
நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில், நாஞ்சில் நாட்டு மக்களின் வாழ்வியலையும் விளிம்புநிலை மனிதர்களின் அகச் சிக்கல்களையும் எவ்விதப் புனைவுப் பூச்சுகளுமின்றி உள்ளவாறே பதிவு செய்ததில் மிக முக்கியமான பங்கு நீல. பத்மநாபனுக்கு உண்டு. அவரது நாவல்களும் சிறுகதைகளும் மனித வாழ்வின் அப்பட்டமான பக்கங்களை, அதன் அழுக்குகளோடும் கண்ணீரோடும் வாசகர்களின் கண்முன் நிறுத்துபவை. அந்த வகையில், நில உரிமையாளருக்கும் அந்த நிலத்தில் தன் வியர்வையைச் சிந்திப் பயிர் செய்து பிழைக்கும் அடித்தளக் கூலித் தொழிலாளர் குடும்பத்திற்கும் இடையே நிலவும் உரையாடலாகவும் அதிகார முரண்பாடாகவும் எல்லாவற்றுக்கும் மேலாகச் சம்சாரி வாழ்வின் சாராம்சமாகவும் விரியும் மிகச்சிறந்த படைப்பே நீல. பத்மநாபனின் ‘பதர்’ என்ற சிறுகதை. விவசாயிகளின் உழைப்பு எவ்வாறு சுரண்டப்படுகிறது என்பதையும் அவர்கள் எவ்விதம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் இச்சிறுகதை மிக நுட்பமாகப் பதிவு செய்கிறது.
ஒரு நாட்டின் சட்டங்களும் திட்டங்களும் எளிய மக்களைக் காக்க வேண்டும். ஆனால், அதிகார வர்க்கத்தால் உருவாக்கப்படும் சட்டங்கள் பல நேரங்களில் உழைக்கும் வர்க்கத்தின் கழுத்தை நெரிக்கும் சுருக்குக் கயிறாகவே மாறிவிடுகின்றன. அக்காலத்திய நிலவரிச் சட்டங்களுள் ஒன்றான, ‘ஐம்பது சென்ட் நிலமிருந்தால் நான்கு மூட்டை நெல் அரசாங்கத்திற்குக் கொடுத்து ‘பெர்மிட்’ எடுக்க வேண்டும்’ என்ற கொடிய சட்டவிதி எவ்வாறு சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கி, அவர்களை வாழ்வின் விளிம்பிற்கே தள்ளிப் ‘பதராக்கி’ விடுகின்றது என்பதே இக்கதையின் மையக் கருப்பொருளாக அமைந்துள்ளது. அதிகார வர்க்கத்தின் சுரண்டல் ஒருபுறமும் நிலவுடைமையாளர்களின் சுரண்டல் மறுபுறமுமாக, இடையில் சிக்கிக் கொண்ட சிறு விவசாயிகளின் பரிதாபகரமான நிலை இக்கதையில் தத்ரூபமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.
இக்கதையின் நாயகனான கோபி, விவசாய நில உரிமைக் கூலியைப் பெற்றுச் செல்வதற்காகத் தன் கக்கத்தில் ஐந்து பெரிய கோணிப்பைகளைச் சுருட்டி வைத்துக்கொண்டு, நில உரிமையாளரான அன்னம்மா டீச்சரின் வீட்டிற்கு நம்பிக்கையுடன் வருகிறான். வறுமையிலும் உழைப்பிலும் நொந்து நூலாகிப்போன அந்த ஏழை விவசாயிக்கு, தான் சிந்திய வியர்வைக்கான கூலியாக நெல்லைப் பெற்றுச் சென்று தன் குடும்பத்தின் பசியைப் போக்க வேண்டும் என்பது மட்டுமே இலக்காக இருக்கிறது.
ஆனால், அங்கு அன்னம்மா டீச்சரும் அவரது மகன் ஜார்ஜும் மகள் ரோஸியும் கோபியை எதிர்கொள்ளும் விதமே வேறாக இருக்கிறது. நிலம் நல்ல முறையில் விளையாமைக்கும் விளைச்சல் குறைந்து போனதற்கும் அடுக்கடுக்கான போலிக் காரணங்களைக் கூறி, உழைத்தவனை நடைப்பிணமாக்க அவர்கள் முற்படுகின்றனர். நியாயமாகக் கிடைக்க வேண்டிய கூலியைக் கொடுக்க மறுக்கும் அந்தச் சுரண்டல் மனப்பான்மை பல்வேறு முகமூடிகளை அணிந்துகொண்டு கோபியின் முன் நாடகமாடுகிறது.
ஆரம்பத்தில் அன்னம்மா டீச்சர் குடும்பத்தினர் கூறும் அக்காரணங்களை ஏற்க மறுத்துத் தன் நியாயத்திற்காகப் போராட நினைக்கும் கோபி, நாளடைவில் அவர்களின் குடும்பச் சூழலைக் கண்டு இரக்கம் கொள்கிறான். அன்னம்மா டீச்சரின் குடும்பத்தில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினை, அவரின் தீராத நோய், எதற்கும் உதவாத அவரது மகன் ஜார்ஜின் ஊதாரித்தனம், வேலைவாய்ப்பின்றி முதிர்வயதை எட்டி நிற்கும் மகள் ரோஸியின் துயரம் ஆகிய அனைத்தையும் கோபி ஒருகட்டத்தில் உணர்ந்து கொள்கிறான்.
தன்னைச் சுரண்டுபவர்களின் தனிப்பட்ட துயரங்களைக் கண்டு பரிதாபப்படும் கோபியின் மனிதநேயம் இங்கு அவனுக்கே எதிரியாக மாறுகிறது. வேறுவழியின்றித் தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டு, தன் நியாயமான உரிமையை விட்டுக்கொடுக்கிறான். ‘ஐந்து கோணிப்பைகளில் முழுமையாக நெல்லைப் பெறலாம்’ என்ற கனவுடன் வந்தவன், இறுதியில் வெறும் மூன்று கோணிகளில் மட்டுமே நெல்லைப் பெறுகிறான். அதுவும் தரமான நெல்லாக இல்லாமல், உமி மட்டுமே நிறைந்த ‘பதர்’ ஆக இருப்பதே கதையின் உச்சகட்டத் துயரமாகும். உழைக்கும் விவசாயிகளின் வாழ்வே இப்படிப்பட்ட ‘பதர்’ தானோ? உழைப்பவனுக்கு இறுதியில் மிஞ்சுவது ஏமாற்றமும் சக்கையும்தானா? என்ற ஆழமான கேள்வியை வாசகரின் மனத்தில் ஒரு பெரும் அதிர்வோடு இச்சிறுகதை எழுப்புகிறது.
எழுத்தாளர் ஜெயமோகன் நீல. பத்மநாபனின் படைப்புகளை மதிப்பிடும்போது, “சிறுகதைக்குத் தேவையான கச்சிதமும் கூர்மையும் கவித்துவமும் குறிப்பமைதியும் நீல.பத்மநாபனின் கதைகளில் கைகூடவில்லை. அவர் அடிப்படையில் ஒரு நாவலாசிரியர்; அவரது கதைகள் வெறும் அனுபவ விவரணைகளாகவே (Documentations of experience) நின்றுவிடுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இக்கதையை ஆழமாக, வரிகளுக்கு இடையே மறுவாசிப்புச் செய்யும்போது, ஜெயமோகன் குறிப்பிடும் அந்த நான்கு முக்கியக் கூறுகளும் இக்கதையில் மிகச் செறிவாகப் பொதிந்திருப்பதைக் கண்டடைய முடியும்.
சிறுகதையின் கச்சிதம் (Precision)
‘சிறுகதை’ என்பது தேவையற்ற ஒரு சொல் கூட இல்லாமல், தொடக்கத்திற்கும் முடிவிற்கும் இடையே ஒரு கச்சிதமான கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். இக்கதையில் கோபியின் கக்கத்தில் இருக்கும் ஐந்து கோணிப்பைகள் ஒரு மிகச்சிறந்த குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. கதை தொடங்கும் போது நம்பிக்கையுடன் சுருட்டி வைக்கப்பட்டிருந்த அந்த ஐந்து கோணிப்பைகளும் விவசாயக் கூலிக்காகக் கீழே இறக்கப்படுகின்றன. ஆனால், கதை முடியும்போது அவற்றில் மூன்று மட்டுமே அரைகுறையாக நிறைக்கப்பட்டு, எஞ்சிய மற்ற இரண்டும் வெறுமையாக மீண்டும் சுருட்டப்பட்டு கோபியின் கக்கத்திற்கே திரும்புகின்றன. அவனது சுருங்கிப்போன வாழ்வாதாரத்தையும் ஏமாற்றத்தையும் இந்த இரண்டு கோணிப்பைகள் மிகச் கச்சிதமாக உணர்த்தி விடுகின்றன. இதுவே இச்சிறுகதையின் மாபெரும் கச்சிதத் தன்மைக்குச் சான்றாகும்.
படைப்பின் கூர்மை (Sharpness)
கதையில் வெளிப்படும் ‘கூர்மை’ என்பது, பாத்திரங்களின் குணாதிசயங்களை நேரடியாக விவரிக்காமல், சம்பவங்களின் வழியே வாசகர்களை உணரச் செய்வதாகும். அன்னம்மா டீச்சரின் குடும்பம் தன்னைப் பரிதாபத்தின் பெயரால் ஏமாற்றுகிறது என்பதனை, மகன் ஜார்ஜ் மற்றும் மகள் ரோஸிக்கு இடையே நடக்கும் சண்டையிலிருந்து கோபி மிகத் தெளிவாக உணர்ந்து கொள்கிறான். நில உரிமைக் கூலி குறைந்து போனதற்கு இயற்கையோ அல்லது நிலமோ காரணமல்ல, மாறாக ஜார்ஜின் ஊதாரித்தனமும், நிர்வாகச் சீர்கேடுமே காரணம் என்பதனைக் கோபி ஆழமாக நம்புகிறான். ஆனால், தான் உணர்ந்த அந்த உண்மையை, அந்த அதிகார வர்க்கத்தின் முன் அவனால் வெளிக்காட்டவோ, தட்டிக் கேட்கவோ முடிவதில்லை. அடக்கி வாசிக்கப் பழகிய விளிம்புநிலை மனிதனின் இந்த இயலாமையையும், ஜார்ஜ் – ரோஸி இடையேயான சண்டையையும் விவரிக்கும் பகுதி இக்கதையின் மிகக் கூர்மையான பகுதியாகும்.
உன்னதமான கவித்துவம் (Poeticness)
வாழ்வின் அவலங்களை நுட்பமான ‘படிமங்கள்’ (Images) வழியே சொல்வதே கவித்துவமாகும். கோபி, அன்னம்மா வீட்டிற்குள் நுழையும் போது, அவரை டீச்சரும் அவரது பிள்ளைகளும் எப்படி ஒருவித அலட்சியத்தோடு எதிர்கொள்கிறார்களோ, அதே போலவே அவர்களின் வீட்டு நாயும் அவனை எதிர்கொள்கிறது.
“நாய் தூக்கம் கலைந்து இவனை ஒரு தடவை வெறுப்புடன் பார்த்து விட்டு மறுபடியும் தலையைப் புதைத்துக் கொண்டது.”
என்ற ஒற்றை வரியில், கோபியின் சமூக அந்தஸ்து அந்த வீட்டில் எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பதைப் படைப்பாளர் கவித்துவமாக உணர்த்துகிறார். மேலும், கோபி தான் கொண்டு வந்த கோணிப்பைகளைக் கீழே வைக்கும் காட்சி, அவனது ஒட்டுமொத்தக் குடும்பச் சூழலையும், அவன் சுமக்கும் வாழ்வின் பாரத்தையும் சித்திரிக்கிறது.
“வராந்தாவில் ஏறிக் கட்டையிலிருந்து விலகத் தெரியாது பற்றிக் கொண்டிருக்கும் உயிர் என்ற பாரத்தைப் போன்ற கோணிப்பைக் கட்டைக் கீழே போட்டபோது உடம்புக்கு என்னவோ சொல்லத் தெரியாத ஒரு சுகம்.”
என்ற இந்த ஒப்பீடு, ஒரு மனிதனின் வாழ்நாள் துயரத்தையும் வறுமையின் எடையையும் மிக உன்னதமான கவித்துவத்தோடு பதிவு செய்கிறது.
நுட்பமான குறிப்பமைதி (Suggestiveness)
‘சிறுகதை’ என்பது நேரடியாகச் சொல்வதை விட, சொல்லாமல் விடுவதில் அல்லது குறிப்பாக உணர்த்துவதில்தான் வெற்றி பெறுகிறது. கோபி, ரோஸியைக் காணும் காட்சியைப் படைப்பாளர் மிக நுட்பமாகச் சுட்டியுள்ளார்.
“இப்போது ரோஸியும் வாசலில் வந்து நின்று கொண்டாள். கல்யாணத்துக்கு முந்தியே இப்போது இவளுக்கு முப்பது வயது இருக்காதா. இவள் முகத்தில் குடிவந்துவிட்ட மூப்பு இவன் மனசை ஏனோ சங்கடப்படுத்தியது.”
ரோஸியின் முதிர்ந்த தோற்றத்தைக் கண்டு கோபியின் மனம் ஏன் சங்கடப்பட வேண்டும்? இதனை அறிய வேண்டுமானால், கோபி ரோஸியை எந்த உறவில், எந்த மனநிலையில் நோக்கினான் என்பதனை வாசகர்கள்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவளுக்குள் இருக்கும் பெண்மையின் வீழ்ச்சிக்கான பரிதாபமா? அல்லது சமூக அந்தஸ்தைத் தாண்டிய ஏதோ ஒரு மானுடப் பற்றுதலா? எனப் பல திறப்புகளை இந்தப் பகுதி வாசகர்களுக்கு வழங்குகிறது. இச்சிறுகதைக்கு இப்பகுதி மிகச் சிறந்த குறிப்பமைதியாக இடம் பெற்றுள்ளது.
எனவே, எழுத்தாளர் ஜெயமோகன் கூறுவது போல நீல. பத்மநாபனின் கதைகள் வெறும் அனுபவ விவரணைகள் அல்ல. கச்சிதமும் கூர்மையும் கவித்துவமும் குறிப்பமைதியும் அவருக்கு முழுமையாகக் கைகூடியுள்ளது என்பதனைப் ‘பதர்’ சிறுகதை சந்தேகத்திற்கிடமின்றி மெய்ப்பிக்கிறது.
நீல.பத்மநாபனின் படைப்புகள் மனித வாழ்வை தத்துவார்த்தமாகவோ, செயற்கையான அறிவுரை மூலமாகவோ விசாரணைக்கு உட்படுத்துபவை அல்ல; அவை வாழ்வின் கசப்புகளை உள்ளவாறே காட்டி, அதிலிருந்து உண்மைகளை வாசகர்களையே தரிசிக்கச் செய்பவை. வாழ்வின் நேரடி அனுபவச் சித்திரங்களாக விரியும் இச்சிறுகதை, தனக்குள் இரண்டு பிரம்மாண்டமான கேள்விகளை வாசகருக்கு எழுப்புகிறது:
- இத்தனை வஞ்சகங்களுக்கும், ஏமாற்றங்களுக்கும் மத்தியில் போராடும் மனித வாழ்வின் உண்மையான பொருள் என்ன?
- வறுமையிலும், நியாயம் மறுக்கப்படுவதிலும் ஒரு மனிதன் அடையும் மனத்துயரின் ஆழம் அல்லது வலி எத்தகையது?
இந்த இரண்டு கேள்விகளுக்கான பதில்களையும் இந்தப் பதராய்ப் போன விவசாயம் சார்ந்த மனிதர்களின் இருண்ட வாழ்க்கையிலிருந்தே வாசகர்கள் கண்டெடுக்க வேண்டும் என்பதுதான் படைப்பாளரின் அடிப்படையான நோக்கமாக இருக்க முடியும்.
“நீல.பத்மநாபனுக்குத் தமிழ்ச் சிறுகதை மரபில் இடமில்லை, அவர் அடிப்படையில் நாவலாசிரியர் மட்டுமே, சிறுகதைக்கான கூறுகள் அவருக்குக் கைகூடவில்லை” என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஏற்புடையதல்ல. மனித மனத்தின் இருளடைந்த பக்கங்களையும் சமூகச் சுரண்டலையும் மிக நேர்த்தியான இலக்கியக் கட்டமைப்போடு வெளிப்படுத்திய நீல. பத்மநாபனுக்குத் தமிழ்ச் சிறுகதை மரபில் எவராலும் அசைக்க முடியாத, அளப்பரிய இடமுண்டு. அதனை அவரது ‘பதர்’ போன்ற எந்த ஒரு சிறுகதையைக் கொண்டும் தற்கால இலக்கிய உலகில் மிக எளிதாக நிரூபித்துவிட முடியும்.
– – –
