாமஸ்” என்ற கதை. ஒரு கிழவரைப் பற்றி. அக்கதை ஏதோ பத்திரிகை அலுவலகத்தில் தொலைந்து போய் விட்டது. அந்த நாளில் (இன்று உள்ளதுபோல) பிரதி எடுப்பதும், பிரதி வைத்துக்கொள்வதும் எளிதல்ல.

“வரவேற்பறையில்” பெண்மணி பெயர் மிஸஸ் ஆபிரகாம். நான் அன்று பணி புரிந்து கொண்டிருந்த இடத்தில். என் முதலாளியிடமிருந்து இவ்வாறு பலர் உதவி பெற்றுச் செல்வார்கள்.  ஆனால் அது முடியாது போவதும் உண்டு.

“புலிக்கலைஞன்” கதையும் தொலைந்து போகும் ஒரு கலைஞனின் கதைதான். அந்தக் கலைஞன் பரம தரித்திர நிலையிலும் தொழில் புரிந்து, பணம் பெறத்தான் நினைத்தானேயொழிய, தர்மம் பெற விரும்பவில்லை. அவன் தேவையைப் பூர்த்தி செய்ய எல்லா ஆயத்தமும்  செய்த நாளில், அவன்காணாமல் போய்விட்டான்.

பிறர் துக்கம் கண்டு அந்தத் துக்க உணர்வில்தான் என்னுடைய பெரும்பான்மையான கதைகள் படைக்கப்பட்டிருக்கின்றன. எனக்கு இதற்குமேல் என் கதைகள் பற்றிக் கூற முடியவில்லை.

வாசகர்களை ஓரளவாவது பிறர் துயரம் கண்டு, அவர்கள் மனத்தை நெகிழ வைக்க முடியுமானால், என் முயற்சி முற்றிலும் பயனற்றதாகப் போய்விடவில்லை என்று ஆறுதல் அடைவேன்.

 

நன்றி-

கவிஞர் விக்ரமாதித்யன்

அசோகமித்திரன்

இதயம் பேசுகிறது (07.11.1999)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *