நுாறு தமிழ்ச் சிறுகதைகள்- 5.மனக்குறுமரம் (பாவண்ணனின் ‘கன்று’ சிறுகதையை முன்வைத்து…)

 

    

நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் மனித மனத்தினுள் எழும் வெளியில் சொல்லக் கூடாத, சொல்ல இயலாத, சொல்லத் தயங்குகின்ற எண்ண அலைகளை மிகத் துல்லியமாக வரிவடிவில் வரிசைப்படுத்தி நிறுத்த முயற்சி செய்யும் போக்கினை எழுத்தாளர் பாவண்ணனின் பல சிறுகதைகளில் ஆழமாகக் காணமுடிகிறது. 

மனித மனம் என்பது ஒரு மாபெரும் சமுத்திரம்; அதில் எழும் அலைகள் கணத்திற்குக் கணம் மாறக்கூடியவை. இந்த அலைகளின் ஓயாத கொந்தளிப்பையும் ‘மனித மனம் படும்பாடு’ என்பதையுமே பாவண்ணன் தனது கதைகளின் மைய நாடியாகவும் ஜீவனாகவும் கொண்டு இயங்குகிறார் எனலாம். 

அவருடைய எல்லாக் கதைகளிலும் வெளிப்படையான நிகழ்வுகளுக்கு அடியில், ஏதாவதொரு கதைமாந்தரின் ஆழ்மன எண்ணவோட்டத்தின் வழியாகத் தீராத ஏக்கம் ஒன்று மெல்லிய சரடாக இழையோடியபடியே இருக்கும். அந்தத் தணியாத ஏக்கம், கதையைப் படித்து முடித்த பின்னரும் வாசகரின் மனத்திலும் ஆழமாகத் தொற்றிக்கொண்டு, மனித வாழ்வின் சிக்கல்களை நோக்கிய தனது மரபான நீண்ட அகப் பயணத்தைத் தொடங்கிவிடும் வல்லமை கொண்டது.

பாவண்ணனின் சிறுகதைகள் பலவற்றிலும் வடிவக் கச்சிதம், வடிவப் பிசகு, சோதனை முயற்சி, தொன்மங்களின் மீட்டுருவாக்கம் போன்ற பல்வேறு நவீன இலக்கிய உத்திகள் கையாளப்பட்டுள்ளன. பல்வேறு உத்திகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பாவண்ணனின் யதார்த்தவாத (Realism) சிறுகதைகளிலேயே அவரது படைப்பு மனத்தின் முழு ஆளுமையும் வீச்சும் பிரதிபலித்துள்ளதாகக் கருதுகிறேன். 

வெறும் எழுத்து உத்திகளையும் வித்தைகளையும் மட்டுமே நம்பிப் பயணிக்காமல், கதைமாந்தர்களின் மனவோட்டத்தை மட்டுமே பிரதானத் துணையாகக் கொண்டு, அவர்களின் உளவியல் சிக்கல்களை அவிழ்த்துப் பார்த்து, கதையினை மிகவும் இயல்பாக நகர்த்திச் செல்லும் பாணி பாவண்ணனுடைய தனித்துவமான பலமாகும்.

இந்த வகையில், பாவண்ணனின் படைப்புலகில் ‘மனித மனம் படும்பாடு’ என்பதை மிகச் சரியாக, நுட்பமாக வெளிப்படுத்திய ஒரு சிறந்த படைப்பாக ‘கன்று’ என்ற சிறுகதையைச் சுட்டிக்காட்டலாம். 

இச்சிறுகதை 1999ஆம் ஆண்டு ‘ஆரண்யம்’ இதழில் வெளிவந்து வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. இக்கதையின் தொடக்கமே மிகவும் வித்தியாசமானது. கதையின் முதல் பத்தியில் சுமார் 150 ஆண்டுக்கால நெடிய குடும்ப வரலாறு விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்த நீண்ட வரலாற்றினை ஒரு வலுவான பின்புலமாகக் கொண்டே இக்கதையை வாசகர்கள் வாசித்து உள்வாங்க வேண்டும் என்பது படைப்பாளரின் பிரதான நோக்கமாக இருக்கலாம். பரம்பரை பரம்பரையாக மனிதர்கள் செய்த தவறுகளும் அதன் தொடர்ச்சியும் ஒரு மனிதனின் மனசாட்சியை எப்படி உருவாக்குகிறது என்பதை உணர்த்தவே அந்தப் பத்தி அமைந்திருக்கிறது. சிறுகதைக்கான குறுகிய வடிவத்தைக் கருத்தில் கொண்டு, இந்த முதல் பத்தியைப் புறக்கணித்துவிட்டு, கதையின் மையப் பாத்திரங்களுக்குள் நேரடியாக நுழைந்து வாசித்தாலும் கதையின் சுவையோ ஆழமோ சிறிதும் குறைந்துவிடாது என்பது இக்கதையின் சிறப்பு.

கதையின் கட்டமைப்பு ஒன்றுக்கொன்று தொடர்புடைய, ஆனால் வெவ்வேறான உணர்வுத் தளங்களைக் கொண்ட மூன்று முக்கிய இழைகளால் பின்னப்பட்டுள்ளது. 

  • நான்கு தலைமுறைகளாக நெறிதவறியபடியே வாழ்ந்து சின்னாபின்னமான ஒரு குடும்பத்தில், புதிதாக முளைத்த இளந்தலைமுறை அந்தப் பழிகளைச் சுமக்காமல், நெறியோடு அறத்தின் வழியில் வாழத் தலைப்படுவது இக்கதையின் முதலாவது இழை. இது மரபிற்கும் தனிமனித ஒழுக்கத்திற்குமான போராட்டத்தை விவரிக்கிறது. 
  • இரண்டாவது இழை, வறுமையின் காரணமாகத் தொழில் தேடி வெளியூருக்கு இடம்பெயர்ந்த தன் கணவனை (நாகப்பா) எதிர்நோக்கிக் காத்திருக்கும் தலைவியின் (சிவகாமி) முடிவற்ற தனிமையும் புலம்பலும் ஆகும். இது சமூகப் பொருளாதாரச் சூழல் ஒரு சாமானியப் பெண்ணின் வாழ்வில் ஏற்படுத்தும் வலியைக் காட்டுகிறது. 
  • சிவகாமிக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருக்கும் கதைநாயகனான ஆசிரியனின் (தங்கசாமி) சிக்கலான மனவோட்டமும், அவனுள் நிகழும் தார்மீகப் போராட்டமும் மூன்றாவது இழையாக விரிகிறது. 

இந்த மூன்று இழைகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து, முடிவில் தங்கசாமியின் மனம் சமநிலை குலைவதும் அந்தத் தடுமாற்றத்திலிருந்து தன்னைச் சீர்படுத்திக்கொள்ள அவன் திண்டாடுவதும் தவிப்பதுமே இக்கதையின் மையமாக உருக்கொள்கிறது. இந்த உணர்வுபூர்வமான மையத்தை நோக்கி வாசகரை மிக லாகவமாக இழுத்துச் செல்லப் படைப்பாளருக்கு அவர் கையாளும் நுட்பமான வர்ணனைகளும், ஆழமான குறியீடுகளும் பெரிதும் உதவியுள்ளன. 

கதையின் பெரும்பகுதி தங்கசாமியின் அகப்புலம்பலாகவும், தன்னுரையாகவும் (Inner monologue) நகர்கிறது; சிறுபகுதி சிவகாமியின் வெளிப்படையான, யதார்த்தமான புலம்பலாக அமைந்துள்ளது.

தங்கசாமிக்கும் சிவகாமிக்கும் இடையிலான உறவுநிலை மிகவும் சிக்கலானது; உளவியல் ரீதியாகப் பல அடுக்குகளைக் கொண்டது. சிவகாமிக்குத் தங்கசாமி மீது இருப்பது ஒரு தூய்மையான, மரியாதை கலந்த அன்பு. தன் கணவன் இல்லாத நிலையில், தனக்கு ஆதரவாக இருக்கும் ஓர் உயர்ந்த மனிதனாக அவள் அவனைக் காண்கிறாள். 

ஆனால், தங்கசாமிக்குச் சிவகாமி மீது ஏற்படுவதோ ஒருதலைக் காதல். தார்மீக ரீதியாகத் தான் கொள்வது தவறு என அவனது மூளை எச்சரித்தாலும், மனம் அவளை நோக்கி ஈர்க்கப்படுகிறது. இந்த தூய்மையான அன்புக்கும், சொல்ல முடியாத காதலுக்குமான ஒரு மௌனமான பனிப்போர் கதை முழுவதும் வியாபித்துள்ளது.

இந்த உணர்வுப் போராட்டத்தின் மிக முக்கியக் குறியீடாகக் கதையில் வருவது சிவகாமி நட்டுவைக்கும் ‘மரக்கன்றுகள்’. சிவகாமி தன்னிடம் காட்டும் அன்பிற்கும் அக்கறைக்கும் நன்றிக் கடனாக, தன் அன்பினைப் புறவயமான முறையில் வெளிப்படுத்தும் விதமாக, நான்கு மரங்கன்றுகளைத் தங்கசாமியின் குடிசைக்கு முன்பாக நட்டுச் செல்கிறாள். 

ஆனால், தங்கசாமியோ தன் மனத்தில் அலைமோதும் காதலை அவளிடம் வெளிப்படுத்தத் தகுந்த தருணம் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான். அவளது தூய்மையான பார்வையும், சமூகக் கட்டுப்பாடுகளும் அவனது காதலைச் சொல்ல விடாமல் தடுக்கின்றன. 

சூழ்நிலை தனக்குச் சாதகமாக அமையாததால், தன் கையாலாகத்தனத்தை எண்ணித் தன்மீதே அவன் கடும் கோபமும் வெறுப்பும் கொள்கிறான். அந்த மன உளைச்சலில் இருந்து தப்பிக்க, உளவியல் ரீதியான மடைமாற்றமாக (Sublimation), தன்னை முழுமையாகக் கிராமத்தின் கல்விச் சேவையில் அர்ப்பணித்துக் கொள்கிறான். 

ஆசையின் அலை அவ்வளவு எளிதில் ஓய்ந்துவிடுவதில்லை; அது அவனைக் கரைக்கு இழுத்து வந்து அமைதிப்படுத்தாமல், மீண்டும் மீண்டும் உணர்ச்சிகளின் நடுக்கடலுக்கே இழுத்துச் சென்று தத்தளிக்க வைக்கிறது.

இக்கதையின் தலைப்பான ‘கன்று’ என்பது வெறும் தாவரத்தைக் குறிப்பதன்று; அது தங்கசாமியின் மனத்தில் சிவகாமியை நினைத்து நாளுக்கு நாள் துளிர்த்து வளரும் ஆசைக்கும் காதலுக்கும் மிகச் சிறந்த குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த மரக்கன்றுகள் பூமியில் வேர்விட்டு வளரும் விதமும் காலப்போக்கில் அவை பெறும் செழுமையான அழகும் கதையில் ஆங்காங்கே நுட்பமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. 

கன்றுகள் செழிப்பதைப் போலவே, தங்கசாமி சிவகாமியின் மீது கொண்ட ஒருதலைக் காதலும் அவனுள் செழித்து விழுதுவிட்டு வளர்கின்றது. நாள்கள் கடந்தாலும் சிவகாமியின் தூய அன்பு துளியும் குறைவதுமில்லை; அதேசமயம் தங்கசாமியின் தீராத காதல் ஒருபோதும் கைகூடுவதுமில்லை. மனித உறவுகளின் இந்த நிராதரவான இடைவெளியைக் கதையின் இறுதிவரிகள் தரும் ஆழ்ந்த மௌனத்தின் வழியாகவே வாசகர்களால் முழுமையாக உணர்ந்துகொள்ள முடிகிறது.

தனிமனித உணர்வுகளைப் பேசுவதோடு மட்டுமல்லாமல், இக்கதை ஒரு சமூகப் பதிவாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. முற்றிலும் கல்வியறிவற்ற, இருண்ட  கிராமத்தில் முதன்முதலாகக் கல்வியின் தீபம் ஏற்றப்படும்போது நிகழும் சமூக மாற்றங்களை இக்கதை நுட்பமாகப் பதிவு செய்துள்ளது. அச்சுடரின் வெம்மை தாங்காமல், புதுமையைக் கண்டு அக்கிராம மக்கள் முதலில் மருள்வதும் பயந்து ஒதுங்குவதும் பின்னர்க் காலப்போக்கில் அதன் அவசியத்தை உணர்ந்து விரும்பியும், சில நேரங்களில் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் நகைத்தும் ஏற்றுக் கொள்வதும் மிக யதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. 

இந்த இருளை விலக்கும் கல்வியாளனாகத் திகழும் தங்கசாமிக்கு அக்கிராம மக்களிடம் கிடைக்கும் பெரும் மதிப்பும் மரியாதையுமே, அவனது காதலை வெளிப்படுத்த முடியாதபடி அவனைக் கட்டிப்போடும் விலங்காகவும் மாறுகிறது என்பது இக்கதையின் முரண்நகை.

பாவண்ணனின் மொழிநடை இக்கதையின் உணர்வுகளைக் கடத்துவதில் பெரும் பங்காற்றுகிறது. அவர் கையாளும் ‘குட்டிக்குழந்தை’, ‘இளஞ்சிறுவன்’ போன்ற பிரத்யேகமான சொல்லாட்சிகள் வாசகரின் கவனிப்புக்குரியனவாகவும் கதையின் வட்டார மற்றும் உணர்வுபூர்வமான நம்பகத்தன்மையைக் கூட்டுவனவாகவும் அமைந்துள்ளன. 

பொதுவாகப் பாவண்ணனின் கதைகளின் நகர்வு என்பது ஒரு நதியின் நீரோட்டத்தைப் போன்றது. மேற்பரப்பில் அமைதியாகத் தெரிந்தாலும், அடியில் சுழிப்புகளோடும், பெரும் இழு விசையோடும், தான் செல்ல வேண்டிய திசை மாறாமல் பாய்ந்து நகரக் கூடியது. சில சமயங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, நீரேற்றம் பெற்று நதி தனது இயல்புக்கு மாறாக எதிர்த்திசையிலும் ஓடும். ‘கன்று’ கதையிலும், மனித மனத்தின் இத்தகைய எதிர்முகப் பயணத்தை, முன்னும் பின்னும் அலைபாயும் தவிப்பைக் கதைமாந்தரான தங்கசாமியின் தீவிரமான மனவோட்டத்தின் வழியாக நம்மால் காணமுடிகிறது.

கதையில் தங்கசாமி இரவு முழுக்கத் தூக்கமின்றித் தவிப்பதாக இடம்பெற்றுள்ளது. இது மனித மனத்தின் ஊசலாட்டத்தை மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. இதில் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்துகொள்ளும் ஒரு மனிதனின் தவிப்பு முழுமையாக வெளிப்படுகிறது. 

தனது உணர்வு நியாயமானதா அல்லது ஆதரவற்ற ஒரு பெண்ணைப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கும் அதிகாரச் சுரண்டலா என்ற குற்ற உணர்வு அவனைத் துளைக்கிறது. கிணற்று நீரைத் தலையில் ஊற்றிக் கொள்வது என்பது வெறும் உடல் சார்ந்த குளியல் அன்று; அது தன் மன அழுக்கைக் கழுவிச் சுத்தப்படுத்திக்கொள்ள அவன் செய்யும் ஒரு குறியீட்டுச் செயல். ‘துடைத்துவிட்ட தரையாக’ மனம் மாறினாலும், அடுத்த கணமே ஆசைப் புதுவெள்ளம் அதை மீண்டும் ஆக்கிரமித்துக் கொள்கிறது. அவளைப் பார்க்கக் கூடாது என்று நினைப்பதும், அதையே நினைத்து ஏங்குவதும், தன்னை ஒரு புழுவாக அருவருப்பாக உணர்ந்து பின் மீண்டும் ஆசையின் குடைக்குள் தஞ்சம் அடைவதுமாக அவனது மனம் படும் பாட்டை இந்தப் பகுதி மிகச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.

ஊருக்குப் பேருந்தில் செல்லும் ஒரு பயணி, தன் அலைபாயும் மனநிலைக்கு ஏற்ப அப்பேருந்தில் உள்ள இருக்கைகளில் மாறிமாறி அமர்ந்து பயணிப்பதைப்போலவே, தங்கசாமியின் மனமும் அறத்திற்கும் ஆசைக்கும் இடையிலான எதிரெதிர்ச் சிந்தனைகளில் மாறிமாறி அமர்ந்து தவிக்கிறது. 

கதையின் நகர்வானது, நேர்க்கோட்டில் பயணிக்காமல், முன்னோக்கியும் சற்றுப் பின்னோக்கியுமாக, ரயில் எஞ்சினின் சக்கரம் போல அரைவட்டச் சுழற்சி பெற்று, தனது தீவிரமான போராட்டங்களுக்குப் பிறகு இறுதியில் முன்னோக்கியே நகர்ந்து செல்கிறது. அந்த நகர்வு, தனிமனிதக் காதலைத் தாண்டி, மனித மனத்தின் இயலாமை, சமூகக் கட்டுப்பாடுகள், அறவுணர்வு ஆகியவற்றைக் கற்றுத்தரும் மானுட அனுபவத்தின் எல்லையற்ற விரிவை நோக்கியதாகவே அமைந்துள்ளது. சிறுகதை என்ற சிறிய வடிவத்திற்குள், மனித மனத்தின் பிரம்மாண்டமான தவிப்புகளைப் பதிவு செய்ததில் ‘கன்று’ சிறந்த இலக்கியப் பதிவாக நிலைத்து நிற்கிறது.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *